பூமித் தாயின் புன்னகை! -இயற்கை வழி விவசாயம்-பகுதி 29

கோமாதா என நாம் போற்றும் மாடுகள் இயற்கை விவசாயத்தில் ஈடு இணையற்ற பங்களிப்பை வழங்குகின்றன. அதோடு ஆடு-கோழிகள் போன்ற உயிரினங்களும் விவசாயிகளின் வாழ்வில் இரண்டறக் கலந்துள்ளன. இவற்றிற்கு இயற்கை முறையில் வைத்தியம் செய்யும் சில வழிமுறைகள் இதோ உங்களுக்காக!

ஈஷா விவசாய இயக்கத்தின் சார்பாக 2016ல் பல்லடத்தில் நடைபெற்ற இயற்கை விவசாயிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கால்நடை மருத்துவர் டாக்டர். புண்ணியமூர்த்தி அவர்கள் கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் குறித்து பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

Dr. புண்ணியமூர்த்தி

அத்துடன் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள மரபுசார் மூலிகைவழி கால்நடை மருத்துவக் கைப்பிரதியை விவசாயிகளுக்கு வழங்கினார். அந்தக் கைப்பிரதியின் தகவல்கள் விவசாயிகளின் வேண்டுகோளுங்கிணங்க "பூமித்தாயின் புன்னகை"யில் பதிவேற்றப்படுகிறது.

மடிவீக்க நோய் - வெளிப்பூச்சு சிகிச்சை முறை

madi-noi

கறவை மாடுகளின் மடி வீக்க நோய் பெரும்பாலும் நுண் கிருமித் (பாக்டீரியா) தொற்றுகளால் ஏற்படுகிறது. மாட்டின் மடியானது வீக்கமாகவும், கடினத்தன்மையுடனும், வெப்பம் அதிகரித்தும் காணப்படும். பாதிக்கப்பட்ட கால்நடையின் பாலானது திரிந்து வெண்மஞ்சள் நிறத்துடனோ அல்லது இரத்தம் கலந்தோ காணப்படும், இது மடிநோய்க்கான அறிகுறியாகும். மாட்டின் மடியினை நன்கு கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மாட்டுக் கொட்டகையையும் சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு மாட்டிற்குத் தேவையான மருந்து செய்வதற்கு கீழ்கண்ட அளவுகளில் மருந்துப் பொருட்கள் தேவைப்படும்.

1. சோற்றுக்கற்றாழை - 250 கிராம் (ஒரு மடல்)
2. மஞ்சள் பொடி - 50 கிராம்
3. சுண்ணாம்பு - 15 கிராம் (ஒரு கொட்டை பாக்களவு)

இந்தப் பொருட்கள் மூன்றையும் ஆட்டுக்கல் உரலில் இட்டு நன்றாக கெட்டியாக அரைத்து பின் ஒரு கை அளவு எடுத்து நீர் விட்டுக் கரைத்து நீர்த்த நிலையில் கால்நடையின் மடிப்பகுதி முழுவதும் நன்றாக தடவ வேண்டும். பால் கறந்த பின்பு தடவ வேண்டும். நாள் ஒன்றுக்கு 10 முறை வீதம், மடி வீக்கம் குறையும் வரை குறைந்தது 5 நாட்களுக்கு பூச வேண்டும். தினமும் புதியதாய் மருந்து தயாரிக்கப்பட வேண்டும். கன்று போட்டு 80 நாட்களுக்குள் இந்த நோய் வரும், உடனே மருத்துவம் செய்து இழப்பைத் தவிர்க்கலாம்.

"அட என்ற அப்பாரு அடிக்கடி சொல்றது ரொம்ப சரிதானுங்க, மாடு மேய்க்காம கெட்டது பயிரு பாக்காம கெட்டதுனு சொல்லுவாப்டிங்கோ! மாடு மேய்க்கருது சாதாரண விசயமில்லீங்கோ. நம்ம புள்ளையாட்டம் பாத்துக்கோணுமுங்க. நம்ம புள்ளைக்கு சௌகரியமில்லையினா உடனே கவனிச்சு வைத்தியம் பாக்குற மாறியே நம்ம விவசாயிங்க மாடுகள பக்குவமா பாத்துக்கோணுமுங்க. ஏன்னா இயற்கை விவசாயம் மாடுங்கள மையமா வச்சு தாங்க நடக்குது"

கோமாரி நோய் - வாய் வழி மருந்து

komari

வாயில் கொப்புளங்களுடன் எச்சில் சுரப்பு அதிகரித்தல், வாயில் புண்கள் இருப்பதினால் எதையும் உண்ண முடியாத நிலை, மேலும் குளம்புகளிலும் கொப்புளங்கள் காணப்படுதல், இவை கோமாரி நோய்க்கான அறிகுறிகளாகும்.

கோமாரி நோய்க்கான வாய் வழி மருந்து செய்வதற்குக் கீழ்கண்ட மருந்துப் பொருட்களை கீழ்கண்ட அளவுகளில் எடுத்துக் கொள்ளவும், இந்த அளவு ஒரு மாடு அல்லது இரண்டு கன்றுகள் அல்லது நான்கு ஆடுகளுக்கு போதுமானது.

1. சீரகம் - 10 கிராம்
2. வெந்தயம் - 10 கிராம்
3. மிளகு - 10 கிராம்
4. மஞ்சள் தூள் - 10 கிராம்
5. பூண்டு - 4 பல்
6. வெல்லம் - 100 கிராம்
7. தேங்காய் துருவல் - 10 கிராம்

சீரகம், வெந்தயம் மற்றும் மிளகை சிறிது நேரம் ஊறவைத்து அரைக்கவும், பின்னர் மஞ்சள் தூள், பூண்டு, வெல்லம் சேர்த்து மீண்டும் அரைத்து இதனுடன் தேங்காய் துருவலை சேர்த்து கையினால் பிசைந்து நாள் ஒன்றுக்கு மூன்று முறை வீதம் 5 நாட்களுக்கு உள் மருந்தாகக் கொடுக்கவும்.

கோமாரி நோய் - மேல்பூச்சு மருந்து

கோமாரி நோய்க்கான கால்புண் மேல்பூச்சு மருந்து செய்யத் தேவையான பொருட்கள்:

1. நல்லெண்ணை - 1 லிட்டர்
2. பூண்டு - 10 பல்
3. மஞ்சள் தூள் - 10 கிராம்
4. துளசி இலை - 10 இலை
5. குப்பைமேனி - 10 இலை
6. மருதாணி - 10 இலை
7. வேப்பிலை - 10 இலை

பூண்டு, மஞ்சள் தூள், துளசி இலை, குப்பைமேனி, மருதாணி, வேப்பிலை இவைகளை நன்றாக அரைத்து நல்லெண்ணை விட்டு கொதிக்க வைத்து பிறகு ஆறவைத்து மேல் பூச்சாக புண் உள்ள இடத்தில் புண் ஆறும் வரை தடவிவரவும். குளம்புகளுக்கு இடையில் புண்ணும், அதில் புழுக்களும் இருக்கும். அதைச் சுத்தம் செய்து புழுக்களை நீக்கிய பின் மருந்து இடவேண்டும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

"அட கெரகத்துக்கு மனுசுங்க இப்பல்லாம் மருத்துவம்னாலே அலோபதிதான்னு நெனச்சுக்கறாங்க. பொறவு எப்படிங்கோ மாட்டுக்கு இயற்கை வைத்தியம் செய்யோணும்னு தோணும்?! ஆனா நாம குடிக்கற பால் நஞ்சில்லாம இருக்கோணுமுன்னா மாடுகளுக்கு இயற்கை மருத்துவம் அவசியமுங்க. நல்லெண்ணெய், மஞ்சள், வெல்லம், வெந்தயம் இதெல்லாம் நாம அன்றாட உணவா எடுத்துக்கறோம் இல்லீங்கோ?! நம்ம பாரம்பரியத்தில கடைபிடிக்கற உணவே மருந்துதானுங்களே?!"

வயிறு உப்புசம் - வாய்வழியாக சிகிச்சை முறை

கால்நடைகளில் உப்புசம் அல்லது நுரையோடு கூடிய வயிறு உப்புசம் தீவன மாறுபாடுகளினால் ஏற்படக் கூடியது. இது மிக அதிகமான எளிதில் செரிக்க கூடிய தானியவகை உணவு மற்றும் ஈரமான பசுந்தீவனங்கள் உண்பதால் ஏற்படுகிறது.

ஒரு மாட்டிற்கு தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள்:

வெற்றிலை - 10 எண்ணிக்கை
பூண்டு - 5 பல்
பிரண்டை - 10 கொழுந்து
மிளகு - 10 எண்ணிக்கை
வெங்காயம் - 5 பல்
சின்ன சீரகம் - 10 கிராம்
இஞ்சி - 100 கிராம்
மஞ்சள் தூள் - 10 கிராம்
கல் உப்பு - 100 கிராம்

சின்ன சீரகம் மற்றும் மிளகினை இடித்து பின்பு மற்ற பொருட்களோடு கலந்து அரைத்துக் கொண்டு, இக்கலவையுடன் 100 கிராம் பனைவெல்லத்தைக் கலந்த பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, கல் உப்பு தொட்டு நாக்கின் மேல் அழுத்தமாக தடவி ஒரே வேளையில் அனைத்து உருண்டைகளையும் உள்ளே செலுத்த வேண்டும்.

கழிச்சல் நோய் - வாய் வழியாக சிகிச்சை முறை

நீர்த்த துர்நாற்றமுடைய கழிச்சல் காணப்படும். வால் மற்றும் பின்னங்கால்களில் சாணக்கறை படிந்து காணப்படும். உடலிலுள்ள நீர்ச்சத்து மற்றும் தாது உப்புக்கள் அதிகமாக வெளியேறி கால்நடைகள் சோர்ந்து காணப்படும். இது நோயின் அறிகுறியாகும்.

கீழ்கண்ட மருந்துப் பொருட்கள் ஒரு மாடு அல்லது மூன்று கன்றுகளுக்கு போதுமானதாகும்.

கலவை ஒன்று

1. சின்ன சீரகம் - 10 கிராம்
2. கசகசா - 10 கிராம்
3. வெந்தயம் - 10 கிராம்
4. மிளகு - 5 எண்ணிக்கை
5. மஞ்சள் - 5 கிராம்
6. பெருங்காயம் - 5 கிராம்

இந்தப் பொருட்களை நன்கு கருகும் வரை வறுத்தெடுத்து சிறிது நீர்தெளித்து இடித்துக்கொள்ள வேண்டும்.


கலவை இரண்டு

1. வெங்காயம் - 2 பல்
2. பூண்டு - 2 பல்
3. கறிவேப்பிலை - 10 இலை
4. பனைவெல்லம் - 100 கிராம்
5. கல் உப்பு - 100 கிராம்

இந்தப் பொருட்களை நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.

மேற்கண்ட இரண்டு கலவைகளையும் கலந்து சிறு சிறு உருண்டைகளாக கல் உப்பில் தோய்த்தெடுத்து நாக்கின் சொரசொரப்பான மேல் பகுதியில் தேய்த்தவாறு ஒரே வேளையில் உள்ளே செலுத்த வேண்டும்.

கன்று போட்ட மாட்டிற்கு என்ன கொடுக்கவேண்டும்?

பருத்திக்கொட்டை 500 கிராம், எள்ளு 250 கிராம், எள்ளு புண்ணாக்கு 250 கிராம், வெந்தயம் 100 கிராம் இவைகளை வேகவைத்து பனைவெல்லம் அரை கிலோ சேர்த்து நன்கு ஆறியபின் கன்றுக்குட்டிக்கு பால் கொடுக்கும் நேரத்தில் வைக்கவேண்டும். அரிசி கஞ்சி போன்றவற்றை வைக்ககூடாது.

ஈன்ற கன்றை மாடு நன்கு நக்கிய பின் கன்று மூச்சு விடும், கன்றின் மூக்கில் அடைப்பு இருந்தால் மூச்சு விட சிரமப்படும், சளியை நாம் வாய் வைத்து உறிஞ்சி எடுத்து விடலாம், உள்ளே ஊதக்கூடாது. கன்று போட்டு 30 நிமிடத்திற்குள் சீம்பாலை கன்று குடிக்கவைத்து விடவேண்டும். கன்றின் எடையில் 8ல் ஒரு பங்கு குடிக்க விடலாம், இதை இரண்டிலிருந்து நான்கு தவணையாக குடிக்க வைக்கலாம். மாடு கன்றுக்கு பால் கொடுக்கவில்லை என்றால் சீம்பால் கறந்து கொள்ளலாம்.

கன்றுகள் நஞ்சுபோடவில்லை என்றால் ஒரு கிலோ வெண்டைக்காயை வெல்லத்துடன் கலந்து கொடுக்கலாம். கண்டிப்பாக நஞ்சை கைவிட்டு எடுக்கக்கூடாது. பிறந்த கன்றுக்கு பால் கழிச்சல் ஏற்பட்டால் கசகசா வறுத்து நாக்கில் தடவலாம்.

"அட சாமி மாட்டுக்கு எதுக்கு இத்தன பக்குவம் பாக்கோணும்னு ஒருவேள தோணலாமுங்க இந்த டவுன் ஆளுகளுக்கு. நமக்கு பால் குடுக்குற மாடு நமக்கு தாய் மாதிரி தானுங்க. மாட்ட நாம செல்வமா பாத்தோமுங்க. அதனால தானுங்க அந்த காலத்துல போர்ல ஜெயிச்சுபோட்டு அரசர்கள்லாம் ஆடு மாடுகள பரிசா வாங்கிட்டு போவாங்க!"

குடற்புழு நீக்கம்

2 அங்குல நீள சோற்றுக் கற்றாழையில் முள்ளை நீக்கி, துண்டுகளாக நறுக்கி, அப்படியே சாப்பிடக் கொடுக்க வேண்டும். உப்பு, வெல்லம் கலந்த கலவையில் சோற்றுக்கற்றாழையை முக்கி எடுத்து கொடுக்கவேண்டும். ஆட்டுக் குட்டிகளுக்கு ஓர் அங்குலம் போதுமானது. குடற் புழு நீக்கம் அடிக்கடி செய்யத் தேவையில்லை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செய்தால் போதுமானது.

சளி மருந்து

தேவையான பொருட்கள்:

மஞ்சள் - 1 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
துளசி இலை - 1 கைப்பிடி
முருங்கை இலை - 1 கைப்பிடி
வேப்பிலை - 1 கைப்பிடி
ஆடாதொடா - 1 இலை
தூதுவளை - 1 இலை
ஓமவள்ளி - 1 இலை

மேற்கண்ட பொருட்களோடு 50 கிராம் நாட்டுச் சர்க்கரை சேர்த்து சாப்பிட வைக்க வேண்டும். ஒரு நாளுக்கு ஒரு வேளை என இரண்டு நாட்களுக்குக் கொடுக்க வேண்டும். இந்த அளவு 5 ஆடுகளுக்கானது. இந்த மருந்தை கரைத்து வாயில் ஊற்றக்கூடாது, புரையேறிவிடும்.

கோழிப்பேன்

100 கிராம் வசம்பு ஊறவைத்து அரைக்கவும், தேவைக்கேற்ப அவ்வப்போது புதியதாக அரைத்துக்கொள்வது சிறந்தது. அதனுடன் ஓமவல்லி இலைச்சாற்றை கலந்து அதில் கோழியை முக்கி எடுக்கவும். நாட்டு மாட்டு கோமியத்திலும் கோழியை முக்கி எடுக்கலாம். வெய்யில் காலத்தில் மட்டுமே இப்படி செய்ய வேண்டும். மழைக்காலத்தில் சாம்பல் தூவி விடலாம்.

"கோழி வளத்தே குமரிய கரை சேக்கலாம்னு என்ற பெரிய வூட்டு ஆத்தா அடிக்கடி சொல்லுவாப்டிங்கோ. இந்தக் கோழி, ஆடு, மாடு, வாத்து மாதிரி ஜீவராசியெல்லாம் விவசாயிக குடும்பத்துல ஒரு அங்கம் தானுங்க. ரேசன் அட்டையில மட்டும்தானுங்க பேர் இருக்காது."

கோழி வெள்ளைக்கழிச்சல்

சீரகம் ஒரு ஸ்பூன், கீழாநெல்லி ஒரு கைபிடி இரண்டையும் சேர்த்து அரைத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கோழி வாயில் ஊட்டவேண்டும் அல்லது அரிசிக் குருணையிலும் வைக்கலாம்.

கால்நடைகளை நோய்களிலிருந்து காப்பதற்காக செலவில்லாத எளிய இயற்கைவழி மூலிகை மருத்துவ முறைகளை நம்மிடம் பகிர்ந்துகொண்ட Dr. ந. புண்ணியமூர்த்தி Ph.D., அவர்களுக்கு ஈஷா விவசாய இயக்கத்தின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

கைப்பிரதி வெளியீடு

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,
கறவை மாடுகளில் முதல் உதவி மூலிகை மருத்துவம்,
மரபுசார் மூலிகை வழி கால்நடை மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக் கூடம்,
வல்லம் அஞ்சல், தஞ்சாவூர் - 613403

முக்கியக் குறிப்பு:

கால்நடை மருத்துவம் தொடர்பாக மருத்துவரைத் தொடர்பு கொள்ள விரும்புகிறவர்கள் அவரது பொன்னான நேரத்தை சரியானபடி பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். கால்நடை மருத்துவம் குறித்து கேட்கவிரும்பும் கேள்வியைத் தெளிவுபடுத்திக் கொண்டு அவர் கூறும் பதிலைக் குறிப்பெடுக்க பேனா மற்றும் நோட்டுப்புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு அவரைத் தொடர்பு கொள்ளவும்.

தொடர்புக்கு:
Dr. புண்ணியமூர்த்தி : 9842455833

தொகுப்பு:
ஈஷா விவசாய இயக்கம் : 8300093777