IYO-Blog-Mid-Banner

நில்... கவனி... சாப்பிடு! - பகுதி 4

டிவி பார்த்துக்கொண்டோ அல்லது கடற்கரையில் அமர்ந்து அரட்டை அடித்தபடியோ கொரிக்கப்படும் நிலக்கடலையை தினசரி உணவாக ஆக்க முடியுமா? தினசரி கடலை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? இதோ இந்த கட்டுரையின் மூலம் தெரிந்துகொள்ளலாம்!

பீன்ஸ், பட்டாணி போன்ற தாவர வகையைச் சேர்ந்ததுதான் நிலக்கடலையும். ஆனால் இதன் சத்தினைக் கணக்கில்கொண்டு கொட்டை வகைகளில் சேர்த்துள்ளனர். நிலக்கடலை உலகெல்லாம் பரவியது பதினாறாம் நூற்றாண்டில்தான். இதன் தாய் நிலம், பிரேசில். அங்கிருந்து போர்ச்சுகீசியர் பல்வேறு நாடுகளுக்கு இதனை எடுத்துச் சென்றனர். அப்படித்தான் இந்தியாவிலும் விருந்தாளியாய் வேர்விட்டது வேர்க்க்கடலை!

பூமிக்கடியில் தலை வைத்து வெளியே இலை விடுகிற தாவரம், வேர்க்கடலை. இதன் இலைகள் செடியில் பழுத்து மஞ்சள் நிறமடைந்த இரண்டு மாதங்களில் வேர்க்கடலை முற்றிக் கிடைக்கிறது. மாமிசம், முட்டை, காய்கறிகளைவிட வேர்க்கடலையில் புரதச் சத்து அதிகம். இன்னொரு சிறப்பு. இதனைச் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சியால் ஏற்படும் ஆஸ்துமா, ப்ராங்கைடிஸ் போன்ற நோய்கள் ஓடிவிடும். நெஞ்சு சளியினை நீக்கும் வல்லமையும் வேர்க்கடலை ஸ்பெஷல்.

நம் சத்குரு நாற்பது நாட்களுக்கு வேர்க்கடலையை மட்டுமே சாப்பிட்டு, தான் பெற்ற சக்தியினைப்பற்றி கூறியுள்ளார்.

நம் சத்குரு நாற்பது நாட்களுக்கு வேர்க்கடலையை மட்டுமே சாப்பிட்டு, தான் பெற்ற சக்தியினைப்பற்றி கூறியுள்ளார். சக்தி, புரதம், பாஸ்பரஸ், தையாமின், நையாசின் ஆகிய ஐந்து சத்துக்கள் கொண்ட அற்புத மருத்துவக் குணத்துடன் விளங்குகிறது வேர்க்கடலை. இதில் உள்ள எண்ணெய்ச் சத்து, எளிதில் ஜீரணமாகக்கூடியது. சிறந்த மலமிளக்கியாகவும் சருமத்துக்குப் பளபளப்பூட்டக்கூடியதாகவும் விளங்குகிறது.

வேர்க்கடலையை, வெல்லத்துடனும், ஆட்டுப்பாலுடனும் சேர்த்துச் சாப்பிடலாம். இது வளரும் குழந்தைகளுக்கும், கருத்தரித்துள்ள பெண்களுக்கும், தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்களுக்கும் அருமருந்து.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பல தொற்றுநோய்கள், ஹெபடைடிஸ், காசநோய் ஆகியவற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ளத் தேவையான எதிர்ப்பு சக்தியை வேர்க்கடலை அளிக்கிறது. ஹீமோஃபீலியா என்ற நோயில் அவதிப்படுபவர்களுக்கு அடிபட்டால் அவ்வளவு எளிதில் ரத்தம் உறையாது. அதனைக் குணப்படுத்தவும், பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கில் இருந்து குணமடையவும், நீரிழிவு நோயாளிகளுக்கும் வேர்க்கடலை சிறந்த உணவாகும்.

ஆட்டுப் பாலில் எலுமிச்சைச்சாறு பிழிந்து, அதனுடன் ஒரு பிடி வறுத்த வேர்க்கடலையைச் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு குணமாகும். வயிற்றில் நிகோடினிக் அமிலம் குறையும்போதுதான் இந்த பிரச்னை ஏற்படும். வேர்க்கடலையில் உள்ள நையாசின் இந்நிலையைச் சீர்செய்கிறது. புதிதாகப் பறித்த வேர்க்கடலையுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துச் சாப்பிட்டால் வாயில் உள்ள ஈறுகள் உறுதியடையும்.

வேர்க்கடலையைத் தண்ணீரில் ஆறு முதல் எட்டு மணி நேரம் ஊறவைத்து நீரை வடிகட்டிவிட்டுச் சாப்பிடுவதே சிறந்ததாகும். வேர்க்கடலையைக் கஞ்சியாக்கி, வாழைப்பழம், தேன் சேர்த்துச் சாப்பிடுவதால், குழந்தைகள் பலம் பெறுவார்கள்.

வேர்க்கடலையை வேகவைத்துச் சாப்பிடலாமா?

வேகவைப்பதாலும், வறுப்பதாலும் வேர்க்கடலை அதன் சத்துக்களை இழந்து விடுகிறது. பச்சையாக ஊறவைத்து சாப்பிடுவதே நன்று.

வேர்க்கடலை உடலில் கொழுப்புச் சத்தை அதிகரிக்காதா?

ஒரு தோசை வார்த்து எடுக்க இரண்டு, மூன்று தேக்கரண்டி எண்ணெய் பயன்படுத்துகிறோம். ஒரு பிடி வேர்க்கடலையிலில் இருப்பதோ ஓரிரு துளிகள். அவை உடலின் கொழுப்புச் சத்தை அதிகரித்து விடாது.

உடலின் பித்தஅளவு வேர்க்கடலை சாப்பிடுவதால் அதிகரிக்காதா?

வேர்க்கடலையை ஆறு முதல் எட்டு மணி நேரம் ஊறவைத்தால் பித்தம் அதிலிருந்து நீங்கிவிடும். இதனை நன்கு கழுவிவிட்டுச் சாப்பிடலாம். ஊறவைக்காமல் சாப்பிட்டால் பித்தம் அதிகரிக்கும்.

வேர்க்கடலை சாப்பிடுவதால் உடல் எடை கூடுமா?

ஒரு பிடி வேர்க்கடலை மட்டும் சாப்பிட்டால் எடை கூடாது. உடல் எடை கூட விரும்புவோர், ஆரோக்கியமாக எடை அதிகரிக்க நிறைய வேர்க்கடலை சாப்பிடலாம்!

வேர்க்கடலை பால்!

வேர்க்கடலை 2 கைப்பிடி அளவு (8 மணி நேரம் ஊறவைக்கவும்), ஆப்பிள் 1 (அ) சப்போட்டா (அ) நேந்திரம் (அ) செவ்வாழை (அ) பேரீச்சை... துருவிய தேங்காய் 2 டேபிள் ஸ்பூன்... தேன் 2 டீ ஸ்பூன் (சுவைக்கு ஏற்ப...)

ஊறவைத்த வேர்க்கடலையை நன்றாக மிக்ஸியில் அரைத்து, மற்ற பொருட்களையும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து, சல்லடையில் அரித்து அல்லது அரிக்காமல் அப்படியே பருகலாம்!


அடுத்த வாரம்...

முளைகட்டிய தானியங்களை சாப்பிட வேண்டிய அவசியத்தை உணர்த்தும் பதிவாக அடுத்த வாரப் பகுதி வருகிறது!


நில்... கவனி... சாப்பிடு! தொடரின் பிற பதிவுகள்