சமீபத்தில் ஜூஹி சாவ்லா சத்குருவுடன் "அன்பும் வாழ்வும்" என்ற தலைப்பில் உரையாடியதிலிருந்து...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Question: நம் நவீன சமூகத்தில் பல பெண்கள் தங்கள் வீட்டிலிருந்து வெளியே வந்து வேலையோ தொழிலோ செய்கின்றனர். பெண்கள் வேலை செய்துகொண்டு, குடும்பத்தை கவனித்துக்கொண்டு, பொருளாதார ரீதியாகவும் சுதந்திரமாக இருப்பது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

சத்குரு:

ஒவ்வொரு பெண்ணும், ஒரு தனிநபராக அவள் செய்ய விரும்புவதை செய்யவேண்டும். இது சமூகத்தில் ஒரு வழக்கமாகவோ, உலகில் இது மட்டுமே சரியான செயல் என்ற நிலையாகவோ ஆகிவிடக்கூடாது. ஒரு பெண் இரண்டு குழந்தைகளைப் பெற்று வளர்க்க விரும்பினால், அதுவே முழுநேர வேலை என்று நான் நினைக்கிறேன். அவள் வெளியே சென்று வேலை பார்க்கக்கூடாது என்று நான் சொல்லவில்லை. அவள் விரும்பினால், தனிநபராக, அவள் விரும்புவதைச் செய்யும் சுதந்திரம் அவளுக்கு உண்டு. ஆனால் இரண்டு குழந்தைகளை பெற்று வளர்ப்பது இனப்பெருக்கம் பற்றியதல்ல. நீங்கள் அடுத்த தலைமுறை மனிதர்களை உருவாக்குகிறீர்கள். உலகம் நாளை எப்படி இருக்கும் என்பதை நிர்ணயிப்பது, இன்று எப்படிப்பட்ட தாய்மார்கள் இருக்கிறார்கள் என்பதுதான்.

நான் பல பெண்மணிகளிடம், "நீங்கள் என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டிருக்கிறேன். அதற்கு அவர்கள், "ஓ, நான் வெறும் இல்லதரசிதான்" என்பார்கள். "ஏன் நீங்கள் வெறும் இல்லதரசிதான் என்று சொல்கிறீர்கள்?!" என்று நான் கேட்பேன். இரண்டு அல்லது மூன்று புதிய உயிர்களை ஊட்டி வளர்ப்பதன் முக்கியத்துவம் அவர்களுக்குப் புரிவது போலத் தோன்றவில்லை. இது ஒரு மிக முக்கியமான வேலை. என் தாயார் என்னிடம் ஒருபோதும் "எனக்கு உன்மேல் மிகவும் பிரியம்" என்றெல்லாம் எதுவும் சொன்னதில்லை. அவர் சும்மா வாழ்ந்தார், அவருக்கு எங்கள்மேல் பிரியம் இருக்கிறதா இல்லையா என்றெல்லாம் எங்களுக்குத் தோன்றியதே இல்லை. அவர் வாழ்க்கை முழுவதையும் எங்களுக்காக அர்ப்பணித்திருந்ததால் எங்களுக்குள் அந்த கேள்வியே எழுந்ததில்லை. அவர் எங்களுக்காகவே வாழ்ந்தார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் என்னுடன் அந்த காலகட்டத்தில் இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

நான் இப்போது இருக்கும் நிலைக்கு என் தாயாரின் நேரடியான பங்களிப்பு எதுவும் இல்லை. ஆனால் எனக்காக அவர் உருவாக்கிய சூழ்நிலை இல்லாமல், நான் இப்போது இந்த நிலையில் இருந்திருக்க மாட்டேன். இது ஏதோ ஒரு கட்டத்தில் வெளிப்படும் என்பதை நன்கு உணர்ந்து, அந்த சூழ்நிலையை உருவாக்க அவர் தன் உயிரையே கொடுத்தார். அதுதான் அவர் எனக்காக செய்திருப்பதில் மிக முக்கியமானது. இது முக்கியமானதல்ல என்று எவரும் ஏன் நினைக்கப் போகிறார்கள்? வாழ்வின் ஆரம்ப கட்டத்தில், எதைப் பற்றியும் நாங்கள் நினைக்க வேண்டிய தேவை எங்களுக்கு இருந்ததில்லை. சரியான பின்னணி எப்போதும் இருப்பதை அவர் உறுதிசெய்தார். எங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது குறித்த கவலையே இல்லாமல் நாங்கள் வாழ்ந்தோம். பல நாட்களுக்குத் தொடர்ந்து கண்மூடி அமர்ந்திருக்கும் சாத்தியத்தையும் எனக்கு இதுவே அளித்தது.

இப்பொழுது நாம் இந்த உலகம் முழுவதையும் பொருளாதாரமாக மாற்றிவிட்டோம். பணம் என்றால் உங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குவது, அவ்வளவுதான். ஆண்கள் பொருள் சேர்க்க, பெண்கள் வாழ்வின் அதிக அழகான அம்சங்கள் பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள். இப்போது, பெண்களும் பொருள் ஈட்ட விரும்புகிறார்கள். அப்படிப்பட்ட பொருளாதாரரீதியான தேவை குடும்பத்தில் இருந்தால் அவர் அதை செய்தாக வேண்டும். ஆனால் அதுவே செய்வதற்கு சிறப்பான செயலாக கருதப்படக்கூடாது. அவள் பாடினாலோ, இசை மீட்டினாலோ, சமையல் செய்தாலோ, அல்லது சும்மா குழந்தைகள் மேல் பிரியத்துடன் இருந்தாலோ, அவள் அழகாக, ஒரு மலர் போல வாழ்வாள். அதுவே மிக நன்று.

ஒரு பெண் பணம் சம்பாதித்தால் மட்டுமே மதிப்பான எதையோ செய்கிறாள் என்று இருக்கக்கூடாது. பொருளாதாரத் தேவை இருந்தாலோ, அவளுக்கு அப்படிப்பட்ட நாட்டம் இருந்தாலோ, அவள் அப்படிச் செய்யலாம். ஆனால் இது போன்ற மதிப்பீடுகளை நாம் உலகத்தில் உருவாக்காமல் இருப்போம். பிழைப்பை வாழ்வின் அழகான அம்சங்களைவிட முக்கியமானதாக மாற்றும்போது, சமூகம் பரிணமிக்காது, பின்னோக்கித்தான் போகும்.

Love & Grace