இந்த வார சத்குரு ஸ்பாட்டில், இப்போது வட அமெரிக்காவில் வெளியிடப்பட்டிருக்கும் "Inner Engineering: A Yogi’s Guide to Joy (உள்நிலை கட்டமைத்தல் : ஆனந்தத்திற்கு ஒரு யோகியின் வழிகாட்டி)" எனும் தன்னுடைய ஆங்கில புத்தகம் பற்றி நியூ யார்க் நகரிலிருந்து நம்மோடு பகிர்ந்துள்ளார் சத்குரு. கடைகளில் கிடைக்கும் மற்ற புத்தகங்களிலிருந்து மாறுபடுவதோடு, அவருடைய பிற புத்தகங்களிலிருந்து இது மாறுபட்டதாய் இருப்பதையும் அவர் விளக்கியுள்ளார்.

இன்னர் எஞ்சினியரிங் புத்தக வெளியீட்டு தினத்திற்காக நான் இங்கே நியூ யார்க் நகரில் இருக்கிறேன். இந்த புத்தகம் 20 வருடங்களாக என் மனதில் இருந்துள்ளது. இது நம் சமர்ப்பணங்களில் இன்னுமொரு படி. இவை அனைத்தும் முறையாக திட்டமிடப்பட்டுள்ளன. ஆரம்ப காலத்தில் நிகழ்ந்த 14-நாள் ஈஷா யோகா நிகழ்ச்சியின் மூலம், தன்னார்வத் தொண்டர்களின் வலுவான அடித்தளத்தை உருவாக்கினோம், பலவிதங்களில் இதுதான் ஈஷா அறக்கட்டளையின் முதுகுத்தண்டாக அமைந்துள்ளது. அதிலிருந்து 1-வார இன்னர் எஞ்சினியரிங் நிகழ்ச்சி, இணையம் மூலம் இன்னர் எஞ்சினியரிங் என முன்னேறி, இப்போது இன்னர் எஞ்சினியரிங் புத்தகம் வரை வந்துள்ளதில், அதிக எண்ணிக்கையில் மக்களைச் சென்றடைவதற்காக, மெதுமெதுவாக ஆன்மீகம் நோக்கிய முதல் படியின் உயரத்தைக் குறைத்துக்கொண்டே வந்துள்ளோம். இன்னர் எஞ்சினியரிங் அல்லது ஈஷா யோகா நிகழ்ச்சியின் பகுதிகளை இப்புத்தகத்தில் சேர்த்துள்ளோம், நாம் இதுவரை இப்படி செய்ததேயில்லை. இப்புத்தகம் மட்டுமே ஒரு சிறு யோக நிகழ்ச்சியைப் போல் வேலைசெய்கிறது. நம் பிற புத்தகங்கள் அனைத்தும் ஊக்குவிப்பதாய் உள்ளன, இந்த புத்தகமோ மாற்றம் ஏற்படுத்தவல்லது.

நான் ஒரு மாதம் முழுவதும் சுற்றுப்பயணத்தில் இருப்பேன், இதன் அங்கமாக வட அமெரிக்காவின் பல்வேறு பிரதான நகரங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் பல நிகழ்ச்சிகள் நிகழும். இப்படி ஒரு சுற்றுப்பயணம் இனிமேல் நடக்க வாய்ப்பில்லை, முக்கியமாக நேரப்பற்றாக்குறை அதை அனுமதிக்காது. இந்நிகழ்ச்சிகளை மிகுந்த உற்சாகத்துடன் மக்கள் எதிர்நோக்குகிறார்கள், ஏனென்றால் இவற்றில் எதிர்பாராத ஆச்சரியங்களை எதிர்பார்க்கமுடியும் என்று அவர்கள் அறிந்துள்ளனர். எதுவும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதோ, ஒரேவிதமாக வரையறுக்கப்பட்டதோ கிடையாது. மக்களைப் பார்த்து என்ன செய்வதென்று நான் முடிவுசெய்கிறேன். இது புத்தகத்தை வெளியிடுவது பற்றியது மட்டுமன்று. இது வருவோர் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு அனுபவத்தை உருவாக்குவதற்கானது. மேற்கத்திய வாசகர்களுக்கான என்னுடைய முதல் புத்தகமிது. மக்கள் இதைப் படிக்கும்போது, அவர்கள் மொழியில், அவர்கள் பாணியில், அவர்களுடைய கலாச்சார நடையை உணர்ந்து அவர்களிடம் நான் பேசுவதைக் கேட்கும்போது, இது உடனே அவர்களோடு ஒத்திசைந்துவிடும். அப்போதுதான் அது மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த புத்தக வெளியீட்டு சுற்றுப்பயணத்தின் முக்கிய நோக்கம், பெரிய அளவில் அமெரிக்காவைத் தொடுவதுதான். உள்நிலை பரிமாணத்திற்கு பெரிய அளவில் அமெரிக்கா கவனம் செலுத்தத் துவங்கினால், உலகிலுள்ள பிற நாடுகளும் பின்தொடரும்.

கடைகளில் கிடைக்கும் இந்திய குருக்களின் பிற சுய-உதவி புத்தகங்களிலிருந்து, இப்புத்தகம், அதன் வெளிப்பாட்டிலும் பொருளடக்கத்திலும் முற்றிலும் மாறுபட்டதாய் உள்ளது. இது ஏதோவொரு புனித நூல், மதம் அல்லது தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. இது என்னுடைய வாழ்க்கை அனுபவத்திலிருந்து வருகிறது, அதனால் இது ஒரு தனித்துவமான கோணத்தைக் கொண்டது. எவரும் இதனுடன் தனக்கிருக்கும் தொடர்பை உணர்ந்துகொள்ள முடியும், ஏனென்றால் இது உள்ளிருந்து வருகிறது, இது ஏதோவொரு குறிப்பிட்ட பாரம்பரியம் அல்லது கலாச்சாரத்தை சார்ந்ததல்ல. இது கிழக்கத்திய நாடுகளைச் சேர்ந்ததும் இல்லை, மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்ததும் இல்லை. இது ஒவ்வொரு மனிதரும் தனக்குள் ஆராய்ந்துணர வேண்டிய உள்நிலை பரிமாணம். இது கடவுளைப் பற்றியதல்ல. இது உங்களை ஏதோ ஒன்றாக மாற்றுவதற்கல்ல. இது நீங்கள் உண்மையில் யாராக இருக்கிறீர்களோ, அதுவாக உங்களை மாற்றுவதற்காக. இப்போது, பாலினம், தேசம், இனம், மதம் போன்றவற்றுடன் உள்ள அடையாளங்களால், "நீங்கள்" அல்லாத பலவற்றின் கதம்பமாக நீங்கள் மாறியுள்ளீர்கள். அடிப்படையில், நீங்கள் வெறும் உயிர். ஆனால் நீங்கள் அதை உணர்ந்திருக்கவே மாட்டீர்கள். நீங்கள் மீண்டும் தூய உயிராக மாறுவதற்கு வழிசெய்வதே என் வேலை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பாலும் தேனும் மிகுந்த பூமியாக அமெரிக்கா விவரிக்கப்படுகிறது. சிறிய அளவில் குடித்தால் பாலும் தேனும் நல்லதுதான், ஆனால் அதில் மூழ்கினால் நல்லதல்ல. அமெரிக்காவின் அமைப்பிலேயே சந்தோஷத் தேடுதல் ஆழமாகப் பதிந்துள்ளது. ஆனால் இன்று எந்த திசையில் சந்தோஷம் கிடைக்கும் என்று அறியாது அதிகப்படியான தேடுதல் வந்துவிட்டது. உலகம் முழுவதும் அமெரிக்காவின் கனவாகக் கருத்தப்படும் ஒன்றிற்காக கனவுகாணத் துவங்கிவிட்டார்கள். ஆனால் இந்தக் "கனவு" மிக மோசமான அழிவுக்கு வழிவகுப்பதாய் உள்ளது. பூமியிலுள்ள 720 கோடி மக்களும் சராசரி அமெரிக்க குடிமக்களைப் போல வாழ்ந்தால், நமக்கு இன்னும் நான்கு பூமி தேவைப்படும் என்று "வாழும் பூமி அறிக்கை (The Living Planet Report)" சொல்கிறது. ஆனால் நம்மிடம் பாதி பூமிதான் மீதமுள்ளது. வெளிசூழ்நிலையை கட்டமைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தங்கள் வாழ்க்கையையும் இலக்குகளையும் நிர்ணயித்திருக்கும் ஒரு சமூகத்தினால் ஏற்பட்டிருக்கும் இயற்கையான விளைவு இது.

வெளி உலகத்தை நம் விருப்பப்படி மாற்றுவதன் மூலம் மனித சந்தோஷத்தையும் நல்வாழ்வையும் அடையமுடியாது என்பதை புரிந்துகொள்வதற்கான நேரம் வந்துவிட்டது. நீங்கள் குளிர்சாதனவசதி கொண்ட அறையில் அமர்ந்திருந்தாலும், உள்ளுக்குள் கொதித்துக்கொண்டு இருக்கமுடியும். உலகிலேயே வசதிபடைத்த தேசங்களுள் ஒன்றான அமெரிக்கா போன்ற ஒரு நாட்டில், மக்கள் பயமின்றி சுதந்திரமாக இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பீர்கள். ஆனால் துரதிர்ஷ்டவ்சமாக அது நிதர்சனமல்ல. பொருளளவில் மட்டுமே மக்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள். மனிதர்களுக்குள் அவ்வளவு ஆழமான பயமும் துயரமும் உள்ளது. அவர்களுடைய கனவு காரை அவர்கள் ஓட்டிக்கொண்டு சென்றாலும், விளிம்பில் வாழ்கிறார்கள். மிகச்சிறிய அசம்பாவிதம் நிகழ்ந்தாலும் உடைந்துபோவார்கள். இது அமெரிக்காவில் மட்டுமல்ல, வசதிபடைத்தவர்கள் அனைவருக்கும் இதுதான் கதி. அதனால்தான் இன்னர் எஞ்சினியரிங் அல்லது உள்நிலை கட்டமைத்தல் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. உங்கள் உள்தன்மையை நீங்கள் சீர்செய்தால் மட்டுமே பொருள்நிலையில் உங்களிடமுள்ள பொருட்களையும் வசதிகளையும் உண்மையாக அனுபவித்து இரசிக்க முடியும்.

உலகை நாம் போதுமான அளவு கட்டமைத்துள்ளோம் - நம் உள்நிலையை கட்டமைப்பதற்கான நேரமிது. வெளிசூழ்நிலையை மாற்றுவதற்கு நீண்ட காலம் எடுக்கலாம். உள்சூழ்நிலையை மாற்றுவது ஒரு க்ஷணத்தில் நடந்துவிட முடியும். அதற்குத் தேவையான ஒரே விஷயம், நீங்கள் விருப்பத்துடன் இருப்பது. இது ஒரு போதனையல்ல. இது, பொருள்தன்மைக்கு அப்பாற்ப்பட்ட ஒரு பரிமாணத்திற்குள் உங்களை அழைத்துச்செல்வது பற்றியது. இப்போது உங்கள் வாழ்க்கை அனுபவம் முழுவதும் உங்கள் இருப்பின் பொருள்தன்மை சார்ந்த அம்சங்களில் மட்டுமே உள்ளது. உங்கள் பொருள்தன்மை சார்ந்த அம்சங்கள் அனைத்தையும், நீங்கள் வெளியிலிருந்தே சேகரித்துள்ளீர்கள். பூமியில் தொன்னூற்று ஒன்பது சதவிகித மனிதர்களுக்கு, அவர்கள் வாழ்க்கை முழுவதும் அவர்கள் சேகரித்துள்ளதைச் சுற்றியே சுழல்கிறது. நீங்கள் சேகரித்துள்ளது ஒரு ஆணாக இருக்கலாம், பெண்ணாக இருக்கலாம், உங்கள் உடலாகவே இருக்கலாம், உங்கள் வீடு, கல்வித்தகுதிகள், பணம் அல்லது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், நீங்கள் சேகரிப்பது உங்களுடையதாக இருக்கலாம், ஆனால் அது ஒருபோதும் நீங்களாக இருக்காது. இது உங்களுக்குப் புரிந்துவிட்டால் உங்களுக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

இப்போது, துரதிர்ஷ்டவசமாக, அமெரிக்கா, உயிருக்கு எதிரான பல விஷயங்களை நோக்கிச் செல்ல உலகை ஊக்குவித்து வருகிறது. உலகில் பெரும்பாலான மக்கள் அமெரிக்காவை ஒரு ஊதாரித்தனமான நாடாகவே புரிந்துகொள்கிறார்கள். சரியான விஷயங்களைச் செய்வதில் அமெரிக்கா தலைமை வகிப்பதை நான் பார்க்க விரும்புகிறேன். அப்போது உலகும் சரியான விஷயங்களைச் செய்யும். ஏதோவொரு விதத்தில் உலகிற்கு நாம் அனைவரும் கடமைப்பட்டிருக்கும் இரண்டு அடிப்படையான விஷயங்கள் உள்ளன. ஒன்று, பொருளவில் உலகை நாம் வந்தபோது இருந்ததைவிட சிறப்பாக விட்டுச்செல்வது. நாம் அதில் மிக மோசமாக தோற்றுப்போவோம் என நினைக்கிறேன். அதிகப்படியான சேதம் நேர்ந்துவிட்டது. நம் வாழ்நாளில் அதை நம்மால் சரிசெய்திட இயலாது. ஆனால் அந்த திசையில் சரியான செயல்களை நாம் செய்யத் துவங்கலாம். மிக முக்கியமான இன்னொன்று, அடுத்த தலைமுறை நம்மைவிடச் சிறப்பாக இருப்பதை உறுதி செய்வது. அடுத்த பத்து பதினைந்து வருடங்களில் நாம் தீவிரமாக அதைநோக்கி வேலை செய்யாவிடில், அதிலும் நாம் தோற்றுப்போவோம்.

நியூ யார்க் நகரில் எத்தனை பேரால், அரவமின்றி அமர்ந்து, டிவி, நாடகம், திரைப்படம், நண்பர்கள் அல்லது ஒரு கிளாஸ் மதுபானம் இல்லாமல், அவர்களாகவே அமைதியாக இருக்கமுடியும்? தங்களை அமைதியாக வைத்துக்கொள்ள தோராயமாக தொன்னூற்று ஐந்து சதவிகிதத்தினர் ஏதாவது இரசாயனத்தை பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். ஆனந்தமாக இருக்க, பெரிதாக ஏதோவொன்று அவர்களுக்குத் தேவைப்படுகிறது. பேரானந்தமாக இருக்க, மிகவும் வலுவான பொருட்கள் அவர்களுக்கு வேண்டும். இதுதான் தற்போது நிலவும் அவலநிலை. அடுத்த பதினைந்து இருபது வருடங்களில் இதை மாற்றுவதற்கு நாம் ஏதாவது செய்யாவிட்டால், அடுத்த அறுபது எழுபது ஆண்டுகளில் மக்கள்தொகையின் தொன்னூற்று ஒன்பது சதவிகிதத்தினர் ஏதாவது வலுவான போதைப்பொருளை பயன்படுத்திக்கொண்டு இருப்பார்கள். வாழ்க்கையை இனிமையாக அனுபவித்து உணர்ந்து, தொடர்ந்து அந்த இனிமையை பெறுகவைக்க விரும்புவது இயற்கையாகவே மனிதர்களுக்குள் இருக்கும் விழைவு. உள்நிலையில் அவர்களுக்கு ஒரு வாய்ப்புத் தராவிட்டால், போதைப்பொருட்கள் போன்ற வெளிநிலை தீர்வுகளைத் தேடுவார்கள். இதைத்தான் நாம் மாற்ற விரும்புகிறோம்.

மனிதர்கள் காரணமே இல்லாமல் சும்மாவே ஆனந்தமாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இது என்னைப் பற்றியதல்ல. இது ஈஷாவைப் பற்றியதல்ல. இது மனிதகுலத்திற்கு நிகழவேண்டிய ஒன்று. மதம்சாராத, மக்களைப் பிரிக்காத, குறிப்பிட்ட பின்னணியோ திறமையோ தேவைப்படாத ஒரு மாற்றம் ஏற்படுத்தக்கூடிய செயல்முறையின் மூலமே இது நிகழமுடியும். ஒவ்வொரு மனிதரும் இதை நாடிச்சென்று, தனக்குள்ளும் உலகிலும் மாற்றம் ஏற்படுத்த முடியும். இன்னர் எஞ்சினியரிங் புத்தகத்திற்கு அமெரிக்கா அபாரமான வரவேற்பைத் தந்துள்ளது. அமெரிக்கா முழுவதும் நிகழும் இந்நிகழ்ச்சிகளுக்கான இருக்கை சீட்டுகள் அனைத்தும் விற்றுப்போய்விட்டன. இந்நிகழ்ச்சிகளுக்கு வரமுடியாதவர்கள், ஒரு இன்னர் எஞ்சினியரிங் புத்தகத்தை வாங்கிக்கொள்ளுங்கள் - என்னை உங்கள் வீட்டில் வைத்துக்கொள்வதற்கான இன்னொரு வழி.

Love & Grace

Editor's Note: Inner Engineering: A Yogi’s Guide to Joy­­, Sadhguru’s new book, is now available in the US and UK and online on Amazon.com, Amazon.co.uk, Amazon.in (as an import), and other online stores.