இழந்து தவிப்பவர்களை மீட்க என்ன செய்வது?

izhanthu-thavippavargalai-meetka-enna-seivathu

நமக்கும், நம்மைச் சுற்றி ஏற்படும் இழப்பிற்கும் நாம் எந்த நிலையில் இருந்து செயலாற்ற முடியும்? தெரிந்துகொள்வோம் இக்கட்டுரையில்…

சத்குரு:

எந்தவொரு இழப்பையும் வளர்ச்சிக்கான வாய்ப்பாகப் பார்க்க முடியும்!

அண்மையில் மழையால் ஏற்பட்ட பாதிப்பு பல உயிர்களைப் பறித்து விட்டது. புத்தாண்டு பிறக்கும் நேரத்தில், இந்தத் துன்பம் மக்களைத் தாக்கிவிட்டது. அடுத்தடுத்து பண்டிகைகள் வரும்போது கொண்டாடலாமா, நாமும் துக்கம் அனுஷ்டிக்க வேண்டுமா என்பது எல்லோர் மனதிலும் உள்ள கேள்வி.

‘ஆனந்தமாயிருப்பது என்றால் பட்டாசு வெடித்து கொண்டாட்டமும், கும்மாளமுமாக இருப்பது என்று யார் சொன்னது?
துன்பங்களை அனுபவிப்பவர்கள் மத்தியில் போய் அமர்ந்து, நாமும் துன்பத்தில் சிக்கிப் போக வேண்டும் என்ற அவசியம் இல்லை. எல்லோரும் உட்கார்ந்து அழுது கொண்டிருப்பதற்கான நேரமல்ல இது!

நோய்வாய்ப்பட்டவர்களைக் கவனித்துச் சிகிச்சை தர வேண்டுமானால், அது யாரால் முடியும்?

ஆரோக்கியமானவர்களால்தானே!

இழந்து தவிப்பவர்களை அந்தத் துக்கத்திலிருந்து மீட்க வேண்டுமானால் யாரால் முடியும்? ஆனந்தமாயிருப்பவர்களால்தானே!

‘என்னது…! அடுத்தவன் வருத்தமாக இருக்கும்போது நான் ஆனந்தமாக இருப்பதா? இது வக்கிரமான, குரூரமான சிந்தனை அல்லவா?” என்ற கேள்வி பீறிட்டு எழும்.

ஏதோவொன்று கிடைத்தால்தான் ஆனந்தம் என்ற நோக்கத்தோடு வாழ்ந்து வருபவர்களுக்கு ஆயிரம் கிடைத்தாலும் கிடைக்காத ஆயிரத்து ஒன்றாவது விஷயத்தால் துக்கம் வந்து சேரும். அந்த மாதிரியான ஆனந்தத்தை நான் சொல்லவில்லை.

‘ஆனந்தமாயிருப்பது என்றால் பட்டாசு வெடித்து கொண்டாட்டமும், கும்மாளமுமாக இருப்பது என்று யார் சொன்னது?

அன்பாயிருப்பது ஆனந்தம்.

அழுபவனுக்கு ஆறுதல் சொல்வது ஆனந்தம். பரிதவிப்பவர்களைப் பரிவோடு அணைத்துக் கொள்வதும் ஆனந்தம்.

இயலாதிருப்பவனுக்கு இதயப்பூர்வமாகச் சேவை செய்வது ஆனந்தம்.

சூழ்நிலைக்குத் தகுந்தவாறு, எந்தப் பாதிப்புமில்லாமல் தன்னைப் பதப்படுத்திக் கொள்வதுதான் உண்மையான ஆனந்தம்!

ஆனந்தம் என்பது பெறுவதில் மட்டுமில்லை. வழங்குவதிலும் இருக்கிறது.

பசியோடு இருக்கும் ஒருவனுக்கு உணவு கிடைத்தால்தான் பலன் என்று விஞ்ஞானம் சொல்லும்.

ஆனால், ‘பசியோடு இருக்கும் ஒருவன் தனது உணவை அடுத்தவனுக்குக் கொடுத்தால், அதுவே அவனை மேலும் சக்தியுள்ளவன் ஆக்குகிறது’ என்கிறார் புத்தர்.

ஆற்றில் துணிகளைத் துவைத்துக் கொண்டு இருந்த சலவைக்காரன் பார்வையில், பளபளப்பான கல் ஒன்று தென்பட்டது. அதை எடுத்துத் தன் கழுதையின் கழுத்தில் அலங்காரமாகக் கட்டித் தொங்கவிட்டான்.

துணிகளை விநியோகம் செய்ய அவன் ஊருக்குள் போனபோது, அந்தக் கல்லை ஒரு நகை வியாபாரி கவனித்தான்.

‘அந்தக் கல்லை எனக்குக் கொடேன். ஒரு ரூபாய் தருகிறேன்’ என்றான் வியாபாரி.

‘ஐந்து ரூபாய் தந்தால் தருகிறேன். இல்லையென்றால், அது என் கழுதையின் கழுத்திலேயே தொங்கிவிட்டுப் போகட்டும்’ என்றான் சலவைக்காரன்.

வியாபாரி இரண்டு, மூன்று ரூபாய் என பேரம் பேசிக்கொண்டே இருந்தான்.

அடுத்த கடையில் இருந்தவன் இதைக் கவனித்துவிட்டு, ‘ஒரே விலை! ஆயிரம் ரூபாய் தருகிறேன். அதை எனக்குத் தா!’ என்று பணத்தைக் கொடுத்து, அவசர அவசரமாக அந்தக் கல்லை வாங்கிக் கொண்டான்.

முதல் வியாபாரி வெறுத்துப் போய் சலவைக்காரனிடம் ‘அட முட்டாளே! அது வைரக்கல்லுடா! லட்ச ரூபாய்க்கு மேல் போகும். அதைப்போய் ஆயிரம் ரூபாய்க்கு விற்று ஏமாந்துவிட்டாயே!’

“இருக்கலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரை அது சாதாரணக் கல். அதை ஆயிரத்துக்கு விற்றதில் எனக்கு லாபம்தான்! அதன் மதிப்பு தெரிந்து இருந்தும் ஐந்து ரூபாய் கொடுக்க மனமில்லாமல் பேரம் பேசி, நீதான் முட்டாள்தனமாக அதை இழந்துவிட்டாய்!” என்று சிரித்தான் சலவைக்காரன்.

மதிப்பிட முடியாத மனிதத்தன்மை உங்களுக்குள் இருப்பதை உணர்ந்திருக்கும் அதை வெளிக்கொணராமல் இருக்க, இரண்டுக்கும், மூன்றுக்கும் பேரம் பேசும் முட்டாள் வியாபாரியா நீங்கள்?

எந்த இழப்பையும் நம் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதுதான் புத்திசாலித்தனம்.

இயந்திர வாழ்க்கையில் சிக்கி, மரத்துப் போய்விட்ட மனிதத் தன்மை மீண்டும் துளிர்த்து எழக் கிடைத்த சந்தர்ப்பமாக இதை நினையுங்கள்.

இறந்துபோன ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் முகங்கள் உங்களுக்குத் தெரியாது. ஆனாலும், அவர்களை உங்களுக்கு மிக நெருக்கமானவராகச் சில நிமிடங்களாவது மனதார நினையுங்கள்.

மரத்துப் போயிருக்கிற உங்கள் பரிவு உசுப்பி எழுப்பப்படுவதை உணர்வீர்கள்.

அவர்களை இழந்து பரிதவிப்பவர்களை இப்போது நீங்கள் பார்க்கும் பார்வையில் தானாகக் கருணை வரும்.

மிகக் குறுகிய காலத்துக்குள் இந்தத் துக்கம் களையப்பட்டு, அவர்களுக்கு ஆனந்தம் திரும்பும்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert