மைத்ரேயா எனும் ஒரு அற்புத உயிரை உருவாக்கும் திட்டத்திற்காக யார் யாரெல்லாம் முயற்சித்தனர், மைத்ரேயா என்பது எப்படிப்பட்ட ஒரு உயிர் என்பதை சத்குரு கூறுவதிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது! மேலும், இப்பதிவில் ஞானத்தின் பிரம்மாண்டம் புத்தகத்தை படிப்பதென்பது எத்தகைய ஒரு அனுபவம் என்பதையும் சத்குரு சொல்ல அறிந்துகொள்ளலாம்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Question: ஒரு சிலர் தங்களுடைய ‘கனவுத் திட்டம் மைத்ரேயா’ என்று பேசக் கேட்டிருக்கிறேன். அவர் யார்?

சத்குரு:

லீட் பீடர் மற்றும் அன்னி பெசன்ட் அம்மையார் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். மந்திர - தந்திர வித்தைகளை இவர்களைப் போல் எந்தவொரு மேற்கத்தியரும் ஆராய்ந்து அறிந்திருக்க மாட்டார் என்று சொல்ல முடியும். அவர்கள் ஞானோதயமடைந்தவர்கள் கிடையாது, ஆனால் மந்திர தந்திர வித்தைகளை நன்கு கற்றறிந்தனர். அவர்களுடைய கனவுத்திட்டம் மைத்ரேயா.

மைத்ரேயா என்பவர் ஒரு மனிதர் அல்ல, அவர் ஒரு வடிவம் என்று சொல்லலாம். பலபேர் தங்கள் அறிதலை சேமித்து வைக்க தேர்ந்தெடுத்த உயிர் என்று சொல்லலாம். அதனால், அவரை இந்தப் பூமிக்கு வரவைக்க வேண்டும் என்பதே இவர்கள் இருவரது திட்டமாக இருந்தது. 40,000 வருடங்களுக்கு முன்பே இதற்கான முயற்சிகள் நடந்திருக்கின்றன. சிவனது காலகட்டத்தில் வாழ்ந்த சுநீரா என்ற யோகி, அத்தனை பரிமாணங்களையும் சேர்ந்த சர்வகுணங்கள் பொருந்திய ஒரு உயிரை உருவாக்க முயற்சி செய்தார். அதன்பின், பலர் அந்தவொரு பரிமாணத்திற்கு தங்கள் பங்கினை சேர்த்துள்ளனர். கிருஷ்ணரும், கௌதம புத்தரும் கூட இந்தப் பரிமாணத்திற்கு தங்கள் பங்களிப்பினை அளித்துள்ளனர். இல்லாத நிலைக்கு சென்றுவிட்ட ஒன்றை மீண்டும் எப்படி சர்வகுணங்கள் கொண்ட உயிராக படைப்பது? அதனால், மிதந்துகொண்டிருந்த ஒன்றை கொண்டு இதனை உருவாக்கியுள்ளனர். இதனால்தான் கிருஷ்ணர் 3000 - 5000 வருடங்களில் நான் மீண்டும் வருவேன் என்றார். கௌதமர் 2500 வருடங்களில் நான் மீண்டும் அவதரிப்பேன் என்றார். இந்த காலகட்டத்திற்குள் அப்படியொரு சாத்தியம் தேவையான முதிர்ச்சி பெற்றுவிடும் என்று அவர்கள் நினைத்தனர்.

ஐரோப்பாவில் பிறந்த இந்த இருவரும் இதனை அறிந்துகொண்டு அதற்கான முயற்சியில் இறங்கினர். அவர்கள் செய்தது அற்புதத்திலும் அற்புதமான ஒரு செயல் என்று சொல்லலாம். ஆனால், அவர்களுக்கு தேவையான ஆன்மீகப் பின்புலம் இல்லாது போனது பிரதிகூலம் அற்ற ஒரு நிலையே. தியானலிங்க பிரதிஷ்டைக்கு முன்னால், நான் ஒரு குறிப்பிட்ட சாதனாவில் இருந்த சமயம் அது. உயர்ந்தநிலைகளை எட்டியிருந்த சில உயிர்கள் என் அனுமதி இல்லாமல் எனக்குள் பொருந்திக் கொண்டன. எனைச் சுற்றியிருந்தோர் என்னைப் பார்த்து மிரண்டு போகும் அளவிற்கு எனக்குள் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. நமது பாரம்பரியத்தில் சொல்வது போல் சொல்ல வேண்டுமென்றால், இவை சொர்க்கத்தில் வாழ்வதைப் போன்ற உயிர்கள். இவர்களால் எத்தனை காலத்திற்கு வேண்டுமானாலும் பேரானந்தத்தில் நிலைத்திருக்க முடியும். ஏதோ சில காரணங்களால், இந்த உலகிற்கு ஏதோ செய்ய வேண்டும் என்று விரும்புவதால் இவ்வுலகிற்கு வருகிறார்கள். இதுபோன்ற மகத்தான உயிர்களை இறக்குமதி செய்வதற்காக சரியான உடல்தகுதியுள்ள மனிதர்களை தயார்செய்யும் பணியில் ஈடுபட வேண்டும் என்ற திட்டம் இருக்கிறது.

Question: ஞானத்தின் பிரம்மாண்டம் புத்தகம் வாசித்தேன். அது பிரம்மாண்டம் அல்ல அமானுஷ்யம். அதை வாசிக்கும்போதே நீங்கள் சொல்லும் பரிமாணத்தை சுவைப்பதைப்போல் இருக்கிறதே?

சத்குரு:

500 பக்கங்களுக்கும் மேலுள்ள புத்தகம் அது. ஆன்மீகத்தை போதிப்பதற்காக எழுதப்பட்ட புத்தகம் அல்ல அது. உங்கள் தர்க்கவாதத்தை அசைத்துப் பார்ப்பதற்காக உருவாக்கப்பட்ட புத்தகம் அது. அந்தப் புத்தகத்தினூடே நீங்கள் பயணிக்கையில் உங்கள் தர்க்கவாதம் உதிர்ந்து கொண்டே செல்வதை உணரலாம். அது தத்துவம் பேசும் புத்தகம் அல்ல. அதை வாசிப்பதும் ஒரு ஆன்மீக சாதனாதான். உங்கள் வளர்ச்சிக்காக வழங்கப்பட்டிருக்கும் மற்றொரு வழி அது. உங்களால் ஜீரணித்துக் கொள்ள இயலாத பல விஷயங்கள் அதில் இருக்கும். தங்களுடைய வாதம் மட்டுமே சரி என்று மக்கள் நினைக்கின்றனர். ஆனால், இந்தப் புத்தகத்தை படிக்கப் படிக்க அவர்களுடைய தர்க்கவாதம் கழன்று கொள்வதை அனுபவப்பூர்வமாக மக்கள் உணர்கின்றனர். இந்தப் புத்தகம் எல்லா மனிதர்கள் கையிலும் போய்ச் சேர வேண்டும், காரணம் தனக்கு எதுவும் தெரியவில்லை, நம்மை மீறிய பரிமாணம் ஒன்று இருக்கிறது என்கிற உண்மையாவது அவர்களுக்கு தெரியவரும். ஞானத்தின் பிரம்மாண்டம் புத்தகத்தை நீங்கள் 100 தடவை வாசிக்க வேண்டும். அதில் ஆயிரமாயிரம் தகவல்கள் அடங்கியிருப்பதால் சொல்லவில்லை, அதை வாசிப்பதால் நீங்கள் ஆன்மீகவாதி ஆவீர்கள் என்பதால் சொல்லவில்லை, மாறாக உங்கள் தர்க்கவாதத்தை எல்லாம் அந்தப் புத்தகம் நீர்க்கச் செய்துவிடும் என்பதால் சொல்கிறேன்.