நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் நாள் விழாவான இன்றைய கொண்டாட்ட நிகழ்வுகள்... ஒரு பார்வை!

நவராத்திரியின் இன்றைய இரண்டாம் நாள் கொண்டாட்டத்தில் புதுவை சகோதரிகளான ‘கற்பகவின்னி மற்றும் அசோகவதனி’ ஆகியோரின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. பாரம்பரிய நடனங்களான பரதநாட்டியம் மற்றும் கதக் நடனங்களை அரங்கேற்றி ஆடிக்காட்டிய சகோதரிகள், நாட்டுப்புற கலைவடிவமான கரகாட்டத்தையும் ஆடி அசத்தினர்.

‘அலாரிப்பூ’ எனும் நாட்டிய சமர்ப்பணத்தை பரதநாட்டியத்தில் வெளிப்படுத்திய சகோதரிகள், தொடர்ந்து சில கீர்த்தனைகளுக்கு கலைநுணுக்கங்கள் நிறைந்த முக அபிநயங்களை வெளிப்படுத்தி, பார்வையாளர்களின் அபிமானத்தைப் பெற்றனர். பின்னர், கதக் நடனத்தையும், அதோடு புஷ்பவனம் குப்புசாமி அவர்களின் பாடலுக்கு கரகாட்டத்தையும் ஆடி பார்வையாளர்களை துள்ளாட்டமிடச் செய்துவிட்டனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மாலை 5.30 மணியளவில் ஈஷா யோகா மையத்திலுள்ள சூரியகுண்டம் முன்பாக துவங்கிய இந்நிகழ்ச்சியை ஆயிரக் கணக்கான மக்கள் கண்டுகளித்தனர்.

சம அளவு திறமைகொண்ட பாரம்பரிய நாட்டியக் கலைஞர்களான சகோதரிகள் இருவரும், தாங்கள் நாட்டியம் கற்ற நிறுவனத்திற்கும், தங்களது குருவிற்கும் பெருமை சேர்க்கும் விதத்தில் தேசிய அளவில் பற்பல வெற்றிகளைப் பெற்றுள்ளனர். கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பரதநாட்டியத்தை கற்றுத் தேர்ந்துள்ள சகோதரிகள் இருவரும் மற்ற இந்திய பாரம்பரிய நாட்டிய வடிவங்களான குச்சிப்புடி, ஒடிசி மற்றும் கதக் ஆகிய கலைகளின் அடிப்படை நிலைகளை கற்றறிந்துள்ளனர்.

2005 மற்றும் 2007ல் பாண்டிச்சேரி அரசின் சிறந்த குழந்தை நடனக் கலைஞருக்கான விருதினை கற்பகவின்னி மற்றும் அசோகவதனி சகோதரிகள் பெற்றுள்ளனர். 2013ல் பெங்களூரூ கலாச்சார சந்திப்பில் சிறந்த நடன அமைப்பாளர் விருதையும் இவரகள் பெற்றுள்ளனர். 2013ல் மாண்புமிகு இந்திய குடியரசு தலைவர் திரு.பிரணாப் முகர்ஜி அவர்களின் முன் தங்கள் நாட்டிய நிகழ்ச்சியை வழங்கிய பெருமைபெற்றுள்ளனர்

அந்த நாட்டிய நிகழ்ச்சியைத் தொடர்ந்து, லிங்கபைரவி தேவி உற்சவ மூர்த்தியின் ஊர்வலம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. லிங்கபைரவி துவங்கும் இந்த ஊர்வலத்தில், தியானலிங்கம் முன் நடைபெறும் ஆரத்தியில் நெருப்பு நடனமாடுவது முக்கிய அம்சமாக இருக்கும்.

நவராத்திரி விழாக் காலங்களில் லிங்கபைரவி, முதல் மூன்று நாட்கள் குங்கும அலங்காரத்திலும் அடுத்த மூன்று நாட்கள் மஞ்சள் அலங்காரத்திலும், இறுதி மூன்று நாட்கள் சந்தன அலங்காரத்திலும் பக்தர்களுக்குக் காட்சியளிப்பாள். இரண்டாம் நாளான இன்று, குங்கும அலங்காரத்தில் காட்சியளித்த லிங்கபைரவி தேவி, பக்தர்களுக்கு அருளை வாரிவழங்கினாள்.


நாளை...

மூன்றாம் நாள் விழாவான நாளை, சித்ரா நாயர் மற்றும் குழுவினரின் (முன்னாள் ஈஷா சம்ஸ்கிருதி மற்றும் ஈஷா ஹோம்ஸ்கூல் நடன ஆசிரியர்) - பரதநாட்டியம் நிகழவுள்ளது.