'வெயில்...' இந்தப் பேரக் கேட்டாலே பலருக்கு ச்சும்மா சூடாகுது! வெயில்காலம் என்றால் எப்போதும் கொடுமைக் காலமாகவே சித்தரிக்கப்பட்டுவருகிறது. ஏன் இந்த வெயில் இப்படிப் படுத்துகிறது... கோடைக்காலம் மனிதனுக்கு உகந்த காலம் இல்லையா? இங்கே கோடை காலம் பற்றிய ஒரு அலசல்...


"அப்பப்பப்பா... என்னா வெய்யிலு, இந்தப் பொள பொளக்குது..." என்று தன் தலைப்பாகைத் துண்டை உதறியபடி, அந்தக் கூரை செட்டு டீக்கடைக்குள் நுழைந்த கதர் சட்டைப் பெரியவரைப் பார்த்தால், தன் வாழ் நாளில் பல கோடை காலங்களைக் கடந்திருப்பது தெரிந்தது.

இந்தக் கோடைகாலம் பலருக்கு வேதனை தந்தாலும், சிலருக்கு வாழ்வும் அளிக்கிறது. பால் ஐஸ், கப் ஐஸ், சேமியா ஐஸ்... என ஐஸ் வண்டிக்காரரின் சத்தம் தூரத்தில் கேட்கிறது.

ஓ! அவரின் முதுமை காரணமாக அவரால் வெயிலைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை என நினைத்தபோது, கொளுத்தும் வெயிலில் 'க்ரொக்கொடைல்' ஜீன்ஸ் அணிந்திருந்த கல்லூரி மாணவர் சிலர் வெயிலின் கடுமையால் கிரங்கிய நிலையில் உள்ளே நுழைந்தனர்.

"அண்ணே..! நாலு டீ, நாலு கிங்ஸ் சிகரெட்" என எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றிக் கொள்ளும்விதமாக டீக்கடைக்காரரிடம் ஆர்டர் செய்தனர்.

அந்தப் பெரியவர் மண்பானை மோரை ருசித்துக் குடித்துக் கொண்டிருக்கையில், அவரது வெயில் கால அனுபவம் பற்றிக் கேட்டு அப்படியே பேச்சுக் கொடுத்தோம்.

"அந்தக் காலத்துல வெயில் அடிக்காம இல்ல, நல்லாத்தான் அடிச்சது. ஆனா இப்ப மாறி வண்டி வாகனம் அதிகமில்ல, நெறய மரங்க இருந்துச்சு, வெய்யக் காலமுன்னா நாங்க கம்மங் கூழு, கேப்பக் கூழு, சோளக் கஞ்சின்னு ஒடம்புக்குக் குளிர்ச்சியானதா சாப்புட்டுக்குவோம். ஆனா இப்பப் பாருங்க" என அந்த இளைஞர்கள் பக்கம் திரும்ப, அங்கு ஒரே புகைமண்டலம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இந்தக் கோடைகாலம் பலருக்கு வேதனை தந்தாலும், சிலருக்கு வாழ்வும் அளிக்கிறது.

பால் ஐஸ், கப் ஐஸ், சேமியா ஐஸ்... என ஐஸ் வண்டிக்காரரின் சத்தம் தூரத்தில் கேட்கிறது. ரோட்டோரக் கம்மங்கூழ் கடைகள், மரத்தடி இளநீர், தர்பூசணிக் கடைகள், சூப்பர் மார்க்கெட்டின் வெளியே பழச்சாறுக் கடையாய் மாறியிருக்கும் பானிப்பூரிக்கடை, "ரெண்டு தட்டு பத்து ரூவாதாம்மா... எனக் கூவியபடி, ஜன்னலோர பயணிகளின் முகத்தருகே நீட்டப்படும் சாத்தூர் வெள்ளரிக்காய் தட்டுகள் என இந்த வெயிலும் சிலருக்கு நல்லதாய் அமைகிறது.

"சரி...! வெயில்காலம்னா சூடு, வறட்சி இதெல்லாம் தெரிஞ்சதுதான"ன்னு நீங்க சொல்றது கேக்குது.

ஆனா இந்த வெயில்காலம் சிலருக்கு மட்டும் ஜாலியான வசந்தகாலமா இருக்கும். அதாங்க ஸ்கூல் பசங்க...! ஸ்கூல் லீவு விட்டாச்சு, இனி ஒரே அமர்க்களம்தான்.

அவங்க என்ன செய்வாங்க, பாவம்...! தினம் தினம் பேரிடராய் வீட்டுப்பாடம், அறிவியல், சமூக அறிவியல், பற்றாக்குறைக்கு எப்பவும் இம்சை பண்ணும் கணக்கோடு சேர்த்து மொத்தம் ஐந்து பாடங்கள். இல்லை!இல்லை! ஐந்து பூதங்கள். இப்படி நொந்து நூடுல்ஸ் ஆகி, மனப்பாடம் செய்தவற்றை பரீட்சைப் பேப்பரில் கொட்டித் தீர்த்த பின், யாருக்குத்தான் சந்தோஷத்தில் குதிக்காமல் இருக்க முடியும்.

சரி, இப்போது இந்த கோடை விடுமுறையை எப்படி பயனுள்ள வகையில் செலவழிப்பது?

கோலி, கில்லி, பம்பரம், செதுக்கு முத்து, தீப்பெட்டியின் பின் அட்டையை சேகரித்து, அதை வைத்து ஆடுவது... இதெல்லாம் இந்தக் காலக் குழந்தைகளுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்போதுள்ள குழந்தைகளுக்கு தெரிந்ததெல்லாம், புகழ்பெற்ற சில கார்ட்டூன் சேனல்களும் வீடியோ கேம்களும்தான்.

எப்போதும் டி.வி.'யே கதி என்று கிடக்கும் இந்தக் குழந்தைகளுக்கு எப்படி வழிகாட்டுவது?!

அவர்களிடம் உள்ள தனித் திறமைகளைக் கண்டறிந்து, அதை மேம்படுத்தும் விதமாக சிறப்பு வகுப்புகளுக்கு அனுப்பலாம் (குழந்தைகளின் விருப்பத்தோடு). அறிவைத் தூண்டும் சில கதைப் புத்தகங்களைக் கொடுத்து வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தலாம். ஓடி ஆடி விளையாடுவதன் முக்கியத்துவத்தை உணர்த்தி, மாலை வேளைகளில் அருகிலுள்ள மைதானத்திற்கு அழைத்துச் சென்று விளையாடச் செய்யலாம். விளையாட்டு, நம் உடலையும் மனதையும் ஒருங்கிணைக்கக் கூடிய அற்புதம்.

வெயில்காலத்தில் காற்றின்மூலம் பரவக்கூடிய வைரஸ் நோயான சின்னம்மை வேகமாகப்பரவி வரும் இந்த நேரத்தில், குழந்தைகளின் உணவில் குளிர்ச்சி தரும் உணவு வகைகளைகளான வெள்ளரிக்காய், தர்பூசணி மற்றும் வெள்ளைப் பூசணி, மோர் போன்றவை இருக்கும்படி பார்த்துக்கொள்வது நல்லது.

வெயில்காலத்தில் பூத்துக்குலுங்கும் வேப்பமரங்கள், "யாம் இருக்க பயம் ஏன்" எனச் சொல்வது, நம் காதில் ஏனோ பல சமயங்களில் விழுவதில்லை. வேம்பு, நம் வாசலில் வீற்றிருக்கும் ஃபீஸ் கேட்காத மருத்துவர்.

"வெயிலு உகந்த அம்மன்" என அம்மனைப் பிரதிஷ்டை செய்து வெயிலையே தெய்வமாகக் கும்பிடும் தமிழ்நாட்டில், இந்த வெயில்காலம் ஒரு பெரிய சவாலா என்ன!

எவ்வளவோ சமாளிச்சுட்டோம், இத சமாளிக்க மாட்டோமா...?!

Photo Courtesy: Zach Dischner @ flickr