இன்றைய தரிசன நேரத்தில் நாம் விழிப்புணர்வாக மீண்டும் பிறப்பெடுப்பது குறித்தும், குரு பௌர்ணமி குறித்தும் சத்குரு பேசியது, இன்னும் சில கேள்விகளுக்கு சத்குரு அளித்த பதில்கள், இவற்றின் சில துளிகளைப் படித்து மகிழுங்கள்!

மெல்லிய தென்றல், லேசான சாரல், மயில் ஒன்று அகவிக் கொண்டே பறந்து சென்ற காட்சி, காற்றோடு பயணம் செய்துகொண்டிருந்த மேகக்கூட்டம் என்று ரம்மியமான சூழல் இருக்க, சத்குரு தரிசனமளித்தார். இன்றைய தரிசனத்தில் விசேஷம், ஈஷா யோகா வகுப்பிற்காக மையத்திற்கு வருகை தந்திருக்கும் முன்னூறுக்கும் மேற்பட்ட சீனர்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

"ஈஷா யோகா எனும் உள்நிலை தொழிற்நுட்பம் உங்களுக்கு மறுபிறப்பு தருவது - மறுபிறப்பு என்றால் புதிய உடல் எடுப்பது. முதல் முறை பிறப்பது நம் கைகளில் இல்லை, பெற்றோர்களின் கட்டாயங்களால் நிகழ்கிறது. நாம் விழிப்புணர்வாக இரண்டாம் முறை பிறந்திட முடியும். உடல் பல்வேறு நிலைகளில் இருக்கிறது, பொருள் உடல், மன உடல், சக்தி உடல், இம்மூன்றிலும் தன் சுவடுகளை பதித்திருக்கும் கர்ம உடல். பொருள் உடல் என்பது நாம் உண்ணும் உணவால் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது, உடல் என்பது தொடர்ந்து சுழற்சியில் இருப்பது, நாம் நம் வழக்கங்களை மாற்றுவது மூலம் அதை மாற்றமுடியும். நாம் சிந்திக்கும் விதத்தை மாற்றுவது மூலம் நாம் மன உடலை மாற்றலாம். ஆனால் இவ்விரண்டையும் மாற்றுவதால் பெரிய மாற்றம் நிகழாது. ஈஷா யோகாவில் வழங்கப்படும் பயிற்சிகளை செய்து வந்தால், நம் சக்தி உடலை தொடர்ந்து இன்று பிறந்தது போல் வைத்துக்கொள்ள முடியும். ஈஷா யோகா மூலமாக இம்மூன்று உடலையும் ஊடுருவும் கர்ம உடலையும் மாற்றமுடியும்."

குரு பௌர்ணமியின் முக்கியத்துவம் குறித்து ஒருவர் கேட்க, "பௌர்ணமி அமாவாசை தினங்களில் சமுத்திரங்களின் உப்பு நீர் மேலெழுகிறது என்றால், உங்கள் உடல் 70 சதம் நீர், சற்று சிக்கலான உப்புக்கரைசல் இது, இதுவும் இந்த நாட்களில் வேறு விதமாக நடந்துகொள்கிறது. இதில் குறிப்பிட்ட சில பௌர்ணமிகளும் அமாவாசைகளும் மற்றவையைவிட சக்திவாய்ந்ததாய் திகழ்கின்றன. தட்சிணாயனம் துவங்கியபின் வரும் இந்த பௌர்ணமி சக்திநிலையில் தனித்துவமாய் இருக்கிறது. மனிதன் பாடுபடத் தயாராக இருந்தால் போதும், இயற்கை அவன்மீது விதித்திருக்கும் எல்லைகள் உட்பட, அனைத்து எல்லைகளையும் தகர்த்தெறிந்து சீறிப்பாய்ந்தெழ முடியும் என்ற வாய்ப்பை ஆதிகுரு மனித குலத்திற்கு வழங்கிய நாளிது." என்றார் சத்குரு.

"முதுகுத்தண்டில் எனக்கு இருக்கும் பிரச்சனைக்கு உடல் மட்டுமல்லாது வேறு காரணங்கள் இருக்க முடியுமா?" என்று ஒருவர் கேட்க, "நிச்சயம் முடியும், உடல் பலவீனம், ஏதோ விபத்து போன்ற காரணங்கள் அல்லாமல் வேறு காரணங்கள் இருக்கமுடியும். நீங்கள் வாழும் விதம் உங்களுக்குள் அதிக்கப்படியான அமிலங்கள் சுரக்கும் விதமாக, அழுத்தம் ஏற்படுத்தும் விதமாக இருந்தால், அப்படி நடக்கமுடியும். ஆனால் நாம் இதை சுலபமாக, அறுவை சிகிச்சையின்றி மாற்றியமைக்க முடியும். சரியான வழிகாட்டுதல் இருந்தால், நாம் சில விஷயங்கள் செய்தால், முதுகுத்தண்டைப் போல உடலின் வேறெந்தப் பகுதியும் அதி வேகமாக தன்னை சீர்செய்துகொள்ளாது. மூன்று வாரங்கள், அல்லது சற்று கூடுதல் காலத்தில் சரிசெய்து விடலாம்." என்றார்.

"நான் ஏன் இப்படி இருக்கிறேன், பெற்றோர்களாலா, மூதாதையர்களாலா, இல்லை என்னாலா?" என்று ஒருவர் கேட்க, "உங்கள் செயல்பாடுகள், பழக்க வழக்கங்கள், உங்கள் உடலின் வடிவமைப்பு, போன்றவை உங்கள் பெற்றோர்களால் இப்படி இருக்கலாம். ஆனால் பெற்றோர் மற்றும் சமூகத்தினரின் உள்ளீடுகளை வைத்து வாழ்க்கையில் நீங்கள் செய்யும் ஒவ்வொன்றிற்கும் நீங்கள் மட்டுமே காரணம். உங்கள் வாழ்க்கைக்கு பொறுப்பு நீங்கள் மட்டுமே." என்று விளக்கினார் சத்குரு.

சீனாவிற்கு சென்றபின் உங்கள் சக்திகளுடன் யோகப் பயிற்சிகள் மூலமாக தொடர்பில் இருக்க முடியுமா என்று ஒருவர் கேட்க, "ரேடியோ ஸ்டேஷன் எப்போதும் ஒளிபரப்பிக் கொண்டுதான் இருக்கிறது. ரிசீவர் ஆன்டெனாவை சரியாக வைக்காமல் கேட்க முயன்றால் எதுவும் கேட்காது. ஆன்டெனாவை சரியாக வைத்திருந்தால் வரவேண்டியது உள்ளே வருவதை யாராலும் தடுக்கமுடியாது." என்று உதாரணம் மூலம் விளக்கினார் சத்குரு.

சீனர்களின் சீன மொழிக் கேள்விகள் கேட்டு சற்று சலனமடைந்த காதுகளுக்கு, சம்ஸ்க்ருதி குழந்தைகளின் "மந்திரமாவது நீறு" பாடல் காதில் தேன் வந்து பாய்வதுபோல் இருந்தது. அதோடு அவர் ஆசிர்வதித்த திருநீறு வலம்வர, சிவனைக் கண்ட பரவசம்!