திருமதி செல்வம், சின்னத்திரையில் மிகப்புகழ் பெற்ற சீரியல் இது. இதில் கதாநாயகியாக நடிக்கும் திருமதி.அபிதா புகழ்பெற்ற திரைப்பட நடிகையும் கூட. இவர் தன் உணவு அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்....

திருமதி.அபிதா

"நான் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவள். சின்ன வயதில் இருந்து உணவில் ரொம்ப விருப்பம் உண்டு. அம்மாவும் விதவிதமாக சமைத்துப் போடுவார்கள். மலைதேசத்து மக்கள் என்பதால் தேங்காயும், எண்ணெயும் எங்களின் சருமத்தை பளபளக்கச் செய்யுமே தவிர, கொலஸ்ட்ராலோ கொழுப்போ என்னைப் போன்றவர்களுக்கு ஏறவே ஏறாது.

அதனால்தான் 'சேது' படத்தில்கூட நான் ஒல்லியாகத்தான் இருந்தேன். விக்ரம் போன்றவர்கள் எல்லாம்கூட என்னை நன்றாகக் கிண்டல் பண்ணுவார்கள்.

சின்னத்திரையில் திருமதி. செல்வம் எனக்கு மிகப்பெரிய புகழைக் கொடுத்திருக்கிறது. இந்த சமயத்தில்தான் எனக்குத் திருமணம் ஆனது. தாய்மையும் அடைந்தேன். நான் கர்ப்பிணி என்பது தெரியாமல் இருக்க நிறைய 'குளோஸ்-அப்' ஷாட்ஸ் வைத்துவிடுவார்கள். அதனால் முகத்தில் இன்னும் அதிகபாவம் காட்டி நடிக்க வேண்டும். ரொம்பவுமே சேலன்ஜிங் ஆக இருந்தது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

என்னுடைய கர்ப்பகாலம், பிரசவம் என எதுவுமே இந்த சீரியலின் தொடர்ச்சிக்கு இடைஞ்சல் இல்லாமல் செய்து கொடுத்துவிட்டேன். அதேபோல என்னுடன் படப்பிடிப்பில் இருந்தவர்களும் ரொம்பவுமே ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.

கூடுதலாக நான் உணவுப் பிரியை என்பதால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு உணவு என திட்டம் போட்டு செய்துகொண்டு வந்து எனக்குக் கொடுப்பார்கள். டைரக்டர் சுந்தர் கே.விஜயன் அவர்களின் மனைவி கேரட் அல்வா கொண்டு வந்து கொடுத்து அசத்தினார். புளியோதரை, எலுமிச்சை ரசம் என வாய்க்கு ருசியாக ஒவ்வொருவரும் கொண்டு வருவார்கள். அவர்களின் அன்பில் நான் மூழ்கியே போனேன் என்றுதான் சொல்லவேண்டும். என்னுடைய அம்மாவும் விதவிதமாக சமைத்துக் கொடுத்தார்கள். நிறைய காய்கறிகளைப் போட்டு அவியல் செய்வார்கள். ரொம்பவுமே சுவையாக இருக்கும்.

இப்படி அன்பான அம்மா, கூட இருப்பவர்கள் என அத்தனை பேரும் கவனித்துக் கொள்வது என்பது எத்தனை ஆனந்தமான விஷயம். இந்த அன்பிற்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன். உணவு என்ற ஒன்று எப்படி நம்மையெல்லாம் இணைத்து, அன்பால் கட்டுகிறது என்று நினைத்துப் பெருமிதம் அடைகிறேன்.

அன்பும், ஆரோக்கியமுமான உணவும் கிடைத்ததால், என்னுடைய பிரசவ காலமும் சரியாக அமைந்து என் இனிய மகள் அல்சா பிறந்தாள். இப்போது அவளுக்கு எட்டு மாதமாகிறது. உணவே மருந்து மட்டுமல்ல, உறவும்கூட என்றுதான் நான் சொல்வேன்.

எலுமிச்சை ரசம்

தேவையான பொருட்கள்:

பொடியாக நறுக்கிய தக்காளி - 1
துருவிய இஞ்சி - 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
நறுக்கிய கொத்தமல்லி - 1 மேஜைக்கரண்டி
வேகவைத்து மசித்த துவரம்பருப்பு - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - தேவையான அளவு
கடுகு - 1/2 தேக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி

செய்முறை:

  • வாணலியில் நெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
  • பிறகு தக்காளி, இஞ்சி, மஞ்சள் தூள் சேர்த்து அரை நிமிடம் வதக்கவும்.
  • வேகவைத்த பருப்பில் இரண்டரை மடங்கு தண்ணீர் விட்டு தக்காளியுடன் சேர்த்து கொத்தமல்லி, உப்பு போட்டு கொதிக்கவிடவும்.
  • பச்சை வாசனை போனவுடன் இறக்கிவிடவும்.
  • ரசம் ஆறியதும் எலுமிச்சை சாறை சேர்த்துப் பரிமாறவும்.
  • ரசம் ஆறும் முன் எலுமிச்சை சாறு சேர்த்தால் கசந்துவிடும்.
  • இதேபோல பைனாப்பிள் சாறை சேர்த்து பைனாப்பிள் ரசம் செய்யலாம். மிகவும் சுவையாக இருக்கும்.

ஈஸி அவியல்

தேவையான பொருட்கள்:

நறுக்கிய காய்கறிகள் - 2 கப்
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

அரைக்க

துருவிய தேங்காய் - 3/4 கப்
சீரகம் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 2

செய்முறை:

  • அரைக்கக் கூறியுள்ள பொருட்களை மைய அரைக்கவும்.
  • காய்கறிகளுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேகவைக்கவும்.
  • இத்துடன் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை கிளறி, தேங்காய் எண்ணெய் சேர்த்து இறக்கி விடவும்.
  • விரும்பினால் சிறிய மாங்காய் துண்டை சேர்க்கலாம், சுவையாக இருக்கும்.
  • இதில் சிறிதளவு புளித்தண்ணீரை சேர்த்தால் கேரளா அவியல் ஜோராக இருக்கும்.