ஜனவரி 26, 2015 - ஈஷா யோகா மையத்தில் ஒரு முக்கியமான நாள். 200 குடும்பங்கள், 2000 பங்கேற்பாளர்கள், 207 மழலைகள்... அறிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்...

3 வயதிற்குட்பட்ட 2 மழலைகள் ஓரிடத்தில் சேர்ந்து விளையாடினால், அந்த சூழ்நிலை எவ்வளவு அழகாய் இருக்கும்? அதுவே 200 மழலைகள் ஓரிடத்தில் கூடி குதுகலித்தால்?! காண இரு கண்கள் போதாதல்லவா!! இந்த அற்புத காட்சி அரங்கேறியது நம் ஆசிரமத்தில்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தில்லி தர்பாரில் ஜன 26 அன்று குடியரசு தின அணிவகுப்பு.. அந்த வேளையில் நம் ஆசிரமத்தில் 'குட்டி' பாப்பாக்களின் அணிவகுப்பு!! ஒன்றல்ல.. இரண்டல்ல.. 207 மழலைகள்!! தவழ்ந்தும், நடை பழகியும், துள்ளி குதித்து ஓடியும், தெத்துப்பல்லுடன் பொக்கை வாய் தெரிய சிரித்து உச்சபட்ச உயிர்ப்புடன் ஆசிரமத்தை வளைய வந்த இந்த சிட்டுக்களால், வளாகமே அன்று திருவிழா கோலம் பூண்டது!

தமிழகம் முழுதும் கடந்த 4 ஆண்டுகளாய் கர்ப்பிணி பெண்களுக்காக நடைபெறும் ' ஈஷா தாய்மை' பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடைந்த தாய்மார்கள் தம் குழந்தைகளுடன், கணவர், மாமனார், மாமியார் என குடும்பத்துடன் அன்று ஆசிரமத்தில் சங்கமித்தனர்.

காலை உணவு முடித்து, ஆதியோகி ஆலயத்தில் குழுமிய இவர்கள், ஈஷாவின் தாய்மை வகுப்பு மூலம் தன் கர்ப்ப காலம் எப்படி ஓர் விழிப்புணர்வு மிக்க கொண்டாட்டமாய் நிகழ்ந்தது என்பதை பகிர்ந்துகொண்டனர். குழந்தையின் உயிர் தன்னுள் நுழைந்த அற்புத தருணத்தை விழிப்புணர்வில் உணர்ந்தது; அதிக வாந்தி, மனச்சோர்வு போன்ற உடல் உபாதைகள் பயிற்சிகள் மூலம் பறந்து போனது; சுகப்பிரசவம் மூலம் சுலபாமாய் பிள்ளை பெற்று, மருத்துவரையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது என ஒவ்வொரு பகிர்வும் ஆச்சர்யம். பலரது கண்களிலும் நன்றியின் கண்ணீர் துளிகள்.

தியானலிங்க வளாகத்தில், நாத ஆராதனை நிகழ்வு, லிங்க பைரவி கோவில் அபிஷேகத்திலும் கலந்து கொண்டனர். குழந்தைகளுக்கு, தேவியின் அருளை வழங்கும் விதமாய் 'அபய சூத்திரம்' கட்டும் நிகழ்வு நடைபெற்றது.

மதிய உணவுக்கு பின்னர், அம்மா, பாட்டி, பேத்தி, அப்பா என வந்திருந்த 200 குடும்பங்களும், வயது பேதமின்றி ஒன்றாய் கூடி விளையாடிய போது அனைவருமே குழந்தைகளாய் மாறியிருந்தனர்!

பின்னர், குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்த ஐயங்களை களைய 'ஈஷா ஆரோக்யா' மருத்துவரின் ஆலோசனை வழங்கப்பட்டது. இறுதியாக, சத்குருவின் அருளுரையுடன், கோவில் பிரசாதமும் வழங்கப்பட்டு அத்தனை தாய்மார்களும் அடுத்த சந்திப்பை எதிர்நோக்கி பிரியாவிடைபெற்றனர்.