ஒரு ஹீரோ... ஒரு யோகி... பகுதி 6

'காதல்' என்ற வார்த்தையைக் கேட்டதும் எல்லோருக்குள்ளும் ஒரு புத்துணர்ச்சியும் மகிழ்ச்சியும் ஏற்படுவதை பார்க்கமுடியும். ஆனால், எந்நேரமும் எல்லோரிடமும் ரொமான்ஸிலேயே இருக்க முடியுமா என்ன? சரி… சத்குருவிற்கு இந்த ரொமான்ஸ் எல்லாம் எப்படி…? இதனை அவரிடமே கேட்டுவிட்டார் நடிகர் சித்தார்த்! சத்குருவின் பதிலை தொடர்ந்து படியுங்கள்!

Question: சத்குரு நீங்கள் எவ்வளவு ரொமான்டிக்கான மனிதர்? நான் ஒரு ரோமான்டிக் நடிகர், சத்குரு எவ்வளவு ரொமான்டிக்கானவர்?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

நாம் முதலில் ரொமான்ஸ் என்ற வார்த்தையைப் புரிந்துக் கொள்வோம். ரொமான்ஸ் என்றால் எந்த செயலைச் செய்தாலும் அதில் மிக ஆழமாக ஈடுபடுவது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக ரொமான்ஸை ஓர் இளம் ஆணுடனோ அல்லது பெண்ணுடனோ மட்டும் தொடர்புப்படுத்தத் துவங்கி விட்டோம். ஆனால் நானோ பரிபூரணக் காதலன், இந்த முழு பிரபஞ்சத்தையும் காதலிப்பவன். அப்படி இருக்கக் கூடாதா என்ன?

நீங்கள் செய்யும் ஒவ்வொன்றிலும் போதிய கவனம் செலுத்தத் துவங்கினால், உங்களால் ரோமான்டிக்காக இருப்பதைத் தவிர்க்கவே இயலாது.

நாம் ஏன் அண்டை வீட்டுப் பெண்ணை மட்டும் காதலிக்க வேண்டும்? ஏன் இந்த உலகம் முழுவதையும் காதலிக்கக் கூடாது? உங்கள் மூளை முழுவதையும் உங்கள் ஹார்மோன் அபகரித்துவிட்டதால், உங்கள் பக்கத்து வீட்டுப் பெண் உங்கள் கண்களெல்லாம் நிரம்பியிருக்கிறாள். உங்கள் ஹார்மோன் உங்களை அபகரிக்கவில்லை என்றால் இந்த உலகம் முழுவதையும் நீங்கள் காதலிப்பதில் தடை ஏதும் உள்ளதா? நீங்கள் போதுமான கவனம் செலுத்தினால் ஏன் சின்னஞ்சிறிய ஒரு எறும்பு கூட அபாரமான ஒரு உயிராக இருப்பதை நீங்கள் காண முடியும்.

அந்த எறும்பை ஒரு சிறிய மெஷின் என்னும் கண்ணோட்டத்தில் பார்த்தால் கூட, அது நகரும் விதம், அது அசையும் விதம் எல்லாமே மிகப் பிரம்மாண்டமான மெக்கானிக்ஸ் அல்லவா? அதனிடம் இருக்கும் திறனைப் பார்த்தால், ஒரு ஜென்மம் அதன் அசைவுகளை கவனிப்பதில் செலவிட்டாலும் கூட அது உருவாக்கப்பட்ட விதத்திலிருந்து கற்றுக் கொள்ள எத்தனையோ இருக்கிறதே?

இதைப் போன்றே நீங்கள் செய்யும் ஒவ்வொன்றிலும் போதிய கவனம் செலுத்தத் துவங்கினால், உங்களால் ரோமான்டிக்காக இருப்பதைத் தவிர்க்கவே இயலாது. தன்னைச் சுற்றியுள்ள உயிர்களைக் கண்டு பிரமித்து, தன்னைச் சுற்றியுள்ள அத்தனை உயிர்களிடத்திலும் ஆழமான ஈடுபாடு கொள்வது மனித சுபாவத்தின்படி இயற்கைதான். ஆனால் ஹார்மோன்கள் உங்கள் புத்திசாலித்தனத்தைக் கொள்ளைகொண்டுவிட்டதே!

அடுத்த வாரம்...

துப்பாக்கி கலாச்சாரம், தனி நபர்கள் ஆயதங்கள் வைத்துக் கொள்வது, என இன்றைக்கு நம்மை அச்சுறுத்தும் விஷயம் பற்றி சத்குரு கூறுவது என்ன? வரும் வாரம் தெரிந்து கொள்வோம்.

இத்தொடரின் பிற பதிவுகள்: ஒரு ஹீரோ... ஒரு யோகி...