இந்தியாவிலிருந்து மூட்டைக் கட்டிக் கொண்டு அமெரிக்கா செல்லும் மனிதர்களுக்கிடையே இதோ வித்யா சற்று வித்யாசமானவராய் அங்கிருந்து இங்கு வந்துள்ளார்... அப்படி என்ன அவரை இங்கே ஈர்த்தது, இதோ வித்யாவின் வார்த்தைகளிலேயே படியுங்கள்...

வித்யா ஈஷா யோகா ஆசிரியர் பயிற்சி பெற்ற முழுநேர ஆசிரியர்:

பல இந்தியக் குழந்தைகள் எப்படி அமெரிக்காவில் வளர்கின்றனவோ, அப்படித்தான் நானும். விருந்துகள், பாலிவுட் சினிமா, பாலவிஹார் வகுப்புகள், பரதநாட்டியம், பஜன் என வளர்ந்தேன். அமெரிக்க கலாச்சாரத்தில் வளர்ந்த என் நண்பர்கள் நடுவே நான் மிகவும் தனியாகத் தெரிவேன். ஆளை அடிக்கும் வாசனையுடன் மதியச் சாப்பாடு, என் நடை, உடை, பொழுதுபோக்கு, ஏன் என் ஆங்கிலம் கூட வித்தியாசமாய்!

எங்கள் குடும்பமே இந்துக் கலாச்சாரத்தில் மூழ்கி கிடந்தது. என் வீட்டுக்குள் நுழைந்தால், ஒரு மினி இந்தியாவுக்குள் நுழைவதுபோல் ஓர் உணர்வு ஏற்படும். என் அப்பா அவ்வப்போது பக்கத்தில் உள்ள கோவிலுக்குச் சென்று சொற்பொழிவுகள் கேட்பார். ஆனால், என் அம்மாவோ அதற்கு நேர் எதிர்.

எனவே, அமெரிக்காவில் எங்கள் பகுதியில் நடந்த ஈஷா யோகா வகுப்புக்கு அவர் சென்றபோது, வீட்டில் எங்களுக்கு ஒரே ஆச்சரியம். வகுப்பு முடிந்த பிறகோ அந்த ஆச்சரியம் மென்மேலும் அதிகரித்தது. எனக்கு அப்போது 10 வயதுதான். இருந்தாலும் யோகாவுக்குப் பிறகு, நான் பழகியிருந்த அம்மா என் கண் முன்னே மாறி விட்டிருந்தார்கள். வீட்டு வேலைகளை, இப்போது ஒரு விருப்பத்தோடு செய்ய ஆரம்பித்தார்கள். சலிப்பு சுத்தமாக இல்லை. வேக்குவம் கிளீனர் வைத்து வீட்டை சுத்தம் செய்யும்போது கூட ஒரு சிரிப்பு, ஒரு பாட்டு. அழுக்குத் துணிகளை துவைக்கும்போது கூட ஒரு சிரிப்பு. என்ன ஆயிற்று அம்மாவுக்கு என நானும் தங்கையும் மிகவும் ஆச்சரியப்பட்டோம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

என் அம்மாவைப் பார்த்து, என் அப்பாவும் யோகாவில் சேர்ந்தார். பிறகு அவர்கள் இருவருமே அமெரிக்காவிலுள்ள பல பகுதிகளுக்கும் சென்று ஈஷா வகுப்புகளில் தன்னார்வத் தொண்டு செய்ய ஆரம்பித்தார்கள். அப்போதெல்லாம் நானும் என் தங்கையும் வகுப்புக்கு வெளியில் உட்கார்ந்துகொண்டு கலர் பென்சிலால் டிராயிங் வரைந்து கொண்டு இருப்போம்.

வளர வளர, என் வாழ்க்கை சிறிது சிறிதாக அமெரிக்கக் கலாச்சாரத்துக்கு மாறியது. ஆன்ட்டி பார்ட்டிகள் டீன் பார்ட்டிகளாக மாறின. பஜன் பாட்டுகள் பாப் மியூசிக்காக மாறியது. என் முடியை சுருட்டையாக்கக் கற்றுக் கொண்டேன். அழுத்தமான முகப்பூச்சுக்கு பழகிக்கொண்டேன். பதின்பருவத்துக்கே உரிய மிடுக்கோடு நடமாடினேன். ஹிந்துயிசம் பற்றிய அனைத்தையும் குப்பைத் தொட்டியில் போட்டேன். வாழ்க்கை பற்றி நானே சில கருத்துக்களை உருவாக்கிக் கொண்டேன். நான் ஒரு நாத்திகவாதி என்று நம்ப ஆரம்பித்தேன். ஞாயிறு பள்ளிக்குப் போவதை முற்றிலும் நிறுத்திக்கொண்டேன். எங்கள் வீட்டைப் பொறுத்தவரை இது ஒரு பெரிய மாற்றம்.

ஆனால், எங்கோ, நான் அறிந்ததைவிடவும் வேறு ஏதோ இந்த வாழ்க்கையில் இருக்கிறது என அவ்வப்போது உணர்ந்தேன். ஆனால், அதற்காக கோவிலுக்குச் சென்று கடவுள் முன் உட்கார்ந்து அது என்ன என்று ஆராய நான் அப்போது தயாராக இல்லை. அப்படி ஏதாவது இருந்தால், அது ஏன் உடனடியாக என் கையில் தானாகக் கிடைக்கக் கூடாது? ஏன் எங்கோ சென்று உட்கார்ந்து அதை நான் கண்டுபிடிக்க வேண்டும்? என்கிற ஆராய்ச்சியிலேயே இருந்தேன்.

ஆனால், அம்மா எப்போதும் தன் நண்பர்கள், பார்ப்பவர்கள் என அனைவரிடமும் யோகா வகுப்பு பற்றியே பேசி வந்தார். அம்மா பைத்தியமாகத்தான் மாறிவிட்டார் என்றுகூட நினைத்தேன். அம்மாவிடமே அதைக் கூறினேன். அம்மா யோகா பற்றி மற்றவர்களிடம் எப்படிக் கூறுவார்களோ அப்படியே நக்கல், நையாண்டி செய்து பேச ஆரம்பித்தேன். உன் பெண்ணாக இருப்பதில் என்ன புண்ணியம், உனக்கு யோகா மேல் மட்டும்தான் ஆசை என்று வசை பாடினேன்.

ஆனால் எனக்குள் நிலவரம் வேறுமாதிரி இருந்தது... நான் எனக்குள் தீயாக எரிந்துகொண்டு இருந்தேன். நான் எதில் ஈடுபட்டாலும், அது நடன வகுப்பாகட்டும், பள்ளியாகட்டும், நான்தான் சிறந்தவளாக இருக்க வேண்டும் என்று அதில் முழுமையாக ஐக்கியமாவேன். நான் அதில் முதலாவதாக இருக்க முடியாது என்று தோன்றினால், அடுத்த கணமே அதை விட்டு விலகிவிடுவேன். இப்படி வாழ்வது மிகவும் த்ரில்லிங்காக இருந்தது. ஆனால் எதிலும் சில நிமிடங்கள்தான் என்னால் அப்படி இருக்க முடிந்தது. பிறகு ஆர்வத்தை இழந்துவிடுவேன். எனக்குள் நானே கோபப்பட்டு அடுத்ததற்குத் தாவுவேன். சில காலத்திலேயே இவற்றில் எல்லாம் மிகவும் களைப்படைந்துவிட்டேன்.

இந்த வாழ்க்கை என்பது இது போன்ற அல்ப சந்தோஷங்களுக்காகக் கிடையாது என்று மட்டும் எனக்குள் ஏதோ சொல்லிக் கொண்டே இருந்தது. நான் உயர்நிலைப் பள்ளியில் இருந்தபோது இது எனக்குள் மேலும் மேலும் அதிகமானது. எதன் மீதும் நம்பிக்கை அற்றவளாகக் காணப்பட்டேன். யாரை அணுகுவது என்று எனக்குத் தெரியவில்லை. எனது ஆசிரியர்களோ என்னைப் பற்றி சிறிதும் கவலை இல்லாதவர்களாகவே எனக்கு தெரிந்தனர். என் நண்பர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை.

நான் யார்? எதற்கு வந்தேன்? இங்கு என்ன செய்கிறேன்? இந்த கேள்விகளின் பாதிப்பால் என் கண்களில் கண்ணீர் வழிந்தது. என்னைச் சுற்றி இருந்தவர்கள் எனக்காகக் கவலைப்பட ஆரம்பித்தார்கள்., என் ஃப்ரெண்ட் தான், தான் ஏதோ தவறு செய்து விட்டதாக நினைத்துக் கொண்டாள். யாருக்கும் இதுபற்றி புரியவில்லை?

பிறந்தேன், இன்று சில செயல்கள் செய்கிறேன், எப்படியும் இறக்கப்போகிறேன், அவ்வளவுதானா வாழ்க்கை? முன்னறிவிப்பு இல்லாமலே இறப்பு வரலாம். நான், என் நண்பர்கள், என் தத்துவம் எல்லாமே ஒரு நாள் காணாமல் போய்விடும், மிச்சம் ஏதும் இருக்காது என உறைத்த போது யாரோ சம்மட்டியால் அடிப்பதுபோல் இருந்தது.

அப்போதுதான் யாருமே எதிர்பார்க்காத விதத்தில் நான் யோகா வகுப்பில் சேர்ந்தேன். இங்கு யாரும் கை, கால் முறுக்குவதோ, தரையில் உருளுவதோ கிடையாது. யாரும் எதையும் போதிப்பதும் இல்லை, உங்கள் நம்பிக்கைகளை மாற்ற முயற்சிப்பதுமில்லை, சொல்லப்போனால், மதமோ, சடங்குகளோ எதுவும் கிடையாது. யோகா வகுப்பு மிகவும் உயிரோட்டமாக இருந்தது. வகுப்பை ஒரு விஞ்ஞானமாகச் சொல்லிக் கொடுத்தார்கள்.

அது யோகா வகுப்புதான், ஆனால் அவ்வகுப்பு முழுக்க முழுக்க என்னைப் பற்றியது. இன்று நான் எப்படி இருக்கிறேன் என்பதைப் பார்க்க வைப்பது. ஏதோ பழங்கதைபற்றி பேசுவது அல்ல. வகுப்பு செய்யும்போதே என் மேல் உட்கார்ந்திருந்த பல பாரங்கள் ஒவ்வொன்றாக உதிர்வதுபோல உணர்ந்தேன். உடல், மனம் எல்லாம் லேசாகிவிட்டது. என் வாழ்க்கை பற்றியும், சுற்றியுள்ள மக்கள் பற்றியும் சிறிது ஆழமாகப் பார்க்க முடியும் என்ற தெளிவு ஏற்பட்டது.

வகுப்பு முடிந்த பிறகு தினசரி வாழ்க்கைக்கு திரும்பினேன். வகுப்புக்கு முன் என்னென்ன நிகழ்ந்ததோ, அதேதான் இப்போதும். ஆனால், எனக்குள் ஏதோ ஒன்று உயிரோட்டமாய்... மிகவும் உயிரோட்டமாய். அதே பிரச்சனைகள்தான் ஆனால், மக்கள் இப்போது எனக்கு ஆனந்தமாகிவிட்டார்கள். ஏனெனில், இப்போது ஒவ்வொன்றையும் நான் ஒரு தெளிவுடன் கையாள்கிறேன். என்னைச் சுற்றி இருந்தவர்கள் நான் ஏதோ போதை மருந்துதான் சாப்பிட்டுவிட்டேன் என்று நினைத்தார்கள். ஏனெனில், நான்தான் எப்போதும் புன்னகை, சிரிப்பு என்று இருந்தேனே. எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது எனது வாழ்க்கையின் ஓர் இயல்பான பகுதியாகி விட்டது. மகிழ்ச்சி என்பது இப்போது எனக்கு ஒரு லட்சியமாக இல்லை. நான் இப்போது மகிழ்ச்சியாக இருப்பதற்கு, யாரோ அல்லது எதுவோ தேவைப்படவில்லை.

பள்ளிப் படிப்பு முடிந்தது. எல்லோரும் கல்லூரிக்கு விண்ணப்பம் போட்டார்கள். எல்லோரும் போல நானும் இயந்திரத்தனமாக அதைச் செய்தேன். ஆனால், எனக்குத் தெரியும், நான் விரும்புவது இது அல்ல என்று. வகுப்பு முடிந்ததில் இருந்து என்னுள் ஆழமான ஒன்று தீயாகப் பற்றிக்கொண்டது. அது இன்னமும் பற்றி எரிய விரும்பினேன். எனவே, எனது நண்பர்கள் மூட்டை கட்டிக் கொண்டு கல்லூரிகளுக்குச் சென்றபோது, நான் எனது மூட்டையுடன் இந்தியாவுக்குக் கிளம்பினேன்.

ஈஷா யோகா மையத்தில் 500 பேருடன் இப்போது நானும். அனைவருடன் சேர்ந்து ஒரே வீடாக இருப்பதென்பது ஆரம்பத்தில் சவாலாகத்தான் இருந்தது. ஆனால், அங்கும் யோகா எனக்கு உதவியது. இனிமையான, உண்மையான வாழக்கைபற்றிய கேள்வியுடன் இருப்பவர்கள்தான் என்னைச் சுற்றி இருக்கிறார்கள். நானும் அந்தக் கேள்வியுடன்தானே இருக்கிறேன்!

இப்போது நான் வாழும் முறையே மாறிவிட்டது. நாள் இறுதியில் அன்று முழுவதும் நடந்த எதுவும் என் மண்டையில் தேங்கி என்னைத் துன்பப் படுத்துவதில்லை. அல்லது அடுத்த நாளுக்கான திட்டமோகூட என்னைக் குடைவதில்லை. என் வாழ்க்கையைப்பற்றி நினைப்பதை நிறுத்தி உண்மையிலேயே வாழ ஆரம்பித்துவிட்டேன். இப்போது என் வாழ்க்கையின் அடிப்படையிலேயே மாற்றம் வந்துவிட்டது. என் வாழ்க்கையில் நான் என்ன செய்கிறேன், எந்த திசையில் செல்கிறேன் என்பது தெரிகிறது. அதற்காக முடியைச் சுருளாக மாற்றிக் கொள்வதையோ அல்லது முகப்பூச்சு பூசுவதையோ விட்டுவிட்டேன் என்று சொல்ல மாட்டேன். அதையும் நான் கொண்டாடுகிறேன். ஆனால் அனைத்துமே அதுவல்ல என்று அறிந்துகொண்டேன். உள்வாழ்க்கை, வெளிவாழ்க்கை அனைத்தையும் கொண்டாட முடியும் என்பதுபோல ஏதோ ஒன்று ஆழமாக எனக்குள் இப்போது. எந்த முயற்சியும் இல்லாமலே எப்போதும் உயிரோட்டமாக இருக்க அது உதவுகிறது.

அது மிகவும் எளிமையாகவும் விடுதலை தருவதாகவும் இருக்கிறது. இருந்தாலும் ஒரு வலி. எப்போதும் நான் உலக அமைதி அல்லது அது போல வேறு எதுவும் நினைத்ததில்லை. அது போன்றதொரு மனிதநேயம் எனக்கு எப்போதும் வரவில்லை. ஆனால், வகுப்பு செய்ததில் இருந்து வாழ்க்கை மற்றும் என்னைப்பற்றி புரிந்துகொண்ட விதம் மிகவும் அற்புதமானது. அதை எனக்குள் அடக்கிக் வைத்துக்கொள்ள இயலவில்லை.

உலகின் நடுவே போய் நின்று கொண்டு, “ஆமாம், விடை இருக்கிறது, நீங்கள் பார்ப்பதைக் காட்டிலும் இன்னும் எவ்வளவோ இந்த வாழ்க்கையில் இருக்கிறது,” என்று உரக்க கத்த வேண்டும் போல் இருக்கிறது. எனக்குள் என்னதான் நடக்கிறது, உடலளவில், மனதளவில் அல்லது பிற வகைகளில் என்னதான் நடக்கிறது? சிறிது நேரத்தை மட்டுமே செலவிட்டதில் எனது வாழ்க்கை மிகவும் வளமாகிவிட்டது. எல்லோருக்கும் இது சாத்தியமே. பலருக்கு அது நடப்பதைப் பார்த்து வருகிறேன். உள்நிலைக்காகச் சிறிதே சிறிது கவனம். திடீரென உள்ளுக்குள் ஒவ்வொன்றும் விழித்துக்கொள்ளும். இப்போது அது தன்னைச் சுற்றியுள்ள மக்களை அரவணைக்கும் நிலை முற்றிலும் வேறாக உள்ளது.

இந்தியாவுக்கு வந்ததில் இருந்து, என்னை மாற்றிய அதே யோகாவை மற்றவர்க்கும் கற்றுக் கொடுக்கும் ஈஷா யோகா ஆசிரியர் பயிற்சியில் இப்போது ஈடுபட்டிருக்கிறேன். இந்த யோகா நிகழ்ச்சியின் அழகு என்னவென்றால் யாருக்கும் பொருந்துவதாக இருக்கிறது. பெரிய நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் முதல் கிராமத்து மனிதர்கள் வரை... மேலும் ஆனந்தமான, மேலும் முயற்சியற்ற வாழ்க்கைக்கு அவர்கள் மாறும்போது அது சொல்ல முடியாத இன்பத்தை எனக்குத் தருகிறது. ஈஷா யோகா மையம் முழுவதுமே இதைப்போன்ற அனுபவத்தால் தொடப்பட்ட மனிதர்களால்தான் நடத்தப்பட்டு வருகிறது. பணத்தையோ, தன் மகிழ்ச்சியை மட்டுமோ தேடாமல், ஆனந்தத்தின் வெளிப்பாடான இந்தச் சாத்தியத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் இப்படிப்பட்ட மனிதர்களால் இந்த உலகம் நிரம்பியிருந்தால், இந்த உலகம் வாழ்வதற்கு எப்படிப்பட்ட இடமாக இருக்கும் என்பதை என்னால் கற்பனை செய்யாமல் இருக்க முடியவில்லை. இந்தச் சாத்தியத்தை அனைவருக்கும் கொண்டுசெல்லும் வாய்ப்பு அனைவருக்கும் இருக்கிறது. இதைவிட ஒரு புனிதக் காரியம் ஒன்று இருக்கும் என்று நான் நினைக்கவில்லை!