“கடைசியில ஒரு வாய் பால் ஊத்த வர மாட்டியா” என வெளிநாட்டிற்குச் செல்லும் பேரனின் கன்னத்தை தடவும் பாட்டிமார்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். நாம் பிறந்தவுடன் முதல் உணவாகும் பால், இறுதி வரை வாழ்கையில் முக்கிய அம்சமாக விளங்குகிறது. இறப்பிலும் நம் வாழ்வுடன் ஒன்றிவிட்டது. இது குறித்து சத்குரு என்ன சொல்கிறார்? படியுங்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Question: சத்குரு, ஒருவர் இறந்த மூன்றாவது நாளில், அவருக்கு பால் அல்லது நீர் ஊற்றுகிறோமே... எதற்காக?

சத்குரு:

இறப்பிற்குப் பின் வரும் மூன்றாவது நாளில் பால் அல்லது நீரை ஒருவரை புதைத்த இடத்திலோ, எரித்த இடத்திலோ அர்ப்பணிப்பது பாரம்பரியமாக நாம் செய்துவரும் சடங்காக உள்ளது. அவர்கள் இறந்துவிட்ட பின் உங்களால் ஏதும் செய்ய முடியாத நிலையிலும், அவர்களுக்கு உணவூட்ட வேண்டும், அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற உளவியல் ரீதியான தேவை உங்களுக்கு ஏற்படுகிறது. நீங்கள் நீர் ஊற்றினாலும், பால் ஊற்றினாலும் அல்லது உணவே கொடுத்தாலும் அதை நுகர்வதற்கு ஒரு உடலால் மட்டுமே முடியும். உடல் இல்லாத ஒருவரால் இவற்றையெல்லாம் வைத்து ஒன்றும் செய்ய முடியாது.

அந்த உயிருக்கு இதுபோன்ற அர்ப்பணிப்புகளை நாம் செய்யும்போது அவரது ஏக்கம் தணியக்கூடும். ஆனால் இது மரணமடையும் அத்தனை உயிர்களுக்கும் பொருந்தாது.

ஆனால் இதுபோன்ற சடங்கு, உயிர் வாழ்பவர்களிடத்தில் ஒரு ஆழமான உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மற்றொரு விதத்தில் பார்க்கும்போது, தனது பிராரப்த கர்மவினை (வாழ்வதற்கு நிர்ணயிக்கப்பட்ட கர்மவினை) தீர்ந்து போவதற்கு முன்னதாக ஒருவர் இறக்கும்போது அல்லது நிராசையுடன் அவர் மரணமடையும்போது, அந்த உயிருக்கு இதுபோன்ற அர்ப்பணிப்புகளை நாம் செய்யும்போது அவரது ஏக்கம் தணியக்கூடும். ஆனால் இது மரணமடையும் அத்தனை உயிர்களுக்கும் பொருந்தாது. சில வகை மரணங்களில் இது நிச்சயமான உண்மை. அதனால் இதனை பொதுவான ஒரு சடங்காகச் செய்துவிட்டார்கள்.

அனைத்திற்கும் மேலாக, நீங்கள் பாசமும் பற்றும் கொண்டிருந்தவர் இறந்துவிட்ட பிறகும், அவருக்கு ஏதாவது செய்துவிட வேண்டும் என்ற உங்களது ஏக்கம் உளவியல் ரீதியாகத் தணிகிறது. ஒருவேளை, அவர்கள் உயிருடன் வாழ்ந்த காலத்தில் கோபித்துக்கொண்டு, நீங்கள் அவருடன் பேசாமல் இருந்திருக்கலாம்; குடிப்பதற்கு ஒரு வாய் தண்ணீர் கேட்டபோது, கொடுக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் இப்போது அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்.

நிச்சயமாக இறந்து போனவருக்கு நம்மால் ஏதாவது செய்ய இயலும். ஆனால் அதற்கு நீங்கள் தகுதியானவர் அல்ல. இறந்தவரை தன் சொந்தமாக பார்க்காமல் ஒரு உயிராக உங்களால் பார்க்க முடிந்தாலே ஒழிய அவருக்கு உங்களால் எதுவும் செய்ய இயலாது. அதனால்தான் நாம் காலபைரவ கர்மா என்னும் ஒரு செயல்முறையை தொடங்கினோம். இறந்த 14 நாட்களில் நாம் அந்த உயிரைத் தொட முடியும். நம்மால் வேறு ஒரு பரிமாணத்தில் அந்த உயிருக்கு தேவையானதைச் செய்ய முடியும்.

இந்தக் கலாச்சாரத்தில் நாம் பிறப்பையும் இறப்பையும் மிகச் சரியாக புரிந்து கொண்டோம். அதனை சரியாக கையாளவும் செய்தோம். உணர்வு மேலோங்கி இருக்கும் மரண வீட்டில் உங்களால் ஒரு உயிரை சரியாக கையாள இயலுவதில்லை.

இதுபோன்ற ஆன்மீக அறிவு சார்ந்த விஷயங்கள் அனைத்தும், உடல் கடந்த பரிமாணத்தில் வாழ்ந்த மனிதர்கள் அவர்களின் விழிப்புணர்வில் கண்டுணர்ந்து வழங்கிய ஒன்று. இதுபோன்ற முறைகளை உருவாக்கியவர்கள்தான் இந்தியக் கலாச்சாரத்தைக் கட்டமைத்தனர். ஆனால் ஒரு காலகட்டத்திற்கு மேல், இதுபோன்ற சடங்குகள் அனைத்தும் அவை கூறப்பட்ட காரணத்தின் புரிதலின்றி, திரிந்து உருமாறிவிட்டது. அதுபற்றிய அறிவு இல்லாமல் மக்கள் அற்பமான செயல்களைச் செய்யத் துவங்கிவிட்டனர்.