பனி நடுவே ஐநா சபை நிகழ்ச்சியில் சத்குரு -gallery
இந்தவார சத்குரு ஸ்பாட்டில், நியூயார்க் நகரத்தில் கடுமையான பனிப்பொழிவின் நடுவே, உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையில் தான் கலந்துகொள்ளும் முக்கிய நிகழ்ச்சிகள் குறித்து கூறுவதோடு, இதில் நதிகள் மீட்பு இயக்கம் ஆற்றியுள்ள முக்கிய பங்கினை விளக்கி, நதிகளுக்கான நோக்கத்தில் தொடர்ந்து உறுதிமாறாமல் இருக்கும்படி சத்குரு கேட்டுக்கொள்கிறார்.

நமஸ்காரம். நியூயார்க் நகரத்தில் இருக்கிறேன், இங்கு கடுமையாக பனி பொழிகிறது. இன்று 1 அடி முதல் 3 அடி வரை பனி பொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 3 -4 மணி நேரமாக இடைவிடாமல் பனி பொழிந்தபடி இருக்கிறது. இப்போதுதான் ஐக்கிய நாடுகளின் நிகழ்ச்சி ஒன்று முடிந்தது. இங்குள்ள இந்திய தூதரகத்தின் நிரந்தர மிஷன், ஐக்கிய நாடுகள் சபையில் நடத்திய நிகழ்ச்சியிது. இந்த நிகழ்ச்சி, "நீர், சுகாதாரம் & பெண்கள்" பற்றியதாக இருந்தது. இம்மூன்றையும் அவர்கள் தொடர்புபடுத்த விரும்புகிறார்கள், ஏனென்றால் நாளை உலக தண்ணீர் தினம். அதை முன்னிட்டு, தண்ணீர் பாதுகாப்பிற்கு, அடுத்த பத்து வருடங்களுக்கான திட்டமொன்றை அவர்கள் துவக்கவிருக்கிறார்கள். நிலையான வளர்ச்சி இலக்குகளின் முக்கியமான அங்கமாக தண்ணீர் பாதுகாப்பு கருதப்படுகிறது.
நான் இதன் முக்கிய குழுவின் அங்கமாக இருக்கிறேன், இன்னும் பல முக்கிய பிரமுகர்கள் இதன் அங்கமாக இருக்கிறார்கள். அடுத்த 10 ஆண்டுகளுக்கு நாம் என்ன செய்யவேண்டும், மக்களை எப்படி இதில் ஈடுபடுத்துவது என்ற நோக்கத்தில் இது நிகழவிருக்கிறது. நதிகள் மீட்பு இயக்கத்தின் விளைவாக நாம் உலகில் இந்த விழிப்புணர்வை உருவாக்கியுள்ளோம் - மாபெரும் மக்கள் இயக்கம் இல்லாவிட்டால், உண்மையில் தீர்வு என்பது இல்லை. அரசாங்கம் செயல் செய்யலாம், தனியார் நிறுவனங்கள் செயல் செய்யலாம், தனிமனிதர்களும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் அவர்களால் முடிந்ததையெல்லாம் செய்யலாம். எல்லாம் பயனுள்ளதுதான். ஆனால் மக்களை பெரிய அளவில் ஈடுபடுத்தாமல், உண்மையான தீர்வு எதுவும் இருக்காது. நதிகள் மீட்பு இயக்கத்தின் மூலம் இது மிக அழுத்தமாக உணர்த்தப்பட்டுள்ளது. அதனால்தான் நாம் இங்கு இருக்கிறோம்.
நாளை ஐக்கிய நாடுகள் சபையில் நடக்கவிருக்கும் கலந்துரையாடல் மிகவும் சுவாரசியமாக இருக்கப்போகிறது. நாளைய இந்த நிகழ்ச்சி, நேரடியாக ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் நடக்கவிருக்கிறது, இது இந்திய மிஷனுடையது அல்ல. இப்போது வெளியே இருக்கும் பனிப்பொழிவின் சில காட்சிகளை உங்களுக்கு அனுப்ப விரும்புகிறேன். பனிப்பொழிவு கடுமையாக இருக்கிறது. பள்ளிகளுக்கு விடுமுறை. அதிக போக்குவரத்து இல்லை. பெரும்பாலான டேக்ஸி சேவைகள் இன்று ரத்துசெய்யப்பட்டுள்ளன, ஊபர் டேக்ஸி இன்று இயங்கவில்லை. அதையும் மீறி இன்றைய நிகழ்ச்சிக்கு ஹால் நிரம்பியிருந்தது. இன்றைய சந்திப்பில் கலந்துகொண்ட பலதரப்பட்ட மக்களிடமிருந்து மிக உற்சாகமான வரவேற்பு கிடைத்துள்ளது.
Subscribe