நமது சருமமானது தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்புடையதாகவே அமைந்துள்ளது. ஆனால், தற்போது முன்பை விட வெயிலின் தாக்கம் அதிகரித்து இருக்கும் நிலையில், சருமத்தை நோய்களிலிருந்து பாதுகாப்பது முக்கியம். இல்லையென்றால் சரும வறட்சி, பருக்கள், தேமல் மற்றும் சில சரும நோய்கள் போன்றவை வர வாய்ப்புள்ளது. சரும நோய்கள் மற்றும் அதற்கான மருத்துவ முறைகளையும் விளக்குகிறது இக்கட்டுரை...

டாக்டர்.பவானி பாலகிருஷ்ணன்:

சருமம்தான் உடலின் மிக முக்கியமான அங்கமாகக் கருதப்படுகிறது. இது உணர்ச்சிகளை அறிதல், உறுப்புகளைப் பாதுகாத்தல், உடலின் சீதோஷ்ண நிலையை சீர்செய்தல், கழிவுகளை அகற்றுதல் என பலதரப்பட்ட வேலைகளைச் செய்வதாலும், வெளி உலகத்துடன் அதிக அளவில் தொடர்பு கொண்டுள்ளதாலும் பல வகையான நோய்களால் பாதிக்கப்படுகிறது.

சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க சில வழிகள்:

  • தேவையான அளவு நீர் பருகவும்.
  • பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறமுள்ள காய், பழங்களில் கரோடீன்ஸ் (carotenes) மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் (anti-oxidants) உள்ளன. அவற்றை அதிகமாக சாப்பிடவும்.
  • சாக்லேட், கொட்டை வகைகள், எண்ணெய்ப் பதார்த்தங்களைக் குறைவாகச் சாப்பிடவும்.
  • சீரான வாழ்க்கை முறையை மேற்கொள்ளவும்.
  • மது மற்றும் புகைப் பழக்கத்தைத் தவிர்க்கவும்.
  • மன அழுத்தத்தைத் தவிர்க்கவும்.
  • நன்றாகத் தூங்கவும்.
  • சுகாதாரத்துடன் சருமத்தை வைத்துக் கொள்ளவும்.

(தினமும் இரண்டு முறை குளிக்கவும். அதில் ஒருமுறை தலை குளிக்கவும். மிதமான சோப்புகளை மட்டுமே பயன்படுத்தவும். வாரத்திற்கு இரண்டு முறை ஷாம்பு போட்டுக் குளிக்கவும். உடலில் வியர்வை, ஈரம் தங்காமல் பார்த்துக் கொள்ளவும். சீப்பு, துண்டு, சோப், உள்ளாடைகள் போன்றவற்றைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வியர்வை உறிஞ்சும் லேசான ஆடைகளை பயன்படுத்தவும்.)

சருமத்தைப் பாதுகாக்க...

சன் ப்ளாக் (SPF) குறைந்தது 15 உள்ள அழகு சாதனங்களை உபயோகிக்கவும். வறண்ட சருமம் இருந்தால் மாய்ஸ்சரைசர்ஸ் (Moisturizer) உபயோகப்படுத்தவும்.

சரும நோய்கள்:

சருமத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டவுடனே தோல் நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். இந்நோய்கள் விட்டுவிட்டு வரும் தன்மை உடையன. அதனால் தொடர்ந்து சிகிச்சை எடுப்பது அவசியம். சர்க்கரை நோய் உள்ளவர்களையும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களையும் எளிதாகப் பாதிக்கும். அவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்.

தொற்றினால் ஏற்படும் நோய்கள்:

கொப்புளம்/சீழ் கொப்புளம்/சிரங்கு:

ஏற்கெனவே பாதிப்படைந்த சருமத்தை அல்லது சர்க்கரை நோய் அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களின் சருமத்தை பாக்டீரியா (bacteria) தாக்கும் பொழுது இவை ஏற்படும். வலி அதிகமாகவும், சில சமயங்களில் அரிப்பும் இருக்கக் கூடும். ஓரிரு நாட்களில் சரியாகா விட்டால் மருத்துவரை அணுகவும்.

தேமல், பொடுகு, சேத்துப்புண், படர் தாமரை

சருமத்தின் தன்மை அதிக வியர்வையாலோ, வேறு பல காரணங்களாலோ மாறும்பொழுது பூஞ்சை காளான் வளர்வதற்கு வழி வகுத்து, மேற்சொன்ன நோய்களை ஏற்படுத்தும். இந்நோய்கள் விட்டு விட்டு வரும்.

அழுக்குத் தேமல்:

உடலில் வெள்ளை அல்லது கறுப்பு நிறத்தில் வெவ்வேறு அளவுகளில் முகம், மேல் மார்பு, முதுகின் மேற்பகுதிகளில் தேமல் ஏற்படும். இது, தொற்று வியாதி கிடையாது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பொடுகு:

இதுவும் தொற்று வியாதி அல்ல. தலையில் சீபம் (sebum) எனப்படும் திரவம் அதிகமாகச் சுரப்பதாலும், அதிக வியர்வை, மன அழுத்தம் போன்றவற்றாலும் ஏற்படும். இதைக் குணப்படுத்த முடியாது. கட்டுப்படுத்த மட்டுமே முடியும்.

சேத்துப்புண்:

பொதுவாக, கால்களின் விரலிடுக்குகளில் வியர்வை, ஈரம் அதிகம் இருப்பதால் தோல் அரிக்கப்பட்டு இது ஏற்படும். சர்க்கரை நோய் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு அதிகம் ஏற்படும்.

படர் தாமரை:

வியர்வை அதிகமாக உள்ள பகுதிகளான அக்குள், இடுப்பு, புட்டம், தொடையிடுக்குகளில் இந்நோய் இருக்கும். அரிப்பு அதிகமாக இருக்கும். வலி இருக்காது. இது பரவக் கூடிய நோய்.

சின்னம்மை/அக்கி/மரு

சின்னம்மை :

வைரஸ் இதனை ஏற்படுத்தும். ஜுரத்துடன், சிறிய பனித்துளி போன்ற கொப்புளங்கள் ஏற்படும். அதன் மீது எந்தவித களிம்போ, செம்மண்ணோ பூசக் கூடாது. கொப்புளங்களை உடைக்கவோ, பிய்க்கவோ கூடாது. புழங்கும் இடத்தைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இல்லையேல் மற்ற தொற்றுகள் அதில் ஏற்படும். கொப்புளங்கள் வந்த உடனே மருத்துவரிடம் சிகிச்சைக்காகச் சென்றால் நோயின் வீரியத்தை எளிதாக கட்டுப்படுத்த முடியும்.

அக்கி:

சின்னம்மை ஏற்படுத்தும் வைரஸ், குறிப்பிட்ட நரம்புகளில் தேங்கி, உடலில் எதிர்ப்பு சக்தி குறையும்பொழுது அக்கியாக ஏற்படும். சின்னம்மைக்கான பாதுகாப்பு முறைகள் இதற்கும் பொருந்தும். அக்கி உள்ளவர்கள் சின்னம்மை வராதவர்களிடமும், குழந்தைகள், முதியவர்களிடமிருந்தும் விலகி இருந்தால் அவர்களுக்குச் சின்னம்மை வராமல் தடுக்கலாம்.

மரு:

உடலில் எங்கு வேண்டுமானாலும் ஏற்படும். இதுவும் ஒரு தொற்று நோய்.

ஒட்டுண்ணிகளால் (parasites) வரும் நோய்கள்

பள்ளிச் சிறுவர், சிறுமிகளிடம் அதிகமாகக் காணப்படும். சிறு கட்டிகளும், நீர் கொப்புளங்களும் விரல் இடுக்குகள் மற்றும் முட்டி, அக்குள், தொடை, வயிற்றுப் பகுதிகளில் இருக்கும். இரவு நேரங்களில் அரிப்பு அதிகமாக இருக்கும். மற்றவர்களுக்கும் இந்நோய் எளிதாக பரவும். இந்நோய்க்கான சிகிச்சையை இதனால் பாதிக்கப்படாத குடும்பத்தினரும் எடுத்துக் கொள்வதன் மூலம் இந்த ஒட்டுண்ணிகளை முழுவதுமாக அழிக்க முடியும்.

பேன்:

நாம் எல்லோருமே எப்பொழுதாவது இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். பேன் மருந்தை முடியில் மட்டுமே இல்லாமல் ரோமக் கால்களிலும் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து ஷாம்பு போட்டுக் குளிக்கவும். அதன்பிறகு ஈர்களை அகற்றுவது மிகவும் முக்கியம். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை, மூன்று வாரங்களுக்குத் தொடர்ந்து செய்யவும்.

எரிவு:

நமது உடம்பே நாம் உட்கொள்ளும் பொருட்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் பொழுதோ - வெளிப்பொருட்களான சோப்பு, தலைப்பூச்சு சாயம், இரசாயனப் பொருட்கள் போன்றவற்றிற்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் பொழுதோ தோலில் எரிச்சல் ஏற்பட்டு, சிவப்பாகி, சிறு கொப்புளங்கள் ஏற்பட்டு நீர் வடியும் (எக்ஸிமா). ஒவ்வாமை ஏற்படும் பொருள்கள் நபருக்கு நபர் மாறுபடும். இதை அறிந்து, தங்களுக்கு சேராதவற்றை தவிர்த்தல் நல்லது. சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும். இதற்கென உள்ள பிரத்யேகக் களிம்புகளை உபயோகப்படுத்தலாம். முட்டை, மீன், புளிப்பு பழங்கள், கத்திரிக்காய், நாட்டுத் தக்காளி போன்றவற்றைத் தவிர்த்தல் நல்லது.

உள் எதிர்ப்பு நோய்கள்:

உடலில் எதிர்ப்பு சக்தி சருமத்திற்கு எதிராகச் செயல்படுவதால் ஏற்படும்.

செதில்படை (psoriasis):

பொதுவாக சருமத்தின் மேல் பகுதி 28 நாட்களுக்கு ஒருமுறை தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும். இச்செயல் 4 - 5 நாட்களுக்கு ஒருமுறை ஏற்படுவதால் தோல் செதில் செதிலாக உதிரும். மரபுவழி, மன அழுத்தம், தொற்று, சில மருந்துகள், மது போன்ற பல காரணங்களால் இந்நோயின் வீரியம் அதிகரிக்கலாம்.
1

வெண்குஷ்டம் (vitiligo):

குஷ்ட நோய்க்கும் இதற்கும் சம்பந்தமில்லை. சருமத்தில் உள்ள, நிற அணுக்கள் உற்பத்தி செய்யும் செல், இறந்து போவதால் இந்நோய் ஏற்படுகிறது. இது உடம்பில் எங்கு வேண்டுமானாலும் சருமத்தை விட மங்கிய நிறத்தில் திட்டுத்திட்டாக ஏற்படும். இதைக் கட்டுபாட்டிற்குள் வைத்துக் கொள்ள முடியும். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டால் குணப்படுத்த முடியும்.
2

மற்றவை:

முகப்பரு:

சீபம் (sebum) அதிகம் சுரக்கப்படுவதாலும், சில சமயங்களில் பாக்டீரியாக்கள் மயிர்க் கால்களில் இருந்து தொந்தரவு கொடுப்பதாலும் ஏற்படும். இளம் வயதினரை அதிகமாகப் பாதிக்கும். தோல் நிபுணரின் ஆலோசனையைப் பெறவும். மிதமான சோப் அல்லது கிளன்செர் கொண்டு முகத்தைக் கழுவவும். பருக்களைப் பிய்க்கக் கூடாது. சருமப் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிக்கவும்.

கண்களின் கீழ் கருவளையம்:

இது ஏற்பட மரபுவழிக் காரணிகள், சுரப்பிகளில் கோளாறுகள், தவறான உணவுமுறைகள், மூக்கடைப்பு, தூக்கமின்மை, பார்வைக் கோளாறு எனப் பல காரணங்கள் உண்டு. இதற்கான சரியான காரணத்தைக் கண்டுபிடித்துச் சிகிச்சை அளிக்க வேண்டும்.

வியர்க்குரு:

இது வெயில் காலங்களில் ஏற்படும். சருமப் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றினால் இவற்றைத் தவிர்க்கலாம்.

யோகா எவ்வாறு உதவுகிறது?

உடலிலுள்ள சுரப்பிகள் சரியாக சுரக்கவும், இரத்த ஓட்டம் சீராக நடைபெறவும், உடலிலுள்ள கழிவுகளைத் திறம்பட அகற்றவும் யோகா உதவுகிறது. இவையனைத்துமே சருமத்தின் ஜவ்வுத்தன்மையைப் பாதுகாத்து, எளிதில் சுருக்கம் ஏற்படாமல் இருக்கச் செய்யும்.

இது மட்டுமின்றி, உடலளவிலும் மனதளவிலும் டென்ஷன் இல்லாத அமைதியான நிலையை யோகா உருவாக்குவதால், ஆழ்ந்த உறக்கம், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தல் போன்றவை நடக்கிறது. இதனால் சரும நோய்களிலிருந்து நம்மைக் காப்பதோடு, ஏற்கெனவே சரும நோய் ஏற்பட்டிருந்தாலும், அதிலிருந்து வெளிவரவும் யோகா உதவுகிறது.