சமீபத்தில் நடந்து முடிந்த சத்குரு தர்ஷன் நிகழ்ச்சியில், "தர்ஷன்" என்றால் என்ன? என்பதைப் பற்றி சத்குரு பேசினார். இந்த வார சத்குரு ஸ்பாட்டில், தர்ஷன் பற்றி சத்குரு தந்த விளக்கத்தை தெரிந்து கொள்ளுங்கள்...


தர்ஷன் என்பது உங்கள் கண்களைத் திறந்து வைத்தே அற்புதத்தை உணர்வது. எந்த அற்புதம்? மனித அறிவின் அடிப்படை இயல்பே, தன்னிடம் இருப்பதைக் கொண்டு திருப்தி அடையமுடியாதது தான். அந்த இயல்பு மிகமிகக் கீழ்நிலையில் வெளிப்படும்போது, அதற்கு பணம், சொத்து, ஆக்கிரமிப்பு அல்லது பொருட்களை வாங்கிச் சேர்ப்பது போன்றவை தான் பிடித்தமானதாக இருக்கும். சிலர் வாளையோ, துப்பாக்கியையோ ஏந்தி கடைக்குச் சென்று பொருட்கள் சேகரிக்கின்றனர். வேறு சிலர் கைப்பையோடு கடைக்குச் செல்கின்றனர். எப்படிச் சென்றாலும், இது எல்லாமே மிக மிக அடிப்படையான ஒரு ஏக்கத்தின் வெளிப்பாடு. இருப்பதைக் கொண்டு திருப்தி அடைய முடியாத ஏக்கம் அது. போதுமென்ற மனம் வேண்டும், அதிக ஆசை கூடாது என மனதை ஆற்றும் பற்பல போதனைகள் இருப்பினும், அதில் ஒன்றேனும், ஒரேயொரு மனிதனுக்காவது வேலை செய்திருக்கிறதா?

உங்களுக்குப் புத்திகூர்மை துடிப்பாக இருந்தால், அது இன்னும் அதிகமாய் விரிவடைய வேண்டும் என்றே ஆசைப்படும். இந்த ஆசையைத் தடுக்க யாராலும் முடியாது. நீங்கள் பணத்தைத் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் அதிகப் பணம் தேடுவதில்லை, உங்களுக்கு எல்லாமே வேண்டும் - இது நிச்சயம் நடக்கப் போவதில்லை, இது யதார்த்தமும் இல்லை. எவ்வளவு என்று கணக்கிடுவதிலேயே உங்கள் வாழ்க்கை முழுவதும் வீணாய் முடிந்து போகும். எத்தனை பூஜ்ஜியங்கள் வேண்டுமானாலும் நீங்கள் சேர்த்துக் கொண்டே போகலாம். ஆனால், வாழ்க்கைக்கு எவ்வகையிலும் அது ஒரு தீர்வாய் ஆகிவிடாது. பணம் என்பதில் இருந்து தியானம் என்பதற்கான மாற்றம், பண்பட்ட மாற்றம் மட்டும் அல்ல, நீங்கள் கனவில் மிதப்பதில் இருந்து யதார்த்தத்திற்குத் திரும்புகிறீர்கள். இது உங்கள் வாழ்க்கைத் திசையை மாற்றாது, ஆனால் "இன்னும் அதிகம்" சேர்ப்பது மட்டும் உங்களை முழுமையடையச் செய்யாது என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். உங்களுக்கு எல்லாமே வேண்டும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

எல்லாமே வேண்டும் என்று வரும்பொழுது பொருள்தன்மையில் அணுகுவது விவேகம் இல்லை. பொருள் என்றால் சிறியது, பெரியது, ஆனால் அனைத்தும் அல்ல. எந்த அறிவை நீங்கள் மனிதன் என்று அழைக்கிறீர்களோ, அந்த அறிவு, படைப்பின் தன்மை பற்றிய உண்மைத் தேடலில் இருக்கிறது. இந்த அறிவு எங்கேயும் நிற்க விரும்பாமல் கடைசிவரை பார்த்துவிட விழைகிறது. இன்று சிறிது நோய்வாய்பட்டிருந்தாலோ, களைப்பாக இருந்தாலோ, 'ஐயோ, போதும்' என்று நினைப்பீர்கள். ஆனால் நாளை காலையே சிறிது புத்துணர்வு வந்து விட்டால் திரும்பவும் தயாராகி விடுவீர்கள். மனிதனாக இருப்பதன் இயல்பு இது.

அறியாமலேயே, விழிப்புணர்வு இல்லாமலேயே எல்லையற்றதைத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள். எல்லையற்ற ஒன்று இருந்தால் அது எங்கும் இருக்கும். உங்களுடைய சிக்கல் இதுதான். எங்கும் இருக்கும் ஒன்றைத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் உங்கள் புலன் உறுப்புகளுக்கு, இருள் - ஒளி, ஆண்-பெண், இரவு-பகல், அது - இது என்ற ஒரு கட்டுமானம் இல்லை என்றால் அதனால் புரிந்து கொள்ள முடியாது. 'இது, இது' என்று இருந்தால் உங்கள் புலன் உறுப்புகள் அதைப் புரிந்து கொள்ள முடியாது. சூடு, குளிர்ச்சி என்ற இரண்டு இருந்தால் மட்டுமே உங்களால் புரிந்து கொள்ள முடியும். இதில் ஒன்று மட்டுமே இருந்தால் உங்களால் புரிந்து கொள்ள முடியாது. எல்லையற்ற தன்மை கொண்ட அந்த 'உண்மை'க்காகத்தான் இவ்வளவு ஏக்கமும். ஆனால் அதற்கான கருவிகள் இல்லை.

தர்ஷன் என்பது உங்கள் தேடலை சிறிது கீழிறக்குவது, இறுதியானது, எல்லையற்றது எதுவோ அதைத் தேடுவதற்குப் பதில், எல்லையற்றதின் உருவமாக இருக்கும் ஒன்றைப் பார்க்கத் தொடங்குவது. அந்த எல்லயற்றதில் தோய்ந்த ஒன்று நறுமணத்தை பரப்பிக்கொண்டிருக்கிறது. ஒரு குரு என்பவர் எல்லையுடைய ஒன்றாக இருப்பதாலேயே ஒரு வாய்ப்பாக இருக்கிறார். அப்படி அவர் இல்லை என்றால் உங்களால் அவரைப் புரிந்து கொள்ள முடியாது. சில விஷயங்கள் இருந்தால் மட்டுமே புலன் உறுப்புகள் கிரகித்து மேற்கொண்டு செல்லும். எல்லையற்றதின் நறுமணத்தில், குரு என்பவர், முழுவதும் நனைந்திருக்கிறார். புரிந்து கொள்ள முயற்சி செய்யாமல், சிந்திக்க முயற்சி செய்யாமல், உள்வாங்கிக் கொள்ள முயற்சி செய்யாமல் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.

'தர்ஷன்' நிலையில் இருப்பது என்றால் என்ன? உங்கள் உடல் ஒரு விதமான அதிர்வு, உங்கள் எண்ணம் ஒரு விதமான அதிர்வு, உங்கள் உணர்ச்சிகள் ஒரு விதமான அதிர்வு. உங்களுக்குள் இருக்கும் உயிர் என்பதோ இன்னொரு விதமான அதிர்வு. மிக அதிக மென்மையுடன் உங்கள் உயிரை அதிர்வுற அனுமதிப்பதுதான் 'தர்ஷன்' நிலை என்பது. உங்கள் உயிரானது, உங்கள் உடல், எண்ணம் மற்றும் உணர்ச்சி ஆகிய தடைகளையும் தாண்டி அதிக மென்மையுடன் இருக்கும்போது, நீங்கள் தர்ஷன் என்ற நிலையில் இருக்கிறீர்கள் என்று பொருள். உண்மையிலேயே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

இதனால் என்ன சொல்ல வருகிறீர்கள்? நாம் என்ன சொல்ல வருகிறோம் என்றால் அந்த எல்லையற்ற பரிமாணத்தை நீங்கள் ருசி பார்க்க முடியும் - அதற்கான கருவி உங்களிடம் இல்லாமலே. அதாவது நாக்கு இல்லாமலே ரசத்தை ருசி பார்க்க முடியும்.

அன்பும் அருளும்,
சத்குரு


தரிசன நேரத்தின் போது, சவுன்ட்ஸ் ஆப் ஈஷா இசைக் குழுவினர் பாடிய "நைஹர்வா" என்ற கபீர் பாடல் இங்கே...