சமீபத்தில் என்னிடம் ஒருவர் நான் உடலை விட்ட பிறகு எங்கு செல்வேன், என்ன நடக்கும் என்று கேட்டார். நான் இதை முன்பே கூறியிருக்கிறேன், உடலை விட்ட பிறகும் அடுத்த ஒரு 80 ஆண்டுகளுக்கு நான் இருப்பேன். எல்லாம் இங்கேயே இப்போதே இருக்கும் போது நாம் எங்கு செல்ல முடியும்? அந்த “இங்கே, இப்போது” – அதற்குள்தான் செல்ல முடியும். “இங்கு இப்போது” என்பது ஆன்மீகம் சார்ந்த சொல்லாடல் மட்டுமல்ல – நவீன இயற்பியலுக்கு இதன்மேல் மிகுந்த ஆர்வமுள்ளது. “இப்போது, இங்கு” பற்றி நாம் பேசும்போது, காலம் மற்றும் வெளி (அல்லது இடம்)பற்றி நாம் பேசுகிறோம். பொருள் தன்மையிலான படைப்புகள் நடப்பதற்கு காலமும் வெளியும் அத்தியாவசியமான பரிமாணமங்கள். காலமும் வெளியும் இல்லாவிடில், படைப்பு நிகழ்வதற்கும் இடமில்லை – ஒவ்வொன்றுமே இங்கே, இப்போது என்பதின் உள்ளடக்கமே. அப்படியென்றால் காலமும் இடமும் உங்கள் உருவாக்கங்களே. உங்களின் இந்த உருவாக்கங்களே காலம் மற்றும் வெளி என்னும் நாடகத்திற்குள் நீங்கள் இருக்கும்படி செய்கின்றன.

நவீன இயற்பியல், வெறுமையாகக் கருதப்படும் வெற்றிடங்கள் துடிப்பாகவும், படைக்கும் சக்தி நிறைந்ததாகவும் இருக்கிறது என்றும், பிரபஞ்சம் விரிந்துகொண்டே செல்கிறது என்றும் சொல்கிறது. அது மட்டுமல்ல - படைப்பில் "Big Bang" என்பது நடந்து அதிலிருந்து எல்லாம் விரிந்தது போல, ஒரு நாள் "Big Crunch" நடந்து எல்லாம் மீண்டும் சுருங்கி இங்கும் இப்போதுமாக மாறிவிடும் வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறுகிறார்கள். வேறுவிதமாகச் சொல்வதென்றால், இந்தப் பிரபஞ்சம் மிகச்சிறிய ஒன்றாக இருப்பதிலிருந்து மிகப்பெரியதாக விரிவது போல, அதற்கு நேர்மாறான செயல்முறையும் நடக்கமுடியும். இது யோகப் பாரம்பரியத்தில் நமக்குள் நாம் எப்போதும் உணர்ந்திருக்கும் ஒன்று. மோக்ஷா, நிர்வானா, ஷூன்யா என்றெல்லாம் சொல்லும்போது நாம் இதைத்தான் சொல்கிறோம். நீங்கள் ஒன்றுமில்லாததில் இருந்து வந்தீர்கள், இவ்வளவு பெரிதாக ஆகிவிட்டீர்கள், இதை ஒரு முழு சுழற்சியைக் கடக்கச்செய்தால், அது மறுபடியும் ஒன்றுமில்லாததாக மாறுகிறது.

அப்படியானால் நீங்கள் எங்கு செல்லப் போகிறீர்கள்? செல்வதெல்லாம் முடியும்போது, அதுதான் ஆட்டத்தின் இறுதி. தொடர்ந்து எங்கோ சென்றுகொண்டே இருப்பது சுவாரசியமானதாக இருப்பது, நீங்கள் நிறைய இடங்கள் பார்க்காதிருக்கும் வரைதான். நீங்கள் போதுமான அளவு இருத்தலை உணரவில்லை என்றால், இருப்பது சுவாரசியமாக இருக்கிறது. காலங்காலமாக உங்கள் உயிர் தன் இருத்தலை உள்ளே சுமந்திருப்பதை நீங்கள் நினைவுகூர்ந்தால், உங்களை உண்மையாகவே வசீகரிப்பது இல்லாதிருப்பது மட்டுமே. "முக்தி" என்று நாம் சொல்லும்போது, அது காற்றுமண்டலகத்தைக் கடந்து வின்வெளிக்குள் செல்வதைக் குறிப்பதல்ல. வெளி என்பதிலிருந்தே நீங்கள் முக்தியடைய விரும்புவதைக் குறிக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இது ஒரு மிக சாதாரணமான, சிறுபிள்ளைத்தனமான செயல்முறை. உங்களை ஒரு சிறு அறைக்குள் சிறைப்படுத்தி, பிறகு பெரியதொரு அறைக்குள் விடுதலை செய்தால், இரண்டு நாட்கள் விடுதலையாக உணர்வீர்கள். ஆனால் மூன்றாவது நாள் மீண்டும் சிறைப்பட்டிருப்பதாய் உணர்வீர்கள். இன்னும் பெரிய அறைக்குள் உங்களை விடுவித்தால், உண்மையாகவே சுதந்திரமாக உணர்வீர்கள், ஆனால் சில நாட்களில் மீண்டும் சிறைப்பட்டிருப்பது போல உணர்வீர்கள். அப்போது முழு சுதந்திரம் என்னவாக இருக்கும்? அறை ஏதும் இல்லாமல், வெளி என்பது உங்களை எல்லைப்படுத்தாமல் இருந்தால், காலமும் வெளியும் ஒன்றில்லாது மற்றொன்று இருக்கமுடியாது என்பதால், அந்நிலையில் காலமும் உங்களை எல்லைக்குட்படுத்தாது. வெளி என்பது இல்லாவிட்டால், காலமும் இல்லை. அதனால்தான் இங்கும் இப்போதும் என்று சொல்கிறோம். அதனால் இங்கும் இப்போதும் ஆன்மீக சொல்லாடல் அல்ல. இங்கும் இப்போதும் என்பது பொருள்தன்மை சார்ந்த சொல்லாடல். "இங்கும் இப்போதும்" என்பதற்குள் மறைவதென்றால், வெளி மற்றும் காலத்தின் எல்லைகளைக் கடப்பது. வெளியையும் காலத்தையும் கடந்து நீங்கள் செல்வீர்கள் என்று நினைப்பது சிறுபிள்ளைத்தனம்.

வெளியும் காலமும் இல்லாவிட்டால், உங்களுக்கென்று ஒரு வெளி இல்லாமல் போகும், உடலளவிலும் சரி, பிற விதங்களிலும் சரி. அதாவது நீங்கள் இல்லாமல் போவீர்கள். அப்படியானால் எங்கு செல்வீர்கள்? எங்கும் செல்லமாட்டீர்கள், செல்வதெல்லாம் முடிந்துபோகும். அதுதான் உச்சகட்ட விடுதலை.

என் மரணம் பற்றி சொல்லவேண்டும் என்றால் - நான் என் காலத்தைக் கடந்து வெகுகாலம் ஆகிவிட்டது. அதாவது, தொடர்ந்து உயிர்வாழத் தேவையான அடிப்படையான கட்டமைப்பை முழுவதுமாக கட்டவிழ்த்த பிறகு, நான் இன்னும் உயிர்வாழ்கிறேன், இது பிரபஞ்ச அளவில் நல்ல விஷயமாக கருதப்படாது. இந்த உயிர் தொடர்ந்து நடந்தேறத் தேவையான அடிப்படை கட்டமைப்பு போய்விட்டால், அம்மனிதருக்கு இங்கு செய்வதற்கு எதுவுமில்லை - அவர் சென்றிருக்க வேண்டும். விடுதலைக்கான நம் வேட்கையால், இந்த கட்டமைப்பு முழுவதையும் கட்டவிழ்த்தோம்; பிறகு அசாத்தியமான ஒரு பணி கையில் வந்தது. அதனால் அப்படியே தொடர முயற்சித்தோம். இப்போது அதுவும் முடிந்துவிட்டது, ஏன் இன்னும் வாழ்க்கையைத் தொடர்கிறோம் என்று எவருக்கும் தெரியவில்லை. என் இருப்புக்கு எந்த நோக்கமும் இல்லாததால், செய்யத் தேவையானவை அனைத்தையும் கையிலெடுக்க முயற்சிக்கிறேன்.

நாளை காலை முற்றிலும் புதிதான ஒரு படைப்பு நடந்தாலும் - நாளையே முற்றிலும் புதிதான ஒரு பிரபஞ்சம் உதிக்கிறது என்று வைத்துக்கொள்வோம் - அனைத்தும் எப்படி நிகழ்கிறது என்ற அடிப்படைகளைப் புரிந்தபிறகு, அதனை ஆராய்வது சுவாரஸ்யமானதாக இருக்காது. நீங்கள் கோடி அறைகள் இருக்கும் சூப்பர் ஓட்டல் ஒன்றில் வசிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அங்கு விருந்தினராகச் சென்றால், உங்கள் அறையை மட்டும் திறக்கும் ஒரு சாவி அட்டையைத் தருவார்கள். ஆனால் அங்கு துப்புறவுப் பணி செய்யும் பெண்மணியிடம், எல்லா அறைகளையும் திறக்கும் சாவி அட்டை ஒன்று இருக்கும். உங்கள் ஒரு அறைக்குள் மட்டும் நுழைவதால் அது உங்களுக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். அவளோ, இப்படி பல அறைகளைத் திறந்து பார்த்து சுத்தம் செய்திருக்கிறாள், இன்னுமொரு அறைக்குள் நுழைவது அவளுக்கு சுவாரஸ்யமானதாக இருக்காது. அந்த ஓட்டல் நிர்வாகி உங்களிடம் வந்து, "இன்னும் சிறந்த காட்சி கண்முன் விரியும் வேறொரு அறை இருக்கிறது. உங்களுக்கு வேண்டுமா?" என்று கேட்டால், உற்சாகத்துடன் "ஆம்" என்பீர்கள். ஆனால் அவளுக்கு அதில் நாட்டமில்லை, அவள் பல அறைகளைப் பார்த்துவிட்டாள்.

வாழ்க்கைக்கும் இது பொருந்தும். சாவி உங்களிடத்தில் இருந்தால், நேரமும் நாட்டமும் இருந்தால், எல்லா அறைகளையும் திறப்பது சாத்தியமானதே. ஆனால் எவரும் அதைச் செய்வதில்லை. ஒரு அறை மற்றொன்றிலிருந்து அதிகம் மாறுபட்டதில்லை. புதிய பிரபஞ்சமொன்றிற்குள் நுழைந்தால், எல்லாம் வித்தியாசமாகத் தோன்றலாம், ஆனால் அடிப்படைகள் அனைத்தும் அதேதான். நீங்கள் போதுமான அளவு பார்த்துவிட்டால், உயிரைத் தக்கவைக்கத் தேவையான அடிப்படை கட்டமைப்பை கட்டவிழ்க்கத் துவங்குவீர்கள். எனக்கு அந்த அடிப்படை கட்டமைப்பு ஏற்கனவே இல்லாமல் போய்விட்டது. இப்போது நான் இரவல் வாங்கிய கட்டமைப்புடன் இருக்கிறேன் - பல சமயங்களில் இது சரிந்துவிழும் அபாயத்தில் இருக்கிறது.

நான் உடலை விட்டபிறகு, 80 வருடங்களுக்கு இருப்பேன். நான் முழுவதுமாக விடைபெறும் முன்பு, ஏதோவொரு விதத்தில் என்னால் தொடப்பட்டிருப்பவர்கள் அனைவரும் இந்த பூமியிலிருந்து அப்புறப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தவே இது. ஏன் நிரந்தரமாகத் தொடரக்கூடாது? நிரந்தரம் என்று எதுவும் கிடையாது. நிரந்தரமாக இருக்கவேண்டிய அவசியமும் இல்லை, ஏனென்றால் அதற்காக இன்னும் நுட்பமான ஏற்பாடு செய்துள்ளோம். அதற்காகத்தான் தியானலிங்கம் இருக்கிறது, விடுதலைக்கான காலம்கடந்த கருவி.

Love & Grace