உறவுநிலைகளில் உண்டாகும் சிக்கல்கள் தற்போது அதிகரித்துவரும் சூழலில், சிலர் உறவுகளை நிர்வகிக்க நினைப்பதையும் பார்க்கமுடிகிறது. ஆனால், அது ஒருபோதும் வேலை செய்வதில்லை! அற்புத உறவுகள் அமையவேண்டும் என விருப்பமுள்ளவர்கள் செய்ய வேண்டிய ஏற்பாடு என்ன என்பதை இப்பதிவு உணர்த்துகிறது!

சத்குரு:

மனித உறவுகள் வேடிக்கைக்குரிய விஷயமாகவே இருக்கின்றன. மனிதர்களுக்கு அவர்கள் உறவுமுறை அனைத்துமே மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. பெரும்பாலான மக்களால் உறவு என்பது இல்லாமல் வாழ முடியாது. ஆனால், அதேநேரத்தில், பெரும்பாலான உறவுநிலைகள், ஆனந்தத்தைவிட துன்பத்தையும், விடுதலையை விட சிக்கலையும், அன்பை விட எரிச்சலையுமே அதிகமாக ஏற்படுத்துகின்றன. ஒருசில ஷணங்கள் ஒன்றுபட்டு இருப்பதற்காக, மக்கள், தங்களது ஒட்டுமொத்த வாழ்க்கையையே தியாகம் செய்ய முழு விருப்பத்துடன் இருக்கின்றனர். அந்த சில ஷணங்கள் அவர்களுக்கு அவ்வளவு மதிப்புமிக்கதாக இருக்கிறது.

அடுத்தவரை நிர்வாகம் செய்ய முயற்சிக்க வேண்டாம். அவரை உங்களோடு இணைத்துக் கொள்வது எப்படி என்று மட்டும் பாருங்கள்.

பல்வேறு உறவுமுறைகள் இருக்கின்றன. நாம் எல்லோருமே கொண்டிருக்கும் முதலாவது உறவு தாயிடமிருந்து துவங்குகிறது. கருப்பையின் சுகம், தாய்ப்பாலின் ஊட்டச்சத்து, அன்போடும், அக்கறையோடும் கவனித்துக்கொள்வது எல்லாமே அதனோடு வருகிறது. அடுத்த உறவுமுறை, ஆதரவு, பாதுகாப்பு மற்றும் வழிகாட்டியாக இருக்கும் தந்தையாக இருக்கலாம். பின்னர், கற்றுக்கொள்வது மற்றும் பகிர்ந்துகொள்வதற்கான உறவுகளாக ஆசிரியர் மற்றும் நண்பர்கள் வருகிறார்கள். பின்னர் கணவன் மனைவியர், காதலர்கள், குழந்தைகள் மற்றும் சமூக கட்டமைப்பைச் சார்ந்த மற்ற உறவுமுறைகள் வருகின்றன.

ஒவ்வொரு உறவிலும் ஏதோ ஒன்றைக் கொடுக்கவும், ஒவ்வொரு உறவிலும் ஏதோ ஒன்றைப் பெறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. உணர்வுரீதியான ஒரு தேவை இருப்பதாலும், இந்த உறவுகளின் மூலம் அவை ஓரளவிற்கு நிறைவேற்றப்படுவதாலுமே ஒருவரால் தொடர்ந்து அந்த உறவுகளில் இருக்க முடிகிறது. தங்களது உறவு நிலைகளைக் காரணஅறிவு ரீதியாக ஆராய்ந்து பார்க்கும் மக்களால் எந்த உறவிலும் ஒருபோதும் நிலைத்திருக்க முடியாது. “இந்த உறவுமுறை உண்மையாகவே தேவையானதுதானா?” என்று நீங்கள் காரணஅறிவோடு ஒவ்வொரு உறவுமுறையையும் பரிசோதனைக்கு உட்படுத்தினால், எந்த ஒரு உறவுநிலையும், உங்கள் பரிசோதனையில் தேறாது. உறவுகளால், உங்களுக்குள் எங்கோ ஒருவிதமான நிறைவு ஏற்படுகிறது. உறவுமுறைகள் மூலம் உங்களுக்கு ஆனந்தம், பகிர்தல், ஒருமை, ஆதரவு, பாதுகாப்பு ஆகியவை பல கணங்களில் ஏற்படுகின்றன. ஆனால் இவை எல்லாவற்றையும்விட தனிமையின் அச்சுறுத்தலை போக்குவதற்காகவாவது உறவுமுறை தேவைப்படுகிறது.

எப்போதும் அன்பு மட்டுமே உறவுநிலைகளை உருவாக்குவதில்லை. திருமண உறவில் மட்டுமல்லாமல், மற்ற உறவுநிலைகளில் கூட மக்கள் இணைந்திருப்பதற்கு, மிகப்பெரிய காரணம் தனிமை தரும் பயம்தான். ஆயினும், இதைத்தவிர, உணர்வு ரீதியான நிறைவு இருப்பதாலும் கூட மக்கள் உறவுகளைத் தொடர்கின்றனர். இது ஏதோ ஒரு குறிப்பிட்ட உறவுநிலையில் மட்டுமல்ல, மற்ற எல்லாவிதமான உறவுநிலைகளிலும் இதுதான் நிகழ்கிறது.

ஒருநாள், ஒரு கணவனும், மனைவியும் கார் ஓட்டியபடியே ஒரு காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கிடையே தீவிரமான கருத்து வேறுபாடு ஏற்பட்டது. வீட்டில் விவாதம் வந்தால் விவாதம் சூடுபிடிப்பதற்கு முன் ஏதோ ஒரு காரணம் கூறி எழுந்து போய்விடலாம். ஆனால் கார் ஓட்டும்போது, விவாதம் ஏற்பட்டால், நீங்கள் அந்த இடத்திலிருந்து எழுந்து செல்லமுடியாது. ஆகவே விவாதத்தில் ஒரு கட்டத்திற்குப் பின்னர், இந்த கணவனும், மனைவியும் ஒருவரோடு ஒருவர் ஏதும் பேசிக்கொள்ளாமல் மௌனம் காத்தனர். பயணத்தின் போக்கில் ஒரு பண்ணையை அவர்கள் கடக்க நேர்ந்தபோது, அங்கிருந்த கழுதைகள், பன்றிகள் மற்றும் ஆடுகளின் மந்தையை அந்த மனைவி சுவாரஸ்யமாக கவனித்துக் கொண்டிருந்தார். இதைக் கண்ட கணவன், “உன்னுடைய உறவுக்காரர்களாக இருக்க வேண்டும், அல்லவா?” என்றான்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மனைவி சொன்னாள், “ஆமாம், என் புகுந்த வீட்டு உறவுகள்.”

எப்போதும் அன்பு மட்டுமே உறவுநிலைகளை உருவாக்குவதில்லை. திருமண உறவில் மட்டுமல்லாமல், மற்ற உறவுநிலைகளில் கூட மக்கள் இணைந்திருப்பதற்கு, மிகப்பெரிய காரணம் தனிமை தரும் பயம்தான்.

இதுபோன்ற உரையாடல்கள் ஒருவரை ஒருவர் வெறுக்கும் உறவுகளிடையே நிகழ்வது கிடையாது. ஒருவரையொருவர் நேசிக்கும் மக்களிடையேதான் இப்படிப்பட்ட விஷயங்கள் நிகழ்கின்றன. இதுதான் காதல் உறவு என்பது. அவர்கள் ஒருவரையொருவர் வெறுத்திருந்தால், உறவை முறித்துவிடும்படியாக, உண்மையிலேயே தர்மசங்கடமான ஏதோ ஒன்றைச் செய்வார்கள். அவர்கள் ஒருவரையொருவர் நேசிப்பதுதான் இங்கே பிரச்சனை. ஆனால் அது இப்படித்தான் வெளிப்பாடு காண்கிறது. ஏனென்றால் தங்களது அற்பத்தனத்தை ஒருவருக்கொருவர் ஒரு வரம்புக்குள் உட்பட்டுத்தான் அவர்களால் வெளிப்படுத்த முடியும்.

ஒரு பெண்மணி கடைவீதிக்குச் சென்று, தனக்கு தேவையானவற்றை வாங்கிவிட்டு, பணம் கொடுப்பதற்காகத் தனது கைப்பையைத் திறந்தார். எப்போதும் போலவே, அவருக்கு அவசியமானவையெல்லாம் கைப்பையின் ஏதோ ஒரு மூலைக்குச் சென்றிருந்தது. ஆகவே, அவர் அதிலுள்ள எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக வெளியில் எடுத்து வைத்தவாறு தனக்கு வேண்டியதைத் தேடிக் கொண்டிருந்தபோது, ஒரு தொலைக்காட்சிப் பெட்டியின் ரிமோட் (remote) கருவியும் வெளியில் வர நேர்ந்தது.

இதைப் பார்த்த விற்பனையாளர், “தொலைக்காட்சியின் ரிமோட்டை எப்போதும் உங்களுடன் வைத்திருப்பீர்களா?” என்று கேட்டார்.

அந்தப் பெண்மணி, “இல்லை, எனது கணவரை என்னுடன் கடைக்கு வருமாறு அழைத்தேன், அவர் மறுத்தார். எனவே என்னால் ஒரு வரம்பிற்குட்பட்டு இதுதான் செய்ய முடிந்தது” என்றார்.

நீங்கள் தொலைக்காட்சிப் பெட்டியை உடைத்தால் அது வரம்பு மீறிய செயல். எனவே உங்களால் செய்யக்கூடிய அற்பமான விஷயம், ரிமோட்டை அங்கிருந்து மறைத்துவிட்டு பிறகு மறுபடியும் அதனிடத்தில் வைத்துவிடுவது.

உங்களுடைய எதிரி உங்களுடைய உயிரை எடுத்தால் அதில் ஏதோ அர்த்தம் இருக்கிறது, ஆனால் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கும் மக்களே ஒருவர் உயிரை மற்றவர் எடுக்கிறார்கள்.

ஒரு நபராக, நீங்கள் ஒரு உடலைப் பெற்றிருக்கிறீர்கள். நீங்கள் பெற்ற அனுபவம் மற்றும் தகவல்களால், நீங்கள் ஒரு குறிப்பிட்ட சுபாவம் பெற்றிருக்கிறீர்கள். மொத்தத்தில் ஒரு குறிப்பிட்ட மனம், ஒருவிதமான உடல், ஒருவிதமான உணர்ச்சி, குறிப்பிட்ட விதங்களில் விருப்பு, வெறுப்புகள், குறிப்பிட்ட விதங்களிலான கருத்துக்கள் இவை எல்லாவற்றின் ஒட்டுமொத்த சேர்க்கையாக இருப்பதுதான் ‘நீங்கள்’. உங்களுடன் உறவுநிலையில் இருக்கும் ‘மற்றொருவர்’ - அவரும் இதேபோன்ற கலவையான அம்சங்களுடன்தான் இருக்கிறார். ஆனால் வேறுவகையில் இருக்கிறார். இருவருக்குள்ளும் ஒரே கலவைதான். ஆனால் இரண்டும் பொருந்துவதில்லை. திடீரென்று அவை பொருந்துவதாகத் தோன்றும். அப்போது எல்லாமே - உடல்நிலை, மனநிலை, உணர்ச்சி அனைத்தும் - அழகாக இருக்கும், ஒத்திசைவாக இருக்கும். ஆனால் அடுத்த கணம் நீங்கள் எவ்விதமாக முயற்சித்தாலும், அப்போது அது பொருந்துவதில்லை.

ஒவ்வொரு உறவுநிலையிலும் உள்ள இரண்டு நபர்கள் - அவர்கள் நண்பர்களாக இருக்கலாம், பெற்றோராக இருக்கலாம், கணவன் மனைவியாக இருக்கலாம் அல்லது வேறு எந்த உறவாகவும் இருக்கலாம் - செய்வதற்கு முயற்சிப்பதெல்லாம் இதுதான்.. ஒரு உடல், ஒரு மனம் மற்றும் ஒரு உணர்ச்சி அமைப்பு எப்படியாவது இன்னொரு உடல், இன்னொரு மனம் மற்றும் இன்னொரு உணர்ச்சி அமைப்புடன் பொருந்திக் கொள்வதற்கு முயற்சிக்கிறது. ஆனால் இந்த இரண்டு உடல்கள், இரண்டு மனங்கள் மற்றும் இரண்டு உணர்ச்சி நிலைகள், 24 மணிநேரத்தின் ஒவ்வொரு கணத்திலும் கச்சிதமாகப் பொருந்தி இருக்கவே முடியாது.

யாரோ ஒருவருடன் பொருந்தமுடியாத பிரச்சனை உங்களுக்கு மட்டும்தான் இருக்கிறது என்று நினைக்காதீர்கள். ஒவ்வொரு உடலும் தனித்துவம் மிக்கது, ஒவ்வொரு மனமும் தனித்துவமானது, ஒவ்வொரு உணர்ச்சி நிலையின் அமைப்பும் தனித்தன்மையானது. அவைகள் வேறொன்றுடன் ஒருபோதும் கச்சிதமாகப் பொருந்த முடியாது. அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு இருப்பதாக யாரேனும் எண்ணினால், அவர் தனது வாழ்க்கையை வீணடித்து விடுவார். அது பொருந்தி நிற்பது குறிப்பிட்ட கணங்களுக்கு மட்டும்தான், மற்ற தருணங்களில் அது பொருந்துவதில்லை என்பதை அவர் புரிந்துகொண்டால், அதன்பிறகு அவர்கள் தங்களது உறவை ஒரு குறிப்பிட்டவிதமாக, சுமூகமாக நடத்திக் கொள்வார்கள்.

மக்கள், யதார்த்தமாக இல்லாமல் அதிகமான கற்பனையிலேயே உறவுமுறைகளை உருவாக்கிக்கொள்ள முயற்சிக்கிறார்கள். இப்போதைக்கு கற்பனையாக இருப்பது ஒரு நல்ல நிலையாக இருக்கலாம், ஆனால் நாளையே அது ஒரு அசிங்கமான பயணமாக இருக்கும். எனவே உங்களுடைய உறவுமுறைகளை நிர்வகிக்க முயற்சிக்காமல் - உண்மையிலேயே அது சிரமம்தான் - மற்றவரை உங்களின் ஒரு பகுதியாக இணைத்துக்கொள்ள நீங்கள் கற்றுக்கொண்டால், உங்களுடைய வாழ்க்கை சந்தோஷத்தின் தேடுதலாக இல்லாமல் ஆனந்தத்தின் வெளிப்பாடாக இருக்கும்.

அப்போது, உறவு நிலைகளில் பல்வேறு நிறங்கள் இருப்பதையும், ஆனால் ஒவ்வொரு நிறமுமே அனுபவித்து மகிழக்கூடியதாக இருப்பதையும் நீங்கள் காண்பீர்கள். இப்படி இணைத்துக் கொள்ளும்போது, அங்கு வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அது சரிதான். ஆனால், புத்திசாலித்தனமான நிர்வாகம் என்று நினைத்து உங்களுடைய உறவுகளை நீங்கள் நிர்வகிக்க முயற்சித்தால், அது உங்களுக்கு நரகத்தைத்தான் அளிக்கும். பூமியின்மீது வலம்வரும் அதிபுத்திசாலிகள் அல்லது தங்களை உண்மையான புத்திசாலிகளாக நினைக்கிற அந்த மனிதர்கள் எப்போதும் மிக மோசமான உறவு நிலைகளைத்தான் கொண்டிருக்கின்றனர். இப்படித்தான் நிச்சயம் நிகழ்கிறது என்று இல்லாவிட்டாலும் பொதுவாக அப்படித்தான் நிகழ்கிறது. மிக எளிமையான மனிதர்களாக இருப்பவர்களுக்கு அற்புதமான உறவுநிலைகள் வசப்படுகின்றன. ஏனெனில் அது நிர்வாகம் தொடர்பானது அல்ல.

நீங்கள் மலராத ஒரு மொட்டாக இருந்துகொண்டு, தேனீக்களை அழைத்தால், அவைகள் வராது. நீங்கள் மலர்ச்சி அடைந்தால், அழைப்பு விடுக்க வேண்டிய தேவையே இல்லை, அவைகள் எப்படியும் தேடி வரும்.

யாருமே நிர்வகிக்கப்பட விரும்புவதில்லை. நீங்கள் யாரையோ நிர்வகிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதை அவர்கள் உணர்ந்துவிட்டால், பிறகு அவர்கள் உங்களுக்கு நரகத்தையே கொடுப்பார்கள். பல வழிகளில் உங்களுடைய வாழ்க்கையை அவர்கள் துன்பமாக ஆக்கிவிடுவார்கள். இந்த உலகில் பெரும்பாலான மக்களுக்கு அவர்களுடைய எதிரிகள் துன்பம் தருவதில்லை, அவர்களுடைய அன்புக்குரியவர்கள்தான் உயிரை எடுக்கின்றனர்.

உங்களுடைய எதிரி உங்களுடைய உயிரை எடுத்தால் அதில் ஏதோ அர்த்தம் இருக்கிறது, ஆனால் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கும் மக்களே ஒருவர் உயிரை மற்றவர் எடுக்கிறார்கள். இது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. தலைமுறை தலைமுறையாக மக்கள் இவ்வாறே அனுபவித்து வருகிறார்கள். ஏனென்றால் மற்றவர் எப்போதும் தன்னால் நிர்வகிக்கப்பட வேண்டும் என்றே மக்கள் நம்புகிறார்கள். மற்றவரை நிர்வகிக்க முயற்சிக்க வேண்டாம். அவரை எவ்வாறு இணைத்துக்கொள்ள வேண்டும் என்று மட்டுமே பாருங்கள். அப்போது அவர்கள் தங்களுக்குள் நிகழ்த்திக் கொண்டிருக்கும் குளறுபடிகள் என்ன என்பது உங்களுக்குப் புரியாமல் போகலாம். இருப்பினும் அது சரியே.

உங்களுக்குள் எங்கோ முழுமைபெறாத உணர்வு இருப்பதால்தான், உங்களுக்கு உறவு என்ற ஒரு விஷயம் தேவையாக உள்ளது. இந்த முழுமையற்ற உணர்விலிருந்து நீங்கள் விடுபட்டால், மற்றவரை நாம் எதுவும் நிர்வகிக்க வேண்டியதில்லை என்ற அந்த நிலையை நீங்கள் அடைந்துவிட்டால், அதன்பிறகு, மற்ற அனைவரும் உங்களுடன் இருப்பதற்கு விரும்புவார்கள். ஏனென்றால் உங்கள் தேவை போய்விட்டது. இதுதான் வாழ்க்கை பற்றிய வேடிக்கையான விஷயம். உங்களுக்கு ஒரு தேவை இருக்கும்பொழுது, எவரும் உங்களுடன் இருப்பதற்கு விரும்புவதில்லை. உங்களது தேவை விலகிவிடும்பொழுது, ஒவ்வொருவரும் உங்களுடனிருக்க விரும்புகின்றனர்.

பூ மலர்ந்த போதுதான், தேனீக்கள் நாடிவரும், மலராத மொட்டாக இருந்தால், தேனீக்கள் நாடி வராது. நீங்கள் மலராத ஒரு மொட்டாக இருந்துகொண்டு, தேனீக்களை அழைத்தால், அவைகள் வராது. நீங்கள் மலர்ச்சி அடைந்தால், அழைப்பு விடுக்க வேண்டிய தேவையே இல்லை, அவைகள் எப்படியும் தேடி வரும்.

ஆகவே, உங்களுக்கு அற்புதமான உறவுகள் வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், உறவுநிலையை ‘நிர்வகிக்க’ முயற்சி செய்யாதீர்கள். நீங்கள் தற்போது இருக்கும் நிலையிலிருந்து உடல்நிலையிலும், மனநிலையிலும், உணர்ச்சி நிலையிலும், சக்தி நிலையிலும் உங்களை மேம்படுத்திக் கொள்வது எப்படி என்று பாருங்கள். நீங்கள் மிக உயரிய நிலைக்கு உங்களை மேம்படுத்திக் கொண்டால், ஒவ்வொருவரும் உங்களுடன் உறவுநிலையை ஏற்படுத்திக்கொள்ள விரும்புவார்கள். நீங்கள் உங்களை மேம்படுத்திக் கொள்ளாமல், ஒவ்வொன்றையும் நிர்வகிக்க மட்டும் முயற்சி செய்தால், அது மிகவும் மனஅழுத்தம் தருவதாகத்தான் இருக்கும். ஒரு மனிதர் தனது இருத்தலின் தன்மையை எப்படி மேம்படுத்துவது என்பதில் எப்போதும் கவனம் செலுத்த வேண்டும். அப்போது மற்ற அனைத்தும் இயல்பாகவே நிர்வகிக்கப்படுகிறது. நீங்கள் யார்? என்பது மேம்படும்போதுதான், உங்களது தொழிலாக இருந்தாலும், உங்களது உறவுநிலையாக இருந்தாலும் அல்லது உங்களுடைய வாழ்க்கையின் எந்த அம்சமாக இருந்தாலும் தனக்குரிய உச்சபட்ச சிறப்புடன் திகழும்.