தரிசனம் காண்போருக்கும் உண்டு, காணாதவர்க்கும் உண்டு. இதோ இந்த வலைப்பக்கத்தின் மூலம் உங்கள் இல்லத்திலேயே இன்று மாலை தரிசனம் தரவிருக்கிறார் சத்குரு.

மாலை 6.20 திற்கு துவங்கும் தரிசன நேரத்தில் நடைபெறும் நிகழ்வுகளை, சத்குரு உரையிலிருந்து சில துளிகளை, பொதுமக்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த சுவாரஸ்ய பதில்களை, இங்கே உங்களுக்காக பதிவேற்றவுள்ளோம்! தொடர்பில் இருங்கள்…



வா னம் கொட்டிக் கொண்டிருக்கிறது. சந்திரகுண்டத்தின் முன்னர் என்று அறிவிக்கப்பட்டிருந்த தரிசன நேரம் ஆதியோகி ஆலயத்தில் என்று மாற்றி அறிவிக்கப்பட்டது. சந்திரகுண்டத்திலிருந்து ஆதியோகி ஆலயத்திற்கு பின்புறம் உள்ள வழியில் சென்றவர்களுக்கு மழையை கண்டு கொட்டமிடும் குழந்தைகள் போல் தண்ணீரின் மேலே கும்மாளமிட்டு கொண்டிருந்த வண்ண மீன்களின் அழகும் தரிசிக்க கிடைத்தது.

துரிதமாக நடந்த ஒருங்கிணைப்புகளுக்கு இடையே, சலனமற்ற ஒரு மௌனப் போரும் நிகழ, ஆதியோகி ஆலயத்தில் ஏற்பாடுகள் நேரத்திற்கு அரங்கேறி முடிந்து, சரியாய் 6.15 மணிக்கு மேடை ஏறினார் சத்குரு.

"ஹே சிவ சங்கரா..." என்று நெஞ்சை உருக்கும் கீதத்துடன் இன்றைய தரிசனம் துவங்கியது. ஆதியோகி ஆலயம் உருவாக்கும் சூழல், சத்குரு அருகாமை அவ்விடத்தின் தீவிரத்தை பன்மடங்கு பெருக்கியது. சலனமில்லாமல், மிகுந்த தீவிரத்துடன் துவங்கிய சத்சங்கத்தில் வார்த்தைகள் பரிமாற்றம் பெற சற்று நேரம் பிடித்தது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

வெகு சில கேள்விகள், ஆழமான சில பதில்கள் என்று சமீபத்தில் நடைபெற்று வந்த தரிசன நேரங்களுக்கு இடையே இன்று சற்றே வித்தியாசமாய் பன்முகக் கேள்விகள் பல ஆழமான பதில்கள் என்று காதுகளுக்கு விருந்தாய், எண்ணத்திற்கு மருந்தாய், உணர்விற்கு விருந்தாய் அமைந்தது.

எனக்குள் ஆழமான பல விஷயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, எனக்குள் நடப்பவற்றை என்னால் தாங்கிக் கொள்ள இயலவில்லை, நான் அடுத்து என்ன படி எடுப்பது என்று எனக்கு கேள்வி உள்ளது, என்று ஆன்மீகப் பரிமாணம் தொடங்கி; மானசரோவருக்கு வந்து போகும் அந்த விநோத உயிர்களைப் பற்றி புரிந்து கொண்டுவிட்டீர்களா என்று ஞானக் கேள்வியில் விரிந்து; மொழியை பக்தியாய் வடிவமைத்துவிட்ட கலாச்சாரத்தின் மகத்துவத்தில் தடம் பதித்து; பக்தியின் மெய்ஞானம், விஞ்ஞானம் உணர்த்தி; ஒரு பள்ளிக் குழந்தை வகுப்பில் தூங்கிப் போய்விடுகிறேன் என்று கேட்க, தூக்கம் என்னும் பாடத்தை தொட்டு; வாழ்க்கையை என் மண்டையில் வாழப் பிடிக்க மாட்டேன் என்கிறது என்றவருக்கு வாழ்வியல் பாடம் சொல்லிக் கொடுத்து; அடுத்து கேள்வி கேட்டவருக்கு உங்கள் கேள்வியில் வெறியில்லை என்று விஸ்தரித்து விரிந்து நிறைவுற்றது இன்றைய தரிசனம்.

பரவலாக பல விஷயங்கள் பற்றி இன்று நமக்கு கேட்க கிடைத்தாலும், பக்தி, மனிதனின் உணர்வு, மொழி போன்றவற்றை பற்றி பேசியது நெஞ்சில் தைத்து நின்றது.

ஆம்! பக்தி என்ற பிரம்மாண்டமான கருவி பற்றி பேசினார் சத்குரு!

இனி சத்குரு பேசியதிலிருந்து...

இந்த சாதகர்கள் மட்டுமல்ல. நம் நாடே இப்படித்தான் உருவாக்கப்பட்டது. நாம் வாழ்கின்ற சூழ்நிலையே பக்தியாக இருக்கும்படி உருவாக்கப்பட்டது. ஒரு ஊர் உருவாகும் முன் முதலில் கோயில்தான் கட்டப்பட்டது. சாதாரண கட்டிடமாக அல்ல. ஒரு பிரம்மாண்டமான கோயிலைக் கட்டிவிட்டு அதனை சுற்றி ஒரு சிறிய வீட்டை கட்டி வாழ்ந்தனர் நம் முன்னோர்.

வாழும் சூழ்நிலையே ஒரு மனிதனை செதுக்கி, முக்தி நோக்கி செல்வது போல உருவாக்கப்பட்டது. ஆனால் வியாபாரமே பிரதானமாய் போய்விட்ட இன்றைய காலகட்டத்தில் துரிதமாக நம் கலாச்சாரத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு மனிதன் தன் மனதை தொடர்ந்து ஒரே இடத்தில் நிறுத்தி வைப்பது மிகவும் கடினம். ஆனால் அவன் உணர்வு நிலையில் தன்னை விட மேலான ஒன்றுடன் லயித்திருப்பது மிகவும் எளிதானது.

பக்தி என்பது மிகவும் சக்தி வாய்ந்த கருவி. இது ஆன்மீகத்தில் மட்டுமல்ல, உலக வாழ்வில் பெரிதாக சாதித்திருக்கும் பலரும் தன் வேலையுடன் உணர்வு நிலையில் பக்தி கொண்டதால்தான் சாதித்திருக்கிறார்கள். பக்தியில்லாமல் எதையும் சாதிக்க இயலாது என்றார்.

பக்தியே கலாச்சாரமாக உருவாக்கப்பட்ட கலாச்சாரத்தின் பெருமைகள் நன்று புரிந்தது இன்று.

உள்ளம் உருகிட செய்யும் கருவி பக்தி
உணர்வில் எளிதாய் மலர்ந்திடும் பக்தி
உலகில் சாதிக்க தேவை பக்தி
உள்ளே வளர்ந்திட தேவை பக்தி
முக்தியை அருளும் வழியே பக்தி

என்று நம்மை உருக வைத்த இந்த தரிசனத்தில் இன்று ஆதியோகி ஆலயம் பக்தியால் நிரம்பி வழிந்தது.