ஞானம் கிடைத்தால் நான் வேலையை விட்டுவிடுவேனா? என்று மிகுந்த வருத்தத்துடன் ஒருவர் சத்குருவிடம் கேள்வியைக் கேட்க, அதற்கு சத்குரு என்ன பதில் தந்திருப்பார்...

Question: எனக்கு ஞானம் கிடைத்தால், என் வேலையை இழந்து விடுவேனா?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. என்னுடன் ஆறு மாதங்கள் பயணம் செய்யுங்கள். கிட்டத்தட்ட ஒரு லட்சம் தன்னார்வத் தொண்டர்கள் கொண்டது ஈஷா. ஒரு லட்சம் பேரைக் கையாள்வது சுலபமான வேலை அல்ல. உங்கள் யாருடைய வாழ்க்கையை விடவும் என் வாழ்க்கையில் நினைத்தது நடக்காமல் இருப்பதற்கும், திட்டமிட்டது தவறாகிப் போவதற்கும் வாய்ப்புகள் எக்கச்சக்கம் என்பதற்காக இதைச் சொல்கிறேன். அதற்காகவெல்லாம் மனநிலை தவற வேண்டும் என்றால் எனக்குத் தான் முதலில் தவற வேண்டும்.

என் வாழ்க்கை அப்படி நடப்பதில்லை. முழுமையான விழிப்புணர்வோடு வாழ்க்கை நடக்கும்போது, விளைவுகளும் நீங்கள் விரும்பி ஏற்றுக் கொண்டவையாகின்றன. விழிப்புணர்வோடு இருக்கும்போது, வேதனையோ துன்பமோ எப்படி உங்களை அணுகும்?

ஏதோ ஒரு சாக்லேட்டுக்கு ஆசைப்பட்டீர்கள். அது கையில் கிடைத்ததும், அதன்மீது இருந்த ஆர்வம் விட்டுப் போயிற்று என்பதைப் போல் இல்லை ஞானம் பெறுவது. பரவசநிலையில், எல்லாமே உங்கள் விருப்பப்படி தான் நடக்கிறது. வேலையை விடுவதும், வேலையைத் துறப்பதும் அதன் உயிரைக் குலைத்து விடாது.

Question: சமூகத்தில் மனிதன் வகுத்த இத்தனை ஒழுக்கங்களும் சட்டங்களும் ஏன் அவனை நெறிப்படுத்தவில்லை? நாளாக, நாளாக ஒழுங்கீனம் தானே காணப்படுகிறது?

சத்குரு:

சட்ட திட்டங்களால் ஆளப்படும் எந்த சமூகத்திலும், அதே சட்டங்களை விலக்கி, காவல்துறையைக் கலைத்து விட்டுப் பாருங்கள். மூன்றே நாட்களில் எல்லாம் தலைகீழாகிவிடும். மிக நாகரீகமான மனிதனாகக் கருதப்பட்டவன் கூட குகை மனிதனைவிடக் கேவலமாக நடந்து கொள்வதை நீங்கள் கண்கூடாக கவனிக்க முடியும்.

சங்கரன்பிள்ளை ஒரு நாள் தன் தோட்டக்காரன் திண்ணையில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார். “ஏய், ஏன் தோட்டத்துச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றப் போகவில்லை?”

தோட்டக்காரன் அவரை சந்தேகத்தோடு பார்த்தான். “ஐயா, வெளியே மழை கொட்டிக் கொண்டிருக்கிறது” என்றான்.

“அதனால் என்ன? குடையை எடுத்துக் கொண்டு போ” என்றார், சங்கரன்பிள்ளை கோபமாக. மனிதன் வகுத்த சட்டங்கள் இப்படித்தான். சூழ்நிலைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாத சமயங்களில், அவை அர்த்தமற்றுப் போகின்றன. காடுகளில் வாழ்க்கை கடினமாக இருக்கிறது என்று மனிதன் நகரங்களை உருவாக்கினான். இப்போது நகரங்களில் வாழ்வது அதை விட மிகக் கடினமாகிவிட்டது.

எப்போது மனிதன் தன்னை தன் உடலோடு அதிக அளவு அடையாளப்படுத்திக் கொள்ளத் துவங்கினானோ, இந்த பிரச்சினை ஆரம்பமாகிவிட்டது. உடல் என்பது மிருகம்தான். உடலின் அபாரத் தேவைகளுக்காக நீங்கள் வேட்டையில் இறங்குகையில், அந்தப் போராட்டத்தில், உங்களுடைய பெரும்பாலான சக்தி விரயமாகிறது!

போதிக்கப்பட்ட நாகரிகம், கல்வி இவை இரண்டும் இந்த மிருக குணங்களைப் பின்னிழுத்து வைத்து, உங்களைப் போலியாக வெளியுலகில் காட்டிக் கொள்ளத் தூண்டுகின்றன. எப்போதெல்லாம் கற்றதும், நாகரிகமும் மறந்து போகிறதோ, அப்போதெல்லாம் அடக்கி வைத்த குணம் தன்னை முன்தள்ளி வெடித்து வெளிப்படுகிறது. உடலைத் தாண்டி உள்நிலையைப் புரிந்து கொள்ள முனையும் சமூகமே நெறிகளுடன் வாழும்.