எதற்காக யோகா?

எதற்காக யோகா

“நான் வாழ்க்கையிலே சந்தோஷமாகத்தான் இருக்கிறேன், நான் எதற்கு யோகா செய்யணும்? சம்பாதிக்கிறோம், சாப்பிடறோம், தூங்குறோம், இப்படி இருக்கும்போது யோகா எதுக்கு? எனக்கு உடம்புலேயும், மனசிலேயும் எந்தப் பிரச்சனையும் இல்லை. நான் எதற்கு யோகா செய்யணும்?”

கேள்வி
எதற்காக யோகா?

சத்குரு:

“பிறந்ததிலிருந்து அடிக்கடி உடைகளை மாற்றினீர்கள். வீடுகளை மாற்றினீர்கள். உணவை மாற்றினீர்கள்… ஆனால், எப்போதும் மாற்ற முடியாமல் உங்களோடு இறுதிவரை வரப்போவது உங்கள் உடல்தான். அதை கவனத்துடன் பராமரித்தால்தான், உங்கள் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள அது ஒத்துழைப்பு தரும்.

அடுத்தது உங்கள் மனம். நீங்கள் சொன்னபடியெல்லாம் கேட்காமல், அதன் போக்கிற்கு, மாறான சிந்தனைகளை வளர்க்கிறது. உங்கள் கனவுகள் நிறைவேற, உங்கள் மனமும் உறுதியுடன் ஒத்துழைப்பு தர வேண்டும்.

உங்கள் மனமும், உடலும் நீங்கள் விரும்பியபடி செயலாற்ற வேண்டுமானால், அவற்றை உங்கள் வசப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி வசப்படுத்திக் கொள்ளத்தான் யோகா”.

கேள்வி
“தியானம் தெரிந்தவர்களிடம் அதைக் கற்றுக் கொள்ள முடியாதா? குருவிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் என்ன?”

சத்குரு:

“பீர்பால் கண்மூடி சில மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருப்பதை ஒருமுறை அக்பர் கவனித்தார். தனக்கும் அவற்றைச் சொல்லித்தரச் சொன்னார்.

“அரசே, இதை முறையாக ஒரு குருவிடம்தான் கற்க வேண்டும்” என்று மறுத்துவிட்டார் பீர்பால்.

ஆனால், அரசர் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, வேறொருவரிடமிருந்து மந்திரத்தைத் தெரிந்து கொண்டார். பீர்பாலிடம் சொல்லிக்காட்டினார்.

“அதே வார்த்தைகள்தான், அரசே! ஆனால், குருவிடம் இருந்து வந்தால்தான் அதற்குச் சக்தி.”

“வார்த்தைகள் மாறாதவரை, அதை யார் சொல்லிக் கொடுத்தால் என்ன?” என்று அக்பர் சீறினார்.

பீர்பால் கைதட்டி சேவகரை அழைத்தார். “இந்த முட்டாளைச் சிறையிலடையுங்கள்” என்று அக்பரைக் காட்டி உத்தரவிட்டார். சிப்பாய்கள் பதறினர். பீர்பால் மீண்டும் மீண்டும் கட்டளையிட்டார். ஆனால் அக்பரை யாரும் நெருங்கவில்லை. பீர்பாலின் செயல் அக்பருக்குக் கொதிப்பேற்றியது.

“என்னைச் சிறையிலடைக்கச் சொல்ல இவன் யார்? இவனைச் சிறையிலடையுங்கள்” என்றார். உடனே சிப்பாய்கள் பாய்ந்து பீர்பாலைப் பிடித்தனர். பீர்பால் சிரித்தபடியே சொன்னார்… “அதே வார்த்தைகள்தான்! நான் சொன்னபோது யாரும் பொருட்படுத்தவில்லை. ஆனால், நிங்கள் சொன்னபோது, மதிப்பு எப்படி மாறியது பார்த்தீர்களா, அரசே?”

குருவிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று பீர்பால் சொன்னதன் அவசியத்தை அக்பர் உணர்ந்தார். உங்கள் கேள்விக்கான பதில் கிடைத்ததா?”
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert