இந்தவார சத்குரு ஸ்பாட்டில், யோகா மையங்கள் திறக்க தான் விரும்பும் இடங்கள் குறித்தும், தக்ஷிணாயனத்தின் இந்த கடைசி கட்டத்தில் நிச்சலனத்தின் சக்தியை உணர நாம் என்ன செய்யவேண்டும் என்பதையும் கூறியுள்ளார்.

நம் வாழ்வில் இரண்டு விதமான சூழ்நிலைகள் உள்ளன. ஓன்று, நாம் ஏதாவது செய்யக்கூடிய சூழ்நிலைகள். மற்றொன்று, ஏதோவொன்றின் விளைவாக வரும் சூழ்நிலைகள். நாம் நன்றாக நடத்தக்கூடிய பரிமாணங்களை நாம் நல்லபடியாக நடத்தினால்தான், நம் வாழ்வில் ஏதோவொன்றின் விளைவாக வரும் பரிமாணம் நல்லவிதமாக அமையும். சாதனா, அதாவது நம் வாழ்வில் விழிப்புணர்வாக செய்யும் செயல்களை நாம் சரியாகக் கையாளாவிட்டால், நம் வாழ்க்கை சொல்லும்படி அமையாது. அப்படியானால் ஒருவர் பூமியில் தன் கால்தடம் பதிக்க ஆசைப்படவேண்டும் என்று அர்த்தமல்ல. கால்தடம் பதிக்க விரும்புவோர், அதில் வெற்றிகரமாக இருந்தால், அவர்களால் பறக்க முடியாமல் போனது கண்கூடாகிறது. இது கால்தடம் பதிப்பது பற்றியதல்ல.

நான் எங்கு சென்றாலும் மக்கள் என்னிடம் வந்து, "சத்குரு, இங்கு ஒரு ஈஷா யோக மையம் அமைப்பீர்களா?" என்று கேட்கிறார்கள். நான் அவர்களிடம், "நான் ரியல் எஸ்டேட் வேலையில் இல்லை. என் ரியல் எஸ்டேட் மக்கள் மனங்களிலும் இதயங்களிலும் உள்ளது. ஒவ்வொருவரின் உள்ளத்திலும், உடலிலும், இதயத்திலும் யோக மையங்கள் அமைக்க விரும்புகிறோம்" என்று சொல்வேன். கட்டாயம் அந்த விதத்தில் ஈஷா யோக மையம் உலகில் வளர்ந்து வருகிறது - அது மக்களின் மனங்களிலும் இதயங்களிலும் வளர்ந்து வருகிறது. பூகோளரீதியான இடங்களுக்கு பதில், மனிதர்களே யோகத்தின் மையங்களாக மாறவேண்டும். அந்த விதத்தில் பார்த்தால் இது மிகவும் முக்கியமான மாதம். குறிப்பாக வடதுருவத்திற்கு முக்கியமானது, ஏனென்றால் இந்தப் பருவத்தில் இயற்கையிலும், சக்தி செயல்படும் விதத்திலும், ஒருவித மந்தநிலை படர்கிறது.

சிவனுக்கு இந்தக் காலகட்டம் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் அவர் நடனத்திற்கு பெயர்போனவராக இருந்தாலும், அவரின் நிச்சலனத்திற்கே அதிகம் அறியப்படுகிறார். நிச்சலனநிலைக்கு உறுதுணையாய் இந்தக் காலகட்டம் இருக்கிறது. முற்றிலும் நிச்சலனமாய் இருப்பது எப்படி என்று நாம் அறிந்தால் மட்டுமே, நம் இருப்பில் முழுமை இருக்கும். மாறாக நீங்கள் ஆடிப்பாடி வாழ்ந்தால், எல்லாம் நன்றாகவே இருந்தாலும் எவ்வளவு காலம்தான் ஏதோவொன்றைச் செய்துகொண்டே இருக்கமுடியும்? எந்தவொரு செயலும் காலத்தின் வரையறைக்கு உட்பட்டிருக்கிறது. நிச்சலனத்தில் மட்டுமே காலம் உங்களை எவ்விதத்திலும் பாதிக்காமல் இருக்கிறது. இது ஏன் இப்படி என்று பல விதங்களில் பார்க்கமுடியும்.

சிவா என்றால், எது இல்லையோ அது. அதாவது எப்போதும் நிச்சலனத்தில் இருப்பது - சதாசிவா. ஆரம்பத்தில், அசைவின்றி இருப்பதன்மூலம் இந்த நிச்சலனத்தை உங்களுக்குள் கொண்டுவர முடியும். அதற்குப் பிறகு, பல செயல்களில் ஈடுபட்டிருக்கும்போதே உங்களால் முற்றிலும் நிச்சலனமாக இருக்கமுடியும். அப்போது உங்கள் செயல் உங்கள் நிச்சலனத்தின் வெளிப்பாடாக இருக்கும், உங்கள் நிர்பந்தத்தின் வெளிப்பாடாக இருக்காது. நீங்கள் செய்பவை அனைத்தும் அந்த நிச்சலனத்திலிருந்தே வெளிப்படும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இந்த நிச்சலனத்தை உங்கள் குடும்பத்திலும் வீட்டிலும் நீங்கள் எடுத்துவர வேண்டும். உங்கள் குழந்தைகள் உட்பட, நிச்சலனமான ஒரு இடத்தில் வளர்வன அத்தனைக்கும் முற்றிலும் மாறுபட்டதொரு தன்மை இருக்கும். நிச்சலனமும் உயிர்த்துடிப்பும் கலந்ததே பிரபஞ்சத்தின் இயல்பு. இதுதான் யோகத்தின் தன்மையும், படைப்பின் தன்மையும், சிவா என்று நாம் அழைப்பதன் தன்மையும் கூட - நிச்சலனமாய் இருக்கும் அதே சமயம், மிகவும் துடிப்பானதாய் இருக்கிறது. ஏதோவொரு விதத்தில், படைப்பின் மிகவும் துடிப்பான பரிமாணம் வெறுமைதான் என்பதை, நவீன அறிவியலும்கூட அங்கீகரிக்கத் துவங்கியுள்ளது. ஏதோவொரு இடத்தில் அமர்ந்தபிறகு, அவ்விடம் உயிரோட்டமான நிச்சலனத்தை வெளிப்படுத்தும் விதமாக, ஒரு மனிதரால் இருக்கமுடியும். ஒவ்வொரு மனிதருக்கும் இப்படி ஆகும் சாத்தியம் இருக்கிறது.

பல வருடங்களுக்கு முன்பு, தமிழகத்தின் சிறு குறு ஊர்களிலும் கிராமங்களிலும் நான் யோகா வகுப்புகள் நடத்திக்கொண்டு இருந்தேன். அது அற்புதமான காலம், மிகவும் வெகுளியாக இருந்த அதே சமயம், அவர்களுக்குள் தீவிரம் தீயாய் எரிந்த மக்களை நான் கையாண்ட சமயமது. அப்போது வேலாயுதம்பாளையத்திற்கு நான் சென்றிருந்தேன். அங்கு இருந்தவர்கள், "மலை உச்சியில் இருக்கும் கோயிலுக்கு நீங்கள் வரவேண்டும்" என்று அழைத்தார்கள். அதற்கு நான், "கோயிலின்றி மொட்டையாக இருக்கும் மலை தமிழகத்தில் ஒன்றுகூட கிடையாது. ஒவ்வொரு மலைச்சிகரத்திலும் ஒரு கோயில் இருக்கும். அதை விட்டுவிடுவோம்." என்றேன். பிறகு ஒருநாள், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சில ஜீனர்கள் அல்லது சமணர்கள் தங்கிய குகையொன்று அருகில் இருக்கிறது என்றார்கள். அந்தக் காலகட்டத்தைக் கேட்டதும் பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் துளிர்த்தது. ஏனென்றால் அவர்கள் மஹாவீரரின் நேரடி சீடர்களாக இருந்திருக்கக்கூடும்.

அந்த மலையில் ஏறிச்சென்று, குகைக்குள் செல்லும் ஒரு குறுகிய பாதையை அடைந்தோம். அங்கு இருந்த அரசர், அவர்களுக்காக பாறையிலிருந்தே செதுக்கிய தட்டையான படுக்கையும் தலையணையும் அங்கு இருந்தது. அதில் ஒரு படுக்கையின்மீது நான் அமர்ந்திருந்தேன். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும், அவர்கள் நேற்றுதான் அங்கு இருந்ததுபோல உயிரோட்டமாக இருந்தது. அந்த இடம் சரியாக பராமரிக்கப்படாமல், அப்பகுதி இளைஞர்கள் கூடிக் குடித்து உடைத்த பாட்டில்கள் மற்றும் குப்பைகளுடன், பாறைகளில் யார் எவரை காதலிக்கிறார் என்ற இனிஷியல்கள் செதுக்கப்பட்டு இருந்தது. அவ்விடத்தை சுத்தம் செய்து இரவு அங்கேயே தங்க முடிவுசெய்தோம். அது ஒரு அற்புதமான இரவாக அமைந்தது - அப்படிப்பட்ட கால்தடத்தை அவர்கள் விட்டுச்சென்றிருந்தார்கள். அவர்களுக்கு கால்தடம் பதிக்கவேண்டும் என்ற எந்த நோக்கமும் இல்லை, ஆனால் அவர்கள் எங்கு நின்றாலும் அமர்ந்தாலும் இயற்கையாகவே அப்படி நடந்தது. ஏனென்றால் அவர்களுக்குள் அவர்கள் அடைந்திருந்த நிலை அப்படி.

முதலில் பாரதம் என்றாலே இதுதான். காலங்காலமாக உள்நிலையில் தேடுதலும் ஏக்கமும் கொண்டவர்கள் கிழக்கு நோக்கி வந்தது, பல மகான்கள் இங்கு சக்தியின் வலைப்பின்னலை விட்டுச்சென்றதால்தான். இவ்வளவு அற்புதமான ஒன்றை உருவாக்க, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பிரம்மாண்டமும் ஆழமும் மிக்க பல உயிர்கள் பங்களித்துள்ளார்கள். இவ்வளவு அற்புதமான ஒன்றை உருவாக்கவேண்டும் என்றால், அது ஒரு இடமாக இருந்தாலும் மனிதராக இருந்தாலும், அதற்கு நிறையவே வேலை செய்யவேண்டும். அதை அசிங்கமாக்குவதற்கு ஒரே நாள் போதும். இது தக்ஷிணாயனத்தின் கடைசி கட்டம், அதாவது ஆன்மீக சாதனைக்கான பாதையின் கடைசி கட்டம். இது பலன்கள் எதிர்பார்க்காமல் பாடுபடுவதற்கான பருவம். அனுபவ அறிவு இருக்கும் ஒருவர், வாழ்வின் ஒரு பரிமாணத்திற்கு பாடுபடவேண்டும், மற்றொரு பரிமாணம் அதன் விளைவாக வருவது என்பதை புரிந்துகொள்வார். மிகப்பெரிய விளைவுகள் அல்லது அறுவடை நமக்கு வேண்டும் என்றால், அதற்காக பாடுபடுவதும் அதே அளவு ஆழமாக இருக்கவேண்டும்.

இது நீங்கள் செய்யும் ஏதோவொன்றுக்கு கிடைக்கும் பரிசு அல்ல. படைப்பு என நாம் அழைக்கும் இயந்திரத்தின் தன்மையே இதுதான். படைப்பை நான் இயந்திரம் என்று சொல்வதற்குக் காரணம், அது தவறாது இயங்கிவருகிறது. சூரியமண்டலமும் ஒரு இயந்திரம்தான். இது ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பிறழாமல் கச்சிதமாக வேலைசெய்து வருவதால், அது ஒரு இயந்திரம் என்பதை நீங்கள் மறந்துவிடலாம். தினமும் சூரியன் உதிக்கிறது, அதனால் காலையில் அது வருகிறதா இல்லையா என்று காண்பதற்கு நீங்கள் நினைப்பதில்லை. நான் இன்றுவரை சூரியனை நித்தமும் பார்க்கிறேன், ஏனென்றால் நான் எல்லாவற்றையும் கேள்வியுடனேயே பார்க்கிறேன். நீங்களும் பார்க்கவேண்டும். உங்களைச் சுற்றி நிகழ்வனவற்றை ஒரு நிலையில் நீங்கள் கவனிக்கக் கற்றுக்கொண்டால், வெளியில் நடப்பதை மட்டுமின்றி உள்நிலையையும் கவனிக்கத் துவங்குவீர்கள். பிரபஞ்சம் முழுவதும் ஒருவித இயந்திரம் என்பதை நீங்கள் புரிந்துகொண்டால், உங்கள் உடலமைப்பும் ஒரு இயந்திரம் என்பதை உணர்வீர்கள். ஒரு இயந்திரம் எவ்வளவு சிறப்பாக இயங்குகிறது என்பது அது எவ்வளவு சிறப்பாக கவனிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தது.

நன்றாக வைத்துக்கொள்வது என்றால் வெறும் ஆரோக்கியம் மட்டுமல்ல, ஆரோக்கியம் என்பது ஒரு அம்சம் மட்டுமே. உடல் உயர்ந்த நிலையில் இயங்கும் விதமாக நன்றாக வைத்துக்கொள்ள, பரிணாம வளர்ச்சி தேவைப்படுகிறது. பரிணாம வளர்ச்சி என்றால் என்ன? பண்டைய அகழ்வாய்வுத் தளங்களில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மண்பாண்டங்களின் துண்டுகளைத் தேடுவார்கள். முதன்முதலில் மண்ணைத் தோண்டியெடுத்து மண்பானை செய்தபோது எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். முதல்முறையாக நீரை சேமித்து வீட்டிற்கு எடுத்துச்செல்ல ஒரு பாத்திரம் கிடைத்தது. அது எவ்வளவு அற்புதமாக இருந்திருக்க வேண்டும்! ஒரு எளிமையான பானை மக்கள் வாழ்க்கையையே மாற்றியது. மனித சமுதாயங்களின் முன்னேற்றத்தில் அது மிகப்பெரிய மைல்கல்லாக இருந்திருக்கும். இன்று அதே மண்ணைத் தோண்டியெடுத்து நாம் விண்கலங்களை உருவாக்குகிறோம். அதே மூலப்பொருள் கொண்டு இன்று நம்மால் பல விஷயங்களைச் செய்யமுடியும். இதுதான் பொறியியலின் பரிணாம வளர்ச்சி. அதே மூலப்பொருள் கொண்டு மனிதர்களால் இன்று பல விஷயங்களைச் செய்யமுடியும்.

சாதனா மற்றும் யோகா என்பது, இந்த மனித உடலமைப்பைக் கொண்டு என்ன செய்யமுடியும் என்ற தொழில்நுட்பத்தை பரிணமிக்கச்செய்வது. அதனால்தான் அடிப்படை ஈஷா யோகா வகுப்பை இன்னர் எஞ்ஜினியரிங் என்று அழைக்கிறோம். மனித உடலமைப்பு ஒரு இயந்திரம் போன்றது. இன்னர் எஞ்ஜினியரிங் என்றால், மிக உயர்ந்த நிலையிலான செயல்பாட்டிற்கு ஒரு மனிதரை பரிணமிக்கச்செய்வது. படைப்பின் மூலத்தைப் போல இயங்கும் ஒரு நிலைக்கு உங்களை நீங்கள் கட்டமைத்துக் கொள்ளமுடியும். "சிவா" என்று நீங்கள் சொல்லும்போது நீங்கள் மேலே பார்க்கத் தேவையிருக்காது. "சிவா" என்று சொல்லும்போது தானாக உங்கள் கண்கள் மூடும், ஏனென்றால் எல்லாம் இங்கேயே இருக்கிறது. இதுதான் மனிதர்கள் எட்டக்கூடிய உச்சம். ஒரு படைப்பாக இல்லாமல், படைப்பின் மூலமாகவே நீங்கள் மாறமுடியும். ஆனால் பக்தியும் சாதனாவும் இல்லாமல் இது நடப்பதில்லை.

உலகில் வெற்றிகரமாக இருப்பவர்களின் வாழ்க்கையை நீங்கள் பார்த்தால் - அது தொழிலதிபர், இசைக்கலைஞர், ஓவியர், என்று யாராக இருந்தாலும் சரி - அவர்கள் வெறும் அதிர்ஷ்டத்தால் அந்நிலையை அடையவில்லை. அதை நிகழ்த்த அவர்கள் அளப்பரிய வேலை செய்துள்ளார்கள். மற்றவர்கள் அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்தபோது, அவர்கள் விழித்திருந்து வேலை செய்துகொண்டு இருந்தார்கள். சின்னஞ்சிறு இன்பங்களுக்கு மற்றவர்கள் திருப்தியடைந்தபோது, அவர்கள் வேலை செய்துகொண்டு இருந்தார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு வேலை செய்கிறீர்கள், ஆனால் எதுவும் நடக்கவில்லை என்று நீங்கள் நினைத்தால், ஒரு படைப்பாக நீங்கள் பரிணமிக்கவேண்டும். ஒரு மனிதராக போதுமான அளவு பரிணமித்து வளர்ந்துள்ள ஒருவர், வெளிநிலையில் வேலை செய்யத் துவங்கவேண்டும். இந்த இயந்திரம் இயங்கும் விதத்தைக் காணும் மற்றவர்கள் இது மாயாஜாலம் என்று நினைக்கவேண்டும்.

இந்த இயந்திரம் பரிணமிப்பதே முக்கியமானது. இந்த இயந்திரம் எந்த அளவு பரிணமிக்க வேண்டும் என்றால், ஒரு பெரிய இயந்திரத்தின் ஒரு சிறு அச்சாணியாக இல்லாமல், இதுவே ஒரு இயந்திரமாக இருக்கவேண்டும். எதை நாம் சிவா என்கிறோமோ, அது இயந்திரத்தின் இன்னுமொரு பாகமில்லை, அதுதான் இயந்திரத்தின் மூலமே, அதுதான் பிரபஞ்சத்தின் மூலம். இதுதான் ஒரு யோகி அடையவிரும்பும் பரிணாம வளர்ச்சி - இன்னும் தீட்டப்பட்ட சிறு பாகமாக இல்லாமல், இயந்திரத்தின் ஆழத்திற்குள் அமிழ்ந்து அமிழ்ந்து, ஒருநாள் இயந்திரத்தின் மூலமாகவே ஆகிவிடுவதுதான் நோக்கம். பூமியின் இந்த மந்தமான பருவம் மிகவும் நல்லது - நீங்கள் முயற்சியின்றி நிச்சலனமாக மாறமுடியும்.

உங்கள் வாழ்க்கைக்குள் நிச்சலனத்தை எடுத்துவர இதுவே நேரம். இன்றுமுதல் டிசம்பர் 21ம் தேதியன்று வரும் கதிர்த்திருப்பம் வரையிலான இந்தக் காலகட்டத்தில், நீங்கள் சாதாரணமாக ஒரு நாளில் பயன்படுத்தும் சொற்களில் பாதியை மட்டுமே பயன்படுத்துங்கள். இதுதான் வாக்கு சுத்தி. அப்போது உங்கள் பேச்சு சுத்தமடையும். இது வேறு யாரோ ஒருவருக்காக அல்ல. உங்களுக்கு, உங்கள் நாவிலிருந்து வெளிப்படுவது மிகவும் முக்கியமாக இருக்கிறது. இது எமிஷன் டெஸ்ட் போன்றது. அதே செயலைச் செய்யும்போது, சாதாரணமாக பயன்படுத்தும் சொற்களில் ஐம்பது சதவிகிதம் மட்டுமே பயன்படுத்தினால், உங்களுக்குள் நிச்சலனம் வேரூன்றுவதை கவனிப்பீர்கள். இது விழிப்புணர்வுடன் அமைதியாக இருப்பது. முற்றிலும் மௌனமாக இருப்பது வேறுவிதமாக நடக்கவேண்டும் - அதற்குரிய ஆன்மீக சாதனாவுடன் சேர்ந்து நடக்கவேண்டும். வார்த்தைகள் அனைத்தையும் பேசாமல் அடக்கிவைத்து, எதுவும் செய்யாதிருந்தால், அது அமைதிக்கு வழிவகுக்காது, அப்படிச் செய்யும்போது வாயால் வெளிப்பட்டிருக்கவேண்டிய சத்தம் அனைத்தும் தலைக்கு ஏறிவிடும். அனுபவத்தால் உங்களுக்கு இது தெரிந்திருக்கும்.

விழிப்புணர்வாக, சாதாரணமாக பயன்படுத்துவதில் ஐம்பது சதவிகிதம் சொற்களைப் பயன்படுத்தி உங்கள் வாக்கியங்களை அமைத்துக்கொள்ளுங்கள். இதை இந்த மாதம் நீங்கள் செய்யவேண்டும். ஐம்பது சதவிகிதம் சொற்கள், ஆனால் அதே அளவு செயல்.

Love & Grace