"ஹோல்னெஸ் பயிற்சியில் கலந்து கொண்டது எனது வாழ்வில் ஒரு புதிய அனுபவம். இயற்கை விதிகளை உணர்ந்து மனிதன் தன்னை உணர்கிற போதுதான் முழுமை பெறுகிறான் என்பதை உணரவைக்கக்கூடிய ஒரு நிகழ்ச்சி. அதிலும் மிக அற்புதமானவை சத்குருவின் சத்சங்க உரைகள்!" என்கிறார் தொல்.திருமாவளவன்... தொடர்ந்து படியுங்கள்!!

திரு. தொல்.திருமாவளவன்:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஹோல்னெஸ் (முழுமைப் பயிற்சி) என்கிற முகாமில் கலந்து கொண்டது எனது வாழ்வில் ஒரு புதிய அனுபவம். இயற்கை விதிகளை உணர்ந்து மனிதன் தன்னை உணர்கிற போதுதான் முழுமை பெறுகிறான் என்பதை உணரவைக்கக்கூடிய ஒரு நிகழ்ச்சி. அதிலும் மிக அற்புதமானவை சத்குருவின் சத்சங்க உரைகள்!

இயற்கை விதிகளை உணராமல், வாழ்வின் அடிப்படைகளை உணராமல், மனிதன் நிகழ்காலத்தை அனுபவிக்க முடியாது. நிகழ்காலத்தில் இல்லாமல் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் சிந்தித்தே தன் வாழ்வை சிதைத்துக் கொள்ளக் கூடியவனாக மனிதன் வாழ்ந்துகொண்டு இருக்கிறான். நிகழ்காலத்தின் ஒவ்வொரு நொடியும் தவிர்க்க முடியாதது. அது கடந்துவிட்டால் திரும்பப்பெற முடியாது. ஆகவே நிகழ்காலத்தை முழுமையாக அனுபவிக்க வேண்டும்’ என்கிற அரிய உண்மையை சத்குரு அவர்களின் சத்சங்க உரையில் என்னால் உணர முடிந்தது.

எத்தனை கோடி ஆண்டுகளுக்கு முன்னால் மனிதன் பிறந்திருந்தாலும்கூட இப்போது வாழ்பவனும் கற்கால குகை மனிதனைப் போலத்தான் ஆத்திரப்படுகிறான், கோபப்படுகிறான், உணர்ச்சிவசப்படுகிறான். எப்படி வாழ்கிறோம் என்பதை அவனால் உணர்ந்துகொள்ள முடியவில்லை என்பதையும் சத்குரு சுட்டிக்காட்டினார்.

கர்மம் என்பது மனிதன் தன்னுடைய தேவைகளுக்கேற்ப ஆற்றுகிற வினைகள் ஆகும். அப்படி கர்ம வினைகளை ஆற்றுகிற மனிதனாக மட்டும் வாழாமல் உள்ளுணர்வுகளை உணர்ந்து கொண்டு, தன்னை உணர்ந்துகொண்டு வாழ்வதுதான் முழுமையான வாழ்க்கை. கர்மமும் கிரியாவும் யாரால் உணர முடிகிறதோ அவர்கள்தான் முழுமை பெற்ற மனிதனாக இந்த மண்ணில் வாழ முடியும். அனைத்தையும் இயல்பான போக்கிலே உணர்ந்துகொள்ள முடியும்.

அதற்கு அடிப்படையாக, எல்லா மனிதர்களையும் நாம் நேசிக்க வேண்டும், எல்லா உயிர்களிடத்திலும் நாம் அன்பு செலுத்த வேண்டும். இந்த உலகம் நம் அனைவருக்கும் சொந்தமானது என்று எண்ணுகிறபோதுதான் அனைத்து உயிர்களையும் ஒருவரால் நேசிக்க முடியும். அதன் மூலம்தான் அனைவரும் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் வாழமுடியும் என்பதை சத்குரு அவர்களின் சத்சங்கம் வெளிப்படுத்தியது.

இந்த யோகா மற்றும் ஆசனப் பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு அதுதான் அடிப்படையாக அமைந்து இருந்தது. 8 நாட்கள் பயிற்சியில் நான் உடல்ரீதியாகவும் உளரீதியாகவும் ஏராளமான மாற்றத்தை உணர்ந்தேன். எனக்கு இயல்பாக முழங்காலிலிருந்து பாதம் வரையில் கடுமையான குடைச்சல் இருக்கும். அதையெல்லாம் இந்தப் பயிற்சியில் மறந்து விட்டேன். அல்லது அந்த வலியை உணராத அளவுக்கு ஒரு மாற்றத்தை உணர்ந்தேன்.

எல்லோருடனும் நட்புணர்வை, அன்புணர்வை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்கிற கருத்தையும் உணர்ந்த பிறகு, என்னுடைய உள்ளத்திலும் அளப்பரிய மாற்றத்தை உணருகிறேன். மனிதர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் மதம், மொழி, சாதி, இனம் என்கிற வேறுபாட்டின் அடிப்படையில் அளவிடாமல், மதிப்பிடாமல் அனைவரையும் நேசிக்க வேண்டும் என்கிற என் உணர்வு இன்னும் ஆழமாகி இருக்கிறது.

ஆன்மிகம் என்கிற அடிப்படையில் மக்களுடைய மத உணர்வைத் தூண்டிவிடாமல் இறையை உணர்வதும் தன்னை உணர்வதும் ஒன்றுதான் என்று சத்குரு எடுத்துச் சொல்கிறார்.

இது வசதி படைத்தவர்கள் மட்டுமே உணரக்கூடிய வகையிலும் நுகரக்கூடிய வகையிலும் அமைந்துவிடாமல் உழைக்கிற சாதாரண மக்களிடத்திலும் செல்ல வேண்டும் என்பதற்காக கிராமப் புத்துணர்வு இயக்கத்தையும் நடத்தி வருகிறார்.

இந்த முயற்சி இன்னும் பன்மடங்காகப் பெருகி அனைத்து அடித்தட்டு மக்களிடையேயும், சாதாரண மக்களிடையேயும் செல்ல வேண்டும். இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் இயக்கமும் பலவகைகளில் உறுதுணையாக இருக்க விரும்புகிறது!