ஒரு சிக்கனுக்கு ஒரு நாய்!

Trial in Court

மீண்டும் வந்துவிட்டார் சங்கரன்பிள்ளை… அவரது கதைகளில் இரண்டு இங்கே உங்களுக்காக…

சத்குரு:

ஒரு சிக்கனுக்கு ஒரு நாய்!

சங்கரன் பிள்ளை, அசைவ விடுதி ஒன்றை நடத்திக்கொண்டு இருந்தார். மெனுவில், சிக்கன் கட்லெட்டும் ஒன்று. அதில் நாய்க் கறியும் கலக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார் சங்கரன்பிள்ளை.

நீதிபதி: ‘‘என்ன இது, சிக்கன் கட்லெட்டில் நாய்க் கறியைக் கலக்குகிறீர்களாமே? அதுவும் அதிக அளவில்!’’

சங்கரன் பிள்ளை: ‘‘கலப்பது உண்மைதான் யுவர் ஹானர். ஆனால் சரிக்குச் சரியாக மட்டுமே (50:50) கலக்கிறேன்!’’

நீதிபதி: ‘‘பெரிய அளவில் கலப்படம் செய்வதால், உனக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்போகிறேன்!’’

சங்கரன் பிள்ளை: ‘‘ஆனால் நீதிபதி அவர்களே, நான்தான் அதிகமாகக் கலப்பதில்லையே. சரிக்குச் சரியான அளவுதானே கலக்கிறேன்!’’

நீதிபதி: ‘‘அப்படி என்றால்?’’

சங்கரன்பிள்ளை: ‘‘ஒரு சிக்கனுக்கு ஒரு நாய், அவ்வளவுதான்!’’

புலி வருது… புலி வருது…

புலி வருது... புலி வருது...

ஒரு நாள் சங்கரன்பிள்ளையும் அவருடைய நண்பர்களும் பாரில் உட்கார்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். திடீரென்று ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் நடத்திய சாதனைகளைப் பற்றிப் பேசத் தொடங்கினர். ஒருவர் ஜல்லிக்கட்டில் தான் மட்டுமே தனியாக ஒரு காளையை அடக்கியதை விரிவாகவும் பெருமையாகவும் சொன்னார். இன்னொருவர், பக்கத்து வீட்டில் நான்கு கொள்ளையர்கள் புகுந்து பணம், நகைகளைக் கொள்ளையடித்துத் தப்பியபோது, தான் மட்டும் தனியாக அவர்களைத் துரத்திப் போய் எதிர்த்துப் போராடி நகைகளை மீட்டுத் தந்ததை விவரித்தார்.

அடுத்து சங்கரன் பிள்ளையிடம், “சரி, நீ என்ன செய்திருக்கிறாய்? சொல்…” என்று அவர்கள் இருவரும் சீண்டினர்.

சங்கரன் பிள்ளை சொன்னார்: “ஒருநாள், நான் மட்டுமே அங்கு தனியாக இருந்தேன். அப்போது பெரிய பெங்கால் புலி என்னைப் பார்த்து உறுமிக் கொண்டே வந்தது. நான் அதை முறைத்துப் பார்த்தேன், அதுவும் என்னை முறைத்துப் பார்த்தது. ஆனாலும் என்னை நோக்கி உறுமிக் கொண்டே நெருங்கி வந்தது. மிகவும் அருகே வந்து விட்டது. ஒரு அடிதான் இடைவெளி இருக்கும், என்னிடம் துப்பாக்கிகூட இல்லை” என்று சொல்லி நிறுத்தினார். “சரி, அப்புறம் என்னாச்சு… சொல்லு, சொல்லு…” என்று மற்றவர்கள் அவசரப்பட்டனர்.

பிறகு சங்கரன் பிள்ளை மெதுவாகச் சொன்னார்: ‘‘அப்புறம்… அடுத்த கூண்டை நோக்கிப் போய் விட்டேன்!”
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert