கல்லா கடவுளா…

Kalla Kadavula

புலியிடம் சிக்கிய கிருஷ்ண பக்தன், நாயிடம் கடிபட்ட கணவனின் விநோத ஆசை… “என்னப்பா வினோதமா இருக்கு, என்ன சொல்ல வருகிறீர்கள்?” என்கிறீர்களா சுவாரஸ்யமான இரு கதைகள் உங்களுக்காக…

சத்குரு:

தேவை நம்பிக்கை

ஒரு நாள் கிருஷ்ணர் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். சத்யபாமா அவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தார். கிருஷ்ணர் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது பாதியிலேயே எழுந்தார். “என்னாயிற்று” என்று கேட்ட சத்யபாமாவிடம், “என்னுடைய பக்தர் ஒருவர் துன்பத்தில் இருக்கிறார், அதனால் நான் உடனே போக வேண்டும்,” என்று சொல்லிவிட்டு வாசல் வரை சென்ற கிருஷ்ணர், திரும்பி வந்து தட்டில் போட்ட சோற்றை சாப்பிட ஆரம்பித்தார்.

குழம்பிப் போன சத்யபாமா, “வாசல் வரை சென்று திரும்பிவிட்டீர்களே, என்ன நடந்தது?” என்றார். அதற்கு கிருஷ்ணரோ, “என் பக்தன் ஒருவன் காட்டில் உட்கார்ந்து கொண்டு என் நாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்தான். அப்போது பசியோடு திரிந்துக் கொண்டிருந்த புலியொன்று அவனை நோக்கி வந்தது. அவனை காப்பாற்ற நினைத்த நான், உடனே புறப்பட்டேன். ஆனால் அந்த முட்டாள் தன்னைக் காத்துக் கொள்வதற்காக ஒரு கல்லை கையில் எடுத்துக் கொண்டான். அதனால் நான் திரும்பிவிட்டேன்,” என்றார்.

கடிக்க விரும்புகிறேன்…!

கல்லா கடவுளா… , Kalla kadavulla ...

ஒரு முறை, ஒரு கணவன்-மனைவி சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். ரோட்டோரம் சென்றவர்கள் என்ன சில்மிஷம் செய்தார்களோ என்னவோ, ஒரு நாய் அந்தக் கணவனை காலில் கடித்தது. பதறிப்போன மனைவி ஆம்புலன்ஸை கூப்பிட்டார். பீதியில் உறைந்துபோய் ஆம்புலன்ஸிற்காக இருவரும் காத்திருந்தனர்.

அந்த கணவர் பதற்றத்துடன், ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு, தன் சட்டைப் பையிலிருந்த ஒரு பேப்பரை எடுத்து வேகவேகமாக எதையோ எழுத ஆரம்பித்தார். இதைப் பார்த்த மனைவி, “அத்தான்! நீங்கள் சாகமாட்டீர்கள், அது வெறிபிடித்த நாயாக இல்லாமல், ஒரு சாதாரண நாயாகக்கூட இருக்கலாம். அதுவுமில்லாமல் இப்போது அனைத்து நோய்களுக்கும் மருந்துகள் இருக்கின்றன. ஆகவே நீங்கள் உயில் எதுவும் எழுதத் தேவையில்லை,” என்றார். அதற்குக் கணவன் சொன்னார், “யார் உயில் எழுதியது? நான் கடிக்க விரும்பும் நபர்களின் பெயர்களை அல்லவா எழுதிக் கொண்டிருக்கிறேன்.”
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert