கடலையின் அற்புதமான பக்கத்தை ஆரோக்கிய ரீதியில் உற்றுநோக்கும் எண்ணத்தில் ஒரு பகிர்வு இது...

டாக்டர் சாட்சி சுரேந்தர், ஈஷா ஆரோக்யா

கடலை... என்றதும் நம்மில் பெரும்பாலோர் மன ஓட்டத்தை படம் பிடிக்க முயற்சி செய்தால்... கடைவீதியிலோ, கோவில் திருவிழாவிலோ, பீச்சிலோ ஒரு ஒல்லி உருவம், பெட்ரோமேக்ஸ் லைட் தள்ளு வண்டியின், மணல் பரப்பிய இரும்புச்சட்டியில், “க்ளிங்க், க்ளிங்க்” என்ற சத்தத்துடன் வறுபடும் கடலையின் வாசம் காற்றினில் வீச... நண்பர் குழாமுடன் நாம் அங்கே அடித்த வீண் அரட்டைப் பொழுதுகளில் ஊர் கதையோடு நாம் சேர்த்து மென்றது என விரியும் நினைவுகள்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
“நெஞ்சுரமேற்றி” என கடலையை சித்த மருத்துவம் அழகாய் வர்ணிக்கிறது.

“பப்ஸுகளும், சிப்ஸுகளும், பீட்ஸாக்களும் நம்மை வளைப்பதற்கு முன் நொறுக்குத்தீனி தொகுதியில், பொரி, சுண்டல், முறுக்கு வரிசையில் ஒரு பலமான வேட்பாளர்! அவித்ததும், வறுத்ததும் என நம் நாவும், பற்களும் விரும்பி பதம் பார்த்த பதார்த்தம் இன்று பேக்கரிகளில் ஒரு ஓரமாய் தூங்குகிறது!” - இப்படி அங்கலாய்த்துக் கொள்ளத்தான் முடிகிறது!

“கோவில் பிரசாதங்களின் கட்டாய ரெஸிபி; நம் குடி(!)மகன்களின் உற்ற தோழன்!” எனும் யுனிவெர்சல் ஃபேக்டுகள்!! என்கிற அளவில் விரிகின்றன நம் பொது அறிவு. கடலையின் அற்புதமான பக்கத்தை ஆரோக்கிய ரீதியில் உற்று நோக்கும் எண்ணத்தில் ஒரு பகிர்வுதான் இந்தக் கட்டுரை...

கடலையில் உள்ளவை...

இலக்கியத்தில் இரு வரி கொண்ட குறளுக்கு உரிய சிறப்பு, உடல் இயக்கத்தில் இரு மணி கொண்ட நிலக்கடலைக்கு உண்டு” என்ற வரிகள் மிகையல்ல, ஏனெனில்...

  • கடலையின் 25% புரதமும் செல், திசுக்களின் கட்டமைப்பை வலுப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.
  • உடலினால் இயற்கையிலேயே உற்பத்தி செய்ய இயலாத, உணவின் மூலம் மட்டுமே கிடைக்கக் கூடிய 9 அத்தியாவசிய அமினோ அமிலங்களை (essential amino acids) தன்னகத்தே கொண்டுள்ள மிகச் சில உணவுகளில், கடலைக்கு முக்கிய இடம்!
  • மனிதனின் அன்றாடத் தேவையான வைட்டமின் பி1, பி3, பி5, பி6, பி9, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டசியம், ஜிங்க் (துத்தநாகம்) முதலியவற்றை வெறும் கடலையிலேயே எடுத்துக் கொள்ள முடியுமென்றால், விலையுயர்ந்த மல்ட்டி விட்டமின் மாத்திரைகளுக்கு நம் தினசரியில் இடம் தேவையில்லை.
  • 21% கார்போ ஹைட்ரேட்டுகளுடன், 9% நார்ச்சத்தும் உடலுக்கு சீரான முறையில் ஆற்றலை வெளியிடும் “எனர்ஜி” கிடங்கு.
  • முதுமை மற்றும் புற்றுநோய் தடுப்பு ஆன்டி ஆக்ஸிடென்டுகள், சில பழங்களைவிட மிக அதிக அளவில் கடலையில் உள்ளன.
  • கடலையிலும், கடலை எண்ணெயிலும் உடலைத் தேற்றவும், அதே சமயம் இதயத்திற்கு நன்மை பயக்கவும் கூடிய நல்ல கொழுப்பின் அளவு (mono/polyunsaturated fat) 40% வரை இருப்பதால், பாப்பா முதல் தாத்தா வரை உட்கொள்ள ஏற்றது.
  • குழந்தைகளுக்கு உள்ள ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்க, ஐ.நா சபையின் உலக சுகாதார இயக்கம் ‘இது கட்டாயம்’ என பரிந்துரைக்கும் உணவுகளில் கடலைக்கே முதலிடம்.
  • குறைந்த அளவு சர்க்கரை, அதிக புரதம், நல்ல கொழுப்பு இந்த தன்மைகளால், எப்போதும் கடலை சர்க்கரை நோயாளிகளின் நண்பன்.
  • “நெஞ்சுரமேற்றி” என கடலையை சித்த மருத்துவம் அழகாய் வர்ணிக்கிறது. இதயம், நுரையீரல் பலப்பட இதனை பரிந்துரைக்கிறார்கள் சித்தர்கள்!

அறிவியலும் ஆன்மீகமும் கூறும் உண்மை

“லிங்க வடிவமே சக்தியை தேக்கி வெளிப்படுத்துவதில் வல்லது” இது சிறு, சிறு லிங்க வடிவங்களாக (ellipsoid) காணப்படும் கடலை மணிக்கும் 100 சதம் பொருந்தும். மிக அதிக நேர்மறை சக்தி (பாசிடிவ் ப்ராணிக்) கொண்டதென யோக மரபில் போற்றப்படுகிற நிலக்கடலை உபயோகம் பற்றி சத்குருவின் வார்த்தைகளில்...

நிலக்கடலை பற்றி வாழும் சித்தர்

ஊற வைத்து, பித்தம் நீக்கிய கடலையை மென்று உண்டால், அது உடலுக்கு மிக ஏற்றதாய் இருக்கும்.

“இந்த மரபில், பல யோகிகள் 100 சதம் கடலையை மட்டுமே திட உணவாய் (Staple Diet) மேற்கொண்டதுண்டு. நானும் கூட, நாற்பது நாட்களுக்கும் மேல், வெறும் கடலையை மட்டுமே உண்டு வாழ்ந்திருக்கிறேன்; ஒரு முழுமையான உணவிற்குரிய தன்மை இதற்கு உண்டு. தண்ணீரில் 6-8 மணிநேரம் ஊற வைப்பதன் மூலம், கடலையில் உள்ள பித்தத்தை நீக்கலாம்.

ஆங்கில மருத்துவத்தில் வாதம், பித்தம், கபம் என்று பிரித்துப் பார்க்கும் அணுகுமுறை இல்லையென்றாலும், ஆயுர்வேத மருத்துவத்தின் அடிப்படையே இதுதான். ஊற வைத்து, பித்தம் நீக்கிய கடலையை மென்று உண்டால், அது உடலுக்கு மிக ஏற்றதாய் இருக்கும். ஒரு கைப்பிடி கடலையும், ஒரு வாழைப்பழம் மட்டுமே உங்களின் ஒரு நாளிற்கான தேவையை வெகு சுலபமாக பூர்த்தி செய்ய முடியும்.”

ஆரோக்கியமான உபயோக முறைகள்:

  • பச்சைக் கடலையை 6-8 மணிநேரம் தண்ணீரில் ஊற வைத்த பின் உபயோகிப்பதில்தான் முழுமையான பலனை பெறமுடியும் என்பதை உணவு அறிஞர்களும் நிரூபிக்கிறார்கள். கடலையில் உள்ள கனிமச் சத்துக்களை, உடல் கிரகிப்பதில் இடையூறு செய்யும் “ஃபைட்டிக் ஆசிட்”, நீரில் ஊற வைப்பதன் மூலம் நீக்கப்படுகிறது. இதனால், இம்முறையில் கடலையின் முழுப்பலன் கிடைப்பதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன.
  • கடலையை அவித்து தனியாகவோ அல்லது குழம்பு/சாலட்களினூடே உட்கொள்வதும் நலம்.
  • வறுத்த கடலை, உப்புக் கடலை, மசாலா கடலை போன்றவை இரத்தக் கொதிப்பு/இருதயம்/சிறுநீரக நோயாளிகள் தவிர, பிறர் கொறிப்பதற்கு ஏற்றதுதான். இருந்தாலும், பாக்கெட்டைத் திறந்ததும் சுவிட்ச் போட்ட மிஷின் மாதிரி உங்கள் வாய் பாக்கெட் தீரும் வரை ஓயாமல் அரைத்துவிடும் என்றால் சற்று கவனம் தேவை.
  • நோஞ்சான் பொடிசுகளுக்கு தரமான கடலை மிட்டாயை (கடலையுடன் வெல்லப் பாகு சேர்ந்தது, செயற்கை சுவையூட்டிகள் இல்லாதவை) பழக்குவது ஆரோக்கியமான அணுகுமுறை. கலர், கலராய் உப்பிக் கிடக்கும் பன்னாட்டு பப்ஸ்களை விட இவை 100 சதம் மேல்.

சத்குருவின் ரெசிபி:

ஊற வைத்த கடலையோடு, வாழைப்பழமோ அல்லது மாம்பழமோ, உங்களுக்குப் பிடித்தமான பழம் ஒன்றைச் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, அதை உங்கள் விருப்பப்படி கெட்டியான கூழாகவோ அல்லது நீர்த்தன்மையுடைய ஜுஸாகவோ செய்யலாம். இந்தக் கடலை பானம், ஒரு பெரிய கிளாஸ் அருந்தினாலே, முழுமையான காலை உணவாக இருக்கும். அடுத்த 4-5 மணிநேரத்திற்கு இதுவே போதுமானது. வெறும் இரண்டே நிமிடங்களில், நீங்கள் காலை உணவை சமைத்துவிடலாம்; வெறும் மூன்றே நிமிடங்களில் சாப்பிட்டும் முடித்துவிடலாம்!!

மிகச் சிலருக்கு, பச்சைக் கடலையினால் ஒவ்வாமை (Peanut Allergy) ஏற்படலாம். இது உடல் அரிப்பு, வீசிங், வயிற்றுப் போக்கு என வெளிப்படும். இவ்வகையினர் மருத்துவ ஆலோசனை பெறுதல் நலம்.

பாதுகாப்பான சேமிப்பு முறைகள்:

  • கடலையை சேமித்து வைப்பதற்குப் பாதுகாப்பான முறைகள் கடைப்பிடிப்பது மிக அவசியம்.
  • ஈரப்பதமான கடலையில் “அஸ்பெர் ஜிலஸ்”, எனும் பூஞ்சைத் தொற்று ஏற்பட்டால், அஃப்லடாக்சின் (Aflatoxin) எனும் நஞ்சுப் புரதம் உண்டாகும். இது உடல் நலத்திற்கு மிகுந்த கேடு விளைவிக்கும். கருமை நிறமுடைய இவ்வகை கடலை மணியை கவனமாக ஒதுக்கிவிட வேண்டும்.
  • ஓடுடைய நிலக் கடலையானாலும், ஓடில்லா கடலை மணியானாலும் சேமித்து வைப்பதற்கு முன், காற்றோட்டமான இடத்தில் பரப்பப்பட்டு ஈரப்பதம் முற்றிலும் நீங்க நிழலில் உலர்த்தப்பட வேண்டும். வீட்டில் நுண்ணலை அடுப்பு (ஓவென்) இருந்தால் 130 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தில், 10 - 15 நிமிடங்களில் உலர்த்தி விடலாம்.
  • சேமித்து வைக்கும் காற்றுப் புகா டப்பாவோ, பையோ முற்றிலும் ஈரப்பதமற்றதாகவும், அதிக சூடற்றதாகவும் இருக்க வேண்டும். இந்நிலையில், 1-2 மாதம் வரை பயன்படுத்தலாம். இக்காலத்தில், அவ்வப்போது கிளரி, பரப்பி விடுவதும் அவசியம்.
  • நம் வீட்டில் நித்தமும் ஒரு கைப்பிடி அளவு Peas’க்கு (கடலை) இடம் கொடுத்தால், Pills’க்கு (மாத்திரை) இடமில்லை!