டபுள் ப்ரமோஷன்

பூமியின் தெற்கு பாகத்திற்கு சூரியன் பயணித்து வரும் காலம் – ஜூன் மாதத்தில் ஆரம்பித்து டிசம்பர் வரை – அதாவது தக்ஷிணாயணம் முடியப்போகிறது. இந்த தக்ஷிணாயண காலம் யோகாவில் ‘சாதனா காலம்’ என்று குறிப்பிடப்படுகிறது. இந்த வருடம் டிசம்பர் 22க்கு பிறகு வரும் காலகட்டத்தை, அதாவது பூமியின் வடக்கு பாகத்திற்கு சூரியன் பயணிக்கும் காலகட்டத்தை உத்தராயணம் என்று குறிப்பிடுகிறோம். அருளையும் ஞானத்தையும் உள்வாங்கிக் கொள்வதற்கும், அந்த மூலத்தை அடைவதற்கும் இதுவே சரியான நேரம்.

குறிப்பாக, உத்தராயணத்தின் முதல் பாதி வரை அதாவது மார்ச் மாதம் வரை, சூரியன் பூமியின் நிலநடுக்கோட்டை கடந்து செல்லும் நாள் வரையிலான காலகட்டத்தில்தான் அதிகபட்சமான அருள் கிடைக்கிறது. மற்ற எந்த காலகட்டதையும்விட இந்த நேரத்தில்தான் அருளை உள்வாங்கிக்கொள்ளும் ஆற்றலை மனித அமைப்பு பெறுகிறது. ஆன்மீக வரலாற்றில் பார்த்தீர்களேயானால், சூரியன் வடக்கு பாகத்தில் இருக்கும் இந்த நேரத்தில்தான் அதிகபட்சமான மக்கள் முக்தியடைந்திருக்கிறார்கள்.

வரும் வருடத்திலிருந்து, அருளை உள்வாங்கிக் கொள்வதற்கான உணர்வை அதிகரிக்க, உத்தராயணத்தின் தொடக்கத்தில், மக்களுக்கு ஓரு வாய்ப்பு வழங்கப்போகிறோம். பெண்களுக்கு 21 நாள் சாதனா, வரும் ஜனவரியில் ஆரம்பித்து தை பூசம் என்கிற தன்ய பௌர்ணமி வரை வழங்கப்படும். மக்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு இந்த சாதனா வழங்கப்படும். தைப்பூசத்தில் ஆரம்பித்து மஹாசிவராத்திரி வரையிலான 42 நாள் காலகட்டத்தில் ஆண்களுக்கு சாதனா வழங்கப்படும்.

“எங்களுக்கு கிடைப்பதை விட இரண்டு மடங்கு ஆண்களுக்கு ஏன் கிடைக்கிறது?” என்று பெண்கள் உடனே கேட்க ஆரம்பித்து விடுவார்கள். என்ன செய்வது, ஆண்களுக்கு தோல் கொஞ்சம் தடிமன்தான்! செயல் என்று வரும்போது ஆண்களே அதிக தகுதியுடன் இருக்கின்றனர். ஒன்றை பெற்றுக் கொள்ளுதல் என்று வரும்போது பெண்கள் அதிக தகுதியுடன் இருக்கின்றனர். ஆண்களை விட பெண்களுக்குத்தான் நிச்சயமாக ஏற்புத்திறன் அதிகம். இது ஒரு சிறிய அளவிலான நன்மைதான். இதற்காக எல்லா பெண்களுக்கும் ஆண்களைவிட ஏற்புத்திறன் அதிகம் என்று கூறிவிட முடியாது.

பெண்களுக்கு ஏற்புத்திறன் அதிகம் ஏனென்றால், ஆண்கள் பிழைத்து வாழ்வதற்கு தயாராக்கப்பட்டவர்கள். நான் சொல்வது அவமதிப்பாக இருக்கக் கூடும், இவ்வுலகில் ஆண்களே இல்லை என்றால், பெண்கள் தாங்களே உற்பத்தி செய்வதற்கு வழி இருந்தால் கூட பிழைப்பது மிகக் கடினமாக இருந்திருக்கும். பெரும்பாலும் அழிந்தே போயிருப்பார்கள். அப்படியே பிழைத்திருந்தாலும் அங்கங்கே சிறுகூட்டமாய் மட்டும் இருந்திருப்பார்கள்.

ஆண்களின் வெற்றிகொள்ளும் மனப்பான்மையாலும், வெற்றி பெறக்கூடிய சக்தி அவர்கள் உடலில் இருப்பதாலும்தான் மக்கள் தொகை இந்த அளவு பெருகியிருக்கிறது. ஆனால் அதிக அளவில் ஏற்புத்திறன் பெண்களுக்கே இருக்கிறது. எனவே அருளைப் பெறுவதற்கும், உள்வாங்கிக் கொள்வதற்கும் உத்தராயணத்தில் செய்யப்படும் அந்த சாதனாவில் 50 சதவிகிதமே பெண்களுக்கு போதுமானது. ஆனால் தஷிணாயணத்தில் – அக்காலம் பணி செய்வதற்கு உகந்த காலமாக இருப்பதால் – பெண்கள் கூடுதலாக சாதனா செய்ய வேண்டும்.

ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், உலகில் தொழில்நுட்பம் இல்லையென்றால் இவ்வுலகில் வாழ்வதற்கான எல்லா வேலைகளையும் கைகளாலேதான் செய்ய வேண்டும். அதன்படி பார்த்தால் பிழைப்பு நடத்துவதை பெண்களைவிட ஆண்களே மிகுந்த திறமையுடன் செய்வார்கள். ஆனால் இன்று தொழில்நுட்பம் வந்து விட்டதால், சாதாரணமான உடல்வலிமை தேவைப்படும் செயல்களிலும், ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் நிகராக செயல்படுகிறார்கள். தொழில்நுட்பம் இல்லையென்றால், பிழைப்பு நடத்துவதில் பெண்களைவிட ஆண்களே அதிக தகுதி உடையவர்களாய் இருப்பார்கள். சமூகங்கள் ஒழுங்குக்கு உட்பட்டு இருப்பதால்தான் ஒரு அமைப்பு உருவாகியிருக்கிறது. இத்தகைய அமைப்பிற்குள் பெண்மை மலரும்.

ஒரு ஒழுங்கான அமைப்பே இல்லாமல் எல்லாம் தரைமட்டமாகி இருந்தால், இயல்பாகவே ஆண்மை மேலோங்கிவிடும். அந்த காலகட்டத்தில் ஆரம்பித்த ஆணாதிக்கம்தான் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்று தொழில்நுட்பங்கள் வந்துவிட்டதால் சமூகங்கள் ஓர் அமைப்போடு இருக்கின்றன. சமூகத்தை சீர் செய்வதற்கான நேரம் வந்துவிட்டதுதான், ஆனால் உடலியக்கத் திறமைகளையும் மனோரீதியான அளவில் நிதர்சனங்களையும் மறப்பது முட்டாள்தனம். ஆண் பெண்ணிற்கான வித்தியாசத்தை நாம் பாரபட்சத்துடன் பார்க்கும்போது அது அசிங்கமாகிவிடுகிறது. மற்றபடி ஒருவருக்கொருவர் வித்தியாசப்பட்டு இருப்பது தவறல்ல. வித்தியாசம் எனும்போது ஒன்று அதிகம் ஒன்று குறைவு என்று பார்க்கக்கூடாது. வித்தியாசம் என்றால் வெறும் வித்தியாசம்தான். துரதிருஷ்டவசமாக மனித வரலாற்றில் எல்லா வித்தியாசங்களையும் பாரபட்சமாக பார்ப்பதை நடைமுறைப் படுத்திவிட்டார்கள்.

எனவே பெண்களுக்கு 21 நாள், ஆண்களுக்கு 42 நாள் சாதனா. இது பாரபட்சமான செயல்முறை அல்ல. வித்தியாசத்தை அடையாளங்கண்டு அங்கீகரித்தல். நாங்கள் படிக்கும்போது, அந்த காலத்தில் சில மாணவர்கள் டபுள் பிரமோஷன் வாங்குவார்கள். இந்த காலத்தில் அது இல்லை. அதுபோல் சில துறைகளில் ஆண்கள் இயல்பாகவே டபுள் பிரமோஷன் பெறுவார்கள், சில துறைகளில் பெண்கள் இயல்பாக டபுள் பிரமோஷன் வாங்குவார்கள்.

எனவே சூரியன் வடக்கு நோக்கி நகரும் அந்த உத்தராயண காலம் பெண்களுக்கு சாதகமானது. இக்காலத்தில் உடல் வலிமையை விட ஏற்புத்திறன்தான் தேவை. சூரியன் தெற்கு நோக்கி நகரும் நேரத்தில் வேலை அதிகம் தேவைப்படுவதால் ஆணாதிக்கம் நிலவும். எனவே சாதனை செய்யும் இந்த வாய்ப்பு, தியான அன்பர்கள், தியான அன்பர் அல்லாதவர்கள் என எல்லோருக்கும், இந்த மாதம் 21 மற்றும் 22 அன்று வழங்கப்பட இருக்கிறது.

அன்பும் அருளும்,

Sadhguruஇதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert