நிர்குணம் - விழிப்புணர்வே விடுதலை
இந்தவார சத்குரு ஸ்பாட்டில், ஆன்மீக செயல்முறையின் அச்சாணியாக இருக்கும் "விழிப்புணர்வு" குறித்த தவறான புரிதல்களைக் களைகிறார் சத்குரு. அதனைத் தொடர்ந்து அவர் எழுதியுள்ள "நிர்குணம்" எனும் கவிதையின் மூலம், மெய்யான விழிப்புணர்விலிருக்கும் அவரின் அனுபவத்தை நம்மோடு பகிர்ந்துள்ளார்.
இந்தவார சத்குரு ஸ்பாட்டில், ஆன்மீக செயல்முறையின் அச்சாணியாக இருக்கும் "விழிப்புணர்வு" குறித்த தவறான புரிதல்களைக் களைகிறார் சத்குரு. அதனைத் தொடர்ந்து அவர் எழுதியுள்ள "நிர்குணம்" எனும் கவிதையின் மூலம், மெய்யான விழிப்புணர்விலிருக்கும் அவரின் அனுபவத்தை நம்மோடு பகிர்ந்துள்ளார்.
நான் அடிக்கடி கவனிக்கும் ஒரு விஷயம், தாங்கள் ஆன்மீகப் பாதையில் இருப்பதாக நினைத்துக்கொள்பவர்கள், தங்கள் அனுபவத்தில் இல்லாத அம்சங்களை விவரிக்க குறிப்பிட்ட சில வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள், அதனால் அதுகுறித்த தவறான புரிதல்களை வளர்த்துக் கொள்கிறார்கள். "விழிப்புணர்வு" என்ற வார்த்தையும், அதனோடு தொடர்புடைய சில வார்த்தைகளும் இதில் உள்ளடங்கும். விழிப்புணர்வை அடிக்கடி விழிப்புடன் குழப்பிக் கொள்கிறார்கள், இவ்விரண்டும் ஒன்று கிடையாது. விழிப்பாக இருப்பது, மனம் அல்லது உடல் சார்ந்த தன்மை. விழிப்புணர்வு என்பது மனம் அல்லது உடலின் தன்மையல்ல - அது உயிரின் தன்மை. பலர் இந்த வேறுபாட்டைப் புரிந்து கொள்வதேயில்லை.
அனைத்திற்கும் ஆணிவேர் ஒன்றுதான், ஆனால் அதுதான் எல்லா சிக்கல்களுக்கும் அடிப்படை. விழிப்புணர்வு அல்லது உயிர் என்று நாம் எதைச் சொல்கிறோமோ அதன் நுட்பத்தைப் புரிந்துகொள்ள எந்தவொரு மனதாலும் முடியாது. இவ்விரண்டும் வெவ்வேறு கிடையாது. ஆத்மா அல்லது சுயம், பரமாத்மா அல்லது மெய்யான சுயம், அண்டம் அல்லது உயிரின் சிறு துளியான பிண்டம், பிரம்மாண்டம் அல்லது அண்டவெளி என்று நீங்கள் அதனை எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் - ஆனால் இவை வெறும் வார்த்தைகள். அடிப்படையாக, விவரிக்க இயலா ஒன்றை நாம் வார்த்தையால் சுட்டிக்காட்ட முயல்கிறோம். இந்த எல்லையில்லா நிகழ்வை எந்தவொரு வார்த்தையாலும் விளக்க இயலாது.
விளக்கம் தருவதற்கு ஓர் உருவம், வடிவம் மற்றும் குணம் தேவைப்படுகிறது. விழிப்புணர்விற்கோ அதற்கென எந்தவொரு குணமும் கிடையாது. அதனால்தான் எதிர்மறையான வார்த்தைகள் கொண்டு நாம் அதனை விவரிக்கிறோம். நிர்குணம் என்கிறோம், அதாவது "குணமில்லாதது." வார்த்தைகளால் விளக்க முயன்றால் இதுதான் மிக நெருக்கமான விளக்கம். குணமில்லாததை தர்க்கமனத்தால் கிரகித்துக்கொள்ள இயலாது. அது எல்லா இடத்திலும் இருப்பதால், அதனோடு போராடவும் இயலாது. மாமுனிவர் அல்லம மஹாபிரபுவின் வாழ்க்கையில் ஒரு அழகான நிகழ்ச்சி நடந்தது. வீரசைவர் சமூகத்தின் தூணாகப் போற்றப்படும் அல்லமா கர்நாடகத்தின் வடக்குப்பகுதியைச் சேர்ந்தவர்.
Subscribe
ஒருநாள் கோரக்ஷா என்ற பெயருடைய ஒரு யோகி அல்லமாவை சந்திக்க வந்தார். அவர் அல்லமாவைப் பற்றி அற்புதமான விஷயங்களைக் கேள்விப்பட்டு அவருடன் போட்டியிட வந்திருந்தார். அப்போது கோரக்ஷாவிற்கு 280க்கு சற்று அதிகமான வயதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மிகத் தீவிரமான யோகா செய்து உடலின் பஞ்சபூதங்கள் மீது ஆளுமை கொண்டு, உடல் என்பது வயதைக் கடந்து நிற்கும் விதத்தில் உறுதிப் படுத்தியிருந்தார். அவர் அறிந்திருந்த அனைவரும் இறந்துவிட்டனர், ஆனால் அவர் உடல்வலிமையுடன் இளைஞனைப்போல வாழ்ந்துகொண்டு இருந்தார். அதுதான் அவருடைய பெருமை.
கோரக்ஷா ஒரு நதிக்கரையில் அல்லமாவை சந்தித்து, "நான் ஒரு உண்மையான யோகி. வேண்டுமென்றால் என்னைப் பரிசோதித்துப் பாருங்கள், உங்கள் வாளை எடுத்து என் தலைமீது வீசுங்கள், என்ன நடக்கிறதென்று பாருங்கள்." என்றார். அல்லமா அவர் வாளை எடுத்து அந்த யோகியின் தலைமீது வீசினார். அது பாறைமீது பட்டதுபோல தெறித்தது. கோரக்ஷா, "இதுதான் என் பலம், எந்தவொரு வாளாலும் என்னை வெட்டமுடியாது, நான் கிட்டத்தட்ட மரணத்தை வென்றவன். உங்களால் என்ன செய்யமுடியும்?" என்று கேட்டார். அல்லமா சிரித்தார், பிறகு "சரி, நீங்களும் உங்களை வாளைப் பயன்படுத்துங்கள்." என்றார். முதலில் அந்த யோகி தயங்கினார், அல்லமா பாறைபோல் உறுதியாகத் தோன்றவில்லை, ஆனால் அல்லமா அவருக்கு தைரியம் தந்து வாளைப் பயன்படுத்தச் சொன்னார். கோரக்ஷா வாளை எடுத்து தன் முழு பலத்துடன் அல்லமாவின் தலைமீது வீசினார். வாள் அல்லமாவின் உடல்வழியாக காற்றைக் கிழிப்பதுபோல் நேரே ஊடுருவிச் சென்றது. கோரக்ஷா தடுமாறி கீழே விழுந்தார், "என்ன இது?" என்று கேட்டார். அதற்கு அல்லமா, "இது இதுவுமல்ல, அதுவுமல்ல. இது ஷிவா" என்றார்.
ஏதோவொன்று இதுவுமில்லாமல் அதுவுமில்லாமல் இருக்கும்போது, அதற்கு எந்தவொரு குணமுமில்லை. இதுதான் ஷிவா - "எது இல்லையோ அது." இதுதான் விழிப்புணர்வின் தன்மை - அதற்கென எந்த குணமுமில்லை, எந்த எதிர்ப்புமில்லை, அதற்கு எதுவுமில்லை. இதுதான் உயிரின் தன்மையும், உயிரின் மூலத்துடைய தன்மையும் கூட. ஆனால் மனிதர்களுக்கு விழிப்புணர்வின் ஏதோவொரு அனுபவம் கிடைத்திருந்தால், அது பெரும்பாலும் மனம் எனும் வடிகட்டியின் வழியாகத்தான் வந்திருக்கக்கூடும். குணமில்லாத மனம் கிடையாது. நீங்கள் அதிகபட்சம் மனதை அமைதிப்படுத்தி, கண்ணாடி போல குணமில்லாமல் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வைத்துக்கொள்ள முடியும். குணங்களும் தகவல்களும் இல்லாமல் மனதால் இயங்க இயலாது. மனதை ஒருவித அமைதியான நிலைக்குக் கொண்டுவந்தால், விழிப்புணர்வு என்று நாம் சொல்லும் அந்தப் பரிமாணத்தைத் தொடமுடியும். அதனை நாம் உயிர், உயிரின் மூலம், தெய்வீகம், நிர்குணம், ஆத்மா என்று எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம், எல்லாம் ஒன்றுதான்.
பெரும்பாலான மனிதர்களுக்கு, விழிப்புணர்வு என்பது மனதால் பெருமளவு திரையிடப்பட்டு சிதைவுறுகிறது, ஏனென்றால் விழிப்புணர்வு மனதின் மூலம் பிரதிபலிக்கிறது. மனம் சிறிது நேரம் அசைவின்றி இருந்தால் விழிப்புணர்வு தெளிவாக இருக்கும். ஆனால் அதில் சிறிதளவு ஓட்டம், எண்ணங்கள், உணர்வுகள் வந்துவிட்டால், விழிப்புணர்வு கறைபட்டுவிடும். நீங்கள் விழித்திருக்கிறீர்கள், இதை படித்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்பதே நீங்கள் விழிப்புணர்வாக இருக்கிறீர்கள் என்பதற்கு அத்தாட்சி. மொழியையும், சொல்லப்படுவதன் முக்கியத்துவத்தையும், அர்த்தத்தையும் புரிந்துகொள்ள முயல்வது - இவையனைத்தும் மனதிலிருந்து தோன்றுகிறது. மனம் என்பதால் வெளியிலிருந்து உள்ளீடுகளும் உதவியும் இல்லாமல் இயங்க முடியாதது.
உங்கள் மனதின் தன்மையை வைத்து நீங்கள் இயங்கினால், அதன் பதிவுகள் பெரும்பாலும் சமூக உள்ளீடுகளிலிருந்து வந்திருப்பதால், நீங்கள் தானாகவே சிக்கிப் போவதை நாடுவீர்கள். உங்களுடன் தொடர்பில் வரும் மனிதர்களுடனும் பொருட்களுடனும் ஒட்டிக்கொள்ள விரும்புவீர்கள். மாறாக, விழிப்புணர்வின் தன்மையோ விடுதலை. மனம் முற்றிலும் அசைவற்ற நிலையை அடையும்போது, நீங்கள் விடுதலையாகிறீர்கள். தற்போது, விழிப்புணர்வு அல்லது உயிரின் மூலம் என்பது உங்கள் உடலோடு ஒட்டியிருப்பது கர்மப்பதிவுகளின் பசையால்தான். இந்த கர்மவினைகளின் பசையைக் கரைத்துவிட்டால், இது உங்கள் தியானம் மிகவும் ஆழமாகும்போது நடக்க வாய்ப்பிருக்கிறது, அப்போது நீங்கள் உடலை விட்டுவிடலாம். அதனால்தான் எவரும் இங்கேயே ஞானோதயம் அடையாதபடி நான் பார்த்துக் கொள்கிறேன், எனக்கு போட்டி வரக்கூடாது என்பதற்காக அல்ல. பிரச்சனை என்னவென்றால், விழிப்புணர்வில் நீங்கள் உயர்ந்திடலாம், ஆனால் ஞானத்திலும் விவேகத்திலும் அவ்வளவு சுலபமாக உயர்ந்திட முடியாது.
நீங்கள் எந்தத் தடையையும் உருவாக்கவில்லை என்றால், உடல் மற்றும் மனதின் கட்டமைப்புகளுடைய எல்லைகளைத் தாண்டி, உங்கள் விழிப்புணர்வில் நீங்கள் மிகச் சுலபமாக உயரலாம், ஏனென்றால் அதன் தன்மையே அதுதான். இப்போது அதற்குப் பல தடைகள் போட்டு கீழே பிடித்து வைத்திருக்கிறீர்கள். விழிப்புணர்வை உயர்த்தி, அதே சமயத்தில் உங்கள் உடல் மற்றும் மனதின் கட்டமைப்பை நீங்கள் சிதைக்காமல் வைத்துக்கொள்ள விரும்பினால், இது எப்படி உருவாகியுள்ளது என்பதை அக்குவேறு ஆணிவேறாக புரிந்துகொள்ள வேண்டும். இது நேரம் எடுக்கும் ஒரு கற்றல் செயல்முறை.
விழிப்புணர்விற்கு அதற்கென ஒரு தனி குணம் ஒருபோதும் கிடையாது. உங்கள் மனமெனும் வண்ணக் கண்ணாடியின் வழியாக எல்லாவற்றையும் உள்வாங்குவதால் மட்டும் தான், அது ஒன்றாக இருக்கும்போதிலும் வெவ்வேறு விதமான விழிப்புணர்வு இருப்பது போலத் தெரிகிறது. உங்களைச் சுற்றியுள்ள காற்றும், உங்களுக்குள் உள்ள உயிரும், பிரபஞ்சத்தில் பரவிக் கிடப்பதும், அடிப்படையில் ஒரே குணம் கொண்டவை தான், அல்லது சரியாகச் சொல்வதென்றால் எல்லாம் குணத்தைக் கடந்தவை - நிர்குணமானவை.
நிர்குணம்
என்னுடையதென நான் மெய்யாய் அழைப்பது
எதுவுமில்லாததால், இவ்வுடலில்லை,
வேறு எவருமில்லை, இவ்வுலகுமில்லை,
வேறு உலகுமில்லை
நண்பர்களும் எதிரிகளும் சொந்தமில்லை.
இழப்பது பற்றி பயமில்லை, இலாபம் குறித்த
எதிர்பார்ப்பில்லை. நான் இங்கே பொருளற்ற
ஒரு வெற்றிடமாய். ஆளுமையற்ற
ஓர் இருப்பாய். சுயமற்ற
ஓர் உயிராய்.
அதனால் செயல்
நிச்சலனமாகிவிட்டது
உலகின் இரைச்சல் என் அமைதியாக
இந்த அண்டவெளியே என் உயிராகிவிட்டது.