கொடுப்பவராய் மாறுங்கள்

சந்திரகுண்டம் என இனி அழைக்கப்படப் போகும் பழைய தீர்த்தகுண்டமும் இப்போது புதிதாய் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சூரியகுண்டமும் சக்தி வடிவங்களாகும். இவை எல்லா நேரமும் சூரியஒளி போல், சக்தியை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும். புழுவோ பூச்சியோ, செடியோ, விலங்கோ, மனிதனோ அவரவர் தன்மைக்கேற்றவாறு சூரிய ஒளியினால் பயன்பெறுகின்றனர்.

ஒரு செடி மலர்ந்து மணம் வீசலாம்; பூச்சிகளும் பறவைகளும் பாடி ஆடலாம்; பல்வேறு உயிரினங்களும் பலவாறு செயல்படலாம்; ஆனால் சூரியன் எதுவும் செய்வதில்லை. அவர் எப்போதும் போல் இருக்கிறார். அதுபோலதான் இந்த தீர்த்தகுண்டங்களும். எந்நேரமும் தொடர்ந்து சக்தியை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. ஒன்றிலிருந்து மற்றொன்றை வித்தியாசப்படுத்திப் பார்க்க அவைகளுக்குத் தெரியாது. அதனால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே குண்டங்கள் இருப்பது நல்லது. நீங்கள் ஆணா பெண்ணா என்று கூட அவைகளால் கண்டு கொள்ள முடியாது.

இந்த தீர்த்தகுண்டங்கள் வெறும் சக்தி வடிவங்களே, ஒரு குறிப்பிட்ட செயல்திறன் கிடையாது. ஆனால் எல்லா நேரமும் தொடர்ந்து சக்தியை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும். மற்ற பிரதிஷ்டைகள் சற்று சிக்கலானவை. அதற்கு உயிரையே கொடுக்க வேண்டும். ஏனெனில், உயிரற்ற ஒரு பொருளுக்குள் ஒரு குறிப்பிட்ட அறிவுத்திறனை செலுத்த வேண்டுமென்றால் அதற்கு உயிர்சக்தி தேவைப்படுகிறது – அது ஒருவர் உயிரை பெருமளவில் பாதிக்கக்கூடியது. யோக மையத்தில் நடைபெற்ற மற்ற பிரதிஷ்டைகளுக்கும் இதற்கும் உள்ள அடிப்படை வித்தியாசமே இதுதான். இந்த சூரியகுண்ட பிரதிஷ்டைக்குப் பிறகும் நான் மிக நலமாக உள்ளேன். ஏனென்றால் சூரிய குண்டத்திற்கு சக்தியூட்டுவது மிக எளிதான செயல். பிரச்சனை ஏதும் இல்லாமல் மிகுந்த மகிழ்ச்சியுடனேயே இதனை செய்துள்ளோம்.

உலகில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களைவிட அதிகமாகும்போது கலியுகம் முடியும் என்று சிவனே கூறியிருக்கிறார். கலியுகம் முடிந்து, அடுத்து வரும் யுகத்தில் மனிதர்கள் இன்னும் சிறப்பானவர்களாக இருந்தாக வேண்டும். எனவே அந்த யுகத்தில் தேவர்கள் பிறப்பர். ‘தேவா’ என்ற சொல்லிற்கு “பிரகாசமான” என்று பொருள்.

இவ்வுலகில், எல்லா உயிர்களுமே சூரிய சக்தியினால்தான் இயங்குகின்றன. ஆனால் சில உயிர்கள் தமக்கு கிடைப்பதை தக்க வைத்துக் கொள்கின்றன. வேறு சில உயிர்களோ தமக்கு கிடைப்பதை எதிரொலிக்கின்றன. நீங்களும் கதிர்களாக எதிரொளித்து பிரகாசிக்க முடிவு செய்தால் “தேவர்” ஆகிவிடுவீர்கள். உங்களுக்கு கிடைப்பதை தக்க வைத்துக்கொண்டால் அசுரனாகி விடுவீர்கள். மற்றவர் தவறு என்று நினைப்பதை செய்வதால் நீங்கள் அசுரர் ஆகி விடுவதில்லை. கொடுக்க வேண்டும் என்ற உணர்வு இல்லாததால் நீங்கள் அசுரர் ஆகி விடுகிறீர்கள்.

கொடுப்பது என்றால் இதையோ அதையோ கொடுப்பது என்றில்லை. உங்கள் வாழ்க்கை செயல்முறையே ஒரு வழங்கும் செயல்முறையாக இருக்க வேண்டும். நீங்கள் இப்படி இருந்தால், கொடுப்பது என்பது எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடந்துவிடும். எங்கே கொடுக்க வேண்டும்? எப்படி கொடுக்க வேண்டும்? எவ்வளவு கொடுக்க வேண்டும்? என்று இப்படியெல்லாம் நீங்கள் நினைக்கத் தேவையில்லை. இப்படி கணக்கிட்டுக் கொண்டே இருந்தால் அது எல்லாவற்றையும் அழித்துவிடும்.
உங்களுக்குள் உள்ள ஒவ்வொன்றிலும் அந்த கொடுத்தல் உணர்வு இருந்தால், நீங்களே ஒரு கொடையாக மாறிவிட்டால், பிறகு தேவராகி விடுகிறீர்கள். இங்கு நடந்த எல்லா பிரதிஷ்டையிலும் கலந்து கொண்டு ஒவ்வொரு முறையும் “எனக்கு என்ன கிடைக்கும்,” “எனக்கு என்ன கிடைக்கும்” என்று நீங்கள் ஒரு அசுரனாகவே செயல்பட்டால் இறுதியில் ஒரு கல் வேண்டுமானால் கிடைக்கும்; அல்லது உங்களுக்கு ஒரு கல் வைக்கக் கூட யாரும் முன்வர மாட்டார்கள்.

‘எனக்கு என்ன கிடைக்கும்’ என்றில்லாமல் ‘நான் என்ன கொடுக்க முடியும்’ என்ற நிலைக்கு உங்கள் வாழ்க்கையை நீங்கள் மாற்றியமைத்தால், உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணமும் கொடுத்தலாக இருந்தால், நீங்கள் தேவராகி விடுகிறீர்கள். கொடுத்தல் என்பது நீங்கள் வளர்த்துக் கொள்ளக்கூடிய ஒரு மனப்பான்மையல்ல, வாழ்க்கையை செயல்பட நீங்கள் அனுமதித்தால் அதுவே ஒரு கொடைதான், வாழ்க்கையின் இயல்பே அப்படிதான். தக்க வைத்துக்கொண்டால் தேங்கி விடுகிறது. வழிந்தோடிக்கொண்டே இருந்தால்தான் அது அழகிய அனுபவமாகிறது.

உங்கள் வாழ்க்கை தேக்கம் நிறைந்ததாக மாறினால் அது துயர்மிகுந்ததாகி விடுகிறது. உங்களிடம் எல்லாம் இருக்கும், ஆனால் ஒன்றும் இருக்காது. மற்றவரைவிட நிறைய வைத்திருப்பீர்கள், ஆனால் உங்கள் அனுபவத்தில் ஒன்றுமே இருக்காது. ஏனென்றால், வாழ்க்கை என்பது எண்ணிக்கையில் இல்லை, உங்கள் அனுபவத்தின் தீவிரத்தில்தான் இருக்கிறது.

“என்னிடம் எவ்வளவு இருக்கிறது” என்பது உங்கள் வாழ்க்கையை பெரிதாகவோ சிறிதாகவோ ஆக்காது; எவ்வளவு தீவிரத்துடன் அதை இப்பொழுது அனுபவிக்கிறீர்கள் என்பதே உங்கள் வாழ்க்கை பெரிதா அல்லது சிறிதா என்பதை தீர்மானிக்கிறது. அவ்வளவு தீவிரத்துடன் அனுபவிக்கும் பட்சத்தில் தக்க வைத்துக்கொள்வதற்கான எண்ணமே இருக்காது. ஏனென்றால், கொண்டு வந்தது ஏதும் இல்லை, கொடுப்பதற்கும் இங்கே எதுவும் இல்லை என்று நீங்கள் வாழ்க்கையை கூர்ந்து கவனித்துப் புரிந்து கொண்டுவிடுவீர்கள். எல்லாமே இங்கிருந்து எடுத்துக்கொண்டதுதான். கொடுப்பது என்ற வேலையே இல்லை.

மிக எளிதாக, எளிமையாக, தனிப்பட்ட முறையில் செய்யக்கூடிய இந்த செயலை ஏன் நான் இத்தனை பேருக்கிடையே செய்தேன் என்றால் உங்களை தேவர்களாக மாற்றி எல்லாவற்றையும் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடிபோல் பிரகாசிக்கச் செய்வதற்குத்தான். “ஓ! எல்லாவற்றையும் கொடுத்து விட்டால் என் கதி?” ஒன்றும் ஆகாது, இந்த உலகமே உங்களுக்குச் சொந்தமாகிவிடும், அவ்வளவுதான்!

கை கால் முடமான பிச்சைக்காரர், கண் குருடான பிச்சைக்காரர், சரியான உணவின்றி அவதிப்படும் பிச்சைக்காரர், நன்றாக உணவருந்தும் பிச்சைக்காரர், மற்றும் கோடீஸ்வர பிச்சைக்காரர்கள் – என்று பல தரப்பட்ட பிச்சைக்காரர்களையும் சந்திக்கும் அருமையான வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது.

ஒரு நிஜ பிச்சைக்காரர் தெருவில் இருந்தார். அன்றைய தினம் சில கிலோ அரிசியை சேகரித்து விட்டார். இந்தியாவில் பெரும்பாலான மனிதர்கள் பிச்சைக்காரருக்கு காசு போட மாட்டார்கள், தானியம்தான் கொடுப்பார்கள். குறிப்பாக அரிசி கொடுப்பது சகஜம். அன்றைக்கு நிறைய அரிசி அவருக்கு கிடைத்துவிட்டது. அந்த நேரத்தில் ஓர் அழகிய ரதம் அவ்வழியே வருவதைப் பார்த்தார்.

பிச்சைக்காரர் நினைத்தார், ”ஓ, பணக்காரர் போலிருக்கிறது. நான் போய் கையேந்துகிறேன். அவருக்கு தாராள மனதிருந்தால் ஒரு தங்க காசு கூட கொடுக்கலாம்,” இப்படி யோசித்துக் கொண்டே பிச்சையெடுப்பதற்கு அவரருகில் சென்றார். உண்மையிலேயே மிகுந்த பிரகாசமுடைய ஒரு மனிதர் அந்த ரதத்திலிருந்து இறங்கினார். அந்த பிச்சைக்காரர் கையேந்த முற்படுவதற்கு முன், அந்த மனிதர் தம் கைகளை அவர் முன்னர் நீட்டி, ”பிக்ஷான் தேஹி” என்று யாசித்தார். “அட கடவுளே” என்றாகிவிட்டது அந்த பிச்சைக்காரருக்கு. ஒருவர் உங்கள் முன் நின்று யாசித்தால் மறுக்கக்கூடாது என்பதுதான் நம் கலாச்சாரம். யாசிக்கும் நிலைக்கு தம்மை தாழ்த்திக்கொள்ளும் அவலத்திற்கு ஒருவர் வந்துவிட்டார் என்றால் நீங்கள் அவருக்கு ஏதாவது கொடுக்க வேண்டும். அதுதான் மரபு.

அந்த பிச்சைக்காரர் அவரைப் பார்த்து, ”நீங்கள் பெரிய பணக்காரர் போல் தெரிகிறீர்கள். ஆனால் என்னிடம் வந்து பிச்சை கேட்கிறீர்கள். என் கலாச்சார மரபுப்படி, இல்லை என்று மறுக்கக்கூடாது,” என்று கூறி தன் பையிலிருந்து ஓரே ஒரு அரிசியை எடுத்து அந்த பணக்காரருக்கு கொடுத்தார். அதை வாங்கிக் கொண்டு அவர் சென்றுவிட்டார். பிச்சைக்காரர் வீடு வந்து பையிலிருக்கும் அரிசியை பாத்திரத்தில் கொட்டும்போது அதில் ஒரே ஒரு அரிசிமணி மட்டும் முழுவதும் தங்கமாய் மாறியிருந்ததைப் பார்த்தார். உடனே உட்கார்ந்து ‘ஓ!’வென அழ ஆரம்பித்தார். “அந்த பையில் இருந்த அனைத்து தானியங்களையும் அந்த மனிதருக்கு பிச்சை அளித்திருந்தால் எனக்கு ஒரு பை நிறைய தங்கம் கிடைத்திருக்குமே” என்று புலம்ப ஆலம்பித்தார். இதுதான் வாழ்க்கை.

ஒரு மனிதர் நன்றாக வாழ்வது என்பது கடினமான விஷயமில்லை. நீங்கள் இன்னொருவரைப் போலவே செயல்பட வேண்டும் என்று முற்படும் போதுதான் கடினமாகிவிடுகிறது. மற்றபடி வாழ்க்கை ஒன்றும் கடினமில்லை. 100 ஆயுட்காலங்களுக்குத் தேவையானவற்றை சேமித்து வைக்கும் சில மனிதர்கள் இல்லாவிட்டால், இந்த பூமியில் உள்ள எல்லோரும் நன்றாய் வாழலாம். அவர்கள் வாழும் கீழ்மையான வாழ்வு அவர்களுக்கே தெரியும். இன்னும் 1000 ஆயுட்காலம் அவர்கள் இந்த பூமியில் வந்து போவார்கள். ஆனால் அடுத்த முறை வரும்போது ஏற்கனவே சேமித்து வைத்ததை அவர்களால் உரிமை கொண்டாட முடியாது.

வாழ்க்கையின் முழு செயல்பாடும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. நீங்கள் உங்கள் வாழ்க்கையை கவனியுங்கள். காலையில் கண் விழித்ததிலிருந்து இரவு உறங்கப்போகும் வரை எத்தனை தருணங்களில் பொங்கிப் பெருகும் சந்தோஷத்தில் இருக்கிறீர்கள்? எத்தனை தருணங்கள் கணக்குப் போட்டுக் கொண்டே இருக்கிறீர்கள்? இதிலிருந்தே உங்கள் வாழ்க்கை தேக்கமானதா அல்லது பிரகாசமானதா என்று தெரிந்துவிடும். நல்வாழ்வு, சுகம், செல்வம் இதற்கெல்லாம் நான் எதிரியல்ல. ஆனால் தேங்கிப் போவதற்கு நான் எதிரி. ஏனென்றால் நீங்கள் தேங்கிப் போய்விட்டால், அது இறப்பதற்கு சமம். தினமும் எந்தவொரு உற்சாகமும் இல்லாமல், எந்தவொரு மலர்ச்சியும் உணராமல் நீர் தேங்கிய குட்டை போல் உணர்வதுதான் சித்திரவதையான வாழ்க்கைமுறை.

இந்த பிரதிஷ்டை செயல்முறை, இதுபோன்ற சக்தி இடங்களில் இருப்பது இவை எல்லாம் உங்கள் வாழ்க்கையை தேங்கிய நிலையிலிருந்து பிரகாசிக்கும் நிலைக்கு மாற்றுவதற்காகத்தான். அற்பத்தனமாக கணக்குப் போட்டுக் கொண்டிருப்பது ஒன்றுக்கும் உதவாது. வாழ்க்கை என்பது கொடுக்கல் வாங்கல் என்ற வணிகம் இல்லை. சாட்சியாக இருந்து அனுபவிக்க வேண்டிய ஒரு நிகழ்வு. உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொருவருக்கும் உங்கள் வாழ்கையை நீங்கள் அர்ப்பணித்தால் அந்த ஒவ்வொருவரும் உங்களை கவனித்துக் கொள்வார்கள்.

உங்களில் இந்த பிரதிஷ்டையை கண்டுணர்ந்தவர்கள், ஏதாவது ஒரு விதத்தில் இதனால் தொடப்பட்டிருந்தால், ஒரு தேவராக, பிரகாசிக்கும் ஒரு உயிராக மாறி, இங்கிருந்து சென்று, உங்களால் இயன்ற வழியில் இந்த உலகையே பற்ற வையுங்கள்.

அன்பும் அருளும்,

Sadhguruஇதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert