நான்கு துறவிகளின் மௌனம் எப்படி கலைந்தது?

நான்கு துறவிகளின் மௌனம் எப்படி கலைந்தது?, Nangu thuravigalin maunam eppadi kalainthathu?

ஜென்னல் பகுதி 10

மௌன விரதம் இருப்பதை தன் வாழ்நாளில் பலரால் நினைத்துக்கூடப் பார்க்கமுடிவதில்லை! வாய்திறந்து பேசாவிட்டாலும் மனம் சதாசர்வ காலமும் எதையாவது உள்ளுக்குள் கதைத்தபடிதான் இருக்கிறது. இந்த ஜென் துறவிகள் மௌனவிரதம் இருந்த கதையும் அதுபோலத்தான்! தொடர்ந்து படித்து கதைக்கான சத்குருவின் விளக்கத்தையும் அறியுங்கள்!

நான்கு துறவிகள், ஏழு நாட்களுக்கு யாரும் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் தியானம் செய்வது என்று அவர்களுக்குள் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.

முதல் நாள். இரவு காற்றில் மெழுகுவத்திச் சுடர் படபடத்தது. ‘ஐயோ, மெழுகுவத்தி அணையப்போகிறது’ என்றார் ஒருவர். ‘அட, நாம் பேசக் கூடாது என்பதை மறந்தாயா?’ என்றார் இரண்டாமவர். ‘எதற்காகத்தான் நீங்கள் பேசுகிறீர்களோ?’ என்றார் மூன்றாவது துறவி. ‘ஹா… ஹா! நான்தான் எதுவும் சொல்லவில்லையே’ என்றார் நான்காவது துறவி.

சத்குருவின் விளக்கம்:

(தமிழில் சுபா)

மௌனமாக இருக்கப்போவதாகச் சொன்ன நான்கு துறவிகளைக் கலைப்பதற்கு உலகையே அதிர வைக்கும் நிகழ்வு எதுவும் நடந்துவிடவில்லை. ஒரு மெழுகுவத்தியின் படபடப்பு போதுமானதாக இருக்கிறது. உங்கள் மனது அதற்குப் பழக்கப்பட்ட சில கட்டாயங்களைத் தாண்டிச் செல்வது சுலபம் அல்ல. உங்கள் இறந்த காலத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட ஏராளமான பதிவுகள்தான் உங்களை ஆள்கின்றன. இதைத்தான் நாம் கர்மா என்கிறோம்.
வெளிப்படையான எதிரியைச் சமாளிக்கலாம். உள்ளிருந்து வேலை செய்யும் உளவாளியை என்ன செய்வீர்கள்?

வேறு யாராவது பிடித்து வைத்திருந்தால், நீங்கள் வெளியே வந்துவிடலாம். இது நீங்களே கவனம் இல்லாமல் பூட்டிக்கொண்ட சிறை. அந்தச் சிறை மீது பற்று வேறு வைத்துவிட்டீர்கள். வெளியே வருவது எப்படி எளிதாக இருக்க முடியும்?

முழுமையான விழிப்புணர்வும், குருவின் மேன்மையான ஆசிகளும் இருந்தால் அதுவும் சாத்தியமாகும்!

ஆசிரியர்:

என்றைப் போலவும் இன்றைக்கும் சத்குரு அவர்களின் கருத்துக்கள் ஆணித்தரமானவை, ஆழமான அர்த்தம் பொதிந்தவை. சத்குரு அவர்களுடன் இரட்டை எழுத்தாளர்கள் சுபா அவர்களது உரையாடலின் பயனாய், ஆன்மீகத்தின் சாரம்கொண்ட ஜென் கதைகள் நமக்கு வாசிக்க கிடைத்திருக்கின்றன. “ஜென்னல்” என்று புத்தக வடிவம் பெற்றுள்ள இந்த சுவாரஸ்யமான கதைகள் அனைத்து முன்னணி கடைகளிலும் விற்பனைக்கு உள்ளன.
விவரங்களுக்கு: 0422 2515415, 2515418


இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert