கண்ணாடி பொருளை உடைத்த தளபதி! – ஜென்கதையின் செய்தி என்ன?

கண்ணாடி பொருளை உடைத்த தளபதி! - ஜென்கதையின் செய்தி என்ன?, Kannadi porulai udaitha thalapathi - zen kathaiyin seithi enna?

ஜென்னல் பகுதி 22

பல போர்களை வென்ற ஒரு ராணுவத் தளபதி, தன் வீட்டில் பழமையான ஒரு கண்ணாடிப் பொருளைச் சுத்தம் செய்துகொண்டு இருந்தார். அந்தப் பொருள் அவர் கையில் இருந்து நழுவிவிட்டது. ஒருகணம் தவித்துப்போன அவர் அது தரையைத் தொடும் முன் எப்படியோ பிடித்துவிட்டார். அவரிடம் இருந்து பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டது.

“எத்தனையோ ஆயுதங்களுக்கு எதிராக நின்றபோதுகூட பதைக்காதவன் இச்சிறு பொருளுக்காக ஏன் பதைத்தேன்?” என்று ஒருகணம் யோசித்தார் தளபதி.

அவர் முகத்தில் திடீர் என்று ஒரு புன்னகை முளைத்தது. அந்தக் கண்ணாடிப் பொருளை வீசி எறிந்து உடைத்தார்.

சத்குருவின் விளக்கம்:

(தமிழில் சுபா)

“வாழ்க்கையின் பெரும்பான்மையான தருணங்களில் நீங்கள் ஓர் உயிராக மட்டும் உங்களைக் கருதினால், எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆண், பெண் என்ற அடையாளங்களுடன் செயல்படுகையில்கூட சில கட்டாயங்களை நீங்களே விதித்துக் கொண்டுவிடுவீர்கள். சொல்லப்போனால், உங்களை ஆண் என்றோ, பெண் என்றோ அடையாளப்படுத்தி, அதன் மீது உங்கள் வாழ்க்கையை அமைக்கக்கூட அவசியம் இல்லை.

எதனுடனும் உங்களை அடையாளப்படுத்திக் கொள்கையில், வேதனைகள்தாம் வரும். உங்கள் பதவி, நீங்கள் கட்டிய வீடு, உங்கள் உடைமைகள், நடுவில் வந்த உறவுகள், நண்பர்கள் என்று எல்லாவற்றுடனும் ஓர் அடையாளம் உங்களைப் பிணைத்துப்போடுகிறது. அந்த அடையாளங்களுடன் சிக்கிப் போராடுகையில் தேவையற்ற பதைப்பு வரத்தான் செய்யும்.
எல்லா அடையாளங்களையும் தாண்டி இருக்கையில்தான், உங்கள் திறன் உச்சத்தில் செயல்படுகிறது. குறுகலான வரையறைகளைத் தாண்டி காலெடுத்து வைக்கையில், நினைத்துப் பார்க்காத விஷயங்கள்கூட சாத்தியமாகின்றன.

எல்லை இல்லாத உயிரைப் போய் உடலுடன் அடையாளப் படுத்திக்கொள்கிறீர்கள். அட, மனதில் தோன்றும் எண்ணங்களுடன்கூட உங்களுக்கு அடையாளம் வந்துவிட்டது. நீங்கள் உருவாக்கிய உணர்வுடன்கூட அடையாளம் பிறந்துவிட்டது.

எதனுடனும் உங்களை அடையாளப்படுத்திக் கொள்கையில், வேதனைகள்தாம் வரும். உங்கள் பதவி, நீங்கள் கட்டிய வீடு, உங்கள் உடைமைகள், நடுவில் வந்த உறவுகள், நண்பர்கள் என்று எல்லாவற்றுடனும் ஓர் அடையாளம் உங்களைப் பிணைத்துப்போடுகிறது. அந்த அடையாளங்களுடன் சிக்கிப் போராடுகையில் தேவையற்ற பதைப்பு வரத்தான் செய்யும்.

இதேரீதியில் ஒரு சிறு கண்ணாடிக் கோப்பையுடன்கூட தன்னைத் தொடர்புபடுத்தி அடையாளப்படுத்திக்கொண்டு விட்டதால் ஏற்பட்ட பதைப்பை உணர்ந்த தளபதி, அதில் இருந்து விடுபடும்விதமாக அதை வீசி எறிந்து நொறுக்குகிறார்.

நீங்கள் வீசி எறிய வேண்டியது, கண்ணாடிப் பொருட்களை அல்ல, உங்கள் அடையாளங்களை!’

ஆசிரியர்:

என்றைப் போலவும் இன்றைக்கும் சத்குரு அவர்களின் கருத்துக்கள் ஆணித்தரமானவை, ஆழமான அர்த்தம் பொதிந்தவை. சத்குரு அவர்களுடன் இரட்டை எழுத்தாளர்கள் சுபா அவர்களது உரையாடலின் பயனாய், ஆன்மீகத்தின் சாரம்கொண்ட ஜென் கதைகள் நமக்கு வாசிக்க கிடைத்திருக்கின்றன. “ஜென்னல்” என்று புத்தக வடிவம் பெற்றுள்ள இந்த சுவாரஸ்யமான கதைகள் அனைத்து முன்னணி கடைகளிலும் விற்பனைக்கு உள்ளன.
விவரங்களுக்கு: 0422 2515415, 2515418


இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert