தரிசனம் காண்போருக்கும் உண்டு, காணாதவர்க்கும் உண்டு. இதோ இந்த வலைப்பக்கத்தின் மூலம் உங்கள் இல்லத்திலேயே இன்று மாலை தரிசனம் தரவிருக்கிறார் சத்குரு.

மாலை 6.20 திற்கு துவங்கும் தரிசன நேரத்தில் நடைபெறும் நிகழ்வுகளை, சத்குரு உரையிலிருந்து சில துளிகளை, பொதுமக்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த சுவாரஸ்ய பதில்களை, இங்கே உங்களுக்காக பதிவேற்றவுள்ளோம்! தொடர்பில் இருங்கள்…


'இன்றும் சத்குரு தரிசனம்' என்று முற்பகலிலேயே அறிவிப்பு வர, களைகட்டியது ஆசிரமம். சிவராத்திரியை முன்னிட்டு, தியானலிங்கத்தில் நடைபெற்ற பஞ்சபூத ஆராதனையில் கலந்துகொண்ட பங்கேற்பாளர்களும் பூஜை முடிந்தவுடன் சந்திர குண்டம் முன்பு வந்தமர்ந்தனர்.

சத்குரு வந்தவுடன் சக்தி அதிர்வுகளால் ஆட்கொள்ளப்பட்ட சிலர் தாளமுடியாமல் கூச்சலிட்டு ஆசுவாசமடைந்தனர்.

'விஷ்வேஸ்வராய மஹாதேவாய த்ரயம்பகாய ....' சத்குருவின் குரல் அதிர்வுகள் வெளியை நிறைக்க, பின் தொடர்ந்தது இசைக் குழு.

தனது பொதுவான உரையை இன்றைக்கு வழங்காமல், கேள்விகளுக்கு கையசைத்தார் சத்குரு. இன்று கேட்கப்பட்ட கேள்விகளில் இங்கே சிலவற்றின் தொகுப்பு.

நான் யோகப்பயிற்சியை தொடர்ந்து செய்கிறேன். ஆனாலும் என்னுடைய பணியில் மனதைக் குவிக்க முடியவில்லையே, இது எதனால்?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

லண்டனிலிருந்து வந்திருந்த கர்நாடகத்தைச் சேர்ந்த அன்பர் ஒருவர் இப்படிக் கேட்க,

"நீங்கள் கர்நாடகாவில் இருந்தால், உங்கள் மனம் லண்டனில் இருக்கிறது. நீங்கள் லண்டனில் இருந்தால் உங்கள் மனம் இங்கே இருக்கிறது. இதுதான் இப்போது பிரச்சனை. நீங்கள் யோகப் பயிற்சி செய்வதனால், கிட்னி தன் செயல்பாட்டை நிறுத்த வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கவில்லை; கணையம், இதயம் போன்ற மற்ற உறுப்புகள் அதன் செயல்பாட்டை நிறுத்திக் கொள்ள வேண்டும் என நீங்கள் எதிர்பார்ப்பதில்லை; ஆனால் மூளை மட்டும் ஏன் வேலை செய்வதை நிறுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள். நீங்கள் உங்கள் மனது வேலை செய்யக் கூடாது என நினைக்க வேண்டாம். அது அதன் வேலையைச் செய்யட்டும்!"

இப்படி மனம் பற்றி பேசிய சத்குரு பல உதாரணங்களுடன் தன் நீண்ட பதிலைத் தந்தார்.

ஒருவர் ஞானோதமைடைவதற்கு ஏன் இயற்கை இவ்வளவு தடைகளையும் கஷ்டங்களையும் தருகிறது?

இப்படியாக ஒருவர் கேட்க...

"நீங்கள் உங்கள் மனதில் பல்வேறு கருத்துக்களையும் மதிப்பீடுகளையும் கொண்டுள்ளீர்கள். உங்கள் கருத்துக்களையும் மதிப்பீடுகளையும் கொண்டு இந்த உலகத்தைப் பார்த்தால் உண்மையைப் புரிந்துகொள்ள வாய்ப்பில்லை. நான் எப்போதுமே யாரைப் பற்றியும் மதிப்பீடு செய்வதில்லை. இவர் இப்படிப்பட்டவர். அவர் அப்படிப்பட்டவர் என நான் எப்போதுமே தீர்மானிப்பதில்லை.

நான் இப்போது உங்களைப் பற்றி மதிப்பீடு செய்துவிட்டால், நாளை காலையே நீங்கள் வேறுவிதமான மனிதராக மாறலாம். நாளை அமாவாசை வேறு, நாளை நீங்கள் ஞானோதயம் அடைந்தும்கூட விடலாம். எனவே நான் ஏதாவது ஒரு பணியை ஒருவருக்கு வழங்கும்போது மட்டுமே அவரால் அதைச் செய்ய முடியுமா எனப் பார்க்கிறேன். மற்றபடி எந்த மனிதரைப்பற்றியும் எந்த ஒன்றைப் பற்றியும் மதிப்பீடுகளைக் கொள்வதில்லை."

நாம் நமது மனதில் ஏற்படுத்திக் கொள்கிற மதிப்பீடுகளை கைவிட வேண்டிய அவசியத்தை தன் பதிலில் வெகுவாக உணர்த்தினார் சத்குரு.

என்னுடைய ஜாதகத்தை கணித்து என்னுடைய வாழ்க்கை இப்படித்தான் நடக்கும் என்று சொல்கிறார்கள், நான் அதைத் தாண்டி வாழ முடியாதா?

“ஒரு காகிதத்தில் யாரோ உங்கள் வாழ்க்கையை கணித்துக் கொடுத்துவிட்டால், அந்தக் காகிதத்திலேயே உங்கள் வாழ்க்கையை இழந்துவிடுவீர்கள். நம்முடைய பாரம்பரியத்தில் ஒரு குழந்தை பிறந்தவுடனே ஜாதகம் கணிக்கப்பட்டதன் காரணம், அந்த குழ்ந்தையின் மனப்பாங்கை அறிந்து கொண்டு அதற்கேற்ற சூழ்நிலையை உருவாக்கி, ஆன்மீகப் பரிணாமம் பெறச் செய்வதே ஆகும். 'மார்கண்டேயன்' போன்ற புராணக் கதைகளில் கூட அவன் இப்படியிருப்பான், இதுபோன்ற செயல்களைச் செய்வான் எனக் கூறியதெல்லாம் அவன் எப்படி ஆன்மீக சாத்தியத்தை அடைவான் என்பதை நோக்கித்தான்"

ஜாதகத்தை பற்றி இன்னும் தனது நீண்ட பதிலை தந்த சத்குரு, மனிதனாய் பிறந்துவிட்ட எவரும் கணிப்புகளைக் கடந்து ஆன்மீக சாத்தியத்தை அடையத் தகுதியானவரே என பறைசாற்றினார்.

ஒன்றைப் பற்றி முடிவு எடுப்பதில் ஏன் இத்தனை கஷ்டம் சத்குரு?!

இப்படியாக ஒரு இளைஞர் கேட்டபோது,

"நான் கல்யாணம் செய்யலாமா? வேண்டாமா?, எந்த வேலைக்கு போகுறது? எந்த நாட்டுக்குப் போகுறது? இப்படி எதை எடுத்தாலும் முடிவு எடுக்க வேண்டியுள்ளது. நீங்கள் அதைச் செய்யலாம், இதைச் செய்யலாம் என்று நான் சொல்வதைவிட, நீங்கள் எதைத் தேர்வு செய்கிறீர்களோ அதில் உங்கள் உடல், மனம், உணர்ச்சி என அனைத்தையும் முழுமையாய் ஈடுபடுத்திடுங்கள். அதன்பின் நடப்பது எதுவாயினும் அது பிரமாதமாகத்தான் இருக்கும்!"

இந்த அற்புதமானதொரு பதிலை வழங்கிய சத்குரு, ஒரு கன்னட மொழி கானத்தை இசைக் குழு முழங்க அனைவருக்கும் அருட்கரம் நீட்டிச் சென்றார்.

விரைவில் மற்றொரு தரிசனத்தில் இணையலாம்!