'லீவு விட்டாலும் விட்டார்கள் இந்த வாண்டுகளை எப்படி சமாளிப்பது' என்று புலம்பும் பெற்றோர்கள், விடுமுறையை எப்படி பயனுள்ள முறையில் அவர்களுக்கு அமைத்து தருவது என்று பெரும்பாலும் யோசிப்பதில்லை. ஈஷாவில் கோடை விடுமுறையில் நடந்த குழந்தைகளுக்கான இயற்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி எப்படி இருந்தது என்று தெரிந்துகொண்டால், அடுத்த விடுமுறையில் அவர்கள் குழந்தைகளுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக மாற வாய்ப்புள்ளது.

போகோ சேனல், கார்ட்டூன் தொடர்கள், வீடியோ கேம்ஸ்கள் என மின்னணு திரைக்குள் தங்கள் முகத்தை புதைத்துக்கொண்டு பொழுதைப்போக்கும் வாண்டுகளைப் பார்க்கும்போது, சற்று பரிதாபமாகத்தான் இருக்கிறது. பரந்து விரிந்து, பசுமை போர்த்திக் கொண்டிருக்கும் மலைகளையும் வண்ண வண்ண வண்ணத்துப் பூச்சிகளையும் இவர்கள் எப்போது ரசிப்பார்கள்?!

"அதையெல்லாம் ரசிப்பதற்கு வயது இருக்கிறது" என்று நாம் சொல்லிவிட முடியாது. வயது கூடக் கூட நமது கண்ணோட்டமும் மாறிக்கொண்டே இருக்கும். எனவே அவர்கள் தங்களது சுட்டித் தனத்துடன் இயற்கையை உணர்வதும் அறிவதும் அவசியமானது என்றே சொல்ல வேண்டும்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

டிவியிலும் புகைப்படத்திலும் தாங்கள் கண்ட பலவித பறவைகளை நேரில் கண்டதிலும் அவற்றின் ஒலிகளை நேரடியாகக் கேட்டதிலும் அவர்கள் அதுவரை கண்டிராத பரவசத்தில் ஆழ்ந்தனர்.
இந்த இளம் வயதில், அவர்களின் மனதில் பதியும் இயற்கை சார்ந்த அம்சங்கள் அவர்களின் மனதில் பசுமையாய் தங்கிவிடும் என்பது மட்டுமல்லாமல், இயற்கை மீதும் பிற உயிர்களின் மீதும் அக்கறை கொள்ளச் செய்யும் என்பதில் ஐயமில்லை. கோடை விடுமுறையை குழந்தைகள் வீணே கழிக்காமல், இயற்கையுடன் விளையாடிக் களிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சியை ஒவ்வொரு ஆண்டும் ஈஷா யோகா மையம் வழங்கி வருகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் பசுமை நிறைந்த மலைப்பகுதியான வெள்ளியங்கிரியின் அடிவாரத்தில் குழந்தைகளுக்கான "நேச்சர் அவேர்னஸ்" எனும் இயற்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

டிவியிலும் புகைப்படத்திலும் தாங்கள் கண்ட பலவித பறவைகளை நேரில் கண்டதிலும் அவற்றின் ஒலிகளை நேரடியாகக் கேட்டதிலும் அவர்கள் அதுவரை கண்டிராத பரவசத்தில் ஆழ்ந்தனர். மற்ற ஜீவராசிகளும் நம்மைப் போலவே இந்த உலகில் வாழ்கின்றன; அவற்றிற்கும் குடும்பம் உள்ளது; இரைதேடுகின்றன; குஞ்சுகளைப் பாதுகாத்து வளர்க்கின்றன என்பதையெல்லாம் அவர்கள் எழுத்துப் பூர்வமாகவோ கேட்பதன் மூலமோ இல்லாமல், தங்கள் கண்களால் நேரடியாகக் கண்டுணர்ந்தனர். "எத்தனை வண்ணங்கள்! எத்தனை விதங்கள்! எவ்வளவு அழகு!" என அவர்கள் வியப்பின் மூலம் புதிய பாடம் ஒன்றைக் கற்றனர்.

நீரோடைகளிலும் அருவியிலும் குளித்துக் குதூகலித்த குழந்தைகள், தண்ணீர் எங்கிருந்து வந்து கடலில் சேர்கிறது; அதன் வழித்தடங்கள் எப்படியிருக்கும்; அது எழுப்பும் ஓசை எப்படியிருக்கும் என்பதையெல்லாம் அனுபவப்பூர்வமாக உணர்ந்தனர்.

விஷ ஜந்துக்கள் என்றால் உடனே அடித்துக் கொன்றுவிட வேண்டும் என்று குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கும் நாம், அவையும் இயற்கையின் வெளிப்பாடுகளே என்பதை சிந்திப்பதில்லை. 'பாம்பு' என்றால் பயந்து ஓடுவதோ அல்லது அடித்துக் கொல்வது மட்டுமே நமக்குத் தெரிந்தது. ஆனால், ஈஷாவின் இந்த இயற்கை விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலம் குழந்தைகள் பாம்புகளைப் பற்றியும் அதனை எப்படி லாவகமாகக் கையாள்வது என்பது பற்றியும் கற்றுணர்ந்தனர். இனி இவர்கள் ஒருபோதும் பாம்புகளைக் கண்டு அஞ்சவோ அதனைக் கொல்லவோ போவதில்லை!

குழந்தைகளின் உடலும் மனமும் உறுதி பெறுவதற்காகவும், அவர்களின் மனக்குவிப்பு திறனும் புத்திக் கூர்மையும் அதிகரிப்பதற்காகவும் சில அடிப்படையான சக்திவாய்ந்த யோகப் பயிற்சிகள், ஈஷா யோகா ஆசிரியர்கள் மூலம் இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளுக்குக் கற்றுத்தரப்பட்டன.

எதிர்காலத்தில் இயற்கையும் பிற ஜீவராசிகளும் செழித்தும் இன்புற்றும் இவ்வுலகில் இருக்க வேண்டுமாயின், நமது வருங்கால தலைமுறைகளான குழந்தைகளின் மனதில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியமானது. ஈஷா யோகா மையம் சார்பில் நிகழ்த்தப்படும் இந்த இயற்கை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், குழந்தைகளின் மனதில் இயற்கையை அனுபவிக்க வைப்பதன் மூலம் அதன் மேன்மையையும் அவசியத்தையும் உணர்த்துகின்றன.