லவ் – ஸ்பெல்லிங் என்ன?

love-spelling-enna

சங்கரன்பிள்ளையின் மனைவி அவரிடம் “லவ்” என்ற ஆங்கில வார்த்தைக்கு ஸ்பெல்லிங் சொல் என்று கேட்க, அதற்கு அவர் என்ன சொல்லியிருப்பார்? தெரிந்துகொள்ள சங்கரன்பிள்ளையின் கதையை தொடர்ந்து படியுங்கள்…

சத்குரு:

லவ் – ஸ்பெல்லிங் என்ன?

யாரும் எதிர்பாராத முறையில் சங்கரன்பிள்ளை திடீரென இறந்துவிட்டார். இறந்தவர் நேராக சொர்க்கம் தேடிச் சென்றார். சொர்க்கத்தின் முன் கடவுளே நின்றிருந்தார். ஏற்கெனவே, அங்கு ஒரு பெரிய வரிசை இருந்தது. சங்கரன் பிள்ளைதான் வரிசையில் கடைசி ஆள். கடவுள் ஒவ்வொருவரையும் ஏதோ கேட்டுக் கேட்டு சிலரை சொர்க்கத்தின் உள்ளே அனுமதித்தார். சிலரை நரகத்தின் பக்கம் அனுப்பிக் கொண்டு இருந்தார். சங்கரன் பிள்ளைக்கு ஒன்றும் புரியவில்லை. நாம் செய்த புண்ணியங்களைத்தான் கடவுள் விசாரிக்கிறார் என்று யூகித்துக்கொண்டு தன் வாழ்க்கையில் தான் செய்த நல்ல காரியங்களை எல்லாம் மனதில் நினைத்துக்கொண்டே வரிசையில் முன்னேறினார். கடைசியில் அவரது முறை வந்தது.

சங்கரன்பிள்ளையை வரவேற்ற கடவுள் ஏதோ சொல்வதற்கு முன், சங்கரன்பிள்ளை தான் செய்த நல்ல காரியங்களை ஒப்பிக்கத் தொடங்கினார். ஆனால் கடவுள், ‘அதெல்லாம் எனக்குத் தெரியும், சொர்க்கத்தில் நுழைவதற்கு முன் ஓர் இறுதிப் பரீட்சை இருக்கிறது. அதில் தேறினால்தான் நீ சொர்க்கத்துக்குள் அனுமதிக்கப்படுவாய்’ என்றார். ‘சரி, அது என்ன பரீட்சை?’ என்று சங்கரன்பிள்ளை கேட்டார். ‘நான் ஒரு ஆங்கில வார்த்தை சொல்வேன், அதற்கு நீ ஸ்பெல்லிங் சரியாகச் சொல்லிவிட்டால், சொர்க்கத்துக்குள் போகலாம்’ என்றார். ‘சரி கேளுங்கள், ஆனால் ஒருமுறை தோற்றுவிட்டால், இன்னும் ஒரு வாய்ப்பு கொடுப்பீர்களா?’ என்று பிள்ளை கேட்டார். ‘இல்லை, ஒரே வாய்ப்புதான்‘ என்று சொன்ன கடவுள், ‘லவ் என்னும் ஆங்கில வார்த்தைக்கு ஸ்பெல்லிங் சொல்‘ என்றார் கடவுள். சங்கரன்பிள்ளை தட்டுத்தடுமாறி ‘L…. O…. V….. E’ என்று எப்படியோ சரியாகக் கூறிவிட்டு, எனினும் சந்தேகத்துடன் கடவுளைப் பார்த்து, சரியா, சரி என்றால் நான் உள்ளே செல்லட்டுமா என்று கேட்டார். அதற்கு கடவுள், ‘ஓ, சரியாகச் சொல்லிவிட்டாய். நீ சொர்க்கத்துக்குள் அனுமதிக்கப்படுகிறாய். ஆனால் அதற்குள் எனக்கு ஒரு உதவி… இப்போது வரிசையில் யாரும் இல்லை, நானும் அவசரமாக ஓர் இடத்துக்குப் போக வேண்டியுள்ளது. நான் வருவதற்குள் வேறு யாரும் வந்துவிட்டால், இதேபோல் நீயே ஒரு ஸ்பெல்லிங் பரீட்சை வைத்து சரியாகச் சொன்னால் அவர்களை உள்ளே அனுப்பு’ என்று கூறி நகர்ந்துவிட்டார்.

கொஞ்ச நேரம் கழித்து ஒரு பெண்மணி அங்கு வந்தார். எதற்கும் ஒருமுறை உற்றுப்பார்த்த சங்கரன்பிள்ளை, ‘அட, நீயா, இங்கேயும் துரத்திக்கொண்டு வந்துவிட்டாயா? ‘ என்று கேட்டார். ஆமாம். வந்தவர் சங்கரன் பிள்ளை மனைவிதான். மனைவி கூறினார், ‘உன் தொல்லை தீர்ந்தது, இனியாவது சந்தோஷமாக இருக்கலாம் என்றுதான் நினைத்தேன், ஆனால் விதி, என்ன செய்வது, உன்னை எரித்துவிட்டு வீடு திரும்பும் சமயத்தில், நானும் விபத்தில் சிக்கிக்கொண்டேன், அதுதான் இப்போது இங்கே நிற்கிறேன்’ என்றார். பிறகு சொர்க்கத்தில் நுழைவதற்கான விதிகளை எல்லாம் சங்கரன்பிள்ளை அவருக்கு விரிவாகச் சொன்னார். அதற்கு சங்கரன்பிள்ளை மனைவி, ‘ஏனய்யா, நீயே சரியாகச் சொல்லிவிட்டு சொர்க்கத்துக்கு அனுமதி வாங்கிவிட்டாய். நான் சரியாகச் சொல்ல மாட்டேனா என்ன? சரி, சரி, சீக்கிரம் கேள், நான் உடனே உள்ளே நுழைய வேண்டும்“ என்று அவசரப்பட்டார். பிள்ளை, ஓரளவு யோசித்துவிட்டு, ‘சரி, இப்போது சொல்லும் வார்த்தைக்கு சரியாக ஸ்பெல்லிங் சொல்லிவிட்டால் உடனே உன்னை உள்ளே அனுப்புகிறேன்’ என்றவர், தன் மனைவியை நிதானமாக நிமிர்ந்து பார்த்துக் கூறினார்:

‘ம். இது ஒரு நாட்டின் பெயர், ஸ்பெல்லிங் சொல்.. செக்கோஸ்லோவேகியா!’

மொறு… மொறு… தோசை!

ஒரு நாள் சங்கரன்பிள்ளையும் அவர் நண்பரும் ஒரு ஹோட்டலுக்குச் சென்றார்கள். இருவருக்கும் நல்ல பசி. அந்த ஹோட்டலில் தோசை நன்றாக இருக்கும். நண்பர், மென்மையான தோசை ஆர்டர் செய்யலாம் என்றார். சங்கரன் பிள்ளை, மொறுமொறு தோசைதான் வேண்டும் என்றார். பெரிய விவாதமாகிவிட்டது. கடைசியில் சங்கரன் பிள்ளை சலிப்புடன் விட்டுக்கொடுத்தார், “எதையோ சொல்லு”. ஆர்டர் வாங்கிக்கொண்டு சர்வரும் நகர்ந்தார். அப்போது திடீரென நண்பர் தலை சுற்றி நாற்காலியிலேயே சரிந்து விட்டார்.

உடனே சங்கரன் பிள்ளை, ‘சர்வர்… சர்வர்’ என்று சத்தம் போட்டார். சர்வர் ஓடி வந்து, “ஓ, என்ன ஆச்சு? டாக்டரைக் கூப்பிடவா?” என்றார். அதற்கு சங்கரன்பிள்ளை, “நான் அதற்காக உன்னைக் கூப்பிடவில்லை, எப்படியும் இவன் மயங்கி விழுந்துவிட்டான், எனவே தோசையை மொறுமொறு தோசையாகவே கொண்டுவா” என்றார்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert