மரணப்படுக்கையில் ஜென்துறவிக்கு நேர்ந்த அற்புதம்!

மரணப்படுக்கையில் ஜென்துறவிக்கு நேர்ந்த அற்புதம்!, marana padukkaiyil zen thuravikku nerntha arputham

ஜென்னல் பகுதி 9

ஜென்துறவிகள் என்றாலே ஆழமான புரிதல்கொண்டவர்களாகவும் சூட்சுமமான சொல்லாடல்களைப் பயன்படுத்துபவர்களாகவும் அறியப்படுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு ஜென்துறவி மரணப்படுக்கையில் இருக்கும்போது, அவருக்கு நேர்ந்த ஒரு ஆன்மீக அனுபவம் என்ன என்பதை சத்குருவின் விளக்கத்துடன் இங்கே அறியலாம்!

ஒரு ஜென் துறவி மரணப்படுக்கையில் இருந்தார். அவரைப் பார்க்க சாங்ஸூ என்ற இன்னொரு குரு வந்திருந்தார்.

‘‘இப்பிறவியைக் கடப்பதற்கு உங்களுக்கு என் உதவி தேவையா?’’ என்று சாங்ஸூ கேட்டார்.

‘’இது தானாக வருகிறது… தானாகப் போகிறது. உங்களால் இதில் என்ன உதவி செய்ய முடியும்?’’ என்றார், மரணத்தை நெருங்கிக் கொண்டிருந்த துறவி.

“அதுதான் உங்கள் பிரச்சனையா? வருவது, போவது என்று எதுவும் இல்லை என்பதை உணர்வதற்கு ஒரு வழிமுறை இருக்கிறது” என்றார் சாங்ஸூ.

அந்தத் துறவிக்கு உடனே விளங்கியது. புன்னகையுடன் உயிர் நீத்தார்.

சத்குருவின் விளக்கம்:

(தமிழில் சுபா)

ஆம், வருவது போவது என்று பேசுவதே மாபெரும் வேடிக்கைப் பேச்சு. உண்மையில் வருவது போவது என்பதே இல்லை. எல்லாம் ஒருவிதப் பிரமைதான்.

சுழற் காற்றில் சிக்கி இருக்கிறீர்களா? அது இயக்கத்தில் இருக்கும்போது மரம், வாகனம், வீடு என்று எல்லாவற்றையும் சுழற்றி எடுத்துக்கொண்டு அலையும். அத்தனை உண்மையாகத் தோற்றம் அளிக்கும். இயக்கம் முடிந்ததும், சட்டெனக் கலைந்து, இருந்த இடம் தெரியாமல் கரைந்து போகும். அடுத்த நிமிடம் அந்த அலையைக் காணவில்லை. அது எங்கே போனது?

புயலும், சுழற்காற்றும், அலையும் போல எல்லாமே இந்தப் பிரபஞ்சத்தில் நேரும் வெறும் நிகழ்வுகள்தாம்.

இப்பூவுலகில், சக்தி வெவ்வேறு வடிவங்களில் மையம் கொள்வதும், கலைந்து கரைந்துவிடுவதும்தான் நிகழ்கிறதே தவிர, எதுவும் எங்கே இருந்தும் வரவில்லை. எங்கேயும் போகப் போவதும் இல்லை.

வந்ததாக நினைத்துவிட்டால், இதன் மீதும், போவதாக நினைத்துவிட்டால், அதன் மீதும் பற்று ஏற்பட்டுவிடும். நீங்கள் போவதற்கு எந்த இடமும் இல்லை என்பதை உணர்ந்து இங்கே முழுமையாக இருங்கள். முழுமையாக இங்கேயே கரைந்துபோங்கள்!

ஆசிரியர்:

என்றைப் போலவும் இன்றைக்கும் சத்குரு அவர்களின் கருத்துக்கள் ஆணித்தரமானவை, ஆழமான அர்த்தம் பொதிந்தவை. சத்குரு அவர்களுடன் இரட்டை எழுத்தாளர்கள் சுபா அவர்களது உரையாடலின் பயனாய், ஆன்மீகத்தின் சாரம்கொண்ட ஜென் கதைகள் நமக்கு வாசிக்க கிடைத்திருக்கின்றன. “ஜென்னல்” என்று புத்தக வடிவம் பெற்றுள்ள இந்த சுவாரஸ்யமான கதைகள் அனைத்து முன்னணி கடைகளிலும் விற்பனைக்கு உள்ளன.
விவரங்களுக்கு: 0422 2515415, 2515418


இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert