துரதிர்ஷ்டவசமாக, ஒரு மிகப்பெரிய பிரச்சனையை, நாம் இன்னும் சின்னச் சின்னத் துண்டுகளாகவே அணுகி வருகிறோம். உலகில் அப்படிதான் எல்லாம் இயங்குகிறது - அதனால் ஒரு சமயத்தில் ஒன்றை எடுத்து, ஒவ்வொன்றாக அணுகுகிறோம். பிளாஸ்டிக் என்பது ஒரு தனி பிரச்சனையில்லை. அடிப்படையில், நாம் வாழும் விதம்தான் பிரச்சனை. உயிராக இருக்கும் நாம், நாம் உயிர் என்பதை மறந்துவிட்டோம். நாம் உயிர்வாழ்வது, நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றுடனும் தொடர்புடையது என்பதை நாம் மறந்துவிட்டோம். ஒரு மனிதருக்கும் அவரைச் சுற்றையுள்ள சூழலுக்கும் இடையே, தினமும் தோராயமாக ஏழு கிலோ அளவிலான பரிமாற்றங்கள் நடக்கின்றன என்று கூறப்படுகிறது. உயிருடனான தொடர்பை நாம் இழந்துவிட்டோம் - நம் உயிருடனான தொடர்பையும், உயிருக்கு ஊட்டமளிக்கும் எல்லாவற்றுடனுமான தொடர்பையும் நாம் இழந்துவிட்டோம். இதுதான் உலகில் பல்வேறு விதங்களில் பிரதிபலிக்கும் அடிப்படையான பேரிடர்.

நம் தேசத்தில், நிலம், மண் மற்றும் நீர்வளம் அபாயகரமான நிலையில் இருக்கிறது. 130 கோடி மக்களுடன், மண்வளமும் நீர்வளமும் இப்படி வேகமாக குன்றுவதற்கு நாம் அனுமதித்துள்ளோம் என்றால், நம் தேசத்தை நாம் இன்னும் நம் கைகளில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது. நதிகள் மீட்பு இயக்கத்தின்மூலம், நாம் முதலில் தண்ணீருக்கு கவனம் கொடுத்தோம். இந்த வருட சுற்றுச்சூழல் தினத்திற்கு ஐ.நா. பிளாஸ்டிக்கிற்கு கவனத்தைத் திருப்பியுள்ளது, இது மிகப்பெரிய பிரச்சனை. பிளாஸ்டிக் என்பது, இப்போது நாம் எப்படி இருக்கிறோம், எவ்வளவு பொறுப்பின்றி இருக்கிறோம் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம். பூமியில் நாம் உருவாக்கியிருக்கும் பல்வேறு பொருட்களில், பிளாஸ்டிக் மிக அற்புதமான ஒன்று. அதை சரியாகக் கையாண்டால், அதை மீண்டும் மீண்டும் மறுசுழற்சி செய்யலாம். ஆனால் அதை மிகவும் பொறுப்பின்றி கையாண்டுள்ளதால் விஷமாக மாறியுள்ளது, எல்லாவற்றுக்குள்ளும் புகுந்துள்ளது. இன்று பல்வேறு நுண்ணுயிர்கள் தமக்குள் பிளாஸ்டிக் நுண்துகள்களை சுமப்பதைக் கண்டறிந்துள்ளார்கள்.

இது விவாதம் செய்வதற்கான நேரமல்ல. இது செயலில் இறங்குவதற்கான நேரம். இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கூடிய பல அற்புதமான மனிதர்கள் இருந்தாலும், ஜனத்தொகையின் பெரும்பகுதி தாமாகவே திருத்தங்கள் செய்வார்கள் என்று நான் நம்பவில்லை. சட்டம் அவர்களை இந்த திசை நோக்கித் தள்ளவேண்டும். அதனால்தான் ஒருமுறை பயன்படுத்தி தூக்கியெறியும் பிளாஸ்டிக்கை தடைசெய்யவேண்டும் என்று கேட்கிறோம்.

spot2

சத்குரு: "பிளாஸ்டிக்கை இப்படி பயன்படுத்தினீர்கள் என்றால், பூமிக்கு என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள் என்பதை உடனே புரிந்துகொள்வீர்கள்."

கடந்த இருபது வருடங்களாகத்தான் இது நடந்திருக்கிறது. இந்த தேசத்தில் இதற்குமுன் இப்படி நாம் பிளாஸ்டிக்கை பயன்படுத்தியதில்லை. என்றாவது ஒருநாள் வீட்டிற்கு ஒரு பிளாஸ்டிக் கவர் வந்தால், என் அம்மா அதை பிற்காலத்தில் மீண்டும் உபயோகிப்பதற்காக பத்திரமாக மடித்துவைப்பார். அதை இரண்டு மூன்று வருடங்களுக்குப் பயன்படுத்துவோம். அப்போது வாழ்ந்தது போல இன்று மீண்டும் வாழ்வது கடினமில்லை. நம் உறுதியை வெளிப்படுத்த, தனிமனிதர்களாக நாம் செய்யக்கூடிய சின்னச்சின்ன விஷயங்கள் முக்கியம்தான். ஆனால் பிரச்சனை மிகப்பெரிதாக இருக்கிறது. அதனால் அதற்கான தீர்வையும் அப்படியே நாம் அணுகவேண்டியிருக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தற்போது கிட்டத்தட்ட நாற்பது சதம் பிளாஸ்டிக், பேக்கேஜிங் செய்வதில் பயன்படுத்தப்படுகிறது. நாம் அணுகவேண்டியது இதைத்தான், ஏனென்றால் அங்குதான் நாம் வெகுசுலபமாக இதை தவிர்க்கமுடியும். உலகில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கில் 8 முதல் 9 சதம், தண்ணீர் பாட்டில்களாக இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் கிட்டத்தக்க 50,000 கோடி தண்ணீர் பாட்டில்களை உற்பத்தி செய்கிறோம். உலகின் மிகப்பெரிய PET -பாட்டில் உற்பத்தியாளரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அவர்கள் இப்போது மாற்றத்திற்கு விருப்பத்துடன் இருக்கிறார்கள். இந்த நோக்கத்தை அரசுகள் வலியுறுத்த வேண்டும் என்று விரும்புகிறோம்.

தாங்கள் உயிர்வாழ்வதற்கு இப்படிச் செய்வது அவசியமாக இருக்கிறது என்பதை தொழிற்சாலைகளே உணர்ந்துவிட்டார்கள். இப்போது இந்த கம்பெனிகள், நெதர்லாந்து பல்கலைக்கழகங்கள், மற்றும் சில மார்க்கெட்டிங் கம்பெனிகளுடன் இணைந்து, இந்த PET பாட்டில்களை தொடர்ச்சியாக மறுசுழற்சி செய்யக்கூடிய ஒன்றாக மாற்றுவதற்கு முயற்சியெடுத்து வருகிறார்கள். அதாவது அதே பாட்டில்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்திக்கொண்டே இருக்கலாம். வாழ்க்கை முறையில் மாற்றங்கள் கொண்டுவருவது முக்கியம். நாம் 760 கோடி மக்கள் பற்றி பேசுகிறோம். அவர்கள் அனைவரின் வாழ்க்கை முறைகளையும் மாற்றுவது நெடுங்காலம் பிடிக்கும் திட்டமாக இருக்கப்போகிறது. அதிலும் ஒரு தலைமுறையை மாற்றுவதற்குள் அடுத்த தலைமுறை வந்து வேறேதோ செய்துகொண்டு இருக்கும். மறுசுழற்சி என்பது கட்டாயம் நிகழவேண்டும் என்று நாம் சட்டம் கொண்டுவர வேண்டும்.

ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், பிளாஸ்டிக் பல கிரேடுகளில் வருகிறது. அதில் சிலவற்றை மறுசுழற்சி செய்யமுடியாது - அவை முற்றிலுமாக தடைசெய்யப்பட வேண்டும். மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக்கில் கூட, பல விதங்கள் இருக்கின்றன. அமெரிக்காவில், மிகப்பெரிய தொழில் நிறுவனங்களை, அவர்களுக்கான தீர்வுகளுடன் அணுகும் ஒரு சக்திவாய்ந்த குழுவொன்றை உருவாக்கியுள்ளோம். உதாரணத்திற்கு, கோக் பாட்டில்களை மிக சுலபமாக மறுசுழற்சி செய்யமுடியும். ஆனால் அதில் இருக்கும் பேப்பர் லேபிளால், தற்போது மறுசுழற்சி செய்யமுடியாமல் இருக்கிறது. அந்த லேபிளுடன் சேர்த்து மறுசுழற்சி செய்தால் அதன் தரம் குறைந்துவிடும், உணவுக்கான புட் கிரேடு பிளாஸ்டிக்காக அது இருக்காது. அந்த லேபிளும் அந்த பாட்டிலுடைய கிரேடிலேயே இருந்தால், அதை மறுசுழற்சி செய்வது சுலபமாக இருக்கும். பாட்டில்மீது பெயரை அப்படியே அச்சிடக்கூடிய பிரின்டிங் கம்பெனிகளிடமும் பேசி வருகிறோம்.

தொழிற்சாலைகளுக்கு, அவர்களுக்கான தீர்வுகளுடன் செல்ல விரும்புகிறோம் - அவர்களை எதிர்த்துப் போராடவோ, தொழிலை அழிக்கவோ நாம் விரும்பவில்லை. ஒரு தொழிலின் பொருளாதார நலனும், ஒரு தேசத்தின் பொருளாதார நலனும் முக்கியம். துரதிர்ஷ்டவசமாக, இதுவரை எப்போதுமே பொருளாதாரமா சுற்றுச்சூழலா என்ற நிலையே நிலவியுள்ளது. நதிகள் மீட்பு இயக்கத்தில் இதைத்தான் நாம் மாற்றியுள்ளோம். சுற்றுச்சூழலா பொருளாதாரமா என்ற சண்டை வந்தால், உங்கள் வீட்டிலும் சமுதாயத்திலும் தேசத்திலும் எது ஜெயிக்கும் என்று நினைக்கிறீர்கள்? நிச்சயமாக பொருளாதாரம்தான் ஜெயிக்கும். பொருளாதாரம் இன்று கவனிக்கவேண்டியது, சுற்றுச்சூழல் நாளை கவனிக்கவேண்டியது என்று மக்கள் நினைக்கிறார்கள். அப்படியில்லை, சுற்றுச்சூழல் என்பதும் இன்றே கவனிக்கவேண்டிய ஒன்று.

wed-spot3

எரிக் சோலெம்: "இதற்கு சத்குருதான் சரியான மனிதர். ஏனென்றால் தனிமனிதரின் மாற்றத்தோடு, சமுதாயம், பொருளாதாரம் மற்றும் அரசியல் மாற்றமும் ஒருங்கே நடக்கவேண்டும் என்று, தேவையான இருவேறு அணுகுமுறைகளையும் ஒன்று சேர்க்கிறார்.

"சுற்றுச்சூழல் மாசுக்குப் பெரும்பங்கு வகிக்கும் தொழில்களை, சுற்றுசூழல் பற்றிய கவனத்துடன் இயங்கும் விதமாக நாம் மாற்றிட வேண்டும். இதனை நாம் எல்லா நிலைகளிலும் பார்க்கவேண்டும். வீட்டருகே இருக்கும் பலசரக்குக் கடையில், "பிளாஸ்டிக் பயன்படுத்தாதீர்கள்" என்று வெறுமனே சொல்லிவிட்டால், அவர் வேறு என்ன பயன்படுத்துவார்? அதற்கு மாற்றாக அவர் என்ன பயன்படுத்தலாம் என்று சொல்லவேண்டும், அதை எப்படி பயன்படுத்தலாம் என்று சொல்லவேண்டும், அது அவருக்கும் அவரது வாடிக்கையாளருக்கும் எப்படி பயனுள்ளதாக இருக்கும் என்பதை விளக்கவேண்டும். வெறுமனே தொழில்களையும் தொழிற்சாலைகளையும் எதிர்த்துப் போராடுவதற்கு பதிலாக, இப்படிப்பட்ட நடவடிக்கைகளைக் கொண்டுவர வேண்டும். ஏனென்றால் நீண்டகாலத்தில் பார்த்தால், அது வேலைசெய்யாது - பொருளாதாரம்தான் ஜெயிக்கும். சுற்றுச்சூழல் ஜெயிக்கவேண்டும் என்றால், சுற்றுச்சூழலுக்கும் பொருளாதாரத்துக்கும் நாம் மணம்முடிக்க வேண்டும். அதுதான் என் முயற்சி.

twittertamilbeatplastic

அன்பும் அருளும்,
 


இந்த நிகழ்ச்சியின் முழு ஆங்கில வீடியோ தொகுப்பு 

plastictweetontn

2019-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை: தமிழக அரசு அறிவிப்பு - ஹிந்து தமிழ் பத்திரிகையின் தொகுப்பு