சத்குரு சொல்லும் சங்கரன்பிள்ளை கதைகள் நகைச்சுவையோடு சிந்திக்கவும் வைக்கும். இங்கே இரண்டு கதைகள் உங்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்க காத்திருக்கின்றன.

சத்குரு:

சங்கரா... நீ என் ஆக்ஸிஜன் ட்யூப் மேல் நிற்கிறாய்!

சங்கரன்பிள்ளையின் பால்ய நண்பர் மிகவும் நோய்வாய்ப்பட்ட நிலையில் ஒரு தனியார் மருத்துவமனையில் படுத்திருந்தார். சங்கரன்பிள்ளை தன் மனைவியுடன், பழங்கள் சிலவற்றை வாங்கிக் கொண்டு நண்பரைப் பார்க்கச் சென்றார். நண்பரைச் சுற்றி அவருடைய உறவினர்களும் நண்பர்களுமாக சிறு கூட்டம் கவலையுடன் நின்றிருந்தனர். நண்பருக்கு மூச்சுவிடுவதற்கே சிரமமாக இருந்ததால் ஆக்ஸிஜன் ட்யூப் பொருத்தி இருந்தனர். சங்கரன் பிள்ளையைப் பார்த்ததும் அனைவரும் அவருக்காக வழிவிட்டனர். ஏனெனில், சங்கரன் பிள்ளையும் அவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பிள்ளையைப் பார்த்ததும் நண்பரின் முகம் லேசாக மலர்ந்தது. ‘‘நன்றாக உடலைக் கவனித்துக் கொள், உனக்கு ஒன்றும் இல்லை, விரைவில் தேறிவிடுவாய்’’ என்று பிள்ளை நண்பருக்குத் தைரியம் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே நண்பருக்கு மூச்சுத் திணறல் வந்துவிட்டது. பிள்ளையிடம் நண்பர் ஏதோ அவசரமாகச் சொல்ல விரும்பினார். ஆனால், நண்பருக்கு பேச்சு வரவில்லை. எனவே, பிள்ளை ஒரு பேப்பரையும் பேனாவையும் கொடுத்து எழுதித் தரச் சொன்னார். நண்பரும் பேப்பரில் எழுதி சங்கரன்பிள்ளையிடம் நீட்டவும் நண்பரின் உயிர் பிரியவும் சரியாக இருந்தது. மிகவும் துக்கத்தில் ஆழ்ந்த உறவினர்கள் நண்பரை அடக்கம் செய்து விட்டு மூன்றாம் நாள் காரியத்துக்கு பிள்ளையை அழைத்திருந்தனர். வரும்போது நண்பர் கடைசியாக எழுதிக் கொடுத்த காகிதத்தையும் பத்திரமாகக் கொண்டுவரச் சொன்னார்கள். குடும்பத்துக்காக ஏதேனும் அதில் சொல்லியிருப்பார் என நினைத்தார்கள்.

சங்கரன்பிள்ளை அந்தக் காகிதத்துடன் சென்றார். காரியங்கள் முடிந்தவுடன் அனைவரும் அந்தக் காகிதத்தில் உள்ளதைப் படிக்கச் சொன்னார்கள். நண்பர் இறந்த பரபரப்பில் பிள்ளையும் அதுவரை அந்தத் தாளில் உள்ளதைப் படிக்கவில்லை. எனவே தற்போது அந்தத் தாளை பாக்கெட்டிலிருந்து எடுத்துப் படிக்க ஆரம்பித்தவரின் முகம் கறுத்தது. உடனே அருகில் இருந்த உறவினர்கள் என்னவோ ஏதோ என்று அந்தத் தாளை அவசரமாகப் பிடுங்கி சத்தமாகப் படித்தனர்.

அதில் எழுதியிருந்தது இதுதான்: “சங்கரா, நீ என் ஆக்ஸிஜன் ட்யூப் மேலே நிற்கிறாய்”.

செய்ய வேண்டியதைச் செய்யுங்கள்!

நல்ல இருட்டில் நடந்து போய்க்கொண்டு இருந்த சங்கரன்பிள்ளை, தெரியாமல் பாதாளச் சாக்கடைக்குள் தொபுக்கடீர் என விழுந்துவிட்டார். அதற்குள் விழுந்தால் எப்படி நாறிப் போவோம் என்பதைச் சொல்ல வேண்டுமா என்ன?

சாக்கடையில் இருந்து மேலே வர இப்படியும் அப்படியும் போராடினார். பக்கத்திலும் உதவிக்கு யாரும் இல்லை.

திடீரென, ‘ஐயோ! நெருப்பு... நெருப்பு!’ என்று அலறினார்.

சத்தம் கேட்டு ஆளாளுக்கு தீயணைப்புப் படைக்கு போன் அடித்தார்கள். அவர்களும் ஒரு கும்பலாய் ஓடி வந்து பார்க்க, சங்கரன்பிள்ளை சாக்கடைக்குள் தத்தளித்துக்கொண்டு இருந்தார். அவருடைய இடுப்பு பெல்ட்டில் ஒரு கொக்கியை மாட்டி அலாக்காய் மேலே தூக்கிப் போட்டுவிட்டு, “எங்க ஸார் நெருப்பு?” என்று கேட்டனர்.

“நெருப்பா? அதெல்லாம் ஒண்ணுமில்லை. சாக்கடை.. சாக்கடை..ன்னு கத்தினா, யாரு வரப் போறாங்க? அதான் நெருப்பு.. நெருப்பு..ன்னு கத்தினேன்! என்றார்.

எதைச் செய்ய வேண்டுமோ அந்த நேரத்தில் அதைச் செய்துவிட்டால், உங்களுக்கானது உங்களைத் தேடி வந்துவிடும். சரியானதைச் செய்யாதவரை உதவி வராது!