கள்ளிப்பட்டி கலைவாணியின் இயற்கை விவசாய பண்ணை… பார்க்க ரெடியா?!

கள்ளிப்பட்டி கலைவாணியின் இயற்கை விவசாய பண்ணை... பார்க்க ரெடியா?!, Kallippatti kalaivaniyin iyarkai vivasaya pannai parkka readya?

பூமித் தாயின் புன்னகை! -இயற்கை வழி விவசாயம்-பகுதி 12

கோபி அருகே உள்ள கணக்கன்பாளையத்தில் இயற்கை விவசாயி திருமதி.கலைவாணி அவர்களை அவரது பண்ணையில் சந்தித்தோம். கொங்கு தமிழ்ல பேசிக்கிட்டே ஈஷா விவசாய குழுவோடு சேர்ந்து பயணம் செய்யுறாங்களே அதே கள்ளிப்பட்டி கலைவாணிதாங்க! கள்ளிப்பட்டி கலைவாணி அவர்களின் பண்ணை விசிட் எப்படி இருந்தது… தொடர்ந்து படித்தறியலாம்!

கலைவாணி அவர்களின் பண்ணை 13 ஏக்கரில் அமைந்துள்ளது. 7 வருடங்களாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இவரது பண்ணையில் வாழை, பாக்கு, தென்னை போன்ற மரங்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.

பாக்கு மரத்திற்கு பக்குவம்

கள்ளிப்பட்டி கலைவாணியின் இயற்கை விவசாய பண்ணை... பார்க்க ரெடியா?!, Kallippatti kalaivaniyin iyarkai vivasaya pannai parkka readya?

பாக்கு மரங்கள் தென்னை மரங்களுக்கிடையில் ஊடுபயிராக உள்ளன. ஏழு வயதுடைய 1000 பாக்கு மரங்கள் சற்று உயரமாகவே வளர்ந்துள்ளன. தென்னை மற்றும் பாக்கு மட்டைகளை அப்படியே மூடாக்காக போட்டிருக்கிறார். மூடாக்கு உள்ளதினால் குறைவான தண்ணீரே போதுமானதாக உள்ளது.

பாக்கு மரங்களில் பலமான காற்று வீசும் போதும், தண்ணீர் பற்றாக்குறை உள்ள போதும், சத்துக் குறைவினாலும் பூக்கள் உதிர்ந்து விடுகின்றன. ஏன் உதிர்கிறது என்பதை நாம் உறுதிப்படுத்தவும் முடியாது. இந்நிலையில் பூக்கள் உதிர்தலை கட்டுப்படுத்த புளித்த மோர் கரைசலை திருமதி.கலைவாணி உபயோகப்படுத்துகிறார்.
பாக்கு மரங்களில் பூக்கள் உதிரும் பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வை கண்டறிந்துள்ளார் கலைவாணி. பாக்கு மரங்களில் பலமான காற்று வீசும் போதும், தண்ணீர் பற்றாக்குறை உள்ள போதும், சத்துக் குறைவினாலும் பூக்கள் உதிர்ந்து விடுகின்றன. ஏன் உதிர்கிறது என்பதை நாம் உறுதிப்படுத்தவும் முடியாது. இந்நிலையில் பூக்கள் உதிர்தலை கட்டுப்படுத்த புளித்த மோர் கரைசலை திருமதி.கலைவாணி உபயோகப்படுத்துகிறார்.

“அட நான்தான் சொன்னேன் இல்லீங்கோ, கண்டிப்பா ஒரு நாளைக்கு என்ற பண்ணைக்கு கூட்டிப்போயி காட்டுறேன்னு. அட என்ற பண்ணைய பாத்துப்போட்டு ஈஷா விவசாயக் குழுவுல அல்லாரும் அசந்துப் போயிட்டாங்கல்ல, பொறவு சும்மாவா இந்த கள்ளிப்பட்டி கலைவாணி! செரியாப் போச்சு போங்க… அந்த மோர்க் கரைசல் எப்படி பண்ணோனும்னு சொல்றத விட்டுப்போட்டு என்ற பெருமைய பேசிட்டிருக்கிறேன் பாருங்க, அட வாங்கண்ணா கரைசல் எப்புடி செய்யுறதுன்னு பாப்போம்!”

புளித்த மோர் கரைசல் தயாரிக்கும் முறை

பெருங்காயம் – 50 கிராம்
புளிச்சமோர் – 15 லிட்டர்
புண்ணாக்கு – 10 கிலோ (நன்கு இடித்தது)
தண்ணீர் – 300 லிட்டர்

இவைகளையெல்லாம் 500 லிட்டர் டிரம்மில் இட்டு 8 நாட்கள் ஊறவைக்கவேண்டும்.

மேற்கண்ட கரைசலை சொட்டு நீருடன் கலந்து விடும்போது படிப்படியாக பூ உதிர்தல் குறையும். ஒன்றரை மாதம் கழித்து பூ உதிர்தல் மிகவும் குறைந்திருப்பதை காணமுடியும்.

வாழை விவசாயம்

கள்ளிப்பட்டி கலைவாணியின் இயற்கை விவசாய பண்ணை... பார்க்க ரெடியா?!, Kallippatti kalaivaniyin iyarkai vivasaya pannai parkka readya?

வாழையில் தேன் வாழை, மொந்தன் வாழை, செவ்வாழை மற்றும் ஆந்திரா ரஸ்தாளி போன்றவற்றை பயிர் செய்துள்ளார் திருமதி.கலைவாணி.

1 ஏக்கரில் செவ்வாழை பயிர் செய்துள்ளார்; 800 வாழைக் கன்றுகள் 7×6 என்ற இடைவெளில் நடப்பட்டுள்ளது. வழக்கமாக 12 மாதங்களில் அறுவடையாகும் வாழை, இயற்கை முறையில் சாகுபடி செய்வதால் 13 மாதங்களுக்கு பிறகுதான் அறுவடைக்கு தயாராகும்.

மேற்கண்ட செவ்வாழை பப்பாளியின் நடுவே ஊடுபயிராக பயிர்செய்யப்பட்டவை. பப்பாளியின் பழங்கள் சுவையின்றி இருந்ததால் விலை கிடைக்கவில்லை. எனவே பப்பாளியின் இடையே ஊடுபயிராக செவ்வாழை நடப்பட்டு பின்னர் பப்பாளி மரங்கள் நீக்கப்பட்டன.

ஜீவாமிர்தம் தயாரிக்க பப்பாளி பழங்கள் தேவைப்படுவதால் 20 பப்பாளி மரங்கள் மீதம் வைத்துள்ளார்.

“பொறவு என்னங்கண்ணா… பப்பாளி இனிச்சாத்தான் பங்காளிகூட பங்குக்கு வருவான்னு அந்த காலத்துல சொன்னது சரிதானுங்களே. இனிக்காத பப்பாளிக்கு யாருங்க வருவாங்க? அதெல்லாம் இந்த கள்ளிப்பட்டி கலைவாணி ரொம்ப வெவரமான ஆளுங்கண்ணா, 20 பப்பாளிமரம் ஜீவாமிர்தத்துக்காக இருக்குதுங்கண்ணா!”

மொந்தன் வாழை 10×5 மற்றும் 7×7 என்ற இடைவெளியில் நடப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டையாக வாழை வளர்ந்துள்ளது. பொதுவாக மறுகட்டை வரும்போது வரும் குருத்தை 40 நாள் கழித்து வெட்டிவிட வேண்டும். வெட்டிவிடவில்லை என்றால் கன்று தாய் மரத்திற்கு போட்டி போட்டுக்கொண்டு வளர்ந்துவிடும். காய் சிறுத்துவிடும், அடுத்த பருவக்கன்றுகளும் ஒரே நேரத்தில் காய்ப்பிற்கு வராது.

2007ல் நடப்பட்ட தேன்வாழை 12 வது கட்டையாக விடப்பட்டுள்ளது. 12 வது கட்டை என்றாலும் வாழை நன்றாக வளர்ந்துள்ளது.

சோளம், தட்டை பயறு, மஞ்சள், கேழ்வரகு போன்றவை ஊடுபயிராக உள்ளது. முக்கால் ஏக்கரில் ஊடுபயிர் செய்யப்பட்ட கேழ்வரகு மட்டும் அறுவடையாகி 800 கிலோ மகசூல் கிடைத்துள்ளது.

அதிக பழங்களை தரக்கூடிய நாட்டுரக எலுமிச்சை மரம் ஒன்று இவரது பண்ணையில் உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 10,000 ரூபாய் வரை வருமானம் வருகிறது, நல்ல காய்ப்பு காலங்களில் ஒருமுறை பறிக்கும்போது 200 பழங்கள் வரை கிடைக்கிறது.

“ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம், உள்ளார இருக்குமாம் ஈரும்பேனும்’னு என்ற ஊர்ல பெரிய வூட்டு ஆத்தா அடிக்கடி சொல்லுவாப்டி. அதுமாறி பலபேருக்கு பெரிய எலுமிச்ச தோப்பு இருந்தாலும் உள்ளார நோய் தாக்குதல் இருக்குமுங்க. ஆனா… என்ற நெலத்துல இந்த ஒத்த எலுமிச்ச மரம் எப்பவுமே என்ன கைவிட்டதில்லிங்க! என்ற கிட்ட எலுமிச்ச வாங்கி ஒரு தடவ ஊறுகாய போட்டு பாருங்க, பொறவு தமிழ்நாட்டுல எந்த மூலையில இருந்தாலும் என்ற பண்ணைய தேடி வருவீங்க.”

ஜீவாமிர்தம் வடிகட்டும் முறை

இயற்கை விவசாயிகளுக்கு ஜீவாமிர்தம் வடிகட்டுவது சற்று சிரமமான காரியமே. திருமதி.கலைவாணி மிக எளிதாக கைமுறையாகவே வடிகட்டிக்கொள்கிறார். வடிகட்டுவதற்கு வலைத்துணியை (100 No. Mesh Cloth) பிளாஸ்டிக் ட்ரம்மில் கட்டிக்கொண்டு தயாரித்த ஜீவாமிர்தத்தை சிறிது சிறிதாக அதில் ஊற்றி திப்பிகளை வடிகட்டி நீக்கிவிடுகிறார். inline drip சொட்டுநீர் குழாய்களின் மூலமாக ஜீவாமிர்தம் செடிகளுக்கு கொடுத்தாலும் அடைப்பு எதுவும் ஏற்படுவதில்லை.

(ஜீவாமிர்தத்தை விவசாயிகள் பல முறைகளில் வடிகட்டிக்கொள்கிறார்கள். உங்களுக்கு எது சௌகரியமாக இருக்கிறதோ அதை பின்பற்றிக் கொள்ளலாம்.)

புண்ணாக்கு கரைசல் தயாரிப்பு

10 கிலோ புண்ணாக்கை 500 லிட்டர் தண்ணீரில் ஒரு நாள் ஊறவைக்க வேண்டும், ஊறியபின் கரைந்த புண்ணாக்கு கரைசலை பயிர் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம். கரையாமல் இருக்கும் புண்ணாக்குடன் 500 லிட்டர் தண்ணீர் சேர்த்து ஊறவைத்து மீண்டும் பயன்படுத்த முடியும்.

மரப்பயிர்கள்

கள்ளிப்பட்டி கலைவாணியின் இயற்கை விவசாய பண்ணை... பார்க்க ரெடியா?!, Kallippatti kalaivaniyin iyarkai vivasaya pannai parkka readya?

ஒரு ஏக்கரில் மரப்பயிர்களை பயிர் செய்துள்ளார். தேக்கு, மகாகனி, ஈட்டி, சிசு, குமிழ் போன்ற மரங்கள் நன்கு வளர்ந்துள்ளன. இன்னும் சில ஆண்டுகளில் நல்ல பலனைக் கொடுக்கும் என்றும் தெரிவித்தார்.

“அட நம்ம மண்ண எந்த அளவுக்கு தோண்டுறமோ அந்த அளவுக்கு தானுங்களே நீர் ஊற்று வரும். அதையதான் வள்ளுவர் தொட்டனைத் தூறும் மணற்கேணின்னு மூவாயிரம் வருசம் முன்னாடியே சொல்லி வச்சுப்போட்டு போயிட்டாப்டி. இதைய இந்த கலைவாணி செரியா புரிஞ்சு வச்சிருக்கேனுங்க. அதனால தான் இயற்கை விவசாயம் சம்மந்தமா என்ன தகவல் இருந்தாலும் அதைய கவனமா கேட்டுப்பேனுங்க. நம்ம பாலேக்கர் ஐயா ஈஷா விவசாய இயக்கத்துக்காக திருப்பூர்க்கு வந்து வகுப்பு எடுத்தப்போ கத்துகிட்ட விஷயம் ஏராளமுங்க. நீங்களும் எந்த துறையா இருந்தாலும் தேடித் தேடி கத்துக்கோங்கண்ணா! கற்ற வித்தை காலத்துல கைகொடுக்குமுன்னு என்ற அப்பாரு சொன்னது தப்பாதுங்க!”

தொடக்கத்தில் இயற்கை விவசாயம் சிறிது சிரமமாக இருந்தாலும், தற்போது அதன் நுணுக்கங்களை புரிந்து கொண்டுள்ளதாகவும், தற்போது லாபகரமாக இயற்கை விவசாயம் செய்வதாகவும் தெரிவித்த திருமதி. கலைவாணி அவர்களுக்கு ஈஷா விவசாயக்குழு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு விடைபெற்றது.

தொடர்புக்கு: 9489887654

 

'பூமித் தாயின் புன்னகை! – இயற்கை வழி விவசாயம்' தொடரின் பிற பதிவுகள்
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert