Question: இயேசு வாழ்ந்து 2000 வருடங்கள் ஆகிவிட்டன. அவருடைய கனவு நிறைவேறி விட்டதா? உண்மையில் மக்கள் அவர் சொன்னதைக் கடைப்பிடிக்கிறார்களா?

சத்குரு:

இயேசுவின் தொலைநோக்குப் பார்வைகள் மிகவும் அற்புதமானவை. ஒரே ஒரு மனிதரின் கனவால் நிறைய நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. அதை மறுக்கவே முடியாது. இன்றும் கூட, இயேசுவை மக்கள் உண்மையில் புரிந்து வைத்திருக்கிறார்களோ இல்லையோ, அவருடைய பெயரால் மனித நலனுக்காக நிறைய விஷயங்கள் நடந்து வருகின்றன. அதில் சந்தேகமே இல்லை. இன்றும் கூட நீங்கள் உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டுமெனில் கான்வென்ட் பள்ளிக்குத்தான் அனுப்புகிறீர்கள். இப்படி ஆயிரக்கணக்கான மக்கள் இயேசுவைப் போன்று தொலைநோக்குப் பார்வைகள் கொண்டிருந்தால் இன்னும் நிறைய நல்ல விஷயங்கள் நடந்திருக்கும்.

 

Question: ஆனால் கான்வென்ட் கட்டுவது அவருடைய நோக்கம் இல்லையே...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

மக்களுக்கு என்ன தேவையோ அதைச் செய்வதுதான் அவருடைய கனவு. இன்று பள்ளி தேவைப்படுகிறது. எனவே பள்ளியை உருவாக்குகிறார்கள். ஒன்றைக் குறித்து கருத்துக் கூறுவது மிகவும் எளிது. ஆனால் இயேசுவின் பெயரால் நடக்கும் அனைத்துமே சரி என்று நான் சொல்ல மாட்டேன். பல முட்டாள்தனங்கள் அவருடைய பெயரால் நடக்கத்தான் செய்கின்றன. ஆனால் பல நல்ல விஷயங்களும் அவருடைய பெயரால் நடக்கின்றன. ஒரு மனிதரின் கனவால் 2000 ஆண்டுகள் ஆன பின்னரும் மிகவும் அழகான விஷயங்கள் நடந்து வருகின்றன. 2000 வருடங்கள் முன் எவ்வளவோ பேர் இருந்தார்கள், அவர்களெல்லாம் இப்போது எங்கே? ஆனால் இயேசு கனவு கண்டதால் ஏதோ ஒரு வழியில் அது நடந்து வருகிறது அல்லவா?

ஒரு கௌதம புத்தர், ஒரு இயேசு, ஒரு விவேகானந்தர் கனவுகள் வைத்திருந்தார்கள். அது போதாது. மிகவும் அதிகமானோர் கனவுகள் உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஒரு மனிதர் கனவுகள் வைத்திருந்து அவருக்காக மற்றவர்கள் பணி புரியும்போது மிகவும் குறைவான விஷயங்கள்தான் நடக்கும். அப்படியில்லாமல் எல்லோரும் அதே கனவுகள் வைத்திருந்தால் அதிகமான விஷயங்கள் நடக்கத் துவங்கும். எனவே இயேசுவின் கனவாக ஒரு கான்வென்ட் பள்ளி இருந்ததா அல்லது ஒரு மருத்துவமனை இருந்ததா அல்லது மதமாற்றம் இருந்ததா என்பது இன்று ஒரு பொருட்டல்ல. மக்களுக்கு அந்தந்த நேரத்தில் எது தேவைப்படுகிறதோ அதை வழங்கியதுதான் முக்கியம். அப்படிப் பார்க்கும்போது நிறைய நடந்திருக்கின்றன. தவறான விஷயங்களும் நடந்திருக்கின்றன. ஆனால் இலட்சக்கணக்கான மக்கள் ஒரு விஷயத்தில் ஈடுபடும்போது நிறைய பேர் நிறைய முட்டாள்தனங்களில் ஈடுபடத்தான் செய்வார்கள்.

 

Question: கிறித்துவ மதத்தில் பக்தி மார்க்கம் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது?

சத்குரு:

இயேசு இதைப்பற்றி பேசும்போது, ‘குழந்தைகள் மட்டுமே என் இராஜ்ஜியத்தை அறிவார்கள்’ என்று அருமையாகக் கூறியிருக்கிறார். அதாவது குழந்தை மனம் படைத்தவர்கள் மட்டுமே பக்தி மார்க்கத்தில் நடக்கமுடியும் என்பதைத்தான் அவர் அப்படி குறிப்பிட்டார். யோசிப்பவர்களும், சந்தேகப்படுபவர்களும், கேள்வி கேட்பவர்களும் பக்தி மார்க்கத்தில் நேரம் செலவழிக்க வேண்டியதில்லை. ஏனெனில் அவர்கள் தங்களை ஏமாற்றிக் கொள்வதிலேயே நேரம் செலவழிப்பார்கள்.

 

Question: துன்பம் ஒரு சுய உருவாக்கம் என்று எப்படிக் கூறுகிறீர்கள்?

சத்குரு:

இதற்கு உங்களுக்குத் தெரிந்த உதாரணத்தை சொல்ல வேண்டுமானால் இயேசுவைக் கூறலாம். அவருடைய கையிலும் காலிலும் ஆணிகள் அடிக்கப்பட்டபோது, ‘இவர்கள் அறியாமல் செய்கிறார்கள், எனவே அவர்களை மன்னியுங்கள்’ என்று இயேசு கூறினார் என்கிறார்கள். ஒரு மனிதர் துன்பத்தில் இருக்கும்போது இப்படிக் கூற முடியுமா? அவருடைய உடம்பில் வலி இல்லாமல் இல்லை. நிச்சயமாக அவருக்கு வலி இருந்தது. ஆனால் அந்த வலி அவருக்கு ஒரு துன்பமாக இல்லை. ஏனெனில் துன்பம் என்பது சுயமாக உருவாக்கிக் கொள்வதுதான்.