கதை கேட்பதென்றால் யாருக்குத்தான் ஆர்வமில்லை! பாட்டி சொன்ன கதையை முழுதாய்க் கேட்காமல் தூங்கிப்போனவர்களுக்காக, இங்கே சத்குருவின் இரண்டு குட்டிக் கதைகள் காத்திருக்கின்றன.

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நாளை நடப்பது நாளைக்கே நடக்கட்டும்!

ஒருமுறை ஒரு மனிதருக்கு, அவர் செய்யாத குற்றத்துக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டது. அடுத்த நாள் காலை அவரை தூக்கில் போட வேண்டும் என்று அந்த நாட்டின் அரசர் உத்தரவிட்டு விட்டார். இப்படி ஒரு தீர்ப்பு சொன்னவுடன், அவர் அரசனை நோக்கி, ‘அரசே! எனக்கு ஒரு வருடம் அவகாசம் கொடுத்தால், உங்கள் குதிரையைப் பறக்க வைப்பேன்’ என்று சொன்னார். இதைக் கேட்டுவிட்டு சிந்தனையில் ஆழ்ந்த அரசர், கடைசியில், ‘சரி! ஆனால் அப்படி குதிரை பறக்காவிட்டால், உன் தலையை யானையின் காலுக்குக் கீழே வைத்து நசுக்கிவிடுவேன்’ என்று எச்சரித்து, அவனுக்கு ஒரு வருடம் காலக்கெடு கொடுத்தனுப்பினார்.

அரசரின் குதிரையை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்த அம்மனிதரைப் பார்த்த அவர் மனைவி, ‘என்ன இப்படி செய்து விட்டீர்கள்? குதிரைக்கு எப்படி பறக்க கற்றுக் கொடுப்பீர்கள்? எங்காவது குதிரை பறந்து கேள்விப்பட்டதுண்டா?’ என்று சோகமாகக் கேட்டார். அதற்கு அந்த மனிதர், ‘எனக்கு ஒரு வருடம் அவகாசம் இருக்கிறது. இந்த ஒரு வருடத்தில் ஒருவேளை அரசர் இறந்துவிடலாம், அல்லது நானே இயற்கை மரணம் அடைந்துவிடலாம் அல்லது இந்தக் குதிரை இறந்துவிடலாம். இல்லை யென்றால், இந்தக் குதிரை பறக்கக் கூட கற்றுக் கொள்ளலாம், யாருக்குத் தெரியும்?’ என்றார்.

நாளை என்ன நடக்கப் போகிறது என்பதை தற்போதைய சூழ்நிலைகளை வைத்து தீர்மானிக்கத் தேவையில்லை. நாளை நடக்கப் போவதற்கு இப்போதிருக்கும் சூழ்நிலைகள் ஒரு வழிகாட்டியாக வேண்டுமானால் இருக்கலாமே தவிர, அவையே ஒரு தீர்மானமாக, இறுதி முடிவாக இருக்கத் தேவையில்லை. இன்றைய சூழல்களை நாளைய எதிர்காலமாக மக்கள் கற்பனை செய்து கொள்வதால்தான் அவர்களுக்கு துயரங்களும், மன அழுத்தமும் ஏற்படுகின்றன.

புத்திசாலிக் காவலர்

பறக்கும் ! குதிரை பறக்கும் ! , Parakkum ! kuthirai parakkum !

ஒரு நாள் இரவு, காவல் வண்டியில் இரண்டு காவலர்கள் நகரில் ரோந்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது வண்டியிலிருந்த ரேடியோ அலறியது, ‘கண்ட்ரோல் ரூமிலிருந்து பேசுகிறோம், நகரின் சில பகுதிகளில் கலவரம் நடக்கிறது, எனவே பொதுமக்கள் எங்கும் கூட்டம் கூடாமலும், சீக்கிரம் வீடு போய் சேருமாறும் கேட்டுக் கொள்கிறோம்'.

இந்த வண்டியில் இருந்த இரு காவலர்களில் ஒருவர் புதிதாக பணியில் இணைந்தவர். காவல் வண்டி ஒரு இடத்தைக் கடக்கும்போது, அங்கு கும்பலாக சிலர் நின்று கொண்டிருந்தனர். உடனே புதிய காவலர், அவர்களைப் பார்த்து, ‘என்ன, கூட்டம் போடுகிறீர்கள்! இங்கிருந்து உடனே கலைந்து போங்கள், 2 நிமிடங்களில் கலைந்துவிட வேண்டும், இங்கிருந்து கலைந்துவிட்டு உடனே வேறிடத்தில் கூடக்கூடாது, என்ன கேட்கிறதா?’ என்று சத்தம் போட்டார். உடனே அங்கு நின்று கொண்டிருந்தவர்கள், ஒருவருக்கொருவர் குழப்பமாகப் பார்த்துக் கொண்டே மெதுவாகக் கலைந்து சென்றனர். உடனே, புதிய காவலர், மூத்த காவலரைப் பெருமையாகப் பார்த்து, ‘எப்படி, கலவரக்காரர்களை திறமையாகக் கலைத்தேனா?’ என்றார். பழைய காவலர் சொன்னார், ‘அது ஒரு பஸ் ஸ்டாப். வீட்டிற்குப் போவதற்காகக்தான் அவர்கள் பஸ்ஸை எதிர்பார்த்து அங்கே நின்று கொண்டிருந்தார்கள்!’.

Siddhi @ flickr, anantal @ flickr