லிங்கபைரவியை தங்கள் ஊர்களிலிருந்து கால்நடையாக வந்தடைந்த பெண் சிவாங்காக்கள் பற்றி இங்கே சில வார்த்தைகள். தேவி இவர்களை எப்படிக் கூட்டிக்கொண்டு வந்திருப்பாள்?! தொடர்ந்து படியுங்கள்! 

ஏன் பாத யாத்திரை?!

'யாத்திரை' என்ற சொல் பயணத்தைக் குறித்தாலும் பொதுவாக நம் கலாச்சாரத்தில் அது புனிதப் பயணமாகவே பார்க்கப்படுகிறது. காசி யாத்திரை, தீர்த்த யாத்திரை, கர்ம யாத்திரை என்பதெல்லாம் நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்த அற்புத ஆன்மீகக் கருவிகள். அவர்கள் அக்காலத்தில், ஒரு தொலைதூர ஸ்தலத்திற்கு யாத்திரை மேற்கொள்ளும்போது உடல்நிலை, சீதோஷண நிலை என பலவித நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

ஆனால் தற்போதைய நவீன யுகத்தில் யாத்திரை என்பது வெகு சுலபமாகிவிட்டது. இணையத்தில் பதிவு செய்துவிட்டு, விமானத்திலோ ரயிலிலோ அமர்ந்தால் போதும், சில மணி நேரங்களில் எந்த இடத்தையும் சென்றடைந்து விடுவோம். ஆனால் எளிதில் கிடைத்து விடும் எந்த ஒன்றும் பெரிய அளவில் மதிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு அடியாக, கால்களால் எட்டுவைத்து ஒரு இலக்கை அடையும்போது அவ்விடத்தின் மதிப்பும் உணரப்படுவதோடு, நமக்குள் ஒரு திருப்தியும் கிடைக்கிறது.

அதே நேரம் நாம் வைக்கும் ஒவ்வொரு அடியிலும் நமது உறுதியும் பக்தியும் கூடிக்கொண்டே செல்வதை நாம் பார்க்கலாம், ஆனால் இதற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கிறது? என்று ஒரே வாக்கியத்தில் அலட்சியப்படுத்தும் இன்றைய நாகரீக மனிதர்களுக்கிடையே, இன்றும் கால்நடையாக மாலையணிந்து விரதமிருந்து பாதயாத்திரை செல்லும் சில மனிதர்களை சாலைகளில் காணத்தான் செய்கிறோம். அப்படி சில மனிதர்கள் லிங்கபைரவிக்கு சிவாங்கா மாலையணிந்து, 21 நாட்கள் விரமிருந்து பாதயாத்திரை மேற்கொண்டு வந்தனர்.

சத்குரு வழங்கிய பெண்கள் சிவாங்கா!

கடந்த டிசம்பர் 27ம் தேதி, பெண்களுக்காக சத்குரு வழங்கிய சிவாங்கா சாதனாவிற்கான தீட்சையை தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் 7000க்கும் மேற்பட்ட பெண்கள், அந்தந்த ஊர் மையங்களிலும் ஈஷா யோக மையத்திலும் பெற்றனர்.

இரண்டாவது ஆண்டாக வழங்கப்படும் இந்த பெண்கள் சிவாங்காவில் இந்த ஆண்டு, சாதகர்கள் சிலர், தங்கள் ஊர்களிலிருந்து பாதயாத்திரையாக லிங்கபைரவிக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 10ம் தேதி காலை 6.30 மணியளவில் மேட்டூரிலிருந்து 11 பெண் சிவாங்காக்கள், 4 ஆண் தன்னார்வத் தொண்டர்களுடன் தங்கள் பாதயாத்திரையை துவங்கினர். வரும் வழிநெடுக உள்ள ஊர்களில் ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் சாதகர்களுக்கு, தங்குமிடமும் உணவும் வழங்கியதோடு பாதயாத்திரையில் தங்களையும் இணைத்துக்கொண்டனர்.

தேவிக்கு முளைப்பாரி எடுத்த சிவாங்காக்கள்

வெறும் 11 பெண்களுடன் துவங்கிய பாதயாத்திரை கோவையை அடுத்துள்ள பேரூரை வந்தடையும்போது சுமார் 100 பெண் சிவாங்காக்களுடன் தொடர்ந்தது. இவர்களுடன் ஈஷா மையத்தை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த சுமார் 60 பெண்கள், தேவிக்கு முளைப்பாரி ஏந்தி யாத்திரையில் இணைய, கோவையின் சாலையெங்கும் விழாக்கோலம் பூண்டது.
லிங்கபைரவி எந்திரம் கழுத்தில் தொங்க "ஜெய் பைரவி" என்ற பக்தி முழக்கத்துடன் சாதகர்கள் வருவதைக் கண்ட வழித்தடங்களிலுள்ள கிராம மக்கள் குலவையிட்டு வரவேற்றனர். சிலர் பக்தி உணர்வின் உச்சத்தில் சாதகர்களுக்கு பாதபூஜை செய்யத் துவங்கினர்.

ஜனவரி 16ஆம் தேதி சுமார் 2.30 மணியளவில் லிங்கபைரவியை வந்தடைந்த பாதயாத்திரை குழுவினரை, சவுன்ட்ஸ் ஆஃப் ஈஷா இசைக்குழுவினரும் ஆசிரமவாசிகளும் மேளதாளத்துடனும் ஆரத்தியுடனும் வரவேற்றனர். தைபூச நாளான ஜனவரி 17ஆம் தேதி, நாட்டின் பல பகுதிகளிலிருந்து வந்த பல்லாயிரக் கணக்கான பெண் சிவாங்காக்கள் தங்கள் அர்ப்பணைகளை லிங்கபைரவிக்கு செலுத்தினர்.