இந்த வார சத்குரு ஸ்பாட்டில், சமூக வலைதளங்களில் அதிகப்படியாக பகிர்ந்துகொள்ளும் போக்கு குறித்தும், அது காட்டும் மனிதர்களின் தற்போதைய நிலையையும் சத்குரு விளக்குகிறார். அதோடு நம் வாழ்க்கையை மாறுபட்டதொரு நிலைக்கு எடுத்துச்செல்லத் தேவைப்படும் வேறுவிதமான உத்வேகத்திற்கும் வழிகாட்டுகிறார்.

நான் எங்கு சென்றாலும், மனிதர்கள் அவர்கள் மொபைல் போனுடன் கட்டுண்டு கிடப்பதைக் காண்கிறேன். தொழில்நுட்பம் என்பது அதுவாகவே நல்லதோ கெட்டதோ கிடையாது, அதை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில்தான் எல்லாம் இருக்கிறது. தங்களுடைய புகைப்படங்களையும், அவர்கள் மனங்களில் எழும் எண்ணங்கள் அனைத்தையும் சமூக வலைதளத்தில் பதிந்தாக வேண்டும் என்ற நிர்பந்தமும் அவசரமும் மனிதர்களுக்கு ஏன் வந்தது? அடிப்படையில் அவர்கள் வாழ்க்கை அனுபவம் அவர்கள் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளின் எல்லைகளைக் கடக்காததால்தான். அவர்கள் குப்பையை பிறரிடம் பகிர்ந்துகொள்வதைவிட அர்த்தமுள்ளது எதுவும் அவர்களுக்குத் தெரியவில்லை. மக்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்தவற்றை டைரியாக பதிந்த நாட்கள் உண்டு. அப்போதெல்லாம் எவராவது அவர்களது டைரியைத் திறந்து படித்துவிட்டால் "என் வாழ்க்கையைப் பற்றி நீ எப்படி படிக்கலாம்?" என்று மனமுடைந்து போவார்கள். ஆனால் இப்போதோ, அவர்கள் முகநூலில் பதிந்ததை எவரும் படிக்கவில்லை அல்லது லைக் செய்யவில்லை என்றால் மனமுடைந்து போகிறார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் என்ன செய்தீர்கள், எங்கு சென்றீர்கள் என்று எல்லாவற்றையும் எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள். மகத்துவம் ஏதும் இல்லாத இடத்தில் மகத்துவம் தேட முயல்கிறீர்கள். வாழ்க்கை மகத்துவம் வாய்ந்ததாக இருக்கப்போவது, உங்கள் மன மற்றும் உணர்வு கட்டமைப்பைக் கடந்து உணரும் திறனை மேம்படுத்தும்போது மட்டுமே. பெரும்பாலான மனிதர்கள் தங்கள் எண்ணங்களிலும் உணர்வுகளிலுமே சிக்குண்டபடி தங்கள் வாழ்நாள் முழுவதையும் வாழ்ந்து செல்கிறார்கள். அவர்கள் வேறெதையும் உணராமல், இதுமட்டுமே உண்மை என்று நினைக்கிறார்கள். எண்ணங்களும் உணர்வுகளும் நீங்கள் நடத்தும் மனோரீதியான நாடகம். உதாரணத்திற்கு, இப்போது ஏதோவொன்று தவறாகிவிட்டது என்று நீங்கள் நினைத்தால், உண்மையில் எதுவும் நடக்காவிடிலும் நீங்கள் உடனே வேதனைப்பட ஆரம்பித்துவிடுவீர்கள். மாறாக, உண்மையிலேயே உங்களைச் சுற்றி ஏதோவொன்று தவறாகிப் போனாலும் எல்லாம் சரியாக இருப்பதாக நீங்கள் நினைத்தால், நீங்கள் நலமாகவே இருப்பீர்கள். உங்கள் எண்ணங்களும் உணர்வுகளும் உங்கள் உருவாக்கம், நிஜத்திற்கும் அதற்கும் எவ்விதத்திலும் தொடர்பு கிடையாது.

அதேபோல, மற்றவர்களின் அனுபவங்களைப் பார்த்து உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். வேறொருவருக்கு நடப்பதற்கு நீங்கள் கவனம் செலுத்தினால், உங்களுக்கு எதுவும் நடக்காது. பார்வையாளராக இருக்காதீர்கள் - வாழ்க்கையில் பங்கேற்பாளராக இருங்கள். நீங்கள் செய்யும் செயலின் தீவிரத்தை அதிகரிக்கமுடியுமா என்று பாருங்கள். சும்மா முயன்று பாருங்கள். நீங்கள் ஏதோவொன்றை பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் - அதை பத்து சதவிகிதம் அதிக தீவிரத்துடன் பார்க்கமுடியுமா என்று பாருங்கள். எல்லோருடைய கண்களும் அதே விஷயங்களைக் காண்பதில்லை. உங்கள் அனுபவத்தின் அளவு, நீங்கள் எந்த அளவு தீவிரத்துடன் ஏதோவொன்றைச் செய்கிறீர்கள் என்பதைப் பொருத்தது. உங்கள் தீவிரத்தை அதிகரிக்க, நீங்களாக சற்று முயற்சியும் முனைப்பும் கொள்வது தேவைப்படுகிறது.

பெரும்பாலான மனிதர்கள் எங்கும் போய்ச்சேருவதில்லை, ஏனெனில் அவர்கள் எப்படியோ ஒரு படி முன்னால் கால்வைப்பார்கள், பிறகு ஒரு படி பின்னால் செல்வார்கள். நீங்கள் தெளிவான நோக்கத்துடன் ஒரு படி முன்னால் சென்று அதனை அங்கீகரித்தால், அடுத்த படி எடுப்பதற்கான உத்வேகம் பிறக்கும். தீவிரம் என்பது தன்னால் வராது. உங்கள் வாழ்க்கையின் மின்சாரத்தை உயர்த்தாமல், நீங்கள் அதிக விழிப்புணர்வாய் மாறமுடியாது. உங்களால் ஏதோவொன்றை எந்த அளவு அனுபவித்துணர முடிகிறது என்பது நீங்கள் எவ்வளவு விழிப்புணர்வாக இருக்கிறீர்கள் என்பதைப் பொருத்தது. நீங்கள் இப்போது உங்கள் விழிப்புணர்வை முழுவதுமாக இழந்துவிட்டால், நீங்கள் இங்கு இருப்பதும் உங்களுக்குத் தெரியாது, உங்களைச் சுற்றி ஒரு உலகம் இருப்பதும் தெரியாது.

நீங்கள் ஓரளவு விழிப்புணர்வாக இருக்கிறீர்கள், அதனால்தான் நீங்கள் இங்கு இருப்பதும் உங்களுக்குத் தெரிகிறது, உங்களைச் சுற்றி ஒரு உலகம் இருப்பதும் உங்களுக்குத் தெரிகிறது. உங்கள் தீவிரத்தை நீங்கள் துரிதப்படுத்தினால், உங்கள் விழிப்புணர்வும் அதிகரிக்கும். நீங்கள் இதுவரை சாத்தியம் என்று நினைத்துக்கூட பார்த்திராத விஷயங்களை கிரகித்துக்கொள்ளத் துவங்குவீர்கள். உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் உண்மையாகவே அர்த்தமுள்ளதாக இருக்கவேண்டும் என்பதே என் ஆசையும் ஆசியும். சலிப்பினால் இறப்பதை விட உற்சாகப்பெருக்கால் இறப்பது மேலானது.

Love & Grace