ஆன்மீகப் பாதையில் நம்மை முடக்குவது என்ன, அதை தகர்த்து அடுத்த நிலைக்கு எப்படி செல்வது, என்பதைப் பற்றி இந்த வார சத்குரு ஸ்பாட்டில் எழுதியிருக்கும் சத்குரு, என்னென்ன விஷயங்கள் தடுக்கின்றன, அவற்றை தாண்டிச் செல்வது எப்படி என்று நடைமுறை தீர்வுகளை எளிமையாய் வழங்குகிறார்.

ஆன்மீகம் என்றால் பலபேருக்கு பலவாறாக இருக்கிறது. ஆன்மீகம் என்றால் அன்பாக இருப்பது, புன்னகைத்தபடி இருப்பது, மென்மையாக நடப்பது என்றே பெரும்பான்மையானவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மற்றவர்களோ ஆன்மீகம் என்றால் ஓருவகையான குறைபாடு என எண்ணுகின்றனர். மற்றொரு பொதுவான எண்ணம் - ஆன்மீகம் என்றால் நல்லவராக இருக்க முயல்வது. வேறுசிலரோ, ஆன்மீகம் என்றால் முரட்டுத்தனமாய் இருப்பது என நினைக்கின்றனர் - புகைப்பது, கிறுக்குத்தனமாய் இருப்பது, பொறுப்பில்லாமல் இருப்பது என இவை யாவும் அதில் அடங்கும். இன்னும் சிலருக்கு ஆன்மீகம் என்றால், சந்தோஷம், அமைதி அல்லது பேரானந்தம். ஆன்மீகத்தில் இருப்பது என்றால் இவை எதுவுமே அல்ல. ஆன்மீகத்தில் இருப்பது என்றால் உடலாய் இல்லாமல், இங்கு உயிராய் இருப்பது.

இதை உணர தற்சமயம் உங்களுக்கு சில தடைகள் இருக்கலாம். உங்களை ஊனமாய் வைத்திருப்பது எது என்று நீங்கள் அறிய வேண்டும். நீங்கள் அத்தனை நல்லவராய் இருந்து, உங்களைச் சுற்றியுள்ளவற்றை நீங்கள் உணராமல் இருக்கலாம், அல்லது நீங்கள் அத்தனை முட்டாள்தனமாய் இருந்து உங்களுக்குள்ளும் உங்களைச் சுற்றியுள்ள உயிர் பற்றியும் உணராமல் இருக்கலாம். அல்லது, மிகுந்த கட்டுப்பாடு உடையவராய் இருந்து உங்களுக்கு எதுவுமே நிகழாமல் இருக்கலாம். உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அந்த ஒரு ஊனம் என்ன? நீங்கள் ஆன்மீகப் பாதையில் சுகமாய் சுலபமாய் நடக்க அனுமதிக்காதது என்ன?

நீங்கள் இதைச் செய்யலாம்: கண்களை மூடி, உங்களுக்குள் பாருங்கள். ஆன்மீகத்தைப் பற்றிய உங்கள் கருத்து என்னவென்று பாருங்கள். நீங்கள் இன்னும் கொஞ்சம் ஆன்மீகத்தில் ஈடுபட, உங்களுக்குள் இருக்கும் உயிரை நீங்கள் இன்னும் கொஞ்சம் கூருணர்ச்சியோடு உணர, உங்களுக்கு என்ன நடக்க வேண்டுமென்று நினைக்கிறீர்கள். நீங்கள் உடலாய் அல்லாமல், உயிராய் இருக்க தடையாய் இருக்கும் ஒரு விஷயம் என்ன என்று கண்டறியுங்கள். அந்த ஒரு விஷயத்தை நீங்கள் குறிப்பிட்டுச் சொன்னால், உங்களுக்காக அதனை நான் சரிசெய்கிறேன்.

ஒரு சில பொதுவான தடைகளைப் பார்ப்போம். உடல் இறுக்கமாய், உராய்வுத்தன்மையோடு இருப்பதை உணர்ந்தால், அதனை ஹடயோகா செய்து சரிசெய்யலாம். இந்த உடல் ஒரு மெஷின், இதனை பயன்படுத்துவதன் மூலம் அது சிறப்பாய் இயங்கும். உடலில் இறுக்கமும், உராய்வுத்தன்மையும் இருந்தால் நீங்கள் மரண விறைப்பினை அணுகிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஹடயோகம் மரண விறைப்பினை உடலில் தங்கவிடாது. நீங்கள் உயிருடன் இருக்கும்போது முழுமையான உயிரோட்டத்துடன் இருக்கவேண்டும். உயிரோட்டம் என்று நான் சொல்லும்போது, அதன் ஒரு அம்சம் விறைப்புத்தன்மையை உடலிற்குள் தங்கவிடாமல் செய்வது. உங்கள் உடல், மனம், சக்திநிலைகள் திரவத்தன்மையில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே வாழ்வினை ஆழமாய் உணர்வீர்கள்.

ஒரு சிலருக்கு சாதனா செய்யும் எண்ணம் இருக்கலாம், ஆனால் சோம்பேறித்தனத்தினால் அது முடிந்து போகலாம். அனைவருக்கும் ஒரே அளவிலான தீவிரம் இருப்பதில்லை. ஆனால், எது நிகழ வேண்டுமோ, அது நிகழ வேண்டும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இப்படி முடிவு செய்துகொள்ளுங்கள்: ஷாம்பவி இல்லையேல், உணவு இல்லை. இது மிகக் கடுமையானது என எண்ண வேண்டாம். யோகப் பாதையில் இன்னும பல கடுமையான முறைகளை மக்கள் செய்திருக்கிறார்கள். 24 மணி நேரமும் தியானம் செய்ய நினைக்கும் யோகிகள் தன்னுடன் தேளினை வைத்துக் கொள்வர். அதனிடம் ஒரு கடி வாங்கிக் கொண்டு விழித்திருப்பர். அதே போன்ற அனுபவம் கிடைப்பதற்காக விரலை வெட்டி அதில் எலுமிச்சைப் பழத்தை வைத்துக் கொள்வர். உங்களுக்கோ, வெறும் 21 நிமிட ஷாம்பவி மட்டும்தான். அதனால், இந்த அளவு உறுதியாவது உங்களுக்கு இருக்க வேண்டும். இது சிந்திக்கும் ஆன்மீகம் அல்ல, பேசும் ஆன்மீகம் அல்ல. இது ஆன்மீகத்தை கடைபிடிப்பது, ஆன்மீகத்தில் வாழ்வது.

உடலில் நோய்கள் இருந்தால், நீங்கள் கடினமாய் உழைக்கத் தேவையிருக்கும். ஏனெனில், உடலில் நோய் இருந்தால் உங்கள் மொத்த கவனமும் அதன்மீது செல்லும். மூச்சுவிட இயலாதபடி உங்களுக்கு ஆஸ்துமா அட்டாக் வந்தால், மூச்சுவிட்டால் போதும் என்றுதான் இருக்கும். வேறெதுவும் ஒரு பொருட்டாக இருக்காது. இது எல்லாவிதமான வலிகளுக்கும் நோய்களுக்கும் பொருந்தும். உடலை சரியாய் பராமரிக்காவிட்டால், அது உங்கள் மொத்த கவனத்தையும் அதன் பக்கம் திருப்பிக் கொள்ளும். உங்களிடம் இருக்கும் அத்தனை விஷயங்களும் உடலைப் பராமரிப்பதிலேயே சென்றுவிடும். இதுதான் உடலின் இயல்பு.

உடலை நன்றாய் வைத்திருப்பது என்று நாம் சொல்லும்போது, நாம் அழகு பற்றியோ இன்னொருவர் முன் பகட்டாய் இருப்பது பற்றியோ சொல்லவில்லை. உங்கள் வாழ்க்கையில் உடல் ஒரு தடையாய் இருக்கக்கூடாது என்பதுதான் நாம் சொல்லவரும் கருத்து. உடல் ஒரு படிக்கல்லாக இருக்கவேண்டும். உடல் தடையாக மாறினால், அதனை வெற்றிக் கொள்வது சிரமமாகிவிடும். நீங்கள் ஆன்மீகத்தில் இருந்தாலும் உடலிற்காக சிரமேற்கொள்ள வேண்டியிருக்கும். அதே சமயம், உடல் எப்போது வேண்டுமானால் தொந்தரவு தரலாம் என்பதை நீங்கள் உணர்ந்துகொண்டால், உடலின் கட்டுப்பாடுகளிலிருந்து கடந்து போவதற்கான ஏக்கம் வளரும்.

உங்கள் மனம் ஒரு முக்கிய தடையாய் இருக்கலாம். பரிணாம வளர்ச்சி நிகழ பல கோடி ஆண்டுகள் ஆகியிருக்கிறது. குரங்கிலிருந்து மனிதனாய் மாறியது என்னவோ துரிதமாய் நிகழ்ந்திருக்கிறது எனலாம். உடலளவில், சிம்பன்சி எனப்படும் மனித குரங்கிற்கும் மனிதனுக்கும், மரபணு ரீதியில் வெறும் 1.23 சதவிகித வித்தியாசம் மட்டுமே இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், அறிவு, விழிப்புணர்வுப்படி பார்த்தால் மனிதர்கள் மனித குரங்குகளைவிட பல மடங்கு வளர்ச்சியடைந்த நிலையில் இருக்கிறோம். இந்த அளவு அறிவு நமக்கு சற்றே புதிதுதான். பிரச்சனை என்னவென்றால், இருக்கும் அறிவுக்கு ஏற்ற திடமான அடித்தளம் நம்மிடம் இல்லை. இதனால்தான் யோகா - யோகா மூலம் திடமான அடித்தளம் அமைப்பதால், உங்கள் அறிவு உங்களுக்காக வேலை செய்யும், நீங்கள் நினைத்தபடி செய்யும். எங்கு செல்லவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அங்கு சென்றால்தான் கைகளுக்கு பலனுண்டு. அதே போல, நீங்கள் எங்கு செல்லவேண்டும் என்று நினைக்கிறீர்களோ, மனம் அங்கு சென்றால்தான் அதுவும் பயனுள்ளதாய் இருக்கும். மனம் எல்லா இடத்திற்கும் சென்றால், தொந்தரவுதான்.

மற்றொரு தடை உங்கள் கர்மமாக இருக்கலாம். கர்மம் ஏதோ சும்மா நிகழ்ந்துவிடுவதில்லை. கர்மம் என்றால் நம் வாழ்க்கையையே நம் கைகளில் எடுத்துக்கொள்வது. வாழ்க்கை எனது உருவாக்கம்தான் என்பதனை நீங்கள் உணர்ந்தால், விதியை உங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளமுடியும். அப்போதுகூட, திறன்சார்ந்த பிரச்சனைகள் ஏற்படக்கூடும் - என்னால் உங்களுக்கு உதவ முடியும். நான் அதற்காகத்தான் இருக்கிறேன். ஆனால், நீங்களே உங்கள் வாழ்க்கையை உங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளாதபோது, நான் எதற்கு உங்கள் வாழ்க்கையை என் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும்? அது வேலை செய்யாது. உங்கள் கைகளில் நீங்கள் எடுத்துக்கொண்ட பின், நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை உங்களால் செய்ய இயலாதபோது, நான் உள்ளே வரலாம். அப்போது என்னால் சில விஷயங்களை உங்களுக்காக செய்ய முடியும்.

தன்னை எப்போதுமே தற்காத்துக் கொள்ளும் மற்றொரு கூட்டம் இருக்கிறது. யாரோ ஒருவர் தன்னை பயன்படுத்திக் கொள்வார்கள் என்ற பயம் அவர்களுக்கு. மற்றவர்கள் உங்களைப் பயன்படுத்திக் கொள்ளட்டும். எனக்கு தங்களை ஆலோசகர்களாக சுயமாய் நியமித்துக் கொண்டவர்கள், ஜாக்கிரதையாய் இருங்கள், யாரோ ஒருவர் உங்களை பயன்படுத்திக் கொள்வார்கள், ஏதோ செய்துவிடுவார்கள் என்று என்னிடம் சொல்லிக் கொண்டிருப்பது உண்டு. பயன்படுத்திக் கொள்ளட்டும் என்று நான் சொல்வேன். நான் அதற்காகத்தான் இங்கிருக்கிறேன். அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். உயிருக்கு "ஆம்" என்று சொல்லுங்கள். ஒரு "ஆம்" சொல்வதால் நீங்கள் இழக்கப் போவதில்லை. "இல்லை" என்று சொல்வதால் நீங்கள் இழப்பீர்கள். "இல்லை" என்பது சாத்தப்பட்ட கதவு. எக்காரணத்திற்காகவும் கதவினை பூட்ட வேண்டாம். இது மிகக் குறுகிய ஒரு வாழ்க்கை. கதவினை சாத்தவும் திறக்கவும் நேரம் இல்லை.

உடலிற்கு மட்டுமே பாதுகாப்பு தேவை. சில சமயம், சில விஷயங்கள் சாத்தியமாகாது. இல்லாவிட்டால், அனைத்துமே "ஆம்" என்றுதான் இருக்க வேண்டும். உங்களுக்கு சாத்தியமான பாதையாக இல்லாத ஒரு அணுகூட இவ்வுலகில் கிடையாது. "ஆம்" என்பதை ஒரு மனப்பாங்காக நான் சொல்லவில்லை, இந்தப் பிரபஞ்சத்தின் பிரதிபலிப்பாய் இருக்கச் சொல்கிறேன். பிரபஞ்சம் எப்போதுமே, "ஆம்," தான். நீங்களும் அதில் ஒரு பகுதி என்பதை உணர்ந்தால், நீங்களும் "ஆம்" ஆகத்தான் இருப்பீர்கள்.

நீங்கள் சுவாசிக்கும் காற்று உங்களிடம் "இல்லை" என்று சொன்னால், நீங்கள் மரித்துப் போவீர்கள். உங்களைச் சுற்றியுள்ள உயிர்கள் உங்களிடம் "இல்லை" என்று சொன்னால் நீங்கள் இறந்து போவீர்கள். உங்களுக்குள் நுழையும் உணவு, உங்களிடம் "இல்லை" என்று சொன்னால், நீங்கள் செத்துப் போவீர்கள். பிரபஞ்சம் உங்களிடம் "ஆம்" என்கிறது. நீங்கள் மட்டும் எதற்காக, "ஆம், இல்லை" என்று கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? உயிருக்கு நூறு சதவிகிதம் "ஆம்" சொல்ல வேண்டிய தருணம் இது.

சில மனிதர்களுக்கு, மிகப் பெரிய தடை - பிறர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ, ஏளனம் பேசுவார்களோ என்பதுதான். முதலில், மற்றவர்கள் நீங்கள் செய்வதில் அத்தனை நாட்டமுடையவர்களாய் இருக்கிறார்களா என்ன? உங்களைப் பற்றி குறைகாண அவர்களுக்கு நேரம் இருக்கிறதா என்ன? மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி நீங்கள் வருத்தப்பட வேண்டாம். அவர்கள் மனதில் நடப்பது அவர்களுடைய பிரச்சனை. உங்கள் மனதின் தரத்தைப் பற்றித்தான் நீங்கள் கவலைப்பட வேண்டும். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை நினைத்து வருத்தப்பட்டால் நீங்கள் கிறுக்காகிவிடுவீர்கள். ஏனெனில், அவை அனைத்துமே வெறும் யூகங்களை வைத்து நீங்கள் போடும் தப்புக் கணக்குகள். ஒரு செயல், செய்யத் தகுதியானது என நீங்கள் நினைக்கையில், அதனை சும்மா செய்துவிடுங்கள். மற்றவர்கள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை. யாரோ ஒருவர் உங்களைப் பார்த்து சிரித்தால் நீங்களும் அவருடன் சேர்ந்து சிரியுங்கள். நீங்கள் தவறாக செய்யும் ஏதோ ஒன்றை அவரால் சரிசெய்யக்கூடும். எப்படியோ, பெரும்பாலான மக்கள் உங்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பதில்லை. அவர்களுடைய விஷயங்களில் அவர்கள் பிஸியாக உள்ளார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு நிலையான அடித்தளத்தை நீங்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும். வாழ்வில் மிக முக்கியமான ஒரு விஷயம் - சமநிலை. உங்களிடம் சமநிலை இல்லாவிட்டால், உங்கள் உடலும் மனமும் உங்களுக்கு எதிராக வேலை செய்யும். நிலையான அடித்தளம் என்றால், உங்கள் உடலும் மனமும் உங்கள் குறிப்புகளின்படி செயல்படும். உங்கள் உடலமைப்பிற்குள் சரியான கெமிஸ்டிரியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அடிப்படையில், இது உங்கள் ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும்தான். உங்கள் உடலமைப்பினை கையாளத் தேவையான திறன் உங்களுக்கு இருக்க வேண்டும். அதனால் யோகா.

குனிந்து, வளைந்து, நெளிந்து செய்யும் எளிமையான ஆசனங்கள் உங்கள் தசைகளை நீட்டிப்பதற்காக அல்ல, உங்கள் அடிப்படையையே மாற்றுவதற்காக. குறைந்தபட்சம், "21 நிமிட ஷாம்பவி" யிலிருந்து துவங்குங்கள். யோக நமஸ்காரம் அல்லது சூரிய கிரியா போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். இவை உங்கள் உடலிற்கு சமநிலையையும் உறுதியையும் வழங்கும். பயணத்தை அனுபவித்து, ரசிக்க நினைத்தால் அதில் சமநிலை அவசியம். எல்லோரும் அதை நோக்கி செயல்பட வேண்டும்.

Love & Grace

ஷாம்பவி மஹாமுத்ரா என்பது ஒரு தொன்மையான, சக்திவாய்ந்த யோகப் பயிற்சி. இவை 7 நாள் ஈஷா யோகா வகுப்புகளில் வழங்கப்படுகின்றது.