யோகேஷ்வர லிங்கத்தின் பிரதிஷ்டை நிறைவடையும் சமயத்தில், லிங்கத்தின் தன்மைகள் குறித்தும், அதனை ஒருவர் எப்படி அணுகமுடியும் என்பதையும் சத்குரு விவரிக்கிறார். இத்துடன் பிரதிஷ்டை நிகழ்ச்சியின் புகைப்படத் தொகுப்பையும் பகிர்ந்துள்ளோம்.

பிரபஞ்சத்தின் வடிவமில்லா பரிமாணம் வடிவமெடுக்கும் போது, அந்தக் குறிப்பிட்ட வடிவம் எப்படி இயங்கப்போகிறது என்பதை அதன் வடிவியலே நிர்ணயிக்கும். சாதாரணமாகச் சொல்லவேண்டும் என்றால் - வடிவியல்ரீதியான கச்சிதம் இருக்கும் அதே சமயத்தில், மிக சிக்கலானதாய் இருக்கும் ஒரு வடிவமே மனித அனுபவத்தில் தெய்வீகமாக கருதப்படுகிறது. எது வடிவியல்ரீதியான கச்சிதம் கொண்டு நுட்பமில்லாத எளிமையான வடிவமாக இருக்கிறதோ, அது அழகானதாக கருதப்படுமே தவிர, அதற்கு மேல் அதில் எதுவுமில்லை. எது ஒவ்வாத வடிவியல் கொண்டிருக்கிறதோ, அது சப்தம், வடிவம், வாசனை, ருசி என்று எதுவாக இருந்தாலும், அசிங்கமானதாக கருதப்படுகிறது. தெய்வீகமாக கருதப்பட்டு தெய்வீகமாக அனுபவத்தில் உணரக்கூடிய ஒன்றை உருவாக்க விரும்பும்போது, அதற்கு நுட்பமும் வடிவியல்ரீதியான கச்சிதமும் தேவை. ஒரு பொருள்வடிவம், அது வடிவமைக்கப்பட்டிருக்கும் நோக்கத்தில் வழுவழுப்பாகவும், குறைந்தபட்ச உராய்வுடனும், உச்சபட்ச செயல்திறனுடனும் இயங்கிட வழிசெய்வது, வடிவியல்ரீதியான கச்சிதமே. அதுவே அந்த வடிவம் எவ்வளவு காலம் நீடிக்கப்போகிறது என்பதையும் நிர்ணயிக்கும். இது அசையும் பாகங்கள் கொண்ட இயந்திரங்களுக்கு மட்டுமல்ல, லிங்கத்திற்கும் பொருந்தும். யோகேஷ்வர லிங்கம் ஓர் உயிருள்ள சக்திவடிவம், உயிருள்ளது எதுவானாலும் ஏதோவொரு விதத்தில் அது அசைவில் இருக்கிறது. இந்த லிங்கம் இன்னும் ஆயிரமாயிரம் வருடங்கள் நிலைக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

யோகேஷ்வர லிங்கத்திற்கு சக்திநிலையில் ஐந்து சக்கரங்கள் உள்ளன - மூலாதாரா, சுவாதிஷ்டானா, மணிபூரா, விஷுதி, மற்றும் ஆக்னா. இதில் ஒவ்வொன்றிற்கும் பதினாறு பரிமாணங்கள் உள்ளன. அனஹதா இல்லை - இதயமில்லா யோகி இவர். இதற்கு ஒரு காரணம், இந்த லிங்கம் அடிப்படையில் ஆன்மீக சாதனத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது, வழிபாட்டிற்காக அல்ல. மக்கள் நிச்சயம் அவரை வழிபடுவார்கள், ஆனால் அது பிரதான நோக்கமல்ல. அனைவரும் லிங்கபைரவியை நேசிக்கக் காரணம், அவளிடம் பாதி அனஹதா அல்லது பாதி இதயம் இருந்தாலும் அது வலுவானதாக உள்ளது. தியானலிங்கத்திற்கோ முழுமையான அனஹதா உள்ளது, ஆனால் அது ஒரு யோகியின் இதயம். அது சீராக துடித்துக்கொண்டு இருப்பதால் எவரும் கவனிப்பதில்லை. நீங்கள் சூட்சுமமாகவும் சீராகவும் இருந்தால், நீங்கள் காதல்வயப்படாதவர் என்றே மக்கள் நினைப்பார்கள் - காதல்வயப்பட்டால் மூச்சுத் திணறவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். பெரும்பாலான மக்களுக்கு அனஹதா சாதனம் குழப்பம்தருவதாக இருப்பதால், நான் யோகேஷ்வர லிங்கத்திலிருந்து அனஹதாவை நீக்கிவிட முடிவெடுத்தேன். இந்த யோகி, வெறும் தீவிரமும், அனைத்தையும் தன்னுள் ஒரு பாகமாக இணைத்துக்கொள்ளும் தன்மையும் கொண்டவராக விளங்குவார். நீங்கள் ஏற்கனவே ஏதோவொன்றை உங்களுள் ஒரு பாகமாக இணைத்துவிட்டால், அதை நேசிப்பதற்கான தேவை எதற்காக வரப்போகிறது?

யோகேஷ்வர லிங்கத்தை இரண்டு விதங்களில் அணுகலாம், "யோகரத்தோவா போகரத்தோவா", அதாவது யோகத்தில் - முழுமையான ஒழுக்கத்தில், அல்லது போகத்தில் - எதையும் பொருட்படுத்தாமல். பெரும்பாலான மனிதர்கள் யோகத்திற்கு பதிலாக போகத்தையே விரும்புவதாக சொல்லிக்கொள்வர். நிபந்தனைகளுக்கு உட்பட்ட போகத்தில் இருப்பது குடும்ப வாழ்க்கைக்குப் பரவாயில்லை, ஆனால் தேய்வீகத்தை நாடும்போது அது போதாது. உங்கள் இருப்பின் எல்லைகளைக் கடக்க வேறொரு நிலையிலான போகம் தேவை. யோகேஷ்வர லிங்கம், துறவறத்தின் ஒழுக்கமும் கட்டுக்கடங்கா பரவசமும் கலந்த கலவை. உங்கள் கர்மப் பதிவுகள் அல்லது பிராரப்த கர்மத்தின் பதிவுகளுக்கேற்ப நீங்கள் அவரை அணுகும்விதமாய் அவர் பார்த்துக்கொள்வார். உங்கள் பிராரப்த கர்மத்தின் கட்டுக்களை ஓரளவிற்கேனும் உடைக்காமல், தடைகளைத் தகர்த்து யோகா அல்லது சங்கமத்தை ருசிக்க வழியில்லை. மதிப்பான சொத்தைப்போல உங்கள் பிராரப்தத்தை நீங்கள் பற்றிக்கொண்டால், எல்லைகளைத் தகர்ப்பதற்கு வழியில்லை. அப்போது உங்கள் இருப்பின் சுழற்சியான தன்மை, முடிவில்லாமல் மீண்டும் மீண்டும் தன்னை செயல்படுத்திக்கொள்ளும். உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வண்ணம் எல்லைகளை கடக்க விரும்பினால், உங்கள் பிராரப்தத்தை நீங்கள் சிறிதேனும் களையவேண்டும். இல்லாவிட்டால் ஆன்மீக செயல்முறை என்பது ஓடுடன் கொட்டையைத் தின்பது போலாகிவிடும், அது இனிமையான அனுபவமாக இருக்காது. முதலில் ஓட்டை உடைத்துக் களையவேண்டும், அதன்பிறகே கொட்டை இனிப்பாக ருசிக்கும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

வெறும் தீவிரமும், தன்னுள் ஒரு பாகமாக இணைத்துக்கொள்ளும் தன்மையும் கொண்டுவருவதன் மூலமே சங்கமத்திற்கு இட்டுச்செல்லும் விதமாக யோகேஷ்வர லிங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மனிதர்களுக்கு, அவர்கள் வாழ்வில் உணர்ந்துள்ள மிக இனிப்பான கணங்கள் என்றால், அவர்கள் இன்னொருவரை நேசித்த கணங்களே, அதாவது உணர்வுப்பூர்வமாக அவர்கள் இன்னொருவருடன் இசைந்திருந்த கணங்களே. துரதிர்ஷ்டவசமாக இதைத்தான் பெரும்பாலான மனிதர்கள் ருசித்துள்ளார்கள்.

இணைத்துக்கொள்ளும் தன்மையின் தீவிரம் வெறும் உணர்வுரீதியாக இருக்கவேண்டிய அவசியமில்லை - அது உயிருடனான ஓர் அடிப்படையான உறவு. மிக அழகாகத் தெரிந்தாலும், காதலின் மூலம் இன்னொன்றை தன்னுள் ஒரு பாகமாக இணைத்துக்கொள்ளும் தன்மையை மிகக்குறைவாகவே உணரமுடியும். வாழ்க்கையை மிக ஆழமாக அனுபவித்துணர்வதில் உள்ள ஏழ்மையையே இது குறிக்கிறது.

சரியான விதத்தில் நீங்கள் யோகேஷ்வர லிங்கத்தை அணுகினால், உணர்ச்சிப்பெருக்கின்றி அனைத்தையும் உங்களுள் ஒரு பாகமாக உங்களை இணைத்துக்கொள்ளச் செய்கிறது. இதயமில்லா ஒரு யோகி இரக்கமற்றவரல்ல, தூய்மையானவர். அவருக்கு நேர்மறையான உணர்வுகளும் கிடையாது, எதிர்மறையான உணர்வுகளும் கிடையாது. அவருக்குத் தெரிந்ததெல்லாம் யோகா - அதாவது அனைத்தையும் தன்னுள் ஒரு பாகமாக இணைத்துக்கொள்ளும் தன்மை அல்லது சங்கமம். உங்களுக்கு நேர்மறையான ஒரு உணர்வு இருந்தால் எதிர்மறையான உணர்வும் இருக்கமுடியும். உங்களுக்கு நேர்மறையான எண்ணம் இருந்தால், எதிர்மறையான எண்ணமும் இருக்கமுடியும். இது பிரபஞ்சத்தின் தன்மை - எல்லாவற்றுக்கும் இருமுனைகள் உண்டு. தொடர்ந்து நேர்மறையான உணர்வுடன் இருக்க நமக்குள் நாமே நிறைய நிர்வகித்துக்கொள்ளத் தேவையிருக்கும். ஒரு சக்திவடிவத்தை உருவாக்கும்போது, அம்மாதிரியான சங்கடங்களை நாம் தவிர்க்க விரும்புகிறோம்.

ஆதியோகி முதல் துவங்கி, காலம் காலமாக வந்த யோகிகளில், தங்களது சக்திநிலையில் ஏழு சக்கரங்களும் அவற்றின் அனைத்து பரிமாணங்களும் முழுவீச்சில் இருந்த யோகிகள் சில டஜன் மட்டுமே. இப்படி அனைத்து சக்கரங்கள் மீதும் அவற்றின் அனைத்து பரிமாணங்கள் மீதும் முழு ஆளுமை கொண்டிருந்தவர்களை சக்ரேஷ்வரர்கள் என்று அழைத்தார்கள். அவர்களில் மிகப் பிரபலமான ஒருவர் மத்ஸ்யேந்திரநாதர் - இன்னொருவர் சத்குரு ஸ்ரீ பிரம்மா. கடந்த பத்து முதல் பதினைந்தாயிரம் வருடங்களில் சில டஜன் சக்ரேஷ்வரர்களை மட்டுமே இந்த பூமி பார்த்திருக்கிறது என்றால் மனிதகுலத்தின் அவலநிலையையே இது குறிக்கிறது. உணர்வுகசியும் இதயம் உங்களிடம் இருந்தால், நிறைய மக்கள் அதற்கு மயங்கி நீங்கள் பெரிய சாது என்று நினைப்பார்கள். அதனால் தான் "பிரபஞ்சத்தின் மையமே அன்புதான்", "கடவுள் அன்பின் வடிவானவர்" போன்ற போதனைகள் உலகெங்கும் மிகப் பிரபலமாக இருக்கின்றன.

கடவுள் என்று நீங்கள் எதை அழைக்கிறீர்களோ, அதற்கு உணர்வுகசியும் நேசத்தைத் தாண்டி நிறைய பரிமாணங்கள் உண்டு. நீங்கள் தேடுவதெல்லாம் அன்பு மட்டும்தான் என்றால், நாய்தான் மிகச்சிறந்த துணை. நாயால் மட்டும்தான் உங்களை எப்போதும் நேசிப்பது போல நடிக்கமுடியும். மனிதனின் இருப்பு அதைவிட மிக சிக்கலான நுட்பங்கள் நிறைந்தது. ஒரு அபத்தமான மனம்தான் பொங்கிவழியும் அன்பை தெய்வீகம் என நினைக்கும். யாரோ ஒருவர் மீது மிக இனிப்பான உணர்வுகள் கொள்வது மனிதர்களுக்கு இயல்பு. இனிப்பான உணர்வுகள் நல்லதுதான், ஆனால் அவை உங்களை உயரச்செய்யாது. உங்கள் இதயத்தைப் பயன்படுத்தி உயர்வது மிகவும் கடினம். இதயத்தைக் கொண்டு உயர்ந்திட முதலில் உங்களை நீங்கள் விட்டுக்கொடுக்க வேண்டும், பெரும்பாலான மனிதர்களுக்கு அப்படிச்செய்யும் திறமை கிடையாது.

இந்த இதயமில்லா யோகி அனைத்தையும் தன்னுள் ஒரு பாகமாக முழுமையாக இணைத்திருப்பதால், அவருக்கு உணர்வுகள் தேவையில்லை. எல்லாவற்றையும் உங்களுள் ஒரு பாகமாக இணைத்திருக்கும்போது, யாரிடமும் காதலில் விழிவதற்கான தேவைதான் என்ன? ஒரு சுவரைப்போல நீங்கள் நின்றிருந்தால்தான் ஒருநாள் விழவேண்டியிருக்கும். நான் இப்படிச் சொல்வதால் என் பெயர் கெடலாம், ஆனால் உங்களை காதலெனும் நோயிலிருந்து குணப்படுத்தி, அதன்மூலம் அனைத்தையும் உங்களுள் ஒரு பாகமாக உணர்வதை உங்களுக்கு கற்றுக்கொடுப்பதே என் விருப்பம். சிவன் தனக்கான பெண்ணைக் கண்டுகொண்டபோது, அவளை தன் மடியில் வைத்து, தன்னுள் ஒரு பாகமாக, தன்னுடைய ஒரு பாதியாக இணைத்துக்கொண்டான். இதயமில்லாது இருப்பதை கல்லைப்போல இருப்பதென மக்கள் தவறாக புரிந்துகொள்வதன் காரணம், அவர்கள் அனைத்தையும் தன்னுள் ஒரு பாகமாக இணைத்துக்கொண்டு இருக்கமுடியும் என்பதை நினைத்துக்கூட பார்த்ததில்லை. காதலில் இருவருக்கும் வசதியாக இருக்கும்வரையே அவர்கள் விளையாடித் திரிவார்கள். அவர்களுக்கு வசதியாக இல்லாவிட்டால் பிரிந்துவிடுவார்கள்.

நமக்குப் பிறகு நெடுங்காலம் வாழப்போகும் இந்த யோகி, இந்த தலைமுறையின் சில கோடி மக்களையும், வரும் தலைமுறைகளின் பல கோடி மக்களையும் பார்க்கப்போகிறார். மனித புத்திசாலித்தனம் மற்ற அனைத்தையும் விட முக்கியத்துவம் பெறப்போகிறது. இதனால் நல்ல விஷயங்களும் நடக்கும், அசிங்கமான விஷயங்களும் நடக்கும். அனைத்தையும் இணைத்துக்கொள்ளும் தன்மையை நோக்கி நம் புத்திசாலித்தனத்தையும் சக்தியையும் பயன்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது. யோகேஷ்வர லிங்கத்தின் மூலாதாரா, ஸ்வாதிஷ்டானா மற்றும் மணிபூரா, உங்களுக்கு ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் ஆழமான பரவசத்தையும் அளிக்கும். ஆரோக்கியமாகவும், ஆனந்தமாகவும் இருந்து, பரவசமாக வாழ்வதே உங்கள் உரிமை என நான் நினைக்கிறேன். இந்த உயிர் நீங்கள் உருவாக்காத ஒரு பிரம்மாண்ட செயல்முறை. அதனை நலமாக வைத்து அதன் உச்சத்திற்கு எடுத்துச்செல்லவே இந்த உயிர். புலன்களைக் கடந்த பரிமாணங்களை ஆராய்ந்து அனுபவித்துணரவே யோகேஷ்வர லிங்கம்.

வாருங்கள், ஆதியோகியின் அருளை உணருங்கள், உங்கள் உயிரில் மலருங்கள்.

Love & Grace