ஒரு தேசமாக, நாம் அடிப்படையில் விவசாயம் சார்ந்த கலாச்சாரமாக இருக்கிறோம். பூமியிலேயே மிக நீண்ட விவசாய சரித்திரம் கொண்டது நமது தேசமாகத்தான் இருக்கமுடியும். அதில் கால்நடைகள், குறிப்பாக காளைகளும் பசுக்களும் நமக்கு உணவு விளைவிப்பதிலும், நம் மண்வளம் காப்பதிலும், நாம் உயிர்வாழ்வதற்கும் முக்கிய பங்காற்றியுள்ளன. இன்று பல விஷயங்கள் மாறியிருக்கலாம், எனினும் இந்த மண்ணை ஊட்டப்படுத்த இவ்விலங்குகள் தேவைப்படுகின்றன. இந்தியாவில் நூற்று இருபதற்கும் மேற்பட்ட நாட்டு மாடுவகைகள் இருந்தன. ஆனால் இன்று அவற்றில் முப்பத்தி ஏழே எஞ்சியுள்ளன - மற்றவை அழிந்துவிட்டன. எஞ்சியுள்ள நாட்டு மாடுகளையாவது நாம் பாதுகாப்பது மிகவும் முக்கியம். இந்த இனங்கள் அதிவேகமாக அழிந்துவருவது பற்றி மக்களுக்கு நாம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவற்றை நாம் இப்போதே பாதுகாக்காவிட்டால், அவை அதிக காலம் இருக்கமுடியாது.

இந்த உள்நாட்டு மாடுவகைகளை நாம் ஏன் பாதுகாக்க வேண்டும்? உள்நாட்டு பசுவகைகளின் பாலும், அவற்றின் சாணமும் சிறுநீரும்கூட நம் விவசாயத்திற்கு மிகவும் உபயோகமானவை என்பது அறிவியல்பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. இந்த பாலுக்கு விசேஷமான குணமுண்டு. இதில் A2 ரக புரதம் இருக்கிறது. உலகின் பிற பகுதிகளிலுள்ள பெரும்பாலான மாடுவகைகளின் பாலில் இருப்பது A1 ரக புரதம், இது இதயநோய் உருவாக்கக்கூடியது என்று கூறப்படுகிறது. ஆரோக்கியத்தைப் பொருத்தவரை, புற்றுநோயைத் தடுக்கவும், எல்லாவற்றுக்கும் மேலாக நம் குழந்தைகள் நல்லபடியாக வளரவும், நிலத்திற்கு உரமிடவும், இந்த உள்நாட்டு மாடுகள் மிகவும் முக்கியமானவை. இதை மக்கள் கவனத்திற்கு நாம் கொண்டுவர வேண்டும். நகரங்களில் வாழ்வோருக்கும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.

துரதிர்ஷ்டவசமாக, கடந்த முப்பது முப்பத்தைந்து வருடங்களில், வெளிநாட்டு மாடுவகைகளே தரத்தில் உயர்ந்தவை என்ற தவறான கருத்து நமக்கு எப்படியோ வந்துவிட்டது. ஆனால் இன்று, கரவை மாடாகவும் சரி, வேலை மாடாகவும் சரி, இருவிதத்திலும் சிறந்தது நாட்டு மாடுகளே என்பதை சுட்டிக்காட்ட போதுமான அறிவியல் ஆதாரங்கள் உள்ளன. இந்த மாடுகள், நம் கலாச்சாரத்தின் அங்கமாகவும், நம் வீடுகளிலும் குடும்பங்களிலும் உறுப்பினர்களாகவும் என்றென்றும் இருந்து வந்துள்ளன. மக்களில் பெரும்பகுதியானோர் நகரங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டார்கள், அவர்கள் மாடு வளர்ப்பது பற்றிய பேச்சிற்கே இடமில்லை. ஆனால் வருடம் ஒருமுறையேனும் நமக்காக வேலைசெய்யும் விலங்குகளுக்கு நாம் நன்றி வெளிப்படுத்த, மாட்டுப்பொங்கல் பண்டிகை இருக்கிறது.

தற்போது இங்கு ஈஷா யோக மையத்தில் நம்மிடம் தோராயமாக இருநூற்று ஐம்பது நாட்டு மாடுகள் உள்ளன. தற்போது இருக்கும் முப்பத்தி ஏழு நாட்டு மாடுவகைகளில் ஒவ்வொன்றிலும் சில மாடுகளாவது வைத்து அந்த இனங்களை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வது எப்படி என்று பார்த்துக்கொண்டு இருக்கிறோம். அருகிலிருக்கும் விவசாயிகளையும் இதுநோக்கி ஊக்கப்படுத்தி வருகிறோம். உள்ளூரில் எங்கெல்லாம் நாங்கள் இயற்கை விவசாயத்திற்கு வழிகாட்டுகிறோமோ, அங்கெல்லாம் இந்த நாட்டு மாடுவகைகளைக் கொண்டுவருகிறோம். தற்போது இது மிகவும் சிறிய அளவில் நடந்துவருகிறது, ஆனால் இதை பெரிய அளவில் செய்யும் நோக்கம் இருக்கிறது. தேசத்தில் ஒவ்வொரு பகுதியிலும், நாட்டு மாடுவகைகளைப் பாதுகாத்து பெருகச்செய்ய ஏதோவொரு அமைப்பு அல்லது நிறுவனம் இருக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். நாட்டு மாடுகளை நாம் மீண்டும் கொண்டுவர வேண்டும். இதைச் செய்வது மிக மிக முக்கியம்.

அன்பும் அருளும், 

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.