"சத்குரு இப்போது எங்கே இருக்கிறார்? இந்நேரம் என்ன செய்துகொண்டிருப்பார்?" இப்படி, தமது குருவைப் பற்றி தினமும் ஒருமுறையேனும் சிந்திக்கும் பல லட்சம் உள்ளங்களுக்காக இதோ இங்கே சத்குரு ஸ்பாட்! டென்னிஸி மலைச் சரிவுகளில் சைக்கிளில் ஏறிய அனுபவத்தை இங்கே பகிர்கிறார் சத்குரு.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கடந்த இரண்டு வாரங்களாக தொடர்பயணம் மற்றும் செயல்கள் முடித்து, இதோ டென்னிஸியில் சற்றே ஓய்வாக இருக்கிறேன்.

சென்னை மெகா வகுப்பு மற்றும் சிங்கப்பூர் பயணம் முடித்து, டென்னிஸியில் இருக்கும் இவ்வேளையில், இங்குள்ள பசுமையும் மலைகளும், சோர்ந்த என் உடலுக்கு இதம் கொடுக்கின்றன. அதிஷ்டவசமாக எப்போதுமே என் உயிர் சோர்வடைவதில்லை.

கடந்த சில நாட்களில் சில கடினமான சூழல்கள் ஏற்பட்டன. ஆனால் என்னைச் சுற்றியுள்ள மனிதர்களின் மிதமிஞ்சிய அன்பாலும் உறுதியாலும், அவற்றைக் கடந்துவந்து விட்டோம். கடினமான சூழலில்தான் மனிதர்களின் பலமும், தைரியமும், நோக்கத்தை நிறைவேற்றும் துடிப்பும், அனைத்திற்கும் மேலாக, அவர்களின் அன்பும் வெளிப்படும். அன்றாட வாழ்வின் சாதாரண சூழ்நிலைகளில் இவை அந்த அளவுக்கு வெளிப்படுவதில்லை.

'இன்னர் வே' போன்றதொரு நிகழ்ச்சி முதல்முறையாக டென்னிஸியில் நாளை துவங்க உள்ளது. இங்குள்ள ஈஷா மையம், வரும் ஆண்டுகளில் நிகழ உள்ள பல நிகழ்ச்சிகளுக்காக தயாராகிக் கொண்டிருக்கிறது. அடுத்த வார இறுதியில், சான் ஃபிரான்சிஸ்கோவில் ஒரு மெகா இன்னர் இன்சினியரிங் வகுப்பும் நிகழ உள்ளது. அமெரிக்கத் தன்னார்வத் தொண்டர்கள், இந்திய ஈஷா அன்பர்களுக்கு ஈடாக செயல்புரிவதற்கு உறுதியுடன் இருக்கிறார்கள். வித்தியாசமான செயல்நிலைகளின் துவக்கமாக இது இருக்கக்கூடும். இதுவரை செய்திராத புதிய அணுகுமுறைகளுக்கு நம்மை நாம் தயார்ப்படுத்திக் கொண்டு செயல்படுவது, மிகுந்த சவாலும் ஆனந்தமும் நிறைந்ததாக உள்ளது.

டென்னிஸி மையத்தில் மலையும் காடுகளும் கொண்ட 1300 ஏக்கர் இடத்தில், நடைப்பயிற்சிக்கான தடங்கள் நிறைய உள்ளன. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு எனக்கு இங்கு சைக்கிள் ஓட்டும் வாய்ப்பும் கிடைத்தது. இந்தியாவிலிருந்து ஒருவர் இங்கு எனக்கு மலையில் ஓட்டக்கூடிய சைக்கிளை பரிசளித்துள்ளார். மலையின்மேல் இதை ஓட்டிச் செல்லும் போது, நுரையீரலே வாய்க்கு வந்துவிடும் போல் உள்ளது. நான் தென்னிந்தியாவில் நிறைய சைக்கிள் ஓட்டியிருக்கிறேன். நான் எனது 17 வயதில் தென்னிந்தியா முழுக்க சைக்கிளில் சுற்றியிருக்கிறேன்; மாஸ்கோ வரைகூட செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அது பாதுகாப்பற்றது என்று என் பெற்றோர் கருதியதால், அத்திட்டம் கைவிடப்பட்டது.

இப்போது மீண்டும் சைக்கிள் ஓட்டும்போது, வயதாவது என்றால் என்ன என்று தெரிகிறது. கைலாஷ் மலையேற்றத்தின் போதும் இதைக் கொஞ்சம் சோதித்துக் கொண்டேன். ஆனால் சைக்கிள் ஓட்டுவது முற்றிலும் வேறுவிதமான பயிற்சி. வாகன விபத்து என்றால் வாகனம் நம் மேல் ஏறிக் கொல்லவேண்டும் என்று அவசியம் இல்லை. எப்போதும் மோட்டார் வாகனத்தை ஓட்டிக் கொண்டு, உடல் முயற்சியின்றி அங்குமிங்கும் செல்வதுகூட, மெதுவாக நம் ஜீவனை வடியச்செய்துவிடுகிறது; இந்த பூமியையும் ஜீவனற்றதாகச் செய்கிறது. ஒரு சைக்கிளை ஓட்டிப்பாருங்கள்! அல்லது மலையேற்றம் செய்து பாருங்கள்! அப்போதுதான் உறுதியுடன் வாழ்வது என்றால் என்ன என்று தெரியும். அதிலும், நீங்கள் ஒருமுறை திபெத்தில் சைக்கிள் பயணம் செய்து பார்க்கவேண்டும்... நீங்கள் அதற்குத் தயாரா?

Love & Grace