தியானலிங்கம் - இது மூன்று பிறவிக்கதை பகுதி 10

சாமுண்டி மலையில் சத்குருவிற்குக் கிடைத்த அந்த ஆன்மீக அனுபவத்திற்குப் பின் அவரது வாழ்வில் நிகழ்ந்த மாற்றங்கள் என்னென்ன? கடந்த மூன்று ஜென்மங்களின் வாழ்க்கையை ஒரே சமயத்தில் மனதில் வாழ்ந்துகொண்டிருந்த சத்குரு, எப்போது தியானலிங்கத்தைப் பற்றி பிறரிடம் பகிர்ந்துகொண்டார்? விடையறிய தொடர்ந்து படியுங்கள்!

பட்டுக்கோட்டை பிரபாகர்:

சத்குருவுக்கு சாமுண்டி மலையில் கிடைத்த அந்த முதல் பரவச அனுபவத்தை அவராலேயே நம்ப முடியவில்லை. புரிந்துகொள்ளவும் முடியவில்லை. ஆனால் அந்த அனுபவம் அவருக்குப் பிடித்திருந்தது.

ஒரே சமயத்தில் மூன்று ஜென்மங்களின் நினைவுகள் மற்றும் உணர்வுகளுடன் வாழத் துவங்கினார்.

அடிக்கடி சாமுண்டி மலைக்கு செல்லத் துவங்கிய சத்குரு, எதுவும் சாப்பிடாமல், உறங்காமல் பல நாட்கள் அப்படியே அமர்ந்திருக்கத் துவங்கினார். ஒரு முறை பதிமூன்று நாட்களுக்கு அப்படியே இருக்கவே... இவரைப் பார்த்தவர்கள் இவர் சமாதி நிலையில் இருப்பதாகப் பேசத் துவங்கினார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இதெல்லாம் சத்குருவுக்குப் பைத்தியக்காரத்தனமாக இருந்தாலும், எனக்குள் என்ன நிகழ்கிறது என்கிற கேள்வியோடு... நிகழும் அனுபவங்கள் எதையும் இழக்காமல் இருந்திருக்கிறார்.

மனநிலையில் மட்டுமில்லாமல் அவரது உடல்நிலையிலும் ஆச்சரியமான மாற்றங்கள் நிகழத் துவங்கின. உடலின் கட்டமைப்பு, கண்களின் வடிவம், அளவு மற்றும் குரல் எல்லாமே மாறத் துவங்கின.

அந்தச் சமயத்தில்தான் சத்குருவின் முந்தைய இரண்டு ஜென்மங்களின் தொடர்பில்லாத நினைவுகள் அவர் மனதில் அலைபாயத் துவங்கியது. ஒரே சமயத்தில் மூன்று ஜென்மங்களின் நினைவுகள் மற்றும் உணர்வுகளுடன் வாழத் துவங்கினார். அப்போதுதான் இந்த மூன்று ஜென்மங்களுக்கான ஆன்மீகக் காரணம் புரிந்திருக்கிறது. எல்லோரையும் போல லௌகீக வாழ்க்கை வாழ்வதற்காக தாம் பிறக்கவில்லை என்பதைத் தெளிவாக உணர்ந்துகொண்டார்.

கோயில்களுக்குச் சென்று பழக்கமில்லாத சத்குருவுக்கு, தெரிந்தவை எல்லாம் தாஸ்தாயெவ்ஸ்கி, கேமஸ், காஃப்கா போன்றோரின் தத்துவங்கள்தாம். அப்படிப்பட்ட தனக்கா முன் ஜென்மங்களில் தியானலிங்கம் நிர்மாணிக்கும் பணி தரப்பட்டது என்று அவருக்குள் ஆச்சரியமும், குழப்பமும், ஏராளமான கேள்விகளும் எழுந்தன.

தியானலிங்கம் ஒன்றுதான் தான் பிறப்பெடுத்த இத்தனை ஜென்மங்களின் லட்சியம் என்பது துல்லியமாகப் புரிந்தது.

சத்குரு அதுவரை தான் செய்துகொண்டு இருந்த வணிகம் தொடர்பான அத்தனை வேலைகளையும் நிறுத்தினார். தனது வணிகம் தொடர்பான நண்பர்களை, பணியாளர்களை எல்லோரையும் அழைத்து ‘நாளையிலிருந்து இந்த வணிகத்தில் பங்கெடுக்கமாட்டேன்’ என்று அறிவித்தார்.

‘அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்?’ என்கிற அவர்களின் கேள்விக்கு, ‘தெரியாது’ என்று பதில் சொன்னார். ‘எங்கே போகிறீர்கள்?’ என்கிற கேள்விக்கும் அதே பதில்தான்.

அதே போல் இலக்கில்லாமல் அங்குமிங்கும் பயணித்தார். போன ஜென்ம நினைவுகள் உணர்த்தின பல இடங்களைத் தேடிச் சென்றார். பலரைச் சந்தித்துப் பேசியதில்... போன ஜென்மங்களின் நினைவுகள்தான் அவை என்று உறுதியாகப் புரியத் துவங்கியது. ஆனாலும் அவர் மனம் ஏற்கவில்லை. அந்தச் சம்பவங்களை மீண்டும் மனதில் வாழ்ந்து பார்த்ததில்... தியானலிங்கம் ஒன்றுதான் தான் பிறப்பெடுத்த இத்தனை ஜென்மங்களின் லட்சியம் என்பது துல்லியமாகப் புரிந்தது.

அந்த லட்சியத்தை எப்படி நிறைவேற்றுவது என்று மனதில் திட்டமிட்டு அதை நோக்கி பணிபுரியத் துவங்கினார். பதினேழு ஆண்டுகளாயிற்று அந்தக் கனவு நிறைவேற!

யோகா மற்றும் தியான வகுப்புகளை வெகுசில நண்பர்களைக் கொண்டு துவங்கியபோதும் சரி, வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோக மையத்துக்கு இடம் வாங்கியபோதும் சரி... தன் வாழ்வின் லட்சியம் தியானலிங்கம் அமைப்பதுதான் என்பதை சத்குரு யாரிடமும் சொல்லவில்லை. சமூகத்தில் பலருடைய நல்லிணக்கம் பெறுவதையே முதல் நோக்கமாகக் கொண்டு இருந்தார்.

முதலிரண்டு ஜென்மங்களில் சத்குருவின் சில அதீதமான குணங்களும் சமூகத்தின் ஒத்துழைப்பு இல்லாமையுமே தியானலிங்கம் சாத்தியப்படாமல் போனதற்கு முக்கியமான காரணம் என்பதை அவர் உணர்ந்திருந்ததால், சமூகத்தின் ஒத்துழைப்புக்காக பல வருடங்களாகச் சமூகத்தைத் தயார்செய்யத் துவங்கினார். போதிய அளவு சரியான சூழ்நிலையும் சரியான அளவு உறுதுணையும் கிடைத்துவிட்டதாக அவர் உணர்ந்த பிறகே தியானலிங்கம் என்கிற தன் லட்சியத்தைப் பற்றி பேசத் துவங்கினார்.


அடுத்தவாரம்...

தியானலிங்கம் அமைக்க வெள்ளியங்கிரி மலையை சத்குரு ஏன் தேர்வு செய்தார்? 90 நாட்கள் ஹோல்னெஸ் வகுப்பில் கலந்துகொண்ட 70 பேரிலிருந்து எத்தனைபேர் தியானலிங்க பிரதிஷ்டை பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்? அறிந்துகொள்ள, அடுத்த வாரம் வரை காத்திருங்கள்!

இத்தொடரின் பிற பதிவுகள்: தியானலிங்கம் - இது மூன்று பிறவிக்கதை