சென்னையில் ஈஷா யோக மையத்தால் நடத்தப்பட்ட உலக யோகா தினக் கொண்டாட்டத்தில் பல்லாயிரம் பேர் பங்கேற்றனர். அந்நிகழ்ச்சி பற்றிய ஒரு தொகுப்பு இங்கே..

மாண்புமிகு மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு. வெங்கய்யா நாயுடு அவர்கள் தலைமையேற்க சென்னையில் உலக யோகா தினக் கொண்டாட்டங்கள் ஈஷா யோக மையத்தால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஈஷா அறக்கட்டளை விடுத்த அழைப்பை ஏற்று சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்த விழாவிற்கு தலைமையேற்று நடத்த வந்திருந்த திரு. வெங்கய்யா நாயுடு அவர்கள், "ஈஷா அறக்கட்டளையிடமிருந்து இந்த அழைப்பு வந்தவுடன் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டேன்.

பல்லாயிரம் ஆண்டுகளாக நம்முடைய சாதுக்கள், குருமார்கள் சொல்லிக் கொடுத்து வந்தததை இன்று சத்குரு அவர்களும் அனைவருக்கும் வழங்கி வருகிறார். சத்குருவிற்கு என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள். 177 நாடுகள் இந்த உலக யோகா தினத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. யோகா உடலுக்கும், மனதிற்கும் சிறந்த பயிற்சி. உடலிலும் மனதிலும் யோகாவினால் ஒழுக்கம் ஏற்படுகிறது. இன்று அரசு பல இடங்களில் யோகா தினத்தை கொண்டாடி வருகிறது. இன்று, இங்கு சென்னையில் நான் கலந்துகொள்வது அரசு நிகழ்ச்சியல்ல, ஈஷா சிறப்பாக கொண்டாடும் உலக யோகா தினம். சத்குரு அவர்கள் மக்களுக்கு சொல்லித் தரும் விதம் என்னை இங்கு வரவழைத்திருக்கிறது. எனக்கும் ஆர்எஸ்எஸ் மூலமாக மிக முன்னமே யோகா கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. நான் இத்தனை பயணம் செய்தாலும், பல்வேறு மக்களுடன் உண்டாலும், உறுதுணையாக இருப்பது யோகாதான்," என்றார்.

திரு. வெங்கய்யா நாயுடு அவர்களைத் தொடர்ந்து உலக யோகா தின சிறப்பு உரையாற்றிய ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு அவர்கள், "இன்று இந்தியா ஊட்டச்சத்து குறைபாடு மிகுந்த ஒரு தேசமாக உள்ளது. ஏற்கனவே, நோய்கள் பல பெருகி வருகின்றன. தமிழகத்தில் 40 சதவிகித மக்கள் நீரிழிவு நோயாளிகளாய் மாறிவிடுவர் என்று ஒரு கணிப்பு சொல்கிறது. பொருளாதார முன்னேற்றம் நிகழ்ந்தால் இந்த விகிதம் இன்னும் பெருகும். பொருளாதார வளம் பெருக பெருக மக்கள் மது, போதைப் பொருட்களை நாடுவது அதிகரித்துக் கொண்டுள்ளது. இந்த உலக யோகா தினத்தை நாம் கொண்டாட அடிப்படையான காரணம், ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய ஆனந்தம், ஆரோக்கியம் ஆகியவற்றை தனது கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதால்தான்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஒரு தேசம் நன்றாய் இருக்க, அதன் மக்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பது மிக அவசியம். பொருளாதார ஜாம்பவான் என கருதப்படும் அமெரிக்காவில், ஊட்டச்சத்து என்பது நிறைவாய் அனைவருக்கும் கிடைக்கிறது, அத்துடன் நோய் விகிதமும் அங்கு அதிகமாய் உள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவுடைய ஆரோக்கியத்திற்கான பட்ஜெட் 3 ட்ரிலியன் டாலர், ஆனால் மொத்த இந்திய நாட்டுடைய பட்ஜெட்டே 2 ட்ரிலியன் டாலர் தான். ஆனால், அவர்களுடைய மக்கள் தொகையோ நம்மில் நான்கில் ஒரு பகுதி மட்டுமே. இதனால், யோகா இந்நேரத்தின் அவசிய தேவையாய் இருக்கிறது. யோகா மனித நல்வாழ்விற்கான கருவிகளை வழங்குகிறது. வெளியே நீங்கள் செய்யும் செயல்கள் உண்மையான நல்வாழ்வினை வழங்காது. உள்முகமாய் செல்வதே பரிபூரணமான நல்வாழ்வை மனிதருக்கு வழங்க முடியும்.

உலக யோகா தினத்தை முன்னிட்டு ஈஷா யோகா மையத்தை சேர்ந்த ஆசிரியர்கள், தன்னார்வத் தொண்டர்கள் மூலம் உலகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் யோக வகுப்புகள் நடத்தப்பட்டன. யோகாவினை வழங்குவதன் மூலம் உங்களுக்கு நல்வாழ்வினை நம்மால் வழங்க முடியும்.

ஜுன் 21ம் தேதி, இன்று கதிர் திருப்பம் (சங்கிராந்தி) நடைபெறும் தினம். இந்த முக்கிய நாள் உலக யோகா தினமாய் அறிவிக்கப்பட்டுள்ளது சிறப்பு. கதிர் திருப்பத்தன்று, சூரியன் உத்தராயணத்திலிருந்து தட்சிணாயணத்திற்கு மாறுகிறது. இதனை யோக பாரம்பரியத்தில் சாதனா பாதை என அழைக்கிறோம். ஒவ்வொரு யோகியும் கதிர்திருப்பத்தன்றும் தன் உள்நிலையில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்படுத்திக் கொள்கிறார். 15,000 வருடங்களுக்கு முன் ஒரு குரு பௌர்ணமி தினத்தில் ஆதியோகி தன்னைச் சுற்றியிருந்த அந்த சப்தரிஷிகளுக்கு அருள் வழங்கினார். ஆதியோகியாய் இருந்த அவர், ஆதிகுரு ஆனார்.

கடந்த ஒரு மாதமாக பல லட்சம் மக்களுக்கு நேரடியாகவும், சில கோடி பேருக்கு இணையம் மூலமாகவும் உப-யோகா என்னும் யோக முறை ஈஷா யோக மையத்தால் சொல்லிக் கொடுக்கப்பட்டது. இன்று, இங்கு கூடியுள்ள இத்தனை பேரும் உப-யோகா கற்றுள்ளீர்கள். இங்கு கற்றுக்கொண்டவர்கள் அடுத்த 6 மாதத்தில் இன்னும் 100 பேருக்கு சொல்லிக் கொடுங்கள். மனித நல்வாழ்விற்காக நாம் வழங்கக்கூடிய மகத்தான கருவி யோகா. இதனை அனைவருக்கும் வழங்குவது நம் பொறுப்பு.

மேலும், அடுத்த சில வருடங்களில் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு ஈஷா மையம், யோகாவினை சொல்லிக்கொடுக்கும்," என்றார்.

மேலும், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 25,000 பங்கேற்பாளர்களுக்கும் உப-யோகா பயிற்சி ஈஷா ஆசிரியர்களால் சொல்லிக் கொடுக்கப்பட்டது.

சிறப்பு விருந்தினர்கள்

சென்னையில் நடந்த விழாவில், பாஜகவின் மாநிலத் தலைவர் திருமதி. தமிழிசை சௌந்தர்ராஜன், மற்றும் பல முக்கிய தலைவர்களும் கட்சி நிர்வாகிகளும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

ஜுன் 21ம் தேதி, உலக யோகா தினத்தை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் ஈஷா யோகா மையம் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

புதுச்சேரியில் நடந்த உலக யோகா தினக் கொண்டாட்டங்களில் மாண்புமிகு புதுவை முதல்வர் திரு. ரங்கசாமி அவர்கள் தலைமையேற்று நடத்தினார்கள். இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

நாகர்கோவிலில் - மாண்புமிகு நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு. ஸ்ரீபொன் இராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையேற்று நடத்திய விழாவிலும் பல்லாயிக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, ஜூன் 20ம் தேதியன்று, பெங்களூரூவில் ஈஷா யோக மையம் நடத்திய உலக யோகா தினத்தை மாண்புமிகு கர்நாடக முதல்வர் திரு. சித்தராமைய்யா அவர்கள் தொடங்கி வைத்து சிறப்பு செய்தார்கள்.