ஆன்மீகப் பாதையில் இருப்பவர்கள் ஒருவித அவசரகதியில் இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தும் சத்குரு, உடலின் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு உடலை தெய்வீகத்தின் உறைவிடமாக்கும் சாத்தியம் குறித்தும் இதில் எடுத்துரைக்கிறார்!

சத்குரு:

ஒருமுறை மாணவர்கள் சிலர் சமூக நலப் பணிக்காக நிதி திரட்டிக் கொண்டிருந்தனர். வீடு வீடாக நன்கொடை கேட்டுச் சென்றபோது, ஒரு வீட்டில் 88 வயதுப் பெண்மணி இருந்தார். தாங்கள் செய்யத் திட்டமிட்டிருந்த நற்பணியை விளக்கிய மாணவர்கள், நன்கொடை அளிக்கக்கூடிய பல்வேறு முறைகளை விளக்கினர். ‘‘நன்கொடையை ஒரே தவணையில் கொடுத்தாக வேண்டும் என்றில்லை. 3 ஆண்டுகளில் சிறுகச் சிறுகக் கொடுக்கலாம்,’’ என்றனர். மூதாட்டி, ‘‘என் வயதிற்கு, நான் பழுக்காத வாழைப் பழங்களைக் கூட வாங்குவதில்லை. (அத்தனை நாட்கள் உயிருடன் இருப்பதற்கு உத்திரவாதம் இல்லை) நீங்கள் என்னை 3 ஆண்டுகளுக்கு உறுதி எடுக்கச் சொல்கிறீர்களே! வாய்ப்பில்லை’’ என்றார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
ஆன்மீகப்பாதையில் இருப்பவர்கள் இப்படித்தான் எப்போதும் அவசரத்தில் இருக்க வேண்டும். காத்திருக்க முடியாத அவசரத்தில் இருந்தால், அது அதிவிரைவாக நடந்துவிடும். சிறிது ஓய்வெடுக்கலாம் என்று நினைத்தாலோ பற்பல ஜென்மங்கள் தேவைப்படும்.

ஆன்மீகப்பாதையில் இருப்பவர்கள் இப்படித்தான் எப்போதும் அவசரத்தில் இருக்க வேண்டும். காத்திருக்க முடியாத அவசரத்தில் இருந்தால், அது அதிவிரைவாக நடந்துவிடும். சிறிது ஓய்வெடுக்கலாம் என்று நினைத்தாலோ பற்பல ஜென்மங்கள் தேவைப்படும்.

வாழ்வில், நீங்கள் மிகத் தீவிரமாக, பரவசமாக இருந்த தருணங்கள் நிச்சயம் இருக்கும். அதே பரவசமான உணர்வில் நீங்கள் வாழ்க்கை முழுவதும் வாழ முடிந்தால், தினந்தோறும் உங்களை நச்சரிக்கும் சின்னச்சின்ன விஷயங்கள் உங்களைப் பாதிக்காது. இவ்வுலகில் எதுவுமே பிரச்சனையாக இருக்காது.

தெய்வீகத்தைப்போல் செயல்படுதல்

உங்கள் வாழ்க்கையில் இங்கொன்றும் அங்கொன்றுமாக சொல்லிக்கொள்ளும்படியான விஷயங்கள் நடந்துள்ளன. மற்ற நேரத்தில் உடலுக்குத் தேவையான சாதாரண விஷயங்களை மட்டுமே செய்து கொண்டிருக்கிறோம். உடலுக்குத் தெரிந்தது இரண்டே விஷயங்கள்தான். சுய-பாதுகாப்பு, இனவிருத்தி. அதற்கு வேறெதுவும் தெரியாது. அதனால்தான் மனிதர்களுக்கு செல்வமும், பாலுணர்வும் முக்கியமாக இருக்கிறது. இதைத் தாண்டிய வேறெந்தப் பரிமாணத்தையும் அவர்கள் உணர்ந்ததில்லை.

இருப்பினும், இந்த உடலின் சக்தியை மாற்றியமைத்தால் இந்த உடலே தெய்வீகத்தின் உறைவிடமாக ஆகிவிடும். இதுதான் தெய்வ விக்கிரகம் செய்யும் விஞ்ஞானத்தின் அடிப்படை.

இந்த உடலின் சக்தி அமைப்பை மாற்றியமைத்தால், வெறும் சதைப்பிண்டமாக இயங்கும் இந்த உடலே தெய்வீகம் நிறைந்ததாய் ஆகிவிடும். யோக விஞ்ஞானம் இந்நிலையை அடைவதற்கான வழிமுறைகளை வழங்குகிறது. அதைத் தொடர்ந்து செயல்படுத்தி வந்தால், உங்கள் உடல் அதன் கட்டுப்பாடுகளில் இருந்து விடுபடும். சுய-பாதுகாப்பு, இனவிருத்தி என்று உங்கள் உடல் எப்போதும் கட்டுண்டு இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. அது முற்றிலும் வேறொரு பரிமாணத்தில் இயங்க முடியும். அவ்வாறு இயங்கும்போது, உங்கள் உடல் தெய்வீகத்தின் உறைவிடமாக ஆகும்.

தொடர்ந்து செய்தால், உயர்வு நிச்சயம்

உங்கள் உடற்சக்தி தன்னை மாற்றியமைத்துக்கொள்ளத் துவங்கும்போது, சில மாற்றங்கள் நிகழும். மனிதர்களிடம் இருக்கும் பிரச்சனையே, தற்சமயம் இருப்பது அவர்களுக்கு அலுப்பூட்டுவதாக இருக்கும். தங்கள் வாழ்வில் ஏதாவது நடக்காதா என்று எப்போதும் ஏங்குவர். ஆனால் புதிதாக ஏதேனும் நடந்தால், உடனே பயம் தொற்றிக்கொள்ளும். இது ஹாண்ட்-பிரேக் போட்ட நிலையில் காரை ஓட்டுவதற்குச் சமம். காரை ஓட்ட, பிரேக்கை விடுவிக்க வேண்டும், அல்லது காரிலேயே ஏறக்கூடாது.

எப்போதும் "ஆன் - ஆஃப்" (On-Off)என்றிருந்தால் நீங்கள் முன்னேறிச் செல்ல பல ஜென்மங்கள் தேவைப்படலாம். அதனால், 24 மணிநேரமும் தொடர்ந்து ஈடுபாடு தேவை. 24 மணிநேரமும் தொடர்ந்து ஆன்மீகத்தில் இருப்பது என்றால், வேலையை விட்டுவிட வேண்டுமா? குடும்பத்தை விட்டு விலக வேண்டுமா? தேவையில்லை.

செய்யும் செயல் அனைத்தையும் ஆன்மீகச் செயல்முறையாக ஆக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும், பேசுவது, வேலை செய்வது, ஏன் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு மூச்சையும்கூட ஆன்மீக செயல்முறையாக மாற்றிக் கொள்ளுங்கள். இப்படிச் செய்தால் ஒரு சில மாதங்களிலேயே உங்கள் இருப்பில் பெரும் மாற்றம் நிகழும். மனிதர்கள் மட்டுமல்ல, மற்ற உயிர்களும்கூட உங்களைக் கொண்டாடுவார்கள்!